உமது வார்த்தையே உண்மை.
நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.
(அரு. 17:17,18)
(தொடர்ச்சி)
5. உயிர்த்து சீடர்களுக்குக் காட்சி கொடுத்தபோது
"தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்"
, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்.
எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்.
(அரு. 20:21,22,23)
அதாவது
"நான் உலகின் பாவங்களை மன்னிப்பதற்காக தூய ஆவியின் வல்லமையால்,
தந்தையால் அனுப்பப்பட்டு உலகுக்கு வந்தேன்.
என் தந்தை என்னை அனுப்பியதுபோல நான் உங்களை அனுப்புகிறேன்.
தூய ஆவியின் வல்லமையால் யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ
அவர்களுக்கு அவை மன்னிக்கப்படும்.". என்கிறார்.
மனிதனாகப் பிறந்து பாடுபட்டு நமது பாவங்களை மன்னித்தது இறைமகனே என்றாலும்
பாவ மன்னிப்பும் மீட்பும் பரிசுத்த தம திரித்துவத்தின் பணி என்பது இதிலிருந்து நன்கு புரிகிறது.
இயேசு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைத் தனது சீடர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.
இயேசு தனது சீடர்களை, அதாவது குருக்களை உலகெங்கும் அனுப்பியதன் முக்கிய நோக்கம் நமது பாவங்களை மன்னிப்பது தான்.
நற்செய்தியை அறிவிப்பது, திருப்பலி நிறைவேற்றுவது, நற்கருணையை நமக்கு உணவாகத் தருவது, மற்ற திரு அருட்சாதனங்களைத் தருவது போன்ற எல்லா பணிகளும் பாவ மன்னிப்பையே மையமாகக் கொண்டவை.
மக்கள் பாவ மன்னிப்பு பெறாவிட்டால் மற்ற எல்லா பணிகளும் வீண் (Waste)
திருமுழுக்கு நமக்கு பாவமன்னிப்பைத் தருகிறது.
பாவமன்னிப்பைப் பெறாத நிலையில் மற்ற திரு அருட்சாதனங்களைப் பெற முடியாது.
இதனால் பாவ சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.
ஆனால் நவீன கால கிறிஸ்தவர்களில் அநேகர்
பைபிள் வாசிப்பார்கள்,
பாவ சங்கீர்த்தனம் செய்ய மாட்டார்கள்.
காலை மாலை செபம் சொல்வார்கள், பாவ சங்கீர்த்தனம் செய்ய மாட்டார்கள்.
திருப்பலிக்கு வருவார்கள், பாவ சங்கீர்த்தனம் செய்ய மாட்டார்கள்.
பாவ நிலையிலேயே திவ்ய நற்கருணையை உட்கொண்டு புதிதாக ஒரு பாவத்தைக் கட்டிக் கொள்வார்கள்.
திருத் தலங்களுக்குச் சென்று கை நிறைய காணிக்கை போடுகிறார்கள், பாவ சங்கீர்த்தனம் செய்ய மாட்டார்கள்.
உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள குளிப்பார்கள்,
ஆனால் ஆன்மாவைச் சுத்தமாக வைத்துக் கொள்ள பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிவதில்லை.
வீட்டை விட்டு இறங்கி தெருவுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்புகின்றவர்கள்கூட கால்களில் உள்ள தூசியைத் தண்ணீரில் விட்டுக் கழுவாமல் உள்ளே நுழைய மாட்டார்கள்.
தூசிக்குச் சமமானவை அற்பப் பாவங்கள்.
அற்பப் பாவங்கள் உள்ளோர் அவற்றுக்காக மனஸ்தாபப் பட்டால் போதும்.
அவை மன்னிக்கப்பட்டு விடும்.
ஆனால் சகதிக்குச் சமமான சாவான பாவம் உள்ளோர் கட்டாயம் பாவ சங்கீர்த்தனம் செய்தாக வேண்டும்.
சாவான பாவத்தோடு விண்ணகத்துக்குள் நுழைய முடியாது.
பரிசுத்தத்தனம் இல்லாமல் ஆன்மீக வாழ்வு இல்லை.
பாவ மன்னிப்பு இல்லாமல் பரிசுத்தத்தனம் இல்லை.
பாவ சங்கீர்த்தனம் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை.
குருக்கள் இல்லாமல் பாவ சங்கீர்த்தனம் இல்லை.
இயேசு பள்ளிக் கூடங்களை நிர்வகிப்பதற்காக குருக்களை அனுப்பவில்லை.
பொது நிலையினர்கூட பள்ளிக் கூடங்களை நிர்வகிக்கலாம்.
ஆனால் பொது நிலையினர் பாவ சங்கீர்த்தனம் கேட்க முடியாது.
நவீன காலத்தில் பாவ சங்கீர்த்தனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.
இதற்கு யார் காரணம்?
பாவ சங்கீர்த்தனம் செய்பவர்களா அல்லது கேட்பவர்களா?
முன் காலத்தில் 8 மணிக்குப் பூசை என்றால் 7 மணிக்கே குருவானவர் பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் இருப்பார்.
மக்கள் அதற்கு முன்பே கோவிலுக்கு வந்து விடுவார்கள்.
இப்போது சரியாக 8 மணிக்கு குருவானவர் பூசைக்கு வருகிறார்.
மக்கள் எழுந்தேற்றம் வரை ஒவ்வொருவராக வருகிறார்கள்.
பூசை ஆரம்பிக்கும் போது கால்வாசிக் கோவிலில் தான் ஆட்கள் இருக்கிறார்கள்.
நன்மை கொடுக்கும்போது கோவில் நிறம்பி வடிகிறது.
இந்நிலை மாற வேண்டும்.
பூசை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே மக்கள் கோவிலுக்கு வந்து விட வேண்டும்.
பாவ சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும்.
முழுப்பூசை காண வேண்டியதன் அவசியத்தையும் மக்கள் உணர வேண்டும்.
ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் நாம்.
எந்த நோக்கத்திற்காக இயேசு திருச்சபையை நிறுவினாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற நம் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு.
அதற்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வோம்.
"உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும்.
தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்.
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்."
என்ற இயேசுவின் வார்த்தைகள் எப்போதும் நம் நினைவில் இருக்க வேண்டும்.
மருத்துவ மனை நோயாளிகளின் கூடாரம், அவர்களைக் குணமாக்குவதற்கான கூடாரம்.
நாம் அனைவரும் பாவிகள்.
கத்தோலிக்கத் திருச்சபை பாவிகளின் கூடாரம்,
அனைவரையும் பரிசுத்தர்களாக ஆக்குவதறாகான கூடாரம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment