"என் சமாதானத்தை உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் சமாதானம் உலகம் தரும் சமாதானம் போன்றது அல்ல."
(அரு. 14:27)
உலகம் தரும் சமாதானத்திற்கு ஒரு உதாரணம்,
முதல் உலகப் போர் முடிந்தவுடன் வென்ற நாடுகளும் தோற்ற நாடுகளும் வெர்செய்ல்ஸ் (Versailles) சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டன.
இதுவே இரண்டாம் உலகப் போருக்கு முதல் காரணம்.
ஏனெனில் இந்த ஒப்பந்தம் வென்ற நாடுகள் தோற்ற நாடுகளைப் பழி வாங்கும் விதமாய் அமைந்திருந்தது.
போர் ஓய்ந்திருந்த காலத்தில் தோற்ற நாடுகள் அடுத்த உலகப் போருக்குத் தங்களைத் தயாரிக்க ஆரம்பித்தன.
படை பலத்தைப் பெருக்கிக் கொண்டு இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்தன.
உலகம் தரும் சமாதானம் உண்மையில் சமாதானம் அல்ல.
இறைவன் தரும் சமாதானம்.
மனிதன் தனது பாவத்தினால் இறைவனோடு இருந்த உறவை முறித்துக் கொண்டான்.
அவனோடு சமாதானம் செய்து கொள்ள
இறைவன் மனிதனாகப் பிறந்து
அவரே தனது சிலுவை மரணத்தின் மூலம்
மனிதனுடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்ததோடு
அவனுடைய பாவங்களை மன்னித்தார்.
இறைவன் தரும் சமாதானத்தின் அடிப்படை மன்னிப்பு.
உலக அரசு குற்றவாளியைக் கைது செய்து நீதிமன்றத்தில் விசாரிக்கும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்கும்.
மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.
இறையரசர் குற்றவாளி குற்றத்தை ஏற்றுக் கொண்டு, வருந்தி மன்னிப்புக் கேட்டால் உடனே மன்னிப்பார்.
குற்றவாளி தான் செய்த குற்றத்திற்கு பரிகாரம் செய்தால் போதும். தண்டனை கிடையாது.
இயேசு சமாதானத்தின் தேவன்.
நல்ல மனது உள்ளவர்களுடன் தனது சமாதானத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
"நன்மனதோற்குச் சமாதானம் உண்டாகுக." இது மீட்பர் பிறந்த அன்று விண்ணிலிருந்து நமக்கு வந்த நற்செய்தி.
இறைவனுக்கும் நமக்கும் இடையில் நிலவும் அன்பு உறவைத்தான் சமாதானம் என்கிறோம்.
இறைவன் மாறாதவர்.
எந்த சூழ்நிலையிலும் அவரது அன்பும், சமாதானமும் மாறாது.
மாறுபவர்கள் நாம்தான்.
நாம் பாவம் செய்யும்போது நாம் இறைவனோடு நமக்குள்ள உறவை முறிக்கிறோம்.
முறிந்த உறவை மீண்டும் பெற நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.
செய்த பாவத்துக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
உடனே மன்னிப்புக் கிடைக்கும்.
இறைவனோடு நமது உறவு தொடரும்.
எத்தனை முறை மன்னிப்புக் கேட்கலாம்?
கணக்கே கிடையாது.
எத்தனை முறை பாவம் செய்கிறோமோ அத்தனை முறையும் மன்னிப்புக் கேட்கலாம்.
உலக அரசிடம் இது செல்லுபடி ஆகுமா?
உலக அரசுக்கு தண்டனை கொடுக்க மட்டுமே தெரியும்.
மன்னிக்கத் தெரியாது.
கடவுள் நம்மை அவரது சாயலில் படைத்திருக்கிறார்.
அப்படியானால் நமக்கும் மன்னிக்கத் தெரிய வேண்டும்.
நமது அயலான் நமக்கு எதிராகக் குற்றம் செய்தால் அதை நாம் முழு மனதோடு மன்னிக்க வேண்டும்.
கொடுப்பவர்களுக்கு மட்டுமே கேட்க உரிமை உண்டு.
"விண்ணகத் தந்தையே, எங்களுக்கு எதிராக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னித்தருளும்."
இதுதான் இயேசு காட்டும் சமாதானத்திற்கான வழி.
சமாதானம் என்றால் நல்லுறவு.
உறவு ஏற்பட்டால் மட்டும் போதாது, வளர வேண்டும்.
இறைவன் எப்போதும்,
நாம் பாவ நிலையில் இருக்கும்போது கூட,
நம்முடன் உறவுடன் இருக்கிறார்.
கடவுள் பாவிகளை எப்போதும் நேசிக்கிறார்.
இறைவன் அளவில்லாதவர், அவருடைய உறவும் அளவில்லாதது.
கடவுள் நம்மை அளவில்லாத விதமாய் நேசிக்கிறார்.
நாம் சென்மப் பாவத்துடன் இருக்கும்போது நமக்கு இறைவனுடன் உறவு இல்லை.
திருமுழுக்கு பேறும்போது சென்பப் பாவம் மன்னிக்கப்பட்டு நமக்கு இறைவனோடு உறவு ஏற்படுகிறது.
ஏற்கனவே இருக்கும் இறை உறவோடு நமது உறவு இணைகிறது.
இது அவருடைய அருள் வரத்துக்கு வழி செய்கிறது.
நாம் இறைவனோடு உள்ள உறவில் வளர வேண்டும்.
நமது செப வாழ்வின் மூலமும், பிறர் அன்பு செயல்களின் மூலமும் இறைவனோடு நமக்குள்ள உறவு வளர்கிறது.
செபவாழ்வு என்றால் இறைவனோடு நமக்குள்ள அன்பின் வாழ்வு.
எவ்வளவுக்கு எவ்வளவு நாம் இறையன்பிலும் பிறர் அன்பிலும் வளர்கிறோமோ
அவ்வளவுக்கு அவ்வளவு இறைவனோடு நமக்குள்ள உறவும் வளரும்.
அதாவது உறவின் நெருக்கம் அதிகமாகும்.
இறைவனோடு உள்ள உறவின் நெருக்கம் அதிகமாக அதிகமாக இறைவனுடைய அருளின் நாம் வளர்வோம்.
அன்னை மரியாளுக்கு இறைவனோடு உள்ள உறவின் நெருக்கம் மிக மிக அதிகம்.
ஆகவேதான் அவள் அருள் நிறைந்த மரியாள்.
நாம் இறை அன்னையை நோக்கி ''அருள் நிறைந்த மரியே வாழ்க"
என்று வாழ்த்தும் போதெல்லாம் நாமும் இறை அருளில் வளர்வோம்.
நாம் தாயைப் போல பிள்ளையாக மாற வேண்டும் என்றால் அடிக்கடி பக்தியுடன் செபமாலை செபிக்க வேண்டும்.
நாம் இறை அருளில் வளரவும்,
நமது குடும்பம் இறை அருளில் வளரவும்,
உலகம் இறை அருளில் வளரவும்,
நமது செபமாலை செபம் உதவும்.
உலக சமாதானமும் வளரும்.
அயலானை மன்னிப்போம்.
ஆண்டவரின் மன்னிப்பைப் பெறுவோம்.
ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வோம்.
இறைவனின் சமாதானத்தில் வளர்வோம்.
அனைவருக்கும் சமாதானம் உண்டாகுக.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment