Tuesday, May 28, 2024

"இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்."(மாற்கு.10:30)

"இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்."
(மாற்கு.10:30)

இராயப்பர், "ஆண்டவரே, நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" 

இயேசு, என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் 

இம்மையில் நூறு மடங்காக அவற்றைப் பெறுவர்.

இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறுவர்."

சீடர்கள் தாங்கள் இயேசுவுக்காகத் தியாகம் செய்தவற்றை நூறு மடங்காகத் திரும்பப் பெறுவார்கள் என்று கூறியது புரிகிறது.

"இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறுவர்." என்று கூறியது தியானித்தால் தான் புரியும்.

அதுவும் சுயமாகத் தியானித்தால் புரியாது,

இயேசுவின் துணையோடு தியானித்தால் மட்டுமே புரியும்.

இயேசுவுக்காக தங்களுடைய சொந்தங்களையும் உடமைகளையும் விட்டு வருபவர்களுக்கு பிரதிபலனாக ஏன் இன்னல்கள் கிடைக்க வேண்டும்?

 யாருக்காக விட்டு வருகிறார்களோ அவர் அனுபவிப்பதைத் தானே இவர்களும் அனுபவிக்க வேண்டியிருக்கும்?

 இயேசு யார்?

பாவிகளின் மீட்புக்காக அவர்களின் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்வதற்காக,

பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரிப்பதற்காக மனிதனாகப் பிறந்த இறைமகன்.

யாருக்காக மனிதனாகப் பிறந்தாரோ அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர்கள் கையில் தான் அவர் பாடுகள் பட்டு மரித்தார்.


அவரது நற்செய்தியை அறிவிப்பதற்காகத்தான் சீடர்கள் உலகெங்கும் செல்ல வேண்டும்.

இயேசுவுக்கு நேர்ந்த கதிதான் அவர்களுக்கும் நேரும்.

வீட்டு வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள்

அதை விட்டு வெளியே வந்தது உலகை அனுபவிப்பதற்காக அல்ல, 

இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதற்காக,

இயேசுவைப் போல் பாடுகள் பட்டு மரிப்பதற்காக.

வேதசாட்சிகளாக மரிப்பதற்காக.

ஆனால் சீடர்கள் இயேசுவைப் பின்பற்ற ஆரம்பிக்கும்போது இந்த விபரம் எதுவும் அவர்களுக்குத் தெரியாது.

அவர் மெசியா, யூதர்களை ரோமையர்களின் அடிமைத் தனத்திலிருந்து மீட்டு சுதந்திர அரசை ஏற்படுத்துவார், அதில் மந்திரிகளாக பணி புரியலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் உண்மையைச் சொல்கிறார்.

ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை.

சீடர்கள் தாங்கள் தியாகம் செய்தவற்றை நூறு மடங்காகத் திரும்பப் பெறுவார்கள் இயேசு கூறியது இன்னல்கள் விசயத்திலும் உண்மை.

நாம் இப்போது தியானித்துக் கொண்டிருப்பது ஆன்மீகம்.

ஆன்மீகத்திலிருந்து இன்னல்களை, அதாவது, சிலுவையைப் பிரிக்க முடியாது.

இயேசுவின் வாழ்வில் சிலுவை இல்லாதிருந்தால் நமக்கு மீட்பே கிடைத்திருக்காது.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணம் அடைவதற்காகவே நித்திய காலம் திட்டம் தீட்டி மனிதனாகப் பிறந்தார்.

மிட்டாயைக் கடித்தால் இனிக்கும்.

பாகற்காயைக் கடித்தால் கசக்கும்.

கிறிஸ்தவத்தைச் சுவைத்தால் சிலுவை தான் கடிபடும்.

அதனால்தான் குடும்பப் பொறுப்பைத் தியாகம் செய்து விட்டு இயேசுவின் பணிக்கு வருவோர் இன்னல்களைப் பெறாமல் போகார் என்று ஆண்டவர் சொல்கிறார்.

ஆனால்,

வெள்ளிக்கிழமைக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை.

சிலுவைக்குப் பின் உயிர்ப்பு.

சிலுவை வாழ்வுக்குப் பின் நிலைவாழ்வு.

இவ்வுலகில் சிலுவை மரணப் படுக்கை.

விண்ணுலகில் அது சிம்மாசனம்.

சிலுவை வாழ்வுக்குப் பரிசாக நிலை வாழ்வைத் தரப்போவதாக இயேசு வாக்களிக்கிறார்.

நிலை வாழ்வோடு சிலுவை வாழ்வை ஒப்பிடுவது உலகில் உள்ள அத்தனை சமுத்திரங்களோடு ஒரு சொட்டுத் தண்ணீரை ஒப்பிடுவதற்குச் சமம்.

சிலுவை வாழ்வு முடிவுள்ளது.

நிலை வாழ்வு நித்தியமானது, முடிவே இல்லாதது.

சிலுவை வாழ்வு துன்பங்கள் நிறைந்தது.

நிலை வாழ்வு பேரின்பமானது.

பேரின்பத்தின் அளவோடு துன்பங்களின் அளவை ஒப்பிட முடியாது.

ஈயோடு யானையை ஒப்பிட முடியுமா?

நாம் ஈ அளவு செய்கிற சேவைக்கு யானை அளவு பரிசளிக்கிறார்.

அதற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment