Thursday, May 16, 2024

"யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?"

"யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?"

இயேசு இராயப்பரைப் பார்த்து இந்தக் கேள்வியை‌ மூன்று முறைக் கேட்டார்.

மூன்று முறையும், "நான் அன்பு செலுத்துகிறேன்." என்ற பதிலையே இராயப்பர் சொன்னார்.

எதற்காக இந்தக் கேள்விகள்?

கேள்வி பதில்களின்போது

"என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்"

"என் ஆடுகளை மேய்"

 "என் ஆடுகளைப் பேணி வளர்" 

என்ற வார்த்தைகள் மூலம் அவரைத் திருச்சபையின் தலைவராக நியமித்தார்.

அவர் திருச்சபையின் தலைவராக நியமிக்கப்பட பொருத்தமானவரா என்பதைச் சோதிக்கவா இந்தக் கேள்விகளைக் கேட்டார்?

தலைமைப் பதவி அவரது அன்புக்குப் பரிசா?

"நீ பாறை, இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. "
(மத். 16:18)

என்ற வார்த்தைகள் மூலம் அவரைத் தலைவராக்க ஏற்கனவே தீர்மானித்து விட்டார்.

தலைமைப் பதவியை விட வேறொரு முக்கியமான பரிசைக் கொடுப்பதற்காக இந்தக் கேள்விகளைக் கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

நாம் நம்மை நேசிப்பவர்களுக்கு நமது அன்பைத் தெரிவிப்பதற்கும், அன்பில் வளர்வதற்கும் பரிசுகள் கொடுப்பது வழக்கம்.

 "நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். 

உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். 

வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் " 
(அரு. 21:18)

இதுதான் இயேசு இராயப்பருக்கு வாக்களித்த அன்புப் பரிசு.

துன்பம். (Suffering)


இப்போது வார்த்தைகள் மூலம் தெரிவித்த அன்பை இராயப்பர் இயேசுவுக்காக மரணிப்பதன் மூலம் வெளிப்படுத்துவார் என்று இயேசு சொல்கிறார்.

இயேசு சொன்ன படியே இராயப்பர் அவரது அன்பைக் காட்ட வேதசாட்சியாக மரித்தார்.

அதுவும் இயேசுவைப் போலவே சிலுவையில் அறையப்பட்டு கொல்லப் பட்டார்.

அவர் அறையப்பட்ட சிலுவை அவர் விருப்பப்படி தலைகீழாக நடப்பட்டது.

அன்பைப் பற்றிய இயேசுவின் கருத்து சாதாரண மனிதர்களின் கருத்துக்கு நேர் எதிர்மாறானது.

தன் மீதுள்ள அன்பை  இராயப்பர் தனது வேத சாட்சிக்குரிய மரணத்தின் மூலம் வெளிப்படுத்தப் போவதை இயேசு ஏற்றுக் கொள்கிறார்.

உலகியல் ரீதியாகச் சிந்திப்போர் தங்களால் நேசிக்கப் படுகின்றவர்கள் துன்பப்படக் கூடாது என்றே விரும்புவர்.

துன்பப்பட நேர்ந்தால் அதிலிருந்து அவர்களை விடுவிக்கவே ஆசைப்படுவர்.

ஆனால் இயேசுவின் ஆசை அதற்கு எதிர் மாறானது.

அன்புக்காக துன்பப்படுவதன் மூலம் தான் நமது அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

அவரே நம் மீது கொன்டுள்ள அன்பின் மிகுதியால் நமக்காக பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

தனது பாடுகளின் மூலமும் சிலுவை மரணத்தின் மூலமும்தான் அவருடைய அன்பை வெளிப்படுத்தினார்.


இயேசுவைப் பொருத்தமட்டில் அன்பும், துன்பமும் எதிரிகள் அல்ல,  நண்பர்கள்.

அன்பு இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும்.

ஆனால் துன்பம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அப்படின்னா?

நமது நண்பனுக்காக நாம் துன்பத்தை ஏற்றுக் கொண்டால் அது அன்பின் தோழன்.

நண்பனுக்காக அல்லாமல் நோய் நொடிகளின் காரணமாகவோ, தோல்விகளின் காரணமாகவோ ஏற்பட்டால் அது வெறும் துன்பமே.

அதனால் எந்த ஆன்மீக பயனும் இல்லை. 

உலகியல் ரீதியாக நமக்கு ஏற்படும் துன்பங்களை ஆன்மீகமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?

நமக்கு ஏற்படும் துன்பங்களை நமது பாவங்களுக்கோ,

நமது குடும்பத்தினர் பாவங்களுக்கோ, 

உலகின் பாவங்களுக்கோ பரிகாரமாக ஏற்றுக் கொண்டால்

 அவை ஆன்மீக ரீதியாக இறையன்பின் தோழனாக மாறிவிடும்.

அதாவது துன்பங்கள் இயேசு சுமந்த சிலுவையாக மாறிவிடும்.

சிலுவை தான் இயேசு அரசரின் சிம்மாசனம்.

சிலுவையில் தான் நமக்கு மீட்பு பிறந்தது.

சிலுவையில் தான் நமது நித்திய பேரின்பம் குடியிருக்கிறது.

சிலுவை கிறிஸ்தவத்தின் அடையாளம்.

சிலுவையில் தான் இயேசு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.

நமது துன்பத்தை நாமும் பலியாக ஒப்புக் கொடுக்கும் போது நாம் நம்மையே நமது இயேசுவுக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கிறோம்.

இயேசு யார் தன்னை அதிகம் நேசிக்கிறார்களோ அவர்களுக்கு அதிக துன்பங்களை அனுமதிக்கிறார்.

அவர் மிக அதிக வியாகுலங்களை‌ அனுமதித்தது அவரைப் பெற்ற அன்னைக்குத்தான்.

நமது வாழ்வில் ஏற்படும் துன்பங்களை நமக்கும் இயேசுவுக்கும் இடையில் நிலவும் அன்பின் அடையாளமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

துன்பங்கள் வரும்போது நாம் அவற்றை எப்படி நோக்குகிறோம் என்பதை வைத்தே நாம் நமது ஆன்மீக வாழ்வில் என்று அளவிற்கு வளர்ந்திருக்கிறோம் என்பதைக் கண்டு கொள்ளலாம்.

நாம் அவற்றிலிருந்து விடுதலை பெற விரும்புகிறோமா?

அல்லது அவை நாம் பரிசுத்தத் தனத்தில் வளர உதவியாக இருக்கும் என்று அவற்றை மனதார ஏற்றுக் கொள்கிறோமா?

நமது துன்பங்கள் மற்றவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோமா?

நமக்காக மட்டுமல்ல யாருடைய ஆன்மீக வளர்ச்சிக்காக அவற்றை இறைவனுக்கு ஒப்புக்கொள்கிறோமோ 

அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கைக்கும் அவை உதவியாக இருக்கும். 

நமது துன்பங்களின் உதவியால் உத்தரிக்கிற ஆன்மாக்களை மோட்சத்திற்கு அனுப்பலாம்.

துன்பங்களை இயேசு எப்படி நோக்கினாரோ  அப்படியே நாமும் நோக்க வேண்டும்.

உலக மக்களின் ஆன்மீக‌ மீட்புக்காக இயேசு துன்பங்களைப் பயன்படுத்தினார்.

அந்த நோக்கத்தோடு துன்பப்படுவதற்கென்றே அவர் மனிதனாகப் பிறந்தார்.

என்ஜினில் கோர்க்கப்பட்ட இரயில் பெட்டிகள் என்ஜின் செல்லும் இடமெல்லாம் செல்லும்.

நாம் நமது துன்பங்களை இயேசு பாடுபட்டு மரித்த சிலுவையோடு கோர்த்து விடுவோம்.

இயேசுவின் விருப்பங்களை அவை நிறைவேற்றும்.

இயேசுவுக்காகத் துன்பப்படுகின்றவர்கள் பாக்கியவான்கள்

ஏனெனில் அவர்கள் உலகம் மீட்புப் பெற உதவுகிறார்கள்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment