Sunday, May 26, 2024

"நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"(மாற்கு.10:17)

"நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"
(மாற்கு.10:17)

இயேசுவின் போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் அவரிடம்,

"போதகரே நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"

என்று கேட்டார்.

இயேசு,  "உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? "கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட"

அவர் இயேசுவிடம், "போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்" 

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்"


இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. 

உலகியல் ரீதியாக உலகில் உயிர் வாழ்வதற்கு மூச்சு விட்டாலே போதுமானது.

ஆனால் யாரும் மூச்சு விடும் நிலையில் மட்டும் வாழ விரும்ப மாட்டார்கள்.

உணவு உண்டு உற்சாகமாக வாழ விரும்புவார்கள்.

உண்ணும் உணவின் சத்துக்கு ஏற்ப உற்சாக வாழ்க்கை நிலை மாறும்.

ஏழைகளின் வாழ்க்கை நிலைக்கும் வசதி படைத்தவர்களின் வாழ்க்கை நிலைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்கூடாக பார்க்கிறோம்.

வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கும் வருமானம் அதிகமாக உள்ளவர்களுக்கும் உள்ள வாழ்க்கை நிலையில் வித்தியாசத்தைப் பார்க்கிறோம்.

அத்தகைய நிலை வித்தியாசம் ஆன்மீக வாழ்விலும் இருக்கிறது.

ஆன்மீக வாழ்வின் அடிப்படை பாவம் இல்லாதிருத்தல்.

கடவுளின் கட்டளைகளை அனுசரிக்கிறவன் பாவம் இன்றி வாழ்கிறான்.

ஆனால் பாவம் இன்றி வாழ்வது மட்டும் போதாது.

புண்ணியத்தில் வளர வேண்டும்.

எவ்வளவுக்கு எவ்வளவு புண்ணியத்தில் வளர்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆன்மீக வாழ்விலும் வளர்கிறான்.

தற்பெருமை இல்லாதிருந்தால் மட்டும் போதாது,   தாழ்ச்சி உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.

தாழ்ச்சியின் அளவு ஆளுக்கு ஆள் மாறுபடலாம்.

அன்னை மரியாள் தாழ்ச்சியின் உச்சக்கட்டம்.

கடவுளின் தாயாகிய அவள் தன்னை கடவுளின் அடிமையின் நிலைக்குத் தாழ்த்தினாள்.

அவளைப் போல் தாழ்ச்சி உள்ளவர்கள் உலகில் யாரும் இல்லை.

தங்களை தாங்களே தாழ்த்துகிறவர்கள் விண்ணகத்தில் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுவார்கள் என்று ஆண்டவர் சொன்னார்.

 விண்ணக மண்ணக அரசியின் நிலைக்கு உயர்த்தப்பட்டவள் அன்னை மரியாள் மட்டுமே.

அதிலிருந்து அவள் அளவுக்கு தாழ்ச்யுள்ளவர்கள் யாரும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தலையான பாவங்கள் ஏழு.

தலையான புண்ணியங்கள் ஏழு.

எல்லா  பாவங்களிலிருந்தும் விடுதலை பெற்று எல்லா புண்ணியங்களிலும் வளர வேண்டும்.

கொலை செய்யாது இருப்பாயாக என்பது கட்டளை.

நாம் யாரும் யாரையும் கொலை செய்யவில்லை.

ஆகவே ஐந்தாம் கட்டளைக்கு விரோதமாக சாவான பாவம் செய்யவில்லை.

ஆனால் நமக்கு சில சமயங்களில் கோபம் வருகிறது, கோபம் வரும்போது நமது சகோதரர்களை திட்டுகிறோம்.

இவற்றைச் செய்யாமல் யார் மீது நமக்கு கோபம் வருகிறதோ அவர்களுக்காக கடவுளிடம் வேண்டினால் நாம் புண்ணிய வாழ்வில் வளர்கிறோம்.

நாம் யாரும் விபச்சாரம் செய்வதில்லை என்று வைத்துக் கொள்வோம்.

ஆகவே சாவான பாவம் செய்யவில்லை.

ஆனால் மனதில் கூட கெட்ட எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல்,

அவை வரும்போது இறை இரக்கத்தின் செப மாலையை மனதில் சொன்னால் நாம் புண்ணிய வாழ்வில் வளர்கிறோம்.

கடவுளின் பத்து கட்டளைகளை கடைப்பிடிப்பதோடு, அவற்றைச் சார்ந்த நல்ல செயல்களை செய்யும்போது புண்ணிய வாழ்வில் வளர்கிறோம்.

"கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதே."

கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்வது பாவம்.

சிலர் எதற்கெடுத்தாலும் கடவுள் மேல் சத்தியம் செய்வார்கள்.

சிலர் கடவுள் பெயரால் பொய்ச் சத்தியம் செய்வார்கள்.

இதெல்லாம் பாவம்.

நாம் கடவுள் பெயரை வீணாகச் சொல்லாவிட்டால் பாவம்  செய்யவில்லை.

ஆனால் அதோடு நிறுத்திக் கொண்டால் புண்ணிய வாழ்வில் வளர முடியுமா?

பாவமில்லாத வாழ்க்கை  வாழலாம்.

புண்ணியம் வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் அடிக்கடி கடவுள் பெயரைப் பக்தியுடன் சொல்ல வேண்டும்.

"தந்தை மகன் தூய ஆவியின் பெயரால், ஆமென்."

"இயேசுவே இரட்சியும்."

"தூய ஆவியே எழுந்தருளி வாரும்."

"தந்தையே, எனது துன்பங்களை எனது பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக ஒப்புக் கொடுக்கிறேன்."

"விண்ணகத் தந்தையே, உமது திருமகனின் வேதனை நிறைந்த பாடுகளைப் பார்த்து என் மேல் இரக்கமாயிரும்."

போன்ற மன வல்லப செபங்களை அடிக்கடி பக்தியுடன் சொல்லிக் கொண்டிருந்தால்

நம் மீது இறை அருள் மழை பெய்து கொண்டேயிருக்கும்.

அருள் நீரால் நமது ஆன்மீக வாழ்வு ஆழ வேர் விட்டு வளரும்.

ஆக, கட்டளைகளைக் கடைப்பிடித்தால் பாவமின்றி வாழலாம்.

ஆனால் அது மட்டும் போதுமா?

போதாது. புண்ணிய வாழ்வில் வளர வேண்டும்.

ஆயிரக்கணக்கில் சம்பாதித்தால் பணக்காரன்.

இலட்சக்கணக்கில் சம்பாதித்தால் இலட்சாதிபதி.

கோடிக்கணக்கில் சம்பாதித்தால் கோடீஸ்வரன்.

இந்த ஒப்புமையை ஞான வாழ்வுக்குப் பொருத்திப் பார்த்தால் ஒரு உண்மை புரியும்.

சம்பாதிக்கும் அருள் அளவுக்கு ஏற்ப அருள் வாழ்விலும் படி நிலைகள் உண்டு.

அன்பு வாழ்வுதான் அருள் வாழ்வு.

இறை அன்பிலும், பிறர் அன்பிலும் வளர்கிறவன் அருள் வாழ்வில் வளர்கிறான்.

பிறர் அன்பில் வளர்வதில் பல படி நிலைகள் உண்டு.

1. பிறரை நேசிக்க வேண்டும்.

2. பிறர் சிநேகத்தைச் சொல் மூலம் தெரியப் படுத்த வேண்டும்.

3.பிறரன்பை செயல்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

4.நம்மிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

5.நம்மிடம் உள்ளதை எல்லாம் பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஐந்தாவது படிநிலை தான் பிறரன்பு வாழ்வின் உச்சக்கட்டம்.

"உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்"

என்ற இயேசுவின் வார்த்தைகள் இதை நிரூபிக்கும்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment