Thursday, May 23, 2024

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?(தொடர்ச்சி)5

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?
(தொடர்ச்சி)5

தூய ஆவியின் ஏழு கொடைகளுள் ஐந்தாவது கொடை ஆற்றல். (fortitude)

உலகியலிலும், ஆன்மீகத்திலும் செயல்களை உற்சாகத்துடன் செய்யத் தேவையானது சக்தி, தைரியம், ஆற்றல்.

உலகியலில் உடல் ஆற்றல் பெற சரிவிகித உணவை உண்கிறோம்.

ஆன்மீகத்தில் ஆற்றல் பெற உறுதிப்பூசுதல் என்னும் அருட்சாதனத்தைப் பெறுவதோடு

அதற்கான அருள் வரம் கேட்டு தினமும் தூய ஆவியை மன்றாடுகிறோம்.

உடலில் சக்தி இல்லாவிட்டால் எழுந்து நடமாட முடியாது.

ஆன்மீகத்தில் ஆற்றல் விண்ணகப் பாதையில் வேகமாக நடக்க முடியாது.

கிறிஸ்துவைப் பின்பற்றுதல் பஞ்சு மெத்தையில் படுத்து உறங்குவதைப் போன்றதல்ல,

முட்கள் நிறைந்த பாதை வழியாக நடந்து செல்வதற்குச் சமம்.

கரடு முரடான பாதை.

கவனம் இல்லாமல் நடந்தால் விழ நேரிடும்.

துன்பங்களும் ஆபத்துக்களும் நிறைந்த   பாதையில் நடந்து செல்ல தைரியமும், பொறுமையும் வேண்டும்.

என்ன துன்பங்கள்?

நோய் நொடிகள், சுய விருப்பங்கள் நிறைவேறாமை, பொருளாதார பற்றாக்குறை போன்றவை.

என்ன ஆபத்துக்கள்?

சோதனைகள். சோதனையில் தோற்றால் பாவத்தில் விழ நேரிடும்.

வாழ்க்கையே சோதனைகளுக்கு எதிரான போராட்டம்தான்.

துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் கிறிஸ்துவுக்கு ஏற்ற வாழ்வு வாழ வேண்டுமென்றால் 

ஆற்றல் (Fortitude) வேண்டும்.

ஆற்றல் உள்ளவனால்தான் கடவுள் முன் எது சரியாக இருக்கிறதோ,

அது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அதன்படி வாழ முடியும்.

கிறிஸ்தவத்துக்கு எதிரானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகில்

அவர்களுக்கு மத்தியில் கிறிஸ்துவுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கிறிஸ்துவின் எதிரிகள் நம்மைத் தள்ளி வைக்கலாம்,

 நம்மை வார்த்தைகளால் காயப்படுத்தலாம், 

நமக்கு உடல் ரீதியான துன்பங்களை, 

மரணத்தைக் கூட தரலாம்.

ஆனாலும் நாம் வாழ்ந்தே ஆகவேண்டும்.

ஒரு சாதாரண விவசாயத் தொழிலாளியை எடுத்துக் கொள்வோம்.

இரவு பகல் என்று பாராமல்,

மழை வெயில் என்று பாராமல்,

வெப்பம் குளிர் என்று பாராமல்,

பசி பட்டினி என்று பாராமல், 

உடல் வலியைப் பற்றி கவலைப் படாமல்,

உள்ளத்தில் வலியோடு

உழைக்கிறான், உழைக்கிறான்,
உழைத்துக் கொண்டேயிருக்கிறான்.

பலன்?

அதிகம் கிடைத்தாலும் கிடைக்கும்,

குறைவாகக் கிடைத்தாலும் கிடைக்கும்,

எதுவும் கிடைக்காமல் போனாலும் போகும்.

உறுதி இல்லாத ஒரு பலனுக்காக இப்படிக் கஷ்டப்பட்டு விவசாயி உழைக்கிறானே,

உறுதியாக நிலை வாழ்வும், நித்திய பேரின்மும் பெறப்போகும் நாம் எவ்வளவு 
கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்!


கடவுளின் பிள்ளைகளாகிய நாம்

  நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றோடு 

விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

 நிலைவாழ்வே நமது நோக்கம்.

 அதற்காகவே விசுவாசத்தை அறிக்கையிட அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் கிறிஸ்து இயேசுவின் நல்ல படை வீரனைப் போல துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும். 

படைவீரர்கள் பிழைப்புக்காகப் போரிடுவதில்லை.

பம்மைப் படையில் சேர்த்துக்கொண்ட இயேசுவின் வெற்றிக்காகவே போரிடவேண்டும் 

விளையாட்டு வீரர்கள் விதி முறைகளுக்குட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும். 

நாமும் ஆன்மீக வெற்றி பெற இயேசுவின் கட்டளைகளுக்கு உட்பட்டு வாழ வேண்டும்.

இப்போது சிறிது காலம் நாம் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருககும். 

 ஆனால் மறுவுலகில் நமக்காக நித்திய பேருவகை காத்துக் கொண்டிருக்கிறது. 


அழியக்கூடிய தங்கம் நெருப்பினால் புடமிடப்படுகிறது. 

அதைவிட விலையுயர்ந்த நாம் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறோம்.

உலக இறுதியில் இயேசு கிறிஸ்து வரும்போது

 அந்நம்பிக்கை நமக்குப் பேரின்ப வாழ்வைப் பெற்றுத் தரும். 

வாழ்க்கை ஒரு போராட்டம் தான், ஆனால் வெற்றியில் முடியப்போகும் போராட்டம்.

வீரத்தோடு போராடத் தேவையான ஆற்றலைத் தந்து உதவ தூய ஆவியானவரை மன்றாடுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment