Thursday, May 30, 2024

"அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்."(அரு. 9:3)

"அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்."
(அரு. 9:3)

காரண, காரிய தொடர்புடையவை செயல்கள்.

காரணத்தின் தன்மைதான் காரியத்தின் தன்மையைத் தீர்மானிக்கிறது.

பாடம் படித்து விட்டு வராத மாணவனை ஆசிரியர் அடிக்கிறார்.

அவன் மீது உள்ள கோபத்தினாலா?

அவனது பெற்றோர் மீது உள்ள கோபத்தினாலா?

இரண்டுமே இல்லை.

மாணவன் மீது உள்ள அக்கறையினால்.

அவன் நன்கு படித்து, பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று

அதன் மூலமாக அவனது வாழ்க்கையில் முன்னேற வேண்டும்‌ என்பதற்காகவே ஆசிரியர் பிரம்பை எடுக்கிறார்.

நம் வாழ்க்கையில் துன்பங்களை ஏன் இறைவன் அனுமதிக்கிறார்?

அவர் ஆதி காரணர், அவரது அனுமதி இன்றி எதுவும் நடக்காது.

முதலில் நாம் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்பதற்காகத் துன்பங்களை அனுமதிக்கிறார்.

உதாரணத்திற்கு,

தலையான புண்ணியங்களுள் மட்டசனமும் ஒன்று.

அளவோடு சாப்பிடுவது மட்டசனம்.

நாம் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதற்காக நாம் அளவை மீறி சாப்பிடும் போது வயிற்று வலியை அனுமதிக்கிறார்.

பிறர் பொருள் மீது ஆசைப்படுபவனைத் திருத்துவதற்காக அவன் கைது செய்யப்பட  அனுமதிக்கிறார்.

நாம் சிற்றின்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக சிற்றின்பம் சம்பந்தப்பட்ட நோய்களை அனுமதிக்கிறார்.

அவர் ஒவ்வொரு வினாடியும் நம்முடன் இருந்து பராமரித்து வருவதை நாம் உணர வேண்டும் என்பதற்காக துன்பங்களை அனுமதிக்கிறார்.

துன்பங்கள் வந்தால்தான் நாம் அவரை நினைத்துப் பார்த்து, அவரிடம் வேண்டுவோம்.

ஒரு பிறவிக் குருடனைப் பற்றி சீடர்கள் ஒரு கேள்வி கேட்கிறார்கள்.

"ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்;காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" 

அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். 
(அரு. 9:2,3)

சுயமாக கடவுளைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

இயேசுவே தன் பொது வாழ்வின் போது தன்னைப்பற்றி வெளிப்படுத்துகிறார்.

தனது புதுமைகள் மூலம் தனது வல்லமையை மக்களுக்கு வெளிப்படுத்துகிறார்.

தன்னைப் பற்றி மக்களுக்கு வெளிப்படுத்துவது தனது சுய நலனுக்காக அல்ல.

அவர் சுயமாக அளவில்லாதவர்.

மக்களிடமிருந்து அவருக்கு எதுவும் தேவையில்லை.

ஆனால் அவரது வல்லமையை மக்கள் உணர்ந்து அவர்கள் பயன் பெறுவதற்காகத் தன்னை வெளிப்படுத்துகிறார்.

பிறவிக் குருடனுக்கு சுகம் கொடுத்தால் அவரது சுகமளிக்கும் வல்லமையை உணரும் மக்கள் அவரை விசுவசித்து, அவரைத் தேடி வருவார்கள்.

அவரைத் தேடி வருவது அவர்கள் மீட்புப் பெற அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

அவர் தன்னை வெளிப்படுத்துவதே நமது ஆன்மீக நன்மைக்காகத்தான்.

நாம் உடல் நலமின்மை காரணமாக மருத்துவ மனைக்குச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

தனியாக நடக்க முடியாத காரணத்தால் துணைக்கு ஒரு ஆளை அழைத்துச் செல்கிறோம்.

நாம் தடுமாறும்போது அவர் நாம் கீழே விழாதவாறு பாதுகாத்து, நம்மைப் பத்திரமாக அழைத்துச் செல்கிறார்.

நடப்பது நமது சுதந்திரம்.

உடன் வருபவர் நாம் பத்திரமாக நடக்க உதவுகிறார்.

நமது விண்ணக ஆன்மீகப் பயணத்தின் போது நமக்குத் துணையாக வருபவர் நமது ஆண்டவராகிய இயேசு.

நமது பயணப் பொறுப்பை முற்றிலும் அவர் கையில் ஒப்படைத்து விட வேண்டும்.

பயணத்தின் போது நமக்கு என்ன நேர்ந்தாலும் அதை நமது பயணத்துக்கு ஏற்றதாக மாற்றி விடுவார்.

துன்பங்கள் எதுவும் வராமல் நம்மைப் பாதுகாக்க அவரால் முடியும்.

ஆனால் நமது சுபாவம் அவருக்குத் தெரியும்.

எந்த துன்பமும், பிரச்சினையும் வராவிட்டால் காலப்போக்கில் அவரை உதவிக்கு அழைப்பதை மறந்து விடுவோம்.

ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் தான் அதற்குத் தீர்வு காண உதவ அவரைத் தேடுவோம்.

அடிக்கடி அவரைத் தேடினால் தான் நமக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவு வளரும், நெருக்கமாகும்.

உறவு  நெருக்கமானால்தான்  அருள் வரங்களின் வரத்து அதிகமாகும்.

அருள் வரங்களின் வரத்து அதிகமானால் தான் மீட்பு அடைவது எளிது.

ஆகவே நமக்கு என்ன நேர்ந்தாலும் அதை நன்மைக்கே என்று ஏற்றுக் கொண்டு

நாம் இயேசுவோடு செபத்தின் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.

அவர் நாம் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவார்.

நாம் அதன் படி நடந்து ஆன்மீகத்தில் வளர வேண்டும்.

தாய் குழந்தையை அழ விடுவது அதற்குப் பால் கொடுப்பதற்காக.

கடவுள் நமக்குத் துன்பங்களை அனுமதிப்பது நாம் அவரை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment