Friday, May 24, 2024

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?(தொடர்ச்சி)6

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?
(தொடர்ச்சி)6

தூய ஆவியின் ஏழு கொடைகளுள் ஆறாவது கொடை இறைப்பற்று. (piety)

இறைவன் மீது நமக்கு இருக்கும் அன்பை இறைப்பற்று, கடவுள் பக்தி என்ற வார்த்தைகளால் குறிப்போம்.

பற்று என்றாலும், பக்தி என்றாலும் அன்பு என்றுதான் பொருள்.

கணவன் மனைவிக்கிடையே நிலவும் அன்பை பதிபக்தி என்போம்.

இறையன்புக்குள் பிறரன்பும் அடங்கும்.

நமது இறையன்பை பிறரன்பினால் தான் வெளிப்படையாகக் காட்ட முடியும்.

கடவுளை நேசிப்பவன் தனது பிறரையும் நேசிப்பான்.

பிறனை நேசிக்காதவனால் கடவுளை நேசிக்க முடியாது.

தூய ஆவி அன்பின் கடவுள்.

காற்று வீசுகிறது.
மழை பெய்கிறது.
கடவுள் நேசிக்கிறார்.

காற்றின் வேலை வீசுவது.
மழையின் வேலை பெய்வது.
கடவுளின் வேலை நேசிப்பது.

கடவுள் தனது அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

நமது வேலையும் நேசிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.

மிட்டாயைப் பார்த்தவுடன் நாக்கில் உமிழ்நீர் ஊறுகிறது.

அயலானைப் பார்த்தவுடன் இதயத்தில் அன்பு ஊற வேண்டும்.

கடவுளை நினைத்தவுடன் இதயத்தில் அன்பு ஊற வேண்டும்.

அன்பு ஒரு பொருளல்ல.
Love is not a matter.

அன்பு ஒரு பண்பு.
Love is a quality.

அன்பை புறக் கண்ணால் பார்க்க முடியாது.

அன்பு செய்பவர் அதை உணர முடியும்.

அன்பு செய்யப்படுபவர் செய்பவருடைய அன்பை உணர வேண்டுமானால் அவரது அன்பு சொல் வடிவமோ, செயல் வடிவமோ பெற வேண்டும்.

இறைவன் நமக்கு உடலையும் ஆன்மாவையும் தந்து,

நாம் பயன்படுத்த உலகத்தையும் தந்து

 தன் அன்பை நமக்கு வெளிப்படுத்தினார்.

நம் உடலை நாம் பார்க்கும் போதெல்லாம் இறைவன் மீது நமக்கு அன்பு ஊற வேண்டும்.

நமது உள்ளத்தில் அவரை நினைக்கும் போதெல்லாம் அவர் மீது நமக்கு அன்பு ஊற வேண்டும்.

அதாவது எப்போதும் நம்முள் கடவுள் மீது அன்பு ஊற வேண்டும்.

நாம் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் அவரால் படைக்கப்பட்டவை.

எந்தப் பொருளைப் பார்த்தாலும் கடவுள் மீது அன்பு ஊற வேண்டும்.

இறைவன் மீதான அன்பு அவரது கட்டளைகளைக் கடைபிடிப்பதில் செயல் வடிவம் பெற வேண்டும்.

நமது அயலானைப் பார்க்கும் போது கடவுள் மீதும், அயலான் மீதும் அன்பு ஏற்பட வேண்டும்.

அந்த அன்பும் சொல் வடிவமோ, செயல் வடிவமோ பெற வேண்டும்.

செயல் இல்லாத அன்பு செத்த அன்பு.
 
இறைவனை நினைத்துப் பார்க்கவும், அவரை வாயினால் வாழ்த்தவும் உதவ அவரால் படைக்கப்பட்ட ஒரு சிறிய புல் போதும், ஒரு அணு கூட போதும்.

ஒரு அணுவின் அமைப்பை நினைத்துப் பார்த்தாலே கடவுளின் அளவு கடந்த வல்லமை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

அண்டமே அணுவுக்குள் அடங்கியிருக்கிறது.

உள்ளே வலம் வந்து கொண்டிருக்கும் எலெக்ட்ரான்ஸ், நியூட்ரான்ஸ், புரோட்டான்ஸ் ஆகியவை நட்சத்திரங்களையும், அவைகளை வலம் வந்து கொண்டிருக்கும் கிரகங்களையும் ஞாபகப் படுத்துகின்றன.

தூய ஆவியானவரின் பக்தி என்ற கொடை நம்முள் இருந்தால் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் கடவுளின் வல்லமையை நமக்கு உணர்த்துவதோடு

நமது இறைப்பற்றை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

நமது இறைப்பற்றின் எல்கை வட்டத்துக்குள் புனிதர்களும், உத்தரிக்கிற ஆன்மாக்களும் வருவார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரும் நமது அயலான்தானே.

அயலானை நேசிக்க வேண்டியது இறைக் கட்டளைகளுக்குள் அடங்கும்.

புனிதர்களுக்கு நமது உதவி தேவைப் படாது.

ஏனெனில் அவர்கள் நித்திய பேரின்ப வாழ்வை அடைந்து விட்டார்கள்.

ஆனால் அவர்களின் உதவி நமக்குத் தேவைப் படும்.

மண்ணுலகில் வாழும் நமக்கு
விண்ணுலகில் வாழும் அவர்களால் என்ன உதவிகள் செய்ய முடியும்?

நமக்காக இறைவனிடம் பரிந்து பேசி எல்லா வகையான உதவிகளும் செய்ய முடியும்.

ஏனெனில் உதவி செய்பவர் சர்வ வல்லமை உள்ள கடவுள்.

என்னென்ன உதவிகளைக் கேட்கலாம்?

நமது ஆன்மீக வாழ்வுக்கு இடையூறு இல்லாத,

ஆன்மீக உதவிகரமாய் இருக்கக்கூடிய எந்த உதவியையும் கேட்கலாம்.

நாம் எந்த புனிதர் மீது அதிக பக்தி வைத்திருக்கிறோமோ அவரைப் போல ஆன்மீகத்தில் வாழ வரம் பெற்றுத் தரும்படி கேட்கலாம்.

உதாரணத்திற்கு, அன்னை மரியாளின் பக்தர்கள் அவளைப் போல ஆண்டவரின் அடிமைகளாய் அர்ப்பண வாழ்வு வாழ உதவும்படி வரம் பெற்றுத் தர மன்றாடலாம்.

புனித அந்தோனியாரின் பக்தர்கள்

 அவரைப் போல விவிலிய ஞானத்திலும்,

 நற்கருணை பக்தியிலும்,

 நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்திலும் 

வளர வேண்டிய அருள் வரங்களைப் பெற்றுத் தர மன்றாடலாம்.

உத்தரிக்கிற ஆன்மாக்கள் தங்களுக்காக செபிக்க முடியாது, 
நமக்காக செபிக்கலாம்.

நாம் நமக்காகவும் செபிக்கலாம்,

அவர்களுக்காகவும் செபிக்கலாம்.

அவர்கள் சீக்கிரம் மோட்ச பாக்கியத்தை அடைய அவர்களுக்காக செபிக்கலாம்.

நாம் படும் துன்ப துயரங்களையும்,

தான தர்மங்களையும் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒப்புக் கொடுக்கலாம்.

நம்முடைய உடல் உறுப்புக்கள் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து கொள்வது போல

இயேசுவின் திருச்சபையின் உறுப்பினர்கள் அனைவரும்  ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருக்க வேண்டும்.

நாம் அனைவரும் இறையன்பிலும், பிறரன்பிலும் வளர வேண்டிய அருள் வரங்களைக் கேட்டு இறைவனை மன்றாடுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment