Thursday, May 9, 2024

"நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்"(மாற்கு நற்செய்தி 16:16)

"நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்"
(மாற்கு நற்செய்தி 16:16)

இயேசுவின் நற்செய்தியை விசுவசித்து, திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்.

வசனம் சிறியது.
மறை உண்மைகள் பெரியவை.

1. விசுவாசம்.
2. திருமுழுக்கு.
3. மீட்பு.

நமது ஆன்மீக வாழ்வின் நோக்கம் என்ன?

இயேசு உலகிற்கு வந்ததன் நோக்கம் என்ன?

இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான், மீட்பு.

இயேசு உலகில் பிறந்தவுடன் விண்ணகத்திலிருந்து மண்ணகத்துக்கு வந்த நற்செய்தி,

"இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்."
(லூக். 2:11)

மீட்பர் பிறந்திருக்கிறார்.

இயேசு விண்ணகம் எய்துமுன் கொடுத்த நற்செய்தி,

"விசுவசித்து திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்"

மீட்புப் பெறுவர்.

எதற்காகச் சாப்பிடுகிறோம்?

உயிர் வாழ.

சாப்பிடாவிட்டால் உயிர் வாழ முடியாது.

சாப்பாடு, உயிர் வாழ்தல், இரண்டில் எது அதிக முக்கியம்?

உயிர் வாழ்தல்.

விசுவாசம், மீட்பு இரண்டில் எது அதிக முக்கியம்?

மீட்பு.

இயேசு பிறந்தவுடன் கொல்லப் பட்ட மாசில்லாக் குழந்தைகள் மீட்பு அடைந்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு விசுவாசம் என்றால் என்னவென்றே தெரியாது.

இப்போது கூட குழந்தைகள் திருமுழுக்குப் பெறும்போது அவர்களுக்குப் ஞானப் பெற்றோர்தான் விசுவாசத்தை அறிக்கையிடுகிறார்கள்.

ஆனால் அவர்கள் திருமுழுக்குப் பெற்றவுடன் இறக்க நேரிட்டால் உறுதியாக மோட்சம் செல்வார்கள்.

வாழ்வின் நோக்கம் மீட்பு மட்டுமே என்பதை வலியுறுத்தவே மேற்கூறப்பட்ட உதாரணங்கள்.

ஆனாலும் பெரியவர்கள் மீட்புப் பெற விசுவசித்து திருமுழுக்குப் பெற வேண்டியது அவசியம்.

மீட்புப் பெற பைபிள் மட்டும் போதும் என்று நம்புகின்ற நமது பிரிவினை சகோதரர்கள் 

மீட்புப் பெற விசுவாசம் மட்டும் போதும் என்கிறார்கள்.

ஆனால் நாம் விசுவாசத்தோடு நற்செயல்களும் அவசியம் என்று கூறுகிறோம்.

"ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு; 

நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம்.

 இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார். 
(எபேசியர் 2:10)

"எனவே மனிதர் விசுவாசத்தினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத் தெரிகிறது."

"உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத விசுவாசம் செத்ததே."
(யாக்கோபு 2:24,26)

(விசுவாசமும், நற்செயல்களும் அவசியம்)

விசுவாசம் என்றால் என்ன?

"கடவுள் ஒருவர் இருக்கிறார்.

அவர் மூன்று ஆட்களாய் இருக்கிறார்.

இரண்டாம் ஆளாகிய இறைமகன் நமக்காக மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்தார்.

மரித்த மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்தார்."

ஆகிய மறை உண்மைகளை ஏற்றுகொள்வதா விசுவாசம்?

நாம் ஏற்றுக் கொள்கிற அத்தனை மறை உண்மைகளும் சாத்தானுக்கும் தெரியும்.

தெரிவதும் தெரிந்ததை உண்மை என்று ஏற்றுக் கொள்வதும் விசுவாசம் அல்ல.

உலகம உருண்டை என்ற புவியியல் உண்மையை ஏற்றுக் கொள்வது விசுவாசமா?

தண்ணீரைக் கொதிக்க வைத்தால் ஆவியாகும் என்ற அறிவியல் உண்மையை ஏற்றுக் கொள்வது விசுவாசமா?

மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகும் என்ற மருத்துவ 
உண்மையை ஏற்றுக் கொள்வது விசுவாசமா?

இவற்றில் எதுவுமே விசுவாசம் இல்லை, ஏனெனில் அவற்றால் நமது ஆன்மீக வாழ்வுக்கு எந்தப் பயனும் இல்லை.


"கடவுள் ஒருவர் இருக்கிறார்.
அவர் மூன்று ஆட்களாய் இருக்கிறார்."

என்ற மறையியல் உண்மையை ஏற்றுக் கொள்வது விசுவாசமா?

நாம் ஏற்றுக் கொள்வது நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவியாய் இருக்குமானால் அது விசுவாசம்
.

ஆன்மீக வாழ்வுக்கு உதவியாய் இல்லாவிட்டால் அது விசுவாசம் அல்ல, வெறும் அறிவு (Knowledge) மட்டுமே.

நமது ஆன்மாவின் மீட்புக்கு உதவியாக இருந்தால் மட்டுமே அது விசுவாசம்.

எப்போது அது ஆன்மாவின் மீட்புக்கு உதவியாக இருக்கும்?

இறைவனின் அருளைப் பெறுவதற்கு உதவியாய் இருக்கும் போது ஆன்மாவின் மீட்புக்கு உதவியாக இருக்கும்.

அது நாம் திருமுழுக்கு, மற்றும் மற்ற அருட்சாதனங்களைப் பெற வழி வகுக்கும் போது இறைவனின் அருளைப் பெறுவதற்கு உதவியாய் இருக்கும்.

இறைவனை விசுவசித்து திருமுழுக்குப் பெற்றால் நம் மீது பரிசுத்த ஆவி இறங்குவார், 

நமது சென்மப் பாவம் மன்னிக்கப் பட்டு 

நாம் தேவ இஷ்டப்பிரசாதம் (Sanctifying grace) என்ற அருள் வரத்தைப் பெறுவோம்.

திருமுழுக்குப் பெற்றவுடன் மரித்தால் நேரே விண்ணகம் செல்வோம், அதாவது மீட்புப் பெறுவோம்.

விசுவாசத்தோடு பாவ சங்கீர்த்தனம் செய்தால் நமது கர்மப் பாவங்கள் மன்னிக்கப் படும். இறையருள் வரத்து அதிகமாகும்.

 இறையருள் இருவகை.

1. தேவ இஷ்டப்பிரசாதம்        
     (Sanctifying grace.)
 2. உதவி வரப்பிரசாதம் 
         (Actual grace)

தேவ இஷ்டப்பிரசாதம் இறைவனுக்கும், நமக்கும் உறவை ஏற்படுத்துகிறது.

இந்த அருள் வரத்தோடுதான் இறைவன் நமது முதல் பெற்றோரைப் படைத்தார்.

தங்கள் பாவத்தால் அதை இழந்தார்கள்.

நாம் திருமுழுக்கு பெறும்போது இந்த வரத்தைப் பெற்றோம்.

சாவான பாவம் செய்தால் இதை இழக்க நேரிடும்.

பாவ சங்கீர்த்தனம்‌ செய்யும் போது இழந்த வரம் திரும்பக் கிடைக்கும்.

இந்த வரத்தோடு செய்யும் பிறர் அன்புச் செயல்கள் தான் நற்செயல்கள்.

தேவ இஷ்டப்பிரசாதம் இல்லாமல் நற்செயல்கள் செய்ய முடியாது.

தேவ இஷ்டப்பிரசாதம் இல்லாத நிலையில் நாம் பிறருக்கு உதவி செய்தால் அது வெறும் உதவியே, நற்செயல் அல்ல.


உதவி வரப்பிரசாதம்:

நாம் தேவ இஷ்டப்பிரசாத நிலையில் இருக்கும் போது நாம் நற்செயல்கள் செய்யத் தூண்டும் அருள் வரம் உதவி வரப்பிரசாதம்.

இதன் உதவியுடன் நற்செயல்கள் செய்யும் போது இன்னும் அதிகம் செய்வதற்காக இவ்வரத்தை ஆண்டவர் மிகுதியாகத் தருவார்.

நாமும் இவ்வரம் கேட்டு இறைவனிடம் மன்றாட வேண்டும்.

எவ்வளவுக்கெவ்வளவு இறை அருள் வரத்தில் நாம் வளர்கிறோமோ

அவ்வளவுக்கவ்வளவு நாம் பரிசுத்தத் தனத்தில் வளர்வோம்.

மோட்சத்தில் நமது பேரின்பத்தின் அளவு அதிகமாகும்.

அன்னை மரியாள் இறையருளால் நிறைந்திருநாதாள்.

நாம் அவளை நோக்கி அருள் நிறைந்த மரியே என்று வாழ்த்தும் போது அவளது திரு மகனிடமிருந்து நிறைய அருள் வரங்களைப் பெற்றுத் தருவாள்.

விசுவாசத்தோடு நற்செயல்கள் புரிந்து, அருள் வரங்களைப் பெற்று, மீட்புப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment