(அரு. 17:16)
இயேசு இறைமகன். பிரபஞ்சம் முழுவதையும் ஒரே சொல்லால் படைத்தவர்.
அதற்கு முழு உரிமையாளர்.
அதன் ஒவ்வொரு அணுவும் அவருடைய வல்லமையால் தான் இயங்குகிறது.
நாம் வாழும் உலகம் பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான்.
அதன் ஒவ்வொரு அணுவும் அவருக்கு தான் சொந்தம்.
அவர் சொல்கிறார்,
"நான் உலகைச் சார்ந்தவன் அல்ல."
உலகின் உரிமையாளர், ஆனால் உலகைச் சார்ந்தவர் அல்ல.
எப்படி?
நான் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன் என்று வைத்துக் கொள்வோம்.
அங்கு பணிபுரிந்து அதனால் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு தான் குடும்பத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன்.
அதாவது எனது வாழ்க்கைக்கு நான் பணிபுரியும் பள்ளியைச் சார்ந்திருக்கிறேன்.
ஆனால் நான் அதன் உரிமையாளர் அல்ல.
கடவுள் முழுக்க முழுக்க சுயமாக இயங்குபவர்.
எதையும் யாரையும் சார்ந்து இயங்குபவர் அல்ல.
அவர் உலகத்தின் உரிமையாளர், அதைச் சார்ந்தவர் அல்ல.
அவர் மனிதனாகப் பிறந்த போது அவர் படைத்த உலகில் பிறந்தார்.
அதில் அவர் வாழ்ந்தார், அதைச் சார்ந்து வாழவில்லை.
அவருடைய வல்லமையால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருந்தது, உலகின் உதவியோடு அவர் இயங்கவில்லை.
ஒரு வினாடி அவர் உலகை மறந்தால் (மறக்க மாட்டார்) உலகம் ஒன்றுமில்லாமை ஆகி விடும்.
அவரால் படைக்கப்பட்ட உலகில் நமக்காகப் பிறந்தார்,
நமக்காக வாழ்ந்தார்,
நமக்காக இறந்தார்,
நமக்காக உயிர்த்தார்.
உலகைப் படைத்த பின் நம்மைப் படைத்தார்.
நாம் பயன்படுத்துவதற்காக நம்மைப் படைக்குமுன் உலகைப் படைத்தார்.
நம்மை உலகிற்காகப் படைக்கவில்லை, உலகைத்தான் நமக்காக, நாம் பயன்படுத்துவதற்காக, படைத்தார்.
நாம் சார்ந்து வாழ்வதற்காக அல்ல, பயன்படுத்தி வாழ்வதற்காக உலகைப் படைத்தார்.
நாம் எதற்காகச் சாப்பிடுகிறோம்?
வாழ்வதற்காகச் சாப்பிடுகிறோம்.
சாப்பிடுவதறாகாக வாழவில்லை.
அதேபோல்
நமக்காக உலகம்,
உலகத்துக்காக நாம் அல்ல.
நாம் வாழ்வது நம்மைப் படைத்த கடவுளுக்காக.
நாம் வாழ்வது உலகுக்காக அல்ல.
"படைத்தார் படைப்பையெல்லாம் மனுவுக்காக.
மனுவைப் படைத்தார் தன்னை வணங்க." இது தமிழ்.
நாம் இறைவனுக்காக, இறைவனைச் சார்ந்து வாழ வேண்டும்.
இறைவனுக்காக
இறைவனது மகிமைக்காக.
நமது ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும் கடவுளின் புகழை, பெயரை உலகெங்கும் பரப்பக் கூடியதாக இருக்க வேண்டும்.
நமது செயலைப் பார்த்து மற்றவர்கள்,
"இவன் கடவுளுடைய உண்மையான ஊழியனாக இருப்பதால் தான் இப்படிச் செயல்படுகிறான்.
கடவுளுடைய நன்மைத்தனம் இவனது வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது.
நாமும் இவனைப் போல் செயல்பட்டு கடவுளுக்குப்
பிரியமானவர்களாக நடப்போம்."
என்று நினைக்க வேண்டும்.
நமது செயல் மூலம் இயேசுவின் நற்செய்தி உலகெங்கும் பரவ வேண்டும்.
இறைவனைச் சார்ந்து.
இறைவனுடைய அருளால் மட்டும் நாம் இயங்க வேண்டும்.
ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பவர் தனது வாழ்வாதாரத்துக்கு அந்தக் கம்பெனியை சார்ந்து இருப்பது போல
நாம் நமது ஆன்மீக வாழ்வுக்கு இறைவனது அருளைச் சார்ந்து இருக்க வேண்டும்.
இறைவனது அருளைச் சார்ந்து இருந்தால் தான்
நாம் ஒவ்வொரு செயலைச் செய்யும் முன்னும் இறைவனது அருளைக் கேட்டு மன்றாடுவோம்.
இதன் பொருட்டு தான் நாம் ஒவ்வொரு செயலையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் செய்கிறோம்.
நாம் இரவில் படுக்கப் போவது தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தான்.
இரவில் தூங்குவது தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தான்.
காலையில் எழுவது
தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தான்.
நாம் காலைக் கடன்களை முடிப்பது, குளிப்பது, உண்பது, உடுத்துவது, அலுவலகத்தில் பணி புரிவது எல்லாம் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தான்.
இப்படியாக அனைத்து செயல்களையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் செய்யும் போது
கடவுளுக்கு எதிராக எதையும் செய்ய முடியாது
அதாவது
நம்மால் பாவம் செய்ய முடியாது.
பாவம் செய்யாமல் நற்செயல்கள் செய்து கொண்டே போனால் பரிசுத்தத் தனத்தில் வளர்வோம்.
அதுதான் நிறைவை நோக்கிய ஆன்மீக வளர்ச்சி.
நாம் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.
ஒரே நேரத்தில் எதிர் எதிரான இரண்டு பக்கங்களைச் சார்ந்திருக்க முடியாது.
நாம் இறைவனைச் சார்ந்து இறைவனுக்காக வாழ்ந்தால்
நம்மால் உலகைச் சார்ந்து உலகுக்காக வாழ முடியாது.
யாரும் ஒரே நேரத்தில் இரண்டு எதிர் எதிர் திசைகளில் பயணக்க முடியாது.
இறை அருள் மீது ஆசை உள்ளவர்கள் உலகப் பொருள் மீது ஆசை கொள்ள மாட்டார்கள்.
அருள் மீது பற்று உள்ளவர்களுக்கு
பணத்தின் மீதோ, உணவின் மீதோ, நிலத்தின் மீதோ, வீட்டின் மீதோ, உலக பதவிகளின் மீதோ, அதிகாரத்தின் மீதோ பற்று இருக்க முடியாது.
இப்போது ஒரு கேள்வி எழும்.
இப் பொருள்கள் இல்லாமல் உலகத்தில் எப்படி வாழ முடியும்?
ஒருவன் தென்காசியில் இருந்து சென்னைக்கு புகை வண்டியில் பயணிக்கிறான்.
புகைவண்டி அவனுடைய பயணத்திற்கு உதவுகிறது.
அதற்காக புகைவண்டியின் மீது ஆசை வைக்கலாமா?
காய்ச்சலுக்காக மாத்திரை சாப்பிடுபவன் மாத்திரை மீது ஆசை வைக்கலாமா?
பயன்படுத்துவது வேறு
பற்று வைப்பது வேறு.
கடவுள் உலகை நாம் பயன்படுத்துவதற்காகப் படைத்தார்,
பற்று வைப்பதற்காக அல்ல.
உலகத்தையும் அதில் உள்ள பொருட்களையும் நாம் நமது விண்ணகப் பயணத்திற்காகப் பயன்படுத்த வேண்டும்.
மாறாக அவற்றின் மீது பற்று வைத்தால் பயணத்தை மறந்து விடுவோம்.
பிளாட்பாரத்தில் அமர்ந்து கொண்டு புகைவண்டிக்காகக் காத்துக் கொண்டிருப்பவன் புகைவண்டி வந்தவுடன் எழுந்து அதில் ஏற வேண்டும்.
பிளாட்பாரம் நன்றாக இருக்கிறது என்பதற்காக அதை விட்டு அசையாதவன் பயணத்தை விட்டு விடுவான்.
உலகப் பொருட்களை நமது ஆன்மீகப் பயணத்தில் பயன்படுத்த வேண்டும்.
உலகப் பொருட்கள் நம் கையை விட்டுப் போய் விட்டால் அது நமது மன நிலையைப் பாதிக்கக் கூடாது.
துறவிகள் வறுமையை ஒரு வார்த்தைப்பாடாகவே எடுக்கிறார்கள்.
ஒரு துறவி தனது பேனா தொலைந்து விட்டது என்பதற்காக வருத்தப்பட்டால் அவர் துறவி அல்ல.
உலகப் பொருள்களை எப்படி ஆன்மீக வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது?
பணத்தை பிறருக்கு உதவி செய்ய பயன்படுத்தலாம்.
பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கலாம்.
உடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடுத்து உதவலாம்.
இவையெல்லாம் பிறர் அன்பு செயல்கள்.
நமக்கு இறை அருளை ஈட்டித் தருபவை.
விண்ணக வாழ்வைப் பெற்றுத் தருபவை.
இயேசு உலகின் மீது பற்று அற்றவர்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை,
அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு."
உலகப் பற்று இல்லாதவரான இயேசுவின் பற்றினை மட்டுமே பற்றிக் கொள்வோம்.
உலகப் பற்றுகளை விட்டு விடுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment