(மத்தேயு.8:20)
மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்றார்.
இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்."
தனது வாழ்க்கையின் கஷ்டங்களை எடுத்துக் கூறி,
''நீர் அவற்றைத் தாங்குவது கடினம், ஆகவே என்னுடன் வரவேண்டாம். உமது குடும்ப வாழ்க்கையில் நான் சொல்வதை அனுசரியும்."
என்ற பொருள் பட அவ்வாறு கூறினார்.
மற்றொருவரை இயேசு தன்னுடன் வரும்படி கூறினார்.
அவர், "ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும்" என்றார்.
இயேசு அவரிடம் ,
"நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்" என்றார்.
இயேசுவின் வார்த்தைகளைத் தியானித்தால் நாம் அறிய வரும் செய்திகள்,
நமது ஆன்மீக வாழ்க்கைக்கான இறைவனின் அழைப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. நாம் பிறந்து வளரும் குடும்பத்தில் இருந்து கொண்டே இயேசுவின் நற்செய்தியை வாழ்வது, வாழ்க்கையின் மூலம் போதிப்பது.
2. குடும்பத்தையும், சொந்த பந்தங்களையும், உடைமைகளையும் துறந்து,
100 சதவீதம் நம்மை நற்செய்திப் பரப்புப் பணிக்காக அர்ப்பணித்து வாழ்வது.
வழக்கமாக நாம் இரண்டாவது அழைப்பைத் தேவ அழைத்தல் என்போம்.
ஆனால் உண்மையில் இரண்டுமே தேவ அழைத்தல் தான்.
நாம் ஒன்றுமில்லாமையாக இருக்கும் போது அவரை நேசித்து அவருக்குப் பணி புரிய நம்மை அழைத்தார், அதாவது, நம்மைப் படைத்தார்.
குடும்பத்தில் தான் நம்மைப் படைத்தார்.
குடும்பத்தில் இருந்து கொண்டே அவருக்குப் பணி புரிவது முதல் அழைப்பு.
குடும்பத்தைத் துறந்து வாழும் அர்ப்பண வாழ்வு இரண்டாவது அழைப்பு.
இரண்டாவது அழைப்பில் சிலர் துறவிகளாக மட்டும் வாழ அழைக்கப் படுகின்றார்கள்.
துறவற சகோதரர்கள், துறவற சகோதரிகள் இவ்வகையினர்.
சிலர் துறவற வாழ்வோடு குருத்துவ வாழ்வும் வாழ அழைக்கப் படுகின்றார்கள்.
நமது குருக்கள், ஆயர்கள், பாப்பரசர் இவ்வகையினர்.
குடும்ப வாழ்வு, துறவற வாழ்வு இவற்றில் எது சிறந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஏனெனில் இரண்டுமே இறைவனுடைய அழைப்பு தான்.
திருக்குடும்ப உறுப்பினர்களில் மூவருமே துறவிகள் தான்.
குடும்பத்தில் இருந்துதான் துறவிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
துறவறம் நாற்று என்றால் குடும்பம் நாற்றங்கால்.
குடும்பம் சிறந்ததாக இருந்தால்தான் அதிலிருந்து எடுக்கப் படும் துறவிகளும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
மரத்தின் தன்மையைப் பொறுத்து தான் கனிகளின் தன்மை அமையும்.
குடும்ப வாழ்வு.
----------------------------
குடும்பத்தினர் எப்படி வாழ வேண்டும்?
நல்ல கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்.
திருமணம் ஒரு தேவத்திரவிய அனுமானம்.
திருமணத்தின் நோக்கம் வெறும் சிற்றின்ப வாழ்க்கை மட்டும் வாழ்வது அல்ல,
நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வதற்காக மக்களைப் பெற்று, அதற்காகவே அவர்களை வளர்ப்பது தான் திருமண வாழ்வின் நோக்கம்.
திருமண வாழ்வுக்கான பிள்ளைகளையும்,
துறவற வாழ்வுக்கான பிள்ளைகளையும்
பெற்றோர்தான் பெற்று வளர்க்கிறார்கள்.
பெற்றோரின் முன்மாதிரிகையான கிறிஸ்தவ வாழ்க்கை எதிர்கால நல்ல குடும்பங்களுக்கும், நல்ல துறவிகளுக்கும் பிறப்பிடமாக அமைய வேண்டும்.
தங்கள் பிள்ளைகளைத் துறவற வாழ்க்கைக்கு அனுப்பிய பின் அவர்களைப் பரிபூரணமான துறவற வாழ்க்கை வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்.
அதற்கு குடும்பத்தினர் சிறிதளவு கூட இடையூறாக இருக்கக் கூடாது.
அவர்களிடமிருந்து ஆன்மீக உதவியைத் தவிர வேறு எந்த வித உதவியையும் எதிர்பார்க்கக் கூடாது.
துறவற வாழ்க்கை.
---------------------------------
துறவிகள் முற்றிலும் தங்கள் சபைக்குச் சொந்தமானவர்கள்.
குருக்கள் முற்றிலும் அவர்கள் பணிபுரியும் மேற்றிராசனத்துக்குச் சொந்தமானவர்கள்.
"நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்"
என்ற இயேசுவின் வார்த்தைகள் ஞாபகத்தில் இருக்க வேண்டும்.
அவர்கள் பிறந்து வளர்ந்த
குடும்பத்தை முற்றிலும் துறந்து வந்ததை மறந்து விடக்கூடாது.
குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டியது அவர்களுடைய செப உதவியை மட்டும் தான்.
இயேசுவே அதற்கு முன்மாதிரிகை.
அவரது 33 ஆண்டுகள் வாழ்க்கையில் 30 ஆண்டுகள் தனது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.
3 ஆண்டுகள் முற்றிலும் பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்து விட்டார்.
பொது வாழ்வின் போது இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்த அவர், குடும்ப வாழ்வின் போது இறந்த சூசையப்பருக்கு உயிர் கொடுக்கவில்லை.
பொது வாழ்வின் போது அப்பங்களைப் பலுகச் செய்து மக்களுக்கு உணவளித்த அவர்
குடும்பத்தில் தச்சு வேலை செய்துதான் பெற்றோருக்கு உணவளித்தார்.
பொது வாழ்வின் போது பொது மக்கள் தான் அவரைக் கவனித்துக் கொண்டார்கள்.
பரிசேயர்கள் கூட அவருக்கு உணவு அளித்திருக்கிறார்கள்.
இலாசர் குடும்பத்தினர் உணவு அளித்திருக்கிறார்கள்.
மேலும் "பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்
ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்."
(லூக்கா.8:3)
இயேசுவுக்காக அர்ப்பணித்து வாழும் குருக்களைக் கவனிக்க வேண்டியவர்கள் பொது மக்களாகிய நாம் தான், அவர்களுடைய குடும்பத்தினர் அல்ல.
நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும்.
நாம் இவ்வுலகில் வாழ்வதே தேவ அழைத்ததினால் தான்.
எந்த வாழ்வுக்கு அழைக்கப் பட்டாலும் அதை இறைவன் விருப்பம் போல் சிறப்பாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.