Monday, May 20, 2024

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?(தொடர்ச்சி)

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?
(தொடர்ச்சி)


மெய்யுணர்வு

ஒரு மாம்பழத்தைக் கையில் எடுத்துக் கொள்வோம்.

மாம்பழம் உடலுக்கு நல்லது என்று மருத்துவர் கூறியிருக்கிறார்.

மாம்பழத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதன் அழகை கண்ணால் இரசித்துக் கொண்டு,

நறுமணத்தை மூக்கினால் நுகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் உடலுக்கு நல்லதா?

உடலுக்கு நல்ல மாம்பழப் பகுதி கண்ணுக்குத் தெரியாது.

மேல் தோல் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.

அதைப் பார்ப்பதால் உடலுக்கு எந்தப் பயனும் இல்லை.

அதற்கு உள்ளே இருப்பது தான் உடலுக்கு நல்லது என்பதை முதலில் உணர வேண்டும்.

அதுதான் மெய்யுணர்வு.

மெய் + உணர்வு = உண்மையை உணர்வது.

மாம்பழத்தைப் பற்றிய உண்மையை உணர்ந்தால் தான் அதை வெட்டி, உள்ளே உள்ளதைச் சாப்பிடுவோம்.

உடல் பயன்பெறும்.

நமது ஆன்மாவின் மீட்புக்குத் தேவையான விசுவாசச் சத்தியங்களை அறிய வேண்டியிருக்கிறது.

நாமும் அறிந்திருக்கிறோம்.

அவை அடங்கியுள்ள விசுவாசப் பிரமாணத்தை தினமும் அடிக்கடி சொல்கிறோம்.

ஆனால் உணர்ந்து சொல்கிறோமா,

அல்லது மாம்பழத்தின் மேற்பகுதியை மட்டும் பார்ப்பது போல வார்த்தைகளை மட்டும் சொல்கிறோமா?

வார்த்தைகள் உள்ளத்திலிருந்து வருகின்றனவா,

அல்லது,

உதட்டிலிருந்து மட்டும் வருகின்றனவா?

விசுவாச சத்தியங்களை உணர்ந்தால் தான் அவை நமது ஆன்மீக வாழ்க்கைக்குப் பயன்படும்.

அவற்றின் உணர்த்தும் படி தூய ஆவியிடம் வேண்ட வேண்டும்.

விசுவாச சத்தியத்தின் உட்பொருளை உணர்ந்தால் அது ஆன்மீக வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படும் என்று பார்ப்போம்.

பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையே கிடையாது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு விட்டால் பிரச்சினைகள் காணாமல் போய் விடும்.

ஆனால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயல்வதே பெரிய பிரச்சினை.

இரண்டு பையன்கள்.

ஒருவனுடைய பெற்றோர் வசதி படைத்த பணக்காரர்கள்.

அடுத்தவனுடைய பெற்றோர் அன்றாடக் கூலிகள்.

கூலிகளுடைய பையன் எதிர் கால வாழ்க்கையைப் பற்றிக் கவலைப் படுவதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது.

ஆனால் பணக்கார வீட்டுப் பையன் கவலைப் பட்டால் என்ன அர்த்தம்?

அவனுக்குப் பெற்றோர் மேல் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

"பரலோகத்தையும், பூலோகத்தையும், காணப்படுபவை, காணப்படாதவை ஆகிய எல்லாவற்றையும் படைத்த சர்வ வல்லபரான பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்."

நம்மைப் படைத்த கடவுள் சர்வ வல்லவர்.

சர்வ வல்லவர். அவரால் செய்ய முடியாதது எதுவும் இல்லை.

சர்வ வல்லவர் உட்பொருளை உணர்ந்திருந்தால் நமது அகராதியில் கவலை என்ற வார்த்தையே இருக்காது.

ஏனெனில் சர்வ வல்லவரின் பிள்ளைகள்.

வாழ்வில் விருப்பங்கள் இருக்கும், ஆனால் விருப்பங்கள் நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற சந்தேகமே வராது.

ஏனெனில் நமது விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய நமது தந்தை எல்லாம் வல்லவர்.

நமது விருப்பங்கள் நிறைவேறுமா நிறைவேறாதா என்ற சந்தேகம் நமக்கு வந்தால் நாம் நம்மைப் படைத்த கடவுள் சர்வ வல்லவர் என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

விசுவாசப் பிரமாணத்தைச் சொல்ல ஆரம்பிக்கும் போதே எல்லாம் வல்ல நமது தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

நாள் முழுவதும் அந்த உணர்வுடன் வாழ்ந்தால் என்ன பிரச்சினைகள் வந்தாலும் உண்மையான மகிழ்ச்சி நம்மை விட்டு அகலாது.

நோய் நொடிகள் வந்தாலும் நமது ஆன்மீக மகிழ்ச்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது,

ஏனெனில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தந்தை பார்த்துக் கொள்வார்.

இருந்தாலும் இறைவன் மடியில், இறந்தாலும் இறைவன் மடியில்,

கவலைக்கு எங்கே இடம் இருக்கிறது?

நமது எல்லா நோக்குகளிலும் நமக்கு மெய்யுணர்வைக் கொடையாகத் தந்து ஆசீர்வதிக்க ஆவியானவரை வேண்டுவோம்.

லூர்து செல்வம்.


.



"

No comments:

Post a Comment