Wednesday, May 8, 2024

"தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்."(அரு. 17:11)

"தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்."
(அரு. 17:11)

நட்பு இரு இனத்தவரை ஒரு இனத்தவராக மாற்றி விடும்.

ஒரு முதலாளிக்கும் வேலைக்காரனுக்கும் இடையில் நட்பு ஏற்பட்டால்

ஒன்று முதலாளி வேலைக்காரன் மட்டத்துக்கு இறங்கி வந்து விடுவார்,

அல்லது வேலைக்காரனை அவர் மட்டத்துக்கு ஏற்றிவிடுவார்.

கடவுள் மனிதனைப் படைத்தவர்.
விண்ணுலகில் வாழ்கிறார்.

மனிதன் படைக்கப்பட்டவன்.
மண்ணுலகில் வாழ்கிறான்.

கடவுள் மனிதனை நண்பனாக ஏற்றுக் கொண்டார்.

கடவுள் மனிதனைத் தன் நண்பனாய் ஏற்றுக் கொண்டதன் விளைவாக அவர் மனிதனாகப் பிறந்தார்.

மனித பலகீனங்களையும், துன்பங்களையும், பிறப்பையும், இறப்பையும் ஏற்றுக் கொண்டார்.

மனித பலகீனங்களை ஏற்றுக் கொண்டதன் விளைவாகத்தான் கெத்சமனி தோட்டத்தில் பயத்தின் காரணமாக இரத்த வியர்வை வியர்த்தார்.

அதே சமயம் சீடர்களைப் பார்த்து,

" உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு.5:48)
என்று நம்மைக் கேட்டுக் கொண்டார்.

அது மட்டுமல்ல,

"தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்." என்று தன் தந்தையிடம் வேண்டுகிறார்.

அளவற்ற அன்பின் காரணமாக மனிதனாகப் பிறந்த கடவுள்,

மனிதனைக் கடவுளைப் போல வாழச் சொல்கிறார்.

தமிழில் சமாதானம் என்று அழகான வார்த்தை இருக்கிறது.

சமாதானம் = சமம் + தானம் = சம இடம்.

சமமான நிலையில் உள்ள இருவரிடையே தான் உண்மையான நட்பு இருக்க முடியும்.

இருவரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர்களாக இருந்தால்

உயர்ந்தவர் தன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்.

தாழ்ந்தவர் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

தாழ்நிலையில் உள்ள மனிதனை உயர் நிலைக்குக் கொண்டு வர

உயர்ந்தவராகிய கடவுள் தன்னை மனித நிலைக்குத் தாழ்த்திக் கொண்டார்.

God came down to the world to lift us to Heaven.

தந்தையும் மகனும் இரண்டு ஆட்கள், ஆனால் ஓரே கடவுள்.

ஒரு தந்தை தன் மகனைப் பார்த்து
"நீ சிங்கத்தைப் போல வீரம் உள்ளவனாக இருக்க வேண்டும்" என்று சொல்வது போல

இயேசு சீடர்களைப் பார்த்து,

" தந்தையும் நானும் ஒன்றாய் இருப்பது போல் நீங்களும் ஒன்றாய் இருக்க வேண்டும்" என்கிறார்.

கடவுளைப் போல யாராலும் இருக்க முடியாது.

ஆனால் கடவுளை முன் மாதிரியாகக் கொண்டு அவரைப் போல நல்லவர்களாக இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். 

தந்தை மகன் தூய ஆவி மூவருக்கும் ஒரே சித்தம்.

அதேபோல் நமது குடும்பங்களில் தந்தையின் விருப்பத்தையே நமது விருப்பமாக ஏற்று செயல்படலாம்.

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆளுக்கொரு விருப்பம் இருந்தால் குடும்பம் எப்படி வாழும்?

நல்ல மாட்டையும் சண்டி மாட்டையும் ஒரு வண்டியில் பூட்டினால் வண்டி முன் நோக்கி நகராது.

நம்மிடம் பரிசுத்த தம திரித்துவத்தைப் போல ஒரே சித்தம் இருக்க முடியாது.

ஆனால் ஒருவர் சித்தத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.

நாம் உலக ரீதியில் நம்மைப் பெற்ற தந்தையின் விருப்பத்தையும்,

ஆன்மீக ரீதியில் விண்ணகத் தந்தையின் விருப்பத்தையும்

நமது விருப்பமாக ஏற்றுக் கொண்டு 

அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான்

இயேசு " என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்."
(அரு. 6:38) என்று சொல்கிறார்.

வகுப்பில் ஆசிரியர் பொதுத் தேர்வுக்குத் தயாரித்துக் கொண்டிருக்கும் மாணவர்களைப் பார்த்து,

"நீங்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது எனது விருப்பம்.

அது உங்களது விருப்பமாக இருந்தால் தான் நாம் எதிர்பார்க்கிற வெற்றியைப் பெற முடியும்.

நான் விரும்புவதை நீங்களும் விரும்புங்கள்.

அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்." என்கிறார்.

மனிதர்கள் அனைவரும் மீட்புப் பெற வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.

அதை நமது விருப்பமாகவும் ஏற்றுக்கொண்டு அதற்காக அனைவரும் ஒன்றாய் உழைப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment