Monday, May 27, 2024

"நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"(மாற்கு.10:17)(தொடர்ச்சி)

"நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"
(மாற்கு.10:17)

(தொடர்ச்சி)

"உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்"

என்ற வார்த்தைகள் "நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"

என்ற கேள்விக்கு இயேசு அளிக்கும் பதில்.

தனக்கு உள்ளதை எல்லாம் பிறருக்குக் கொடுத்து விட வேண்டும் என்ற நற்செய்திக்கு கடவுள் தான் முதல் முன்னுதாரணம்.

நித்திய காலமும் தனியாக வாழ்ந்து கொண்டிருந்த கடவுள் ஒரு நாள் நாம் வாழும் பிரபஞ்சத்தைப் படைத்தார்.

அவர் நித்திய காலமும் நிறைவாக (With perfection) வாழ்பவர்.

நிறைவை அதிக நிறைவாக்க முடியாது.

Perfection cannot be made more perfect.

அவர் படைத்த பிரபஞ்சம் அவருடையது,

ஆனால் அதைத் தனக்காகப் படைக்கவில்லை.

பிரபஞ்சம் அவர் வாழத் தேவையில்லை.

அதைப் படைத்து விட்டுக் கடைசியில் படைத்த மனிதனின் பயன்பாட்டுக்குக் கொடுத்து விட்டார்.

மனிதனை ஏன் படைத்தார்?

அன்பு முதலான தனது பண்புகளையும்,

நித்திய பேரின்ப வாழ்வையும் அவனோடு பகிர்ந்து கொள்வதற்காகப் படைத்தார்.

உலகில் உள்ள அத்தனை பொருட்களையும் படைத்து விட்டு 

அடுத்து நமது முதல் பெற்றோரைப் படைத்து  

 அவர்களுக்கு ஆசி வழங்கி,

 "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார். 
(தொடக்கநூல் 1:28)

ஆக தனக்கு உரிய அத்தனையையும் மனிதனுக்குக் கொடுத்து விட்டார்.

படைத்ததைக் கொடுத்ததை விட பெரிய அதிசயம்,

தனது ஒரே மகனையும் மனுக்குல மீட்புக்காகக் கொடுத்து விட்டார்.

"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்."
(அரு. 3:16)

மனிதனாக பிறந்த இறைமகன் தான் பிறப்பதற்கு எளிய நிலையில் இருந்த ஒரு மாட்டுக் கொட்டகையையே பயன்படுத்திக் கொண்டார்.

படுப்பதற்குத் தீவனத் தொட்டியைத் தேர்ந்தெடுத்தார்.

அவர் தேர்ந்தெடுத்த தாய் அன்றாட உணவுக்காக தச்சு வேலை செய்தவருடைய மனைவி.

உலக மீட்பர் உலக பொருள்களின் மீது பற்று இல்லாதவராகப் பிறக்கக் காரணம் 

அவரைப் பின்பற்றி 

மீட்பு பெறவேண்டியவர்களும் உலக பொருள்களின் மீது பற்று இல்லாதவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

அவரை பின்பற்றிய 12 சீடர்களும் தங்களுக்கு 
உரியனவற்றை எல்லாம் விட்டு விட்டு தான் வந்தார்கள்.

இந்த இறை வசனத்தின் அடிப்படையில் தான் திருச்சபையில் துறவற சபைகள் தோன்றின.

துறவிகள் திருமணம் முடிக்காமல் கற்பு நிலையில் வாழ்கின்றார்கள்.

தங்கள் சபைத் தலைவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்றார்கள்.

தங்களுக்கென்று எந்தப் பொருளையும் சொந்தமாக வைத்துக் கொள்ளாமல் வாழ்கின்றார்கள்.

கற்பு, கீழ்ப்படிதல், ஏழ்மை என்ற மூன்று வார்த்தைப்பாடுகள் எடுத்துக் கொண்டு தான் துறவற வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள்

அவற்றின் அடிப்படையில் தான் வாழ்கின்றார்கள்.

நாம் நமது பெற்றோர் ஏதாவது வேலை கொடுத்தால் " ஏன்?"
என்று கேட்கிறோம்.

ஆனால் துறவிகள் தங்களுக்குக் கொடுக்கப் பட்ட வேலையை,

அது எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் சரி,

அவர்களுக்குப் பிடிக்காத வேலையாக இருந்தாலும் சரி,

 ஏன் என்று கேட்காமல் சொன்னபடி செய்ய வேண்டும். (Blind Obedience)

ஏழ்மை வார்த்தைப்பாட்டின்படி அவர்கள் பயன் படுத்தும் எந்தப் பொருளின் மீதும் உரிமை கொண்டாடக் கூடாது‌.

நாம் பயணம் செய்ய பேருந்து, புகைவண்டி, ஆகாய விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்.

‌பயன்படுத்துவதால் அவை நமக்குச் சொந்தமாகி விடுமா?

ஒரு துறவி சபை பயன்படுத்த அவருக்குக் கொடுத்திருக்கும் பொருள் மீது பற்று வைத்தால் அவர் தனது வார்த்தைப் பாட்டை மீறுகிறார்.

அவர் பயன்படுத்தும் ஒரு பென்சில் மீது கூட உரிமை கொண்டாட முடியாது.

துறவிகள் கடவுள் மீது மட்டும் உரிமை கொண்டாட முடியும்.

கடவுள் மீது மட்டும்தான் உரிமை கொண்டாட வேண்டும்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை."

உலகப் பொருட்கள் மீது பற்றில்லாத கடவுளை இறுகக் கட்டிப்பிடித்துக் கொள்க.

உண்மையில் கடவுளை மட்டும் கட்டிப் பிடிப்பதற்காகத்தான் மற்ற எல்லா பொருட்களையும் விட்டு விடுகிறோம்.

நாம் ஒரே நேரத்தில் கடவுளுக்கும், உலகப் பொருட்களுக்கும் ஊழியம் செய்ய முடியாது.

கடவுளுக்கு ஊழியம் செய்பவன் உலகப் பொருட்களை மறந்து விடுவான்.

கடவுள் பெயரையும் சொல்லிக்கொண்டு உலகப் பொருட்களுக்கு ஊழியம் செய்பவன் உலகுக்கான ஊழியத்தில் கடவுள் பெயரைப் பயன்படுத்துகிறான்.

அதாவது பணம் சம்பாதிக்க கடவுளை வியாபாரப் பொருளாகப் பயன்படுத்துகிறான்.

காணிக்கை பணம் பிரித்து அதில் உல்லாச வாழ்வு வாழ்வதற்காக நற்செய்திக் கூட்டங்கள் நடத்துபவர்கள்  இவ்வகையைச் சேர்ந்தவர்கள்.

இது கடவுளுக்குச் செய்யும் துரோகம்.

கடவுளுக்கு ஊழியம் செய்வதற்கு உலகப் பொருட்களைப் பயன்படுத்தலாம், பயன்படுத்த வேண்டும்.

உலகப் பொருட்களை இறைப்பணியிலும், பிறர் அன்புப் பணியிலும் பயன்படுத்த வேண்டும்.

கையில் இருக்கும் பணத்தை அயலானுக்கு உதவப் பயன்படுத்த வேண்டும்.

அது தான் இறைப்பணி.

"அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்." 
(மத்தேயு. 25:40)

நமது அயலானுக்குக் கொடுப்பதை இயேசுவுக்கே கொடுக்கிறோம்.

உலகப் பற்றை உதறி விட்டு இறைவனைப் பற்றிக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment