உமது வார்த்தையே உண்மை.
நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.
(அரு. 17:17,18)
"அர்ப்பணமாக்கு" என்ற வார்த்தையின் உண்மையான பொருளை அறிய வேண்டுமென்றால் நாம் நமது அன்னையிடம் தான் செல்ல வேண்டும்.
நமது அன்னை தான் "இதோ ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகக்கடவது."
எனக் கூறி தன்னையே இறைப் பணிக்கு அர்ப்பணித்தாள்,
அதாவது தன்னையே இறைப் பணிக்குக் கையளித்தாள்.
"உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும்."
இயேசு தனது சீடர்களைத் தனது தந்தையின் பணிக்கு அர்ப்பணிக்கிறார்.
தந்தையின் சித்தமும் மகனின் சித்தமும் ஒரே சித்தம்தான்.
தந்தையும் மகனும் ஒரே கடவுள்.
சீடர்கள் கடவுளின் சித்தத்தை நிறைவேற்றும் பணிக்கு முற்றிலும் அர்ப்பணிக்கப் படுகிறார்கள்.
இயேசு பொதுவாழ்வில் போது நமக்காக என்ன செய்தாரோ
அதை அவரது சீடர்களும், அவர்களுடைய வாரிசுகளும் தொடர்ந்து செய்ய வேண்டும்.
இயேசு என்ன செய்தார்?
1. நற்செய்தியை அறிவித்தார்.
2. சென்ற இடமெல்லாம் நன்மையே செய்தார். நோயாளிகளைக் குணமாக்கினார்.
3. திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.
4.நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு தன்னையே பலியாக்கினார்.
5. மனிதர்களின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைத் தனது சீடர்களுக்குக் கொடுத்தார்.
1. நற்செய்தியை அறிவித்தல் என்றால் நற்செய்தியைப் பற்றி பாடம் நடத்துவது அல்ல.
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துகிறார் மாணவர்களைத் தேர்வுக்குத் தயாரிப்பதற்காக.
மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அவர் நன்றாக பாடம் நடத்தியதாக அர்த்தம்.
மாணவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் ஆள போதனை சரியில்லை என்று அர்த்தம்.
படிக்கிற பாடத்திற்கும் வாழ்கிற வாழ்க்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்பதைப் பற்றி யாரும் அக்கறை கொள்ள மாட்டார்கள்.
ஆனால் நற்செய்தியை அறிவிப்பவர்கள் அது மக்களின் வாழ்க்கையை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.
இல்லாவிட்டால் நற்செய்தியை அறிவித்தும் பயனில்லை.
ஒரு மருத்துவர் தான் கொடுக்கும் மருந்து நோயாளியைக் குணமாக்குகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
அப்போதுதான் அவர் மருத்துவர், இல்லாவிட்டால் வியாபாரி.
அன்றைய பன்னிருவர் மட்டும் அல்ல இன்றைய நாமும் இயேசுவின் சீடர்கள் தான்.
நமக்கும் நற்செய்தியை அறிவிக்கவும், நமது அறிவிப்பு பயன் தருகிறதா என்பதை கண்காணிக்கவும் கடமை உண்டு.
மருத்துவருக்கு இருக்க வேண்டிய அக்கறை மருந்துக் கடைக்காரருக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் அவர் வியாபாரி மட்டுமே.
நாம் வியாபாரிகள் அல்ல, இயேசுவின் சீடர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
2. இயேசு சென்ற இடமெல்லாம் மக்களுக்கு நன்மையே செய்தார்.
புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்கினார்.
இயேசுவின் சீடர்களும் அவரைப் போலவே செல்லும் இடமெல்லாம் நன்மையே செய்ய வேண்டும்.
அவரைப் போலவே அவருடைய சீடர்களும் புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
அர்ப்பண வாழ்க்கை வாழ்ந்ததால் தான் அவர்களுக்கு அது சாத்தியமாயிற்று.
அவர்களுக்குப் பின்னால் புனிதர்களாக வாழ்ந்த சீடர்களும் நற்செய்தியை அறிவித்ததோடு புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
உதாரணத்திற்கு அசிசியார், அந்தோனியார், சவேரியார் Etc.
ஆனால் சாதாரண சீடர்களாகிய நாம்?
நாம் செல்லும் இடமெல்லாம் மக்களுக்கு நன்மையே செய்வோம்.
புதுமைகள் செய்யும் வரத்தை கடவுள் எல்லோருக்கும் கொடுக்கவில்லை.
அதற்காக நாம் வருந்த வேண்டாம்.
நாம் புனித வாழ்வு வாழ்வோம்.
மற்றவர்களுடைய ஆன்மீக நலனுக்கு நாம் காரணமாக இருப்போம்.
நம்முடைய முன்மாதிரிகையான வாழ்க்கையால் அது முடியும்.
3.இயேசு திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.
இயேசு உலகம் முடியுமட்டும் நம்மோடு இருப்பதற்காகவும்,
நமது ஆன்மீக உணவாக நமக்குள் வருவதற்காகவும் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.
அந்த நோக்கத்தோடு தான் இயேசு குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.
குருக்கள் ஒவ்வொரு நாளும் தாங்கள் செய்யும் திருப்பலியின் போது அப்பத்தையும் ரசத்தையும் இயேசுவின் திரு உடலாகவும், திரு ரத்தமாகவும் மாற்றுகிறார்கள்.
திருப்பலி உலகம் முடியும் மட்டும் தொடரும்.
உலகம் முடியும் மட்டும் திவ்ய நற்கருணை மூலம் இயேசு நம்மோடு இருப்பார்.
உலகம் முடியும் மட்டும் நமக்கு ஆன்மீக உணவாக தன்னையே தருவார்.
குடும்பங்களில் வாழும் சாதாரண சீடர்களாகிய நாம் இது விசயத்தில் என்ன செய்ய முடியும்?
ஒவ்வொரு குடும்பமும் தங்கள் உறுப்பினர்களில் ஒருவரைக் குருத்துவப் பணிக்கு அனுப்ப முடியும்.
இயேசுவின் ஆன்மீக பணி உலகம் முடியமட்டும் முழுமையாக தொடர்ந்து நடைபெற நம்மாலும் உதவ முடியும்.
சாவான பாவம் இல்லாத பரிசுத்த உள்ளத்தோடுதான் திவ்ய நற்கருணையை உணவாகப் பெற முடியும்.
ஆகவே திவ்ய நற்கருணை நாம் பரிசுத்தமாக வாழ உதவுகிறது.
அதற்காகத்தான் பாவ சங்கீர்த்தனம்.
4.நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு தன்னையே பலியாக்கினார்.
இறைமகன் மனுமகனாகப் பிறந்ததே நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காகத் தான்.
அதற்காகத்தான் அவர் பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.
அவரது சிலுவை மரணத்தில்தான் நமக்கு மீட்புப் பிறந்தது.
தங்களுடையவும், உலக மக்கள் அனைவருக்காகவுமான பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டிய கடமை இயேசுவின் அனைத்து சீடர்களுக்கும் உண்டு.
அவருடைய அன்றைய சீடர்கள் தங்கள் மறை பறப்பு பணியின் போது தாங்கள் அனுபவித்த அனைத்துத் துன்பங்களையும் உலக மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தார்கள்.
இயேசுவின் சீடர்களாகிய நமது வாழ்க்கையில் ஏற்படுகின்ற துன்பங்களை நமது பாவங்களுக்கும், உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக ஏற்றுக்கொண்டு
பரம பிதாவுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.
வாழ்க்கையில் துன்பங்கள் வருவதைத் தவிர்க்க முடியாது.
அவற்றை வெறுமனே அனுபவித்தால் அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.
உலகின் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுத்தால் அது உலகினர் மீட்பு அடைய உதவும்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment