Friday, May 10, 2024

துன்பங்கள் புனிதர்களை உருவாக்க உதவுகின்றன."

"துன்பங்கள் புனிதர்களை உருவாக்க உதவுகின்றன."

'நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். 
(தொடக்கநூல் 3:19)

"ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், "தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். "
(தொடக்கநூல் 2:16)


ஏதேன் தோட்டத்தில் இருந்த எந்த பழ மரத்தையும் ஆதாம் பயிர் செய்யவில்லை.

மனிதன் படைக்கப்படுவதற்கு முன்னாலேயே நிலத்திலிருந்து மூடுபனி எழும்பி நிலம் முழுவதையும் நனைத்தது. 

பழ மரங்கள் வளர்ந்தன.

 ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார். 


ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், "தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம் என்று சொன்னார்.

நமது முதல் பெற்றோர் கஷ்டப்பட்டு உழைக்காமல் தோட்டத்தில் ஏற்கெனவே வளர்ந்திருந்த பழ மரங்களின் பழங்களை உண்டு வாழ்ந்தார்கள்.

ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ணக்கூடாது என்று கடவுள் ஒரு கட்டளை கொடுத்திருந்தார்.

இது கடினமான கட்டளை அல்ல.

கஷ்டப்பட்டு உழைக்காமல் உண்டு வந்த அவர்கள் கடவுளுடைய கட்டளையே மீறி பாவம் செய்தார்கள்.

அதன் பிறகு 

கடவுள் மனிதனிடம், "உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் 

உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது; 

உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய். 
(தொடக்கநூல் 3:17)

பாவத்தின் விளைவாக கஷ்டப்பட்டு உழைத்து உண்ண வேண்டிய நிலைமை மனிதனுக்கு ஏற்பட்டது.

கடவுள் மனிதனை படைக்கும் போது கஷ்டம் இல்லாமல் படைத்தார்.

 மனிதன் தனது பாவத்தின் மூலம் கஷ்டத்தைத் தன் மேல் வர வரவழைத்துக் கொண்டான்.

விளைவு, கஷ்டப்பட்டால் பலன்.

மீட்பு என்ற பலனை நமக்குத் தருவதற்காக இறை மகனே மனு மகனாகப் பிறந்து கஷ்டப்பட்டார்.

ஆக, துன்பம் நமது இயல்பாகி விட்டது.

Suffering has become our nature.

 துன்பப்படாமல் எந்த பலனையும் அடைய முடியாது.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடு பட்டால் தான் நிலம் பலன் தரும்.

கஷ்டப்பட்டு படித்தால் தான் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

கஷ்டப்பட்டு பயணம் செய்தால் தான் நினைத்த இடத்துக்குப் போக முடியும்.


கஷ்டப்பட்டுப் பத்தியம் இருந்தால் தான் நோய் குணமாகும்.

கஷ்டப்பட்டு சமைத்தால் தான் சாப்பிட முடியும்.

கஷ்டப்பட்டு தவம் செய்தால்தான் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய முடியும்.

இயேசு நமக்காக சிலுவையில் பாடுகள் பட்டு மரித்ததால் துன்பம் சிலுவையாக மாறிவிட்டது.

உடலில் வலி ஏற்பட்டால் அது துன்பம்.

வலியை பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டால் அது சிலுவை. 

மனித வாழ்வில் துன்பங்கள் ஏற்படுவது இயல்பு. 

துன்பங்களைத் துன்பகளாக மட்டும் அனுபவித்தால் அதனால் நமக்கு எந்த பயனும் இல்லை.


துன்பங்களைச் சிலுவைகளாக ஏற்றுக்கொண்டால் அவற்றுக்கு விண்ணகத்தில் நமக்கு சன்மானம் கிடைக்கும்.

இன்று விண்ணகத்தில் வாழும் புனிதர்கள் மண்ணகத்தில் நம்மைப் போல் மனிதர்களாக இருந்தவர்கள் தான்.

அவர்கள் சிலுவைகளாக ஏற்றுக் கொண்ட துன்பங்கள் தான் அவர்களை புனிதர்களாக மாற்றின.

புனித பிரான்சிஸ் அசிசியார் ஏழ்மையால் ஏற்பட்ட துன்பங்களைச் சிலுவைகளாக ஏற்றுக்கொண்டதால் அவருக்கு ஐந்து காய வரம் கிடைத்தது.

 அல்போன்சா சகோதரி அவளது உடல் நோயைச் சிலுவையாக ஏற்றுக்கொண்டதால் புனித அல்போன்சாவாக மாறினாள்.

புனிதர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் சிலுவையைச் சுமந்தவர்கள் தான்.

ஆண்டவர் இயேசுவின் அன்னை மரியாள் வாழ்நாள் முழுவதும் வியாகுல அன்னையாகவே வாழ்ந்தாள். 

புனிதர்கள் மேல் பக்தி உள்ளவர்கள் சிலுவையின்மேல் பக்தி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வுலகில் இன்பத்தின் மேல் மிதக்க ஆசைப்படுகின்றவர்கள் மறு உலக பேரின்பத்தின் மேல் ஆசைப் பட முடியாது.

இவ்வுலகில் சிலுவை = மறுவுலகில் பேரின்பம்.

இவ்வுலகில் சிற்றின்பம் = மறுவுலகில் பேரிடர்.

பாரமான மரச்‌ சிலுவை மட்டும் சிலுவையல்ல.

சாதாரண ஈக்குச்சி கூட சிலுவையாக மாறலாம்.

காலில் ஒரு ஈக்குச்சி குத்தி வலிக்கிறது.‌‌ அதைப் பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டால் அது ஒரு சிலுவை.

இரவில் தூக்கம் வரவில்லை. அதைப் பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டால் அது ஒரு சிலுவை.

காலையில் இன்னும் கொஞ்சம் தூங்க வேண்டும் போல் தெரிகிறது. ஆண்டவருக்காக உடனே எழுந்தால் அதைப் பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டால் அது ஒரு சிலுவை.

செய்யாத குற்றத்தை செய்ததாக நம் மேல் பழி போடுகிறார்கள். அதைப் பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டால் அது ஒரு சிலுவை.

ஐஸ் சாப்பிட ஆசையாக இருக்கிறது.‌ ஆண்டவருக்காக ஆசையை அடக்கிக் கொண்டால் அது ஒரு சிலுவை.

நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காக நமக்கு வேலை உயர்வு கிடைக்கவில்லை.

மோட்சத்தில் Promotion கிடைக்கும்.

சிலுவையை தேடிக் கல்வாரி மலைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை.

நமக்கு மனம் இருந்தால் நாம் இருக்கும் இடமே கல்வாரியாக மாறிவிடும்.

நமது வீடாக இருந்தாலும், 
அலுவலகமாக இருந்தாலும், பள்ளிக்கூடமாக இருந்தாலும் நாம் நினைத்தால் அவற்றை கல்வாரி மலைகளாக மாற்றிவிடலாம்.

நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

நமக்கு வேண்டாதது நடக்கும் போது அதை ஆண்டவருக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆண்டவர் நம்மை புனிதராக ஏற்றுக் கொள்வார்.

ஆண்டவர் எங்கும் இருக்கிறார்.

எப்போதும் இறைப் பிரசன்னத்தில் வாழ்ந்தால் நாம் இறைவனுக்குள் வாழ்வோம்.

இறைவனுக்குள் வாழ்ந்தால் நாம் சுமப்பதெல்லாம் சிலுவை தான்.

மனிதர்களாகப் பிறந்ததே புனிதர்களாக வாழ்வதற்காகத்தான் என்பது நம் நினைவில் இருந்தால்

நமது ஒவ்வொரு அசைவையும் சிலுவை யாக மாற்றி விடுவோம்.

வாழ்வோம் சிலுவையில்.

மரிப்போம் சிலுவையில்.

மாறுவோம் புனிதர்களாக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment