என்னுடைய அம்மாவுக்கு ஒரு குணம் உண்டு, எல்லாருடைய அம்மாக்களுக்கும் உள்ள குணம் தான்.
என்ன குணம்?
நாங்கள் வெளியூரில் இருக்கும் போது அவர்கள் செய்கிற சமையலுக்கும், வீட்டில் இருக்கும் போது செய்கிற சமையலுக்கும் பாரதூர வித்தியாசம் இருக்கும்.
நாங்கள் வெளியூரில் இருக்கும் போது அம்மா தினமும் சமைக்க மாட்டார்கள்.
ஒரு நாள் சமைத்து சுடு சோறாகச் சாப்பிட்டு விட்டு மூன்று நாட்களுக்குப் பழையது சாப்பிடுவார்கள்.
சுடு சோற்றுக்குச் சாம்பார் அல்லது ரசம்.
பழையதுகு ஊறுகாய், துவையல் அல்லது ஈருள்ளி.
பிள்ளைகள் வீட்டில் இருக்கும் போது தினமும் சமையல், வித விதமான சாம்பார், கூட்டு வகைகள்.
வாரம் ஒரு முறை Mutton.
ஏன் இப்படி?
பெற்றோர் தங்களுக்காக வாழ்வதில்லை, பிள்ளைகளுக்காகவே வாழ்கிறார்கள்.
இது அவர்களுடைய இயல்பு.
இளைஞர்கள் காதல் வயப்படுவதற்கு முன்னும் பின்னும் அவர்களுடைய நடை, உடை, பாவனைகளில் உள்ள வித்தியாசங்களைக் கவனித்திருக்கிறீர்களா?
காதலுக்கு முன்னால் தங்கள் இஷ்டம்போல் நடப்பார்கள், உடுப்பார்கள், தோன்றுவார்கள்.
ஆனால் காதலிக்க ஆரம்பித்த பின் தாங்கள் காதலிப்பவர்கள் விரும்பும் வகையில் உடுக்கவும் நடக்கவும் ஆரம்பித்து விடுவார்கள்.
தங்களுக்குப் பிடிக்காத கலர் ஆடைகள் காதலருக்கு அல்லது காதலிக்குப் பிடித்திருந்தால் அக்கலர் ஆடைகளையே அணிவார்கள்.
என் நண்பன் ஒருவனுக்கு ரஜினி நடித்த படங்களே பிடிக்காது.
திடீரென்று ஒரு நாள் ரஜினி நடிப்பைப் பாராட்ட ஆரம்பித்தான்.
விசாரிக்கும் போது தெரிந்தது அவன் காதலிக்க ஆரம்பித்து விட்டான் என்று.
காதலிக்கு என்ன பிடித்திருந்தாலும் அவனுக்கும் பிடிக்கும்.
என் நண்பன் ஒருவன் Pure non-vegetarian.
திருமண நாளிலிருந்து Pure
vegetarian ஆக மாறிவிட்டான், மனைவிக்காக.
ஒன்று புரிகிறது, நாம் நமக்காக வாழ்வதை விட நாம் நேசிப்பவர் களுக்காக வாழ்வதையே அதிகம் விரும்புகிறோம்.
கடவுள் துவக்கமும் முடிவும் இல்லாதவர், சர்வ வல்லவர், துன்பப்பட முடியாதவர்.
அவரால் படைக்கப்பட்ட நாம் இறப்பும் பிறப்பும் உள்ளவர்கள், சக்தியில்லாதவர்கள், துன்பப் படுபவர்கள்.
ஒரு நாள் அவர் கடவுளாக இருந்து கொண்டே
பிறப்பும் இறப்பும் உள்ள, சக்தியற்ற, துன்பப் படக்கூடிய மனிதனாகப் பிறந்தார்.
சொல்லாமலே புரியும் அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்று.
கடவுள் மாற முடியாதவர்.
இயல்பிலேயே தன்னால் படைக்கப்பட்ட, தன்னால் அளவு கடந்த விதமாய் நேசிக்கப் படுகின்ற நமக்காகச் செயல் புரிந்து கொண்டிருப்பவர்.
பிறப்பும் இறப்பும் இல்லாதவர் இரண்டுமே உள்ள மனிதனாகப் பிறந்தது அவரது வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் அல்ல.
அவரது நித்திய காலத் திட்டம்.
மனிதனைப் படைத்தது, அவனுக்காக மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு மரித்தது, உயிர்த்தது எல்லாம் அவரது நித்திய காலத் திட்டத்தின் செயல்பாடுகள் தான்.
அவர் நமக்காக வாழ்வது போல நாமும் அவருக்காக வாழ வேண்டும் என்பது அவரது நித்திய கால ஆசை.
அவரது ஆசைப்படி நடக்க வேண்டியது நமது கடமை.
ஆனாலும் அவர் நமக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.
அவர் எப்படி சுதந்திரமாக நமக்காக வாழ்கிறாரோ அதுபோல நாமும் சுதந்திரமாக அவருக்காக வாழ வேண்டும்.
திவ்ய நற்கருணையில் நமக்காக வாழ வேண்டும் என்றோ, நமக்குத் தன்னையே உணவாகத் தர வேண்டும் என்றோ அவரை யாரும் கட்டாயப் படுத்த முடியாது.
அது அவரது இயல்பான அன்பின் இயல்பான முடிவு.
நாமும் நமது இயல்பான அன்பினால் அவரை நேசிக்க ஆரம்பித்தால் நாமும் அவருக்காக வாழ ஆரம்பித்து விடுவோம்.
நாம் யாரை நேசிக்கிறோமோ அவருக்காக நமது உடல் பொருள் ஆவி அத்தனையையும் அர்ப்பணித்து விடுவோம்.
இப்போது நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமது சிந்தனையால் அவரை ஆரம்பிக்க வேண்டியதுதான்.
நமது சிந்தனையை முற்றிலும் அவருக்குக் கொடுத்து விட்டால்
நமது சொல்லிலும் செயலிலும் அவரே நிறைந்து விடுவார்.
நம்மில் முற்றிலும் அவரே இயங்குவார்.
அன்னை மரியாள் அதைத் தான் செய்தாள்.
"இதோ ஆண்டவருடைய அடிமை."
அடிமை வாழ்வது எஜமானுக்காக மட்டுமே.
நாமும் நம்மை ஆண்டவருக்கு அடிமைகளாக அர்ப்பணிப்போம்.
அவருக்காகவே வாழ்வோம்.
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment