(அரு.16:20)
மனித வாழ்க்கை ஒரு பயணம்.
புறப்படும் இடம் இவ்வுலகம், போக வேண்டிய இடம் விண்ணகம்.
உல்லாசப் பயணம் அல்ல, போராட்டங்கள் நிறைந்த பயணம்.
மனுக்குல வாழ்க்கையே போராட்டத்தோடுதான் ஆரம்பித்தது.
ஒரு பக்கம் மனிதனைப் படைத்த கடவுள், மறு பக்கம் சாத்தான்.
படைக்கப்பட்ட போது மனிதன் கடவுள் பக்கம் தான் இருந்தான்.
ஆனால் சாத்தான் பாவ ஆசைகாட்டி மனிதனைத் தன் பக்கம் இழுத்து விட்டான்.
அன்று முதல் மனித வாழ்க்கையே போராட்ட வாழ்க்கையாக மாறி விட்டது.
பாவ ஆசையில் வீழ்ந்த மனிதனை அதிலிருந்து மீட்டு தன் பக்கம் ஈர்க்க கடவுள் மனிதனாகப் பிறந்தார்.
பாவத்தில் வீழ்ந்தது சாதாரண மனிதன்.
ஆனால் அவனைத் தூக்கிவிட சாதாரண மனிதனாகப் பிறந்தது சர்வ வல்லபக் கடவுள்.
கடவுள் மனிதனாகப் பிறக்கக் காரணம் மனிதன் மட்டில் அவர் கொண்டிருந்த அளவு கடந்த அன்பு.
நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காகத் தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்தார்.
தன் அன்பின் வல்லமையால் நம்மைத் தன்னை நோக்கி ஈர்க்கிறார்.
அதே சமயம் ஈடன் தோட்டத்தில் நமது முதல் பெற்றோரைப் பாவத்திற்குள் இழுத்த சாத்தான் அதன் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
ஆதித் திருச்சபை காலத்தில் அது அரசியல் தலைவர்களைத் தனது ஏஜெண்ட்டுகளாகப பயன்படுத்தி வந்தது.
ரோமை மன்னர்கள் இயேசுவுக்குச் செய்ததை அவர்களுடைய சீடர்களுக்குச் செய்தார்கள்.
"உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்."
ஏன்று இயேசு சீடர்களிடம் சொல்கிறார்.
அவர்கள் சீடர்களைத் துன்புறுத்தும் போது அவர்கள் அழவும், புலம்பவும் நேரிடும்.
அப்போது அவர்கள் துயருவதைப் பார்த்து உலகம் மகிழும்.
ஆனால் விண்ணகத்தில் அவர்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
மகிழ்ச்சியாக மட்டுமல்ல பேரின்பமாகவும் மாறும்.
அன்று இயேசு சீடர்களுக்குச் சொன்னது நமக்கும் பொருந்தும்.
நமது அரசியல் தலைமை எப்படி மாறும் என்று நமக்குத் தெரியாது.
அது ரோமை அரசியலைப்போல மாறினால் அன்று சீடர்கள் அனுபவித்ததை நாமும் அனுபவிக்க நேரிடும்.
அப்படி நேர்ந்தால் சாத்தான் வசமுள்ள உலகம் மகிழலாம்.
ஆனால் இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் எல்லா துன்பங்களும் மறுவுலகில் மகிழ்ச்சியாகவும் பேரின்பமாகவும் மாறும்.
ஈடன் தோட்டத்தில் ஆரம்பித்த போராட்டம் தான் இந்தியாவிலும் தொடர்கிறது.
ஆனால் நாம் பயப்படத் தேவையில்லை.
சர்வ வல்லப கடவுள் நம் பக்கம் இருக்கிறார்.
எதிரிகள் கையில் நாம் படும் துன்பங்களை எல்லாம் பேரின்பமாக மாற்ற வல்ல கடவுள் நம் பக்கம் இருக்கிறார்.
இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் பேறுகால வேதனைக்கு நிகரானவை.
"பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார்.
ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்.
இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள்.
ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும்.
உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது."
என்று ஆண்டவரே சொல்கிறார்.
ஆகவே இவ்வுலகில் நாம் படவிருக்கும், அல்லது படும் துன்பங்களை தவிர்க்க முடியாத பேறுகால வேதனையாக நினைத்து மகிழ்வோம்.
யாராவது பேறுகால வேதனைக்குப் பயந்து பிள்ளை வேண்டாம் என்பார்களா?
விண்ணுலகில் நாம் பெறப்போகும் பேரின்பம் நமது பிள்ளை என்றால்
இவ்வுலகில் நாம் அனுபவிப்பது பேறுகால வேதனை.
மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம்.
No comments:
Post a Comment