Sunday, May 19, 2024

தூய ஆவியானவர்.

தூய ஆவியானவர்.

கடவுள் எப்படி இருப்பார்?

கற்பனை செய்து பார்க்க முடியுமா?

முடியும்.

எப்படி?

கடவுள் நம்மை அவரது சாயலில் படைத்தார்.

கடவுளின் சாயலைப், (நம்மை) பார்த்தாலே அவர் எப்படி இருப்பார் என்பதைக் கண்டு பிடித்துவிடலாமே.

சிந்தனை, சொல், செயல் மூன்றுக்கும் உரியவர்கள் நாம்.

அப்படியானால் கடவுளும் இந்த மூன்றுக்கும் உரியவர்.

இறைமகனை வார்த்தை (சொல்) என்று அருளப்பர் நற்செய்தி கூறுகிறது.

"ஆதியில் வார்த்தை இருந்தார்."

நாம் சிந்திக்கும்போது உள்ளத்தில் வார்த்தை பிறக்கிறது.

கடவுள் சிந்திக்கும் போது வார்த்தை பிறக்கிறார்.

கடவுளின் சிந்தனையில் பிறக்கும் வார்த்தை தான் மகன், இறைமகன், இறைவனின் மகன்.

தந்தைக்கும் மகனுக்கும் என்ன வேலை?

தந்தைக்கும் மகனுக்கும் அன்பு செய்வதுதான் வேலை.(செயல்)

அன்பு தான் தூய ஆவி.

நித்திய காலமாக கடவுளின் சிந்தனையில் மகன் பிறக்கிறார்.

நித்திய காலமாக தந்தையாகிய கடவுள் மகனை அன்பு செய்கிறார்.

தந்தை - கடவுள்.
மகன் - கடவுள்.
அன்பாகிய தூய ஆவி - கடவுள்.

மூவரும் மூன்று ஆட்கள்.

மூவரும் ஒரே கடவுள்.

நாம் சிந்திக்கிறோம், வார்த்தை பிறக்கிறது.

சிந்தனையும் வார்த்தையும் செயலில் இறங்குகின்றன.

கடவுள் சிந்திக்கிறார்.
வார்த்தை பிறக்கிறார்.

தந்தையும் மகனும் செய்யும் செயல்தான் அன்பு, தூய ஆவி.

நம்மைப் பொறுத்த மட்டில்

சிந்தனை, சொல் ,செயல் மூன்றும் ஒரு ஆள்.

கடவுளைப் பொறுத்த மட்டில் தந்தை, மகன், தூய ஆவி மூன்று ஆட்களும் ஒரு கடவுள்.

தந்தை அன்பு செய்வதற்காக மனிதர்களை படைத்தார்.

அவர்களுக்கு அவர் கொடுத்திருக்கும் கட்டளை, 

"அன்பு செய்யுங்கள்.

என்னை அன்பு செய்யுங்கள், என்னால் படைக்கப்பட்டவர்களையும் அன்பு செய்யுங்கள்.

நான் நித்திய காலமும் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் அன்பு செய்து கொண்டிருக்கிறேன்.

நீங்களும் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் அன்பு செய்யுங்கள்."

என்று கட்டளை கொடுத்திருக்கிறார்.

மனிதனின் வேலை அன்பு செய்வது மட்டும் தான்.

மனிதன் கட்டளையை மீறி விட்டான்.

அன்புக்கு எதிராக பாவம் செய்துவிட்டான்.

மனிதனை பாவத்திலிருந்து மீட்பதற்காக இறை மகன் மனிதனாகப் பிறந்து, 
பாடுகள் பட்டு, 
சிலுவையில் மரித்து

 மனிதர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார்.

தனது மீட்புப் பணியைத் தொடர்ந்து செய்வதற்காக திருச்சபையை ஏற்படுத்தினார்.

அவர் ஏற்படுத்திய திருச்சபையை அன்பின் தேவனாகிய தூய ஆவி வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

இறைமகன் ஏற்படுத்திய கத்தோலிக்கத் திருச்சபையை பெந்தகோஸ்தே திருநாளன்று தூய ஆவி இயக்க ஆரம்பித்தார்.

இயேசுவின் சீடர்கள் மீது இறங்கி வந்து,

அவர்களைத் தன் அருளால் நிறப்பி, 

நற்செய்தியை அறிவிக்க உற்சாகப்படுத்தியதோடு,

அவர்கள் யார் மீது கை வைத்தார்களோ அவர்கள் மீதும் இறங்கியதோடு அவர்களின் பாவங்களை மன்னித்தார்.

நாம் ஞானஸ்நானம் பெரும்போது நம் மேல் இறங்கி வந்து நமது சென்பப் பாவத்தை மன்னித்தவர் தூய ஆவியானவர்.

உறுதிப்பூசுதலின் போது நம் மேல் இறங்கி வந்து தனது அருள் வரத்தால் நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்தியது தூய ஆவியானவர்.

நாம் பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது குருவானவர் மூலமாக நமது பாவங்களை மன்னிப்பது தூய ஆவியானவர்.

திருப்பலியில் குருவானவர் வசீகர வார்த்தைகளை சொல்லும்போது 

அப்பத்தை இயேசுவின் சரீரமாகவும் 

ரசத்தை இயேசுவின் இரத்தமாகவும் மாற்றுவது தூய ஆவியானவர்.

மெய்விவாகத்தின்போது திருமண தம்பதிகளை குடும்பமாக இணைப்பது தூய ஆவியானவர்.

பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகியோர் மூலமாக திருச்சபையை ஒவ்வொரு வினாடியும் ஆண்டு நடத்துபவர் தூய ஆவியானவர்.

திருச்சபை ஆரம்பித்த நாளிலிருந்து ஒவ்வொரு வினாடியும் திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினரையும் வழிநடத்திக் கொண்டிருப்பவர் தூய ஆவியானவர்.

ஆனால் ஒரு மறை உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.

"என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்."
(அரு. 14:9) என்று இயேசு சொல்கிறார்.

"இயேசுவை காண்பவர்கள் தந்தையை காண்கிறார்கள்."

இயேசுவின் இந்த வார்த்தைகள் மூன்று ஆட்களுக்கும் பொருத்தும்.

இயேசுவைக் காண்கிறவர்கள் தந்தையையும், தூய ஆவியையும் காண்கிறார்கள்.

தந்தையைக் காண்கிறவர்கள் இயேசுவையும், தூய ஆவியையும் காண்கிறார்கள்.

தூய ஆவியைக் காண்பவர்கள் தந்தையையும், இயேசுவையும் காண்கிறார்கள்.

ஏனெனில் மூவரும் ஒரே கடவுள்.

திருச்சபை தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் இயங்குகிறது.

குருவானவர் ஒவ்வொரு திரு அருட்சாதனத்தையும் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் ஆரம்பித்து

தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் முடிக்கிறார்.

மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு, நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்து நம்மை மீட்டவர் இறைமகன் இயேசு என்றாலும்,

மீட்பில் செயல் புரிவது பரிசுத்த தம திரித்துவக் கடவுள்தான்.

கடவுள் நம்மை படைத்தார்.

நாம் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்தோம்.

நம்மை மீட்பதற்காக கடவுள் மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்தார்.

கடவுள் நம்முடன் இருந்து நம்மை வழி நடத்துகிறார்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால், ஆமென்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment