Tuesday, May 21, 2024

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?(தொடர்ச்சி)3

தூய ஆவியானவர் நம்மில் எப்படிச் செயல்புரிகிறார்?
(தொடர்ச்சி)3

தூய ஆவியின் ஏழு கொடைகளுள் மூன்றாவது கொடை 

அறிவுரைத்திறன்.(counsel)

அறிவுரைத்திறன் என்றால் என்ன?
சொல்லிலேயே பொருள் இருக்கிறது.

இருவருக்கிடையே நிகழும் அறிவுரை நிகழ்வு.

ஒரு நபர் தனது வாழ்வில் ஏதாவது பிரச்சினை ஏற்படும் போது அதற்குத் தீர்வு காண அதற்காக பயிற்சி பெற்ற மற்றொரு நபரிடம் ஆலோசனை கேட்பது.

அதை மூன்று கோணங்களிலிருந்து (Points of view) பார்ப்போம்.

1.கடவுள் நம்மோடு.
2.நாம் நம் அயலானோடு.
3.அயலான் நம்மோடு.

1.கடவுள் நம்மோடு.

இயேசு கூறிய உவமை

; "ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. 

எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், "பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?" என்றார். 

தொழிலாளர் மறுமொழியாக, "ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். 

அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்" என்று அவரிடம் கூறினார். " 

அத்தி மரம் ஏன் கனி தரவில்லை?

ஏனெனில் அதன் வேர்கள் பூமியிலிருந்து மரத்திற்கு வேண்டிய உணவை எடுத்துக் கிளைகளுக்கு அனுப்பவில்லை.

அதனால்தான் தொழிலாளி. ''நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருப் போடுவேன்." என்கிறார்.

நமது ஆன்மீக வாழ்வில் பலன் எதுவும் ஏற்படவில்லை என்றால் நமது ஆன்மீக வேர் இறைவனோடு தொடர்பில் இல்லை என்று அர்த்தம்.

தொடர்பை ஏற்படுத்தி நம்மை ஆன்மீகப் பலன் பெற வைக்கவே

அறிவுரைத்திறன்.(counsel) என்னும் ஆவியானவரின் கொடை.

கடவுள் எப்போதும் நம்மை நினைத்துக் கொண்டு தான் இருக்கிறார்.

நாம் நினையாததால்தான் தொடர்பு இல்லாதிருக்கிறது.

ஆவியானவரின் கொடை நம்மை நினைக்க வைக்கிறது.

நாம் பலன் தர ஆரம்பிப்போம்.

அத்தி மரம் தான் வளர்ந்து காய்ப்பதற்கு வேண்டிய உணவை நிலத்திலிருந்து எடுப்பது போல,

நாம் ஆன்மீகத்தில் வளர்ந்து பலன் தர வேண்டிய அருள் வரங்களை இறைவனிடமிருந்து பெற வேண்டும்.

நாம் ஆன்மீகத்தில் வளர்வதற்கான அறிவுரைகளை இறைவனை தருவார்.

இறைவன் நமது மனச்சான்றின் மூலமாகவும் ஆலோசனை நல்குவார்.

நாம் நமது மனச்சான்றின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்.

நமக்கு உள்ளிருந்து நம்மோடு பேசும் இறைவன் அவர் நிறுவிய திருச்சபை மூலமாகவும் பேசுவார்.

நாம் மீட்புப் பெற வேண்டுமானால் திருச்சபையின் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டும்.

நமது ஆன்மீக குரு (Spiritual Director) சொற்படியும் நடக்க வேண்டும்.

பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் குருவானவர் கொடுக்கும் அறிவுரை இறைவன் நமக்குத் தரும் அறிவுரை.

சுருக்கமாக பத்துக் கட்டளைகளுக்கும், திருச்சபையின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

அவைகள் கட்டளைகள் என்பதற்காக அல்ல, இறைவனின் விருப்பம் என்பதற்காக.

நாம் இறைவனுடைய அறிவுரைப்படி நடந்தால் இறைவன் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்.


நாம் நம் அயலானோடு.

நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்பது இறைவனுடைய விருப்பம்.

நாம் மீட்பு பெற விரும்புகிறோம். நமது அயலானும் மீட்பு பெற நாம் விரும்ப வேண்டும்.

அதற்காக அவனுக்கு மீட்பு சம்பந்தமாக அறிவுரைகளை கூறி வழி நடத்த வேண்டும் என்பது நமது கடமை.

நாம் பிறருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்பது இதற்கு மற்றொரு பெயர்.

இறைவன் நம் மூலம் அவனோடு பேசுகிறார்.

நாம் நமது வாய்வழி மூலமான அறிவுரையோடு நமது முன்மாதிரிகையான வாழ்க்கை மூலமும் நமது ஆன்மீக அறிவுரையைக் கூற வேண்டும்.

நாம் ஒழுங்காக ஞாயிற்றுக்கிழமைப் பூசைக்கு வருவதை பார்த்து நமது பக்கத்து வீட்டுக்காரரும் பூசைக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

நாம் பாவ சங்கீர்த்தனம் செய்வதைப் பார்த்து நமக்கு அருகில் இருப்பவர் பாவ சங்கீர்த்தனம் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

3.அயலான் நம்மோடு.

கடவுள் நமக்குள்ளிருந்து நம்மோடு நேரடியாகப் பேசுவதோடு திருச்சபை மூலமாகவும், நமது அயலான் மூலமாகவும் பேசுகிறார்.

முதலில் நாம் நல்ல நண்பர்களோடு பழக வேண்டும்.

நமது ஆன்மீக வளர்ச்சிக்காக அவர்கள் தரும் அறிவுரைகளை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்.

அதற்கு நமக்கு தாழ்ச்சி தேவை.

அன்னை மரியாள் கடவுளின் தாயாக இருந்தாலும் எலிசபெத்தம்மாளுக்கு சேவை செய்யவும், அவளது வாழ்த்துரையை ஏற்றுக் கொள்ளவும் தாழ்ச்சியோடு தயாராக இருந்தாள்.

நமது நண்பர்கள் மூலமாகவும் தூய ஆவியானவர் நம்மோடு பேசுவார் என்பதை நாம் ஏற்றுக் கொண்டால் நாம் அவர்களின் குரலுக்கு செவி கொடுப்போம்.

அவர்களாலும் மீட்பின் பாதையில் நம்மை வழி நடத்த‌ முடியும்.

 திருச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

உலகியல் ரீதியான குடும்பத்தில் பிள்ளைகள் அனைவரும் பெற்றோர் கொடுக்கும் தின்பண்டங்களை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து உண்கிறோம்.

இயேசுவின் தலைமையிலான ஆன்மீக குடும்பத்தில் வாழும் நாம் இறைவன் நமக்குத் தருவதை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்வது இயல்பு தானே.

நமது விண்ணகப் பயணத்தின்போது கிறித்தவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து நடப்போம்.

ஒருவரையொருவர் தாங்கி வாழ்வோம், தூய ஆவியின் அருள் கொடையால்.

லூர்து செல்வம் 

No comments:

Post a Comment