Friday, May 3, 2024

இறை இரக்கம்.

இறை இரக்கம்.


கடவுள் அளவில்லாத அன்பும் இரக்கமும் உள்ளவர்.

நித்திய காலம் முயன்றாலும் அதன் ஆழத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

மனுக்குலம் முழுவதும் இறை இரக்கத்தின் விளைவுதான்.

அளவுகடந்த அன்பினால் படைக்கப்பட்ட மனுக்குலத்தை எல்லையற்ற இரக்கத்தோடு இறைவன் பராமரித்து வருகின்றார்.

இறைவனோடு நல்லுறவில் இருப்பவர்கள் அவரது இரக்கத்தின் இனிமையை விண்ணகத்தில் நித்திய காலமும் அனுபவிப்பார்கள்.

இறைவனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நம் கண் முன் நிற்க வேண்டியது அவருடைய இரக்கம்தான்.

அன்பே கடவுள் என்று கூறுவது போல இரக்கமே கடவுள் என்றும் கூறலாம்.

அன்பின் குழந்தை தான் இரக்கம்.

தாயையும் குழந்தையையும் பிரிக்க முடியாது.

நமது அன்புக்கு உரியவர் தவறு செய்தால் நமக்கு அவர் மேல் கோபமே வராது.

ஏனெனில் அன்பு இருக்கும் இடத்தில் இரக்கம் இருக்கும்.

கோபம் இரக்கத்தின் எதிர்க்குணம்.

இரண்டு எதிர்க்குணங்கள் சேர்ந்து இருக்க முடியாது.

இன்று மனிதர்களிடையே சமாதானமின்மை நிலவுகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்களிடையே அன்பும் இரக்கமும் இல்லாமைதான்.

கடவுள் மாறாதவர்.

அவருடைய பண்புகள் யாவும் நித்தியமானவை.

அளவிலும் தன்மையிலும் மாறாதவை, மாற முடியாதவை.

கடவுள் நித்திய காலமும் மாற முடியாத இரமுள்ளவராக இருந்ததால்தான்

தனது நித்திய திட்டத்தின்படி படைத்த மனிதன் பாவம் செய்தபோது

அவன்மீது இரங்கி அவனைப் பாவத்திலிருந்து மீட்க மீட்பரை அனுப்ப வாக்களித்தார்.

இறைமகன் மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்து பாவப் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதும் அவரது நித்திய திட்டம் தான்.

கடவுள் மாறாதவர். மனிதனைத் தன் சாயலில் படைக்க வேண்டும் என்பது அவரது நித்தியத் திட்டம்.

அந்த திட்டத்தில் மாற்றம் எதுவும் இல்லை.

தனது சாயலில் படைத்ததால் அவனைப் பரிபூரண சுதந்திரத்தோடு படைத்தார்.

மனித சுதந்திரத்தில் அவர் குறுக்கிடுவதில்லை.

மனிதன் பாவம் செய்தது அவனது சுதந்திர முடிவு.

இது கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நித்திய காலமாகத் தெரிந்திருந்ததால் தான் மீட்புத் திட்டத்தையும் அவர் நித்திய காலமாக வகுத்தார்.

ஒருவன் தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட பெரிய அன்பின் வெளிப்பாடு இருக்க முடியாது.

ஆகவே கடவுள் தான் படைத்த மனிதர்களுக்காக உயிரைக் கொடுத்து அவனுடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்யத் திட்டமிட்டார்..

ஆனால் கடவுள் சுபாவத்தில் அவரால் மரிக்க முடியாது.

மனிதனால்  பிறக்கவும் இறக்கவும் முடியும்.

ஆகவே மனிதனுக்காக இறப்பதற்காக மனிதனாகப் பிறக்கத் திட்டமிட்டார்.

அவரால் தேவ சுபாவத்தைத் துறக்க முடியாது.

ஆகவே தேவசுபாவத்தை வைத்துக் கொண்டே மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டார்.

ஆக மனிதனாகப் பிறந்த இறைமகனுக்கு இரண்டு சுபாவங்கள், தேவ சுபாவம், மனித சுபாவம்.

தேவசுபாவத்துக்கு உரிய அதே இறைமகன் தான் மனித சுபாவத்துக்கும் உரியவர்.

ஆகவே மனிதனாகப் பிறந்தவர் இறைமகன் தான், அதாவது கடவுள் தான்.

மரியாளின் மைந்தனும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து வாழ்ந்தவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

3 ஆண்டுகள் புதுமைகள் செய்து நற்செய்தியை அறிவித்தவரும் 
கடவுள் தான், மனித சுபாவத்தில்.

புனித வியாழக்கிழமை திவ்ய நற்கருணையை ஏற்படுத்தியவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

கெத்சமனி தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்தவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

பிலாத்துவின் அரண்மனையில் கல் தூணில் கட்டப்பட்டு அடிபட்டவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

முள்முடி சூட்டப்பட்டு, முகத்தில் துப்பப்பட்டவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

பாரமான சிலுவையைச் சுமந்து சென்றவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

சிலுவையில் அறையப்பட்டு மரித்தவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

மரித்த மூன்றாவது நாள் உயிர்த்தவரும் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

சுருக்கமாக,

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்தவர் கடவுள் தான், மனித சுபாவத்தில்.

ஆக கடவுள் தான் படைத்த மனிதர்களின் பாவங்களுக்கு அவரே பரிகாரம் செய்தார்.

இதற்கெல்லாம் காரணமாக இருந்தது எது?

அவருடைய இரக்கம்.

பெற்ற பிள்ளைக்குப் பால் கொடுப்பது தாய்தான்.

ஆனாலும் பிள்ளை பசிக்கும்போது அழும்.

கடவுள் நம்மைப் பெற்ற கடவுள்.

அவர் இயல்பிலேயே (By nature)
நம் மீது இரக்கம் உள்ளவர்.

ஆனாலும் நமது பாவங்களின் காரணமாக கடவுளின் இரக்கம் நமக்குத் தேவைப்படுகிறது.

குழந்தை பசிக்கும்போது பாலுக்காக அழுவது போல

நாம் கடவுளின் இரக்கத்தைக் கேட்டு அவரை நோக்கி மன்றாட வேண்டும்.

இரண்டு கரங்கள் தட்டினால் தான் ஓசை வரும்.

தண்ணீரை ஊற்றும் போது பானையின் வாய் திறந்திருந்தால்தான் பானைக்குள் தண்ணீர் விழும்.

கண்களைத் திறந்தால் தான் நாம் பார்க்க ஆசைப்படுமவர்களைப் பார்க்க முடியும்.

கடவுளின் இரக்கம் எப்போதும் ரெடி.

நாமும் எப்போதும் ரெடியாக இருக்க வேண்டும்.

உறவினர் இருவர் இருந்தால் இருவரும் ஒருவரோடொருவர் மனம் விட்டுப் பேச வேண்டும்.

 இரக்கத்தின் கடவுள் மனம் விட்டுப் பேசி விட்டார்.

நாம் எப்படி மனம் விட்டுப் பேச?

செபிப்பதன் மூலம்.

இரக்கத்தை வேண்டி எப்படிச் செபிப்பது?

இறை இரக்கத்தின் செபமாலை செபிப்பதன் மூலம்.

இறை இரக்கத்தின் செபமாலை 
செபிப்போம்.

இறைவனின் நித்திய இரக்கத்தின் பயனை முழுமையாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment