(தொடர்ச்சி)4
தூய ஆவியின் ஏழு கொடைகளுள் நான்காவது கொடை
நுண்மதி (Spirit of Knowledge)
சரியான ஆன்மீகப் பாதையில் நடக்க,
பிரச்சினைகள் (Problems) வரும்போது விசுவாசம் சார்ந்த காரியங்களில் இறைவனுக்கேற்ற முடிவெடுத்தல்.
நுண்மதி என்றால் கூர்மையான ஆன்மீக அறிவு.
ஆன்மீகம் சார்ந்த எல்லா நடவடிக்கைகளுக்கும் நமது ஆண்டவர் முன்மாதிரிகை காட்டியிருக்கிறார்.
இயேசுவின் பேச்சில் குற்றம் கண்டு பிடிக்கப் பரிசேயர்கள் சதா அவரைப் பின் தொடர்கிறார்கள்.
ஒரு முறை அவரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள்.
"போதகரே, சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா?"
(மாற்கு.12:14)
அவர்கள் எதிர்பார்த்தது
செலுத்துங்கள் என்பார், அல்லது செலுத்த வேண்டாம் என்பார்.
செலுத்துங்கள் என்று சொன்னால் அவர் ரோமை மன்னரின் ஆட்சியை ஏற்றுக் கொள்கிறார் என்று அர்த்தம்.
ஏற்றுக் கொண்டால் அவர் மெசியாவாக இருக்க முடியாது.
மெசியா ரோமையர்களின் அடிமைத்தனத்திலிருந்து யூதர்களை மீட்பார் என்பது அவர்களுடைய நம்பிக்கை.
செலுத்த வேண்டாம் என்று சொன்னால் அவர் அரசுக்கு எதிராகப் பேசுகிறார், அரசை அவர் மீது நடவடிக்கை எடுக்க வைக்கலாம்.
அவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுப்பதில் தான் அவர்கள் குறியாக இருந்தார்கள்.
ஆனால் இயேசு நுண்மதியோடு பதில் சொன்னார்.
"சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்"
உரியதைக் கொடுக்கச் சொல்வதில் தவறு காண முடியாது.
அது மட்டுமல்ல, தான் அரசியல்வாதி அல்ல, ஆன்மீகவாதி என்பதைத் தெளிவாக்கி விட்டார்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!
ஒரு முறை இயேசுவின் பதிலில் குற்றம் கண்டு பிடிப்பதற்காக
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,
"போதகரே,
இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசேயின் கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டனர்.
கல்லால் எறியச் சொன்னால் அவர் இரக்கமற்றறவர், போதனைக்கும் செயலுக்கும் சம்பந்தம் என குற்றம் சாட்டலாம்.
எறியக் கூடாது என்று சொன்னால் அவர் மோசேயின் சட்டத்தை மீறுகிறார் என குற்றம் சாட்டலாம்.
அவரைக் குற்றவாளி ஆக்குவது மட்டுமே அவர்கள் குறிக்கோள்.
ஆனால் இயேசு நுண்மதியோடு பதில் சொன்னார்,
"உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்"
அவர் மோசேயின் சட்டத்தையும் மீறவில்லை,
பாவி மீது கொண்ட இரக்கத்தையும் விடவில்லை.
அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள்.
இயேசு பெண்ணைப் பார்த்து,
"நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.
விசுவாசத்தை அடுத்த நமது வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் விசுவாசத்துக்கு பாதிப்பு இல்லாமல் நுண்மதியோடு செயல்பட வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை கடன் பூசை.
பூசைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.
வழியில் ஒரு ஆள் ரோட்டில் மயங்கிக் கிடக்கிறான்.
நமது மனதில் இரக்கம் இயங்க ஆரம்பிக்கிறது.
மயங்கிக் கிடக்கிறவனை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவா?
மனைக்கு எடுத்துச் சென்றால் பூசைக்குச் செல்ல முடியாது.
நுண்மதியோடு சிந்திக்க வேண்டும்.
இயேசு ஓய்வு நாளிலும் நோயாளிகளைக் குணமாக்கினார்.
மயங்கிக் கிடப்பவன் இயேசுவின் சகோதரன்.
இயேசு ஓய்வு நாளுக்கும் ஆண்டவர்.
அவருடைய சகோதரனுக்கு உதவி செய்ய வேண்டியது நமது முதல் கடமை.
அக்கடமையை நிறைவேற்ற முடிவெடுப்போம்.
கோவில் புதுப்பிக்கும் வேலைக்கு சுவாமியார் நன்கொடை பிரித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு தொகையைத் தருவதாக வாக்குக் கொடுத்து விட்டோம்.
பணத்தையும் எடுத்து வைத்து விட்டோம்.
ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவ மனையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அறுவை சிகிச்சை செய்ய கையில் பணம் இல்லை.
அறுவை சிகிச்சை செய்தால் பிழைத்துக் கொள்வார்.
செய்யாவிட்டால் மரணம் உறுதி.
நாம் கோவிலுக்குக் கொடுக்க எடுத்து வைத்திருக்கும் பணத்தைக் கோவிலுக்குக் கொடுக்கவா?
வைத்தியம் பார்க்கக் கொடுக்கவா?
நுண்மதியைப் பயன்படுத்துவோம்.
மருத்துவ மனையில் இருப்பது பரிசுத்த ஆவியின் உயிருள்ள ஆலயம்.
உயிருள்ள ஆலயத்தை உடனடியாகக் காப்பாற்ற வேண்டியது நமது முதல் கடமை.
கடமையைச் செய்வோம்.
சாலமோன் மன்னரிடம் ஒரு வழக்கு வருகிறது.
இரண்டு பெண்கள் ஒரு குழந்தைக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.
உண்மையான தாயிடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும்.
அப்போது DNA Test வசதியெல்லாம் கிடையாது.
மன்னரின் நுண்மதி வேலை செய்கிறது.
பணியாளரை அழைத்து,
"குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாகக் கொடு."
ஒரு பெண் அலறினாள்,
"ஐயா, குழந்தையை வெட்டாதீர்கள். முழுக் குழந்தையையும் அவளிடமே கொடுங்கள். எங்கிருந்தாலும் நல்லா இருந்தால் சரி."
யார் உண்மையான தாய் என்று மன்னர் கண்டு பிடித்து விட்டார்.
குழந்தையை அவளிடமே கொடுத்து விட்டார்.
ஆன்மீக வாழ்வில் நுண்மதியுடன் செயல் புரிய அருள் வரம் கேட்டு தூய ஆவியானவரிடம் வேண்டுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment