சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றுக்கும் உரியவன் மனிதன்.
மனதில் சிந்திப்பவன்,
சிந்தித்ததைப் பேசுபவன்,
சிந்தித்ததைச் செய்பவன்
மனிதன்.
சிந்தனை சொல் வடிவில் வெளி வருகிறது.
சொல்லுக்கு உரிய பொருளும் சிந்தனையிலிருந்துதான் வருகிறது.
ஒருவனின் குணத்தை (Charector) நிர்ணயிப்பது அவனது சிந்தனை தான்.
நல்ல மனது உள்ளவன் (நல்லதைச் சிந்திப்பவன்) நல்லவன்.
கெட்ட மனது உள்ளவன் கெட்டவன்.
ஒருவனுடைய வார்த்தைகளுக்குப் பொருளை அறிய வேண்டுமென்றால் முதலில் அவனுடைய குணத்தை அறிய வேண்டும்.
தினமும் பைபிள் வாசிக்கிறோம்.
பைபிள் என்றால் இறைவார்த்தை.
இறைச் சிந்தனையின் வெளிப்பாடு.
இறைவன் என்றாலே அன்பு.
அன்பே இறைவன்.
அன்பால் இயங்குபவர்.
ஒருவர் எதிர் எதிரான பண்புகளின் உருவமாக இருக்க முடியாது.
அன்பே உருவான கடவுள் அன்புக்கு எதிரான பண்பின் உருவமாக இருக்க முடியாது.
இரக்கம், பரிவு, மன்னிக்கும் தன்மை ஆகியவை அன்போடு தொடர்புடைய பண்புகள்.
வெறுப்பு, கோபம், பழிவாங்கும் தன்மை, தண்டிக்கும் தன்மை ஆகியவை அன்புக்கு எதிரான பண்புகள்.
தொடர்புடைய பண்புகளும், எதிரான பண்புகளும் சேர்ந்திருக்க முடியாது.
கடவுளால் யாரையும் வெறுக்க முடியாது,
யாரோடும் கோபமாக இருக்க முடியாது,
யாரையும் பழிவாங்க முடியாது,
யாரையும் தண்டிக்க முடியாது.
கடவுளைப் பற்றிய வசனங்களில் இவற்றைப் பற்றிய குறிப்புகள் இருந்தால் அவற்றுக்கு கடவுள் அன்பு மயமானவர் என்ற பின்னணியில் பொருள் காண வேண்டும்.
இயேசு தான் போதித்ததைச் சாதித்தவர்.
"ஏழைகள் பேறுபெற்றவர்கள் " என்று சொன்னது மட்டுமல்ல,
அவரே ஏழையாகப் பிறந்தார், ஏழையாக வாழ்ந்தார், ஏழையாக மரித்தார்.
"உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்.
உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."
என்று சொன்னது மட்டுமல்ல, சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது தனது பாடுகளுக்குக் காரணமானவர்களை மன்னிக்கும் படி தந்தையிடம் வேண்டினார்.
'பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை."
(மத். 25:41,42)
என்று இயேசு சொல்கிறாரே,
இது எப்படி?
சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது தனது பாடுகளுக்குக் காரணமானவர்களை மன்னிக்கும் படி தந்தையிடம் வேண்டிய இயேசு,
இறுதித் தீர்ப்பு நாளில்
தனக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களை நரகத்தில் தள்ளப் போவதாகச் சொல்கிறாரே,
இது அவருடைய போதனைக்கு எதிராக இல்லையா?
என்று கேட்கலாம்.
இயேசுவின் வார்த்தைகளுக்கு
கடவுள் அன்பு மயமானவர் என்ற பின்னணியில்தான் பொருள் காண வேண்டும்.
அன்பு மயமானவர் தன்னால் படைக்கப்பட்டவர்களை நரகத்தில் தள்ளுவாரா?
தள்ளமாட்டார்.
அப்படியானால் அவரது வார்த்தைகளுக்கு விளக்கம்?
ஒரு தகப்பனார் மது அருந்துவதைப் பழக்கமாகக் கொண்டத் தன் மகனிடம்,
".மது அருந்தாதே, அருந்தினால் உடல் நலம் கெடும்." என்கிறார்.
அவர் சொன்னபடியே மகனுடைய உடல்நலம் கெட்டுவிட்டது.
மகனுடைய உடல்நலம் கெடக் காரணமாக இருந்தது தகப்பனாரின் வார்த்தைகளா?
அல்லது அவனா?
குடி தன்னிலே கெடுதியானது, தகப்பனாரின் வார்த்தைகளால் அல்ல.
குடி உடல் நலத்தைக் கெடுக்கும் என்ற உண்மையைச் சொன்னவர் மட்டுமே தந்தை.
கெடுதியானதைக் குடித்ததால் உடல் நலம் கெட்டது, தந்தை சொன்னதால் அல்ல.
மோட்சம் என்றால் என்ன?
நரகம் என்றால் என்ன?
இரண்டுமே நம் உலகைப் போன்ற இடங்கள் அல்ல.
நித்திய காலம் இறைவனோடு வாழும் பேரின்ப நிலை மோட்சம்.
நித்திய காலம் இறைவனைப் பிரிந்து வாழும் பேரிடர் நிலை நரகம்.
நித்திய காலமும் தன்னோடு பேரின்ப நிலையில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் மனிதனைப் படைத்தார்.
ஆனால் அவனை முழுமையான சுதந்திரத்தோடு படைத்தார்.
கடவுளோடு சேர்ந்து வாழ வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு எடுக்க வேண்டியது மனிதன் தான்.
யாருடைய சுதந்திரத்திலும் கடவுள் குறுக்கிட மாட்டார்.
பாவம் கடவுளுக்கு எதிரானது.
பாவம் செய்தால் கடவுளோடு சேர்ந்து வாழ முடியாது.
இது மனித புத்திக்குத் தெரியும்.
தெரிந்தும் மனிதன் பாவம் செய்தால் என்ன அர்த்தம்?
கடவுளோடு வாழ அவனுக்குப் பிரியமில்லை என்று அர்த்தம்.
வேண்டுமென்றே பாவ நிலையில் ஒருவன் வாழ்ந்தால்
கடவுள் வேண்டாம் அவன் தீர்மானித்து விட்டான் என்று அர்த்தம்.
வேண்டுமென்றே பாவ நிலையில் வாழும் ஒருவன் அந்த நிலையிலேயே இறந்து விட்டால்
அவன்தான் கடவுளை விட்டுப் பிரிந்து போகிறான், கடவுள் போகச் சொல்லவில்லை.
தன்னோடு வாழ வேண்டும் என்று படைத்த மனிதனைக்
கடவுள் தன்னை விட்டுப் போகச் சொல்ல மாட்டார்,
தானாகப் போகிறவனைத் தடுக்கவும் மாட்டார்.
ஏனெனில் இது அவனுடைய சுதந்திரமான தேர்வு,
கடவுள் சுதந்திரத்தை மதிக்கிறார்.
அப்படியானால் இறுதி தீர்ப்பு பற்றிய பைபிள் வசனங்களுக்கு என்ன பொருள்?
சுருக்கமாகச் சொல்வதானால்,
"என்னோடு வாழ விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்.
விரும்பாதவர்கள் உங்கள் விருப்பப்படி செல்லுங்கள்."
இயேசுவே இப்படிச் சொல்லியிருக்கலாமே?
"சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்." என்று ஏன் சொன்னார்?
இயேசு மனிதர்களிடம் மனித மொழியில், அவர்கள் பேசும் பாணியில் பேசினார்.
குற்றவாளிகளை விசாரித்து, தண்டனை வழங்கும் பழக்கம் மனிதர்களிடையே இருந்தது, இப்போதும் இருக்கிறது.
தண்டனை கிடைக்கும் என்று சொன்னால் தான் மக்கள் குற்றம் செய்யப் பயப்படுவார்கள்.
மனிதர்கள் பாவம் செய்யப் பயப்பட வேண்டும்.
பயந்தால் தான் பாவம் செய்ய மாட்டார்கள்.
பாவம் செய்யாதிருந்தால் தான் புண்ணிய வாழ்வில் வளர முடியும்.
ஆகவே தான் அவர்கள் பாணியில் பேசினார்.
நாம் இயேசுவின் வார்த்தைகளை அவரது தன்மையின் (Nature) பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும்.
வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை நோக்கி,
"இன்று இரவு வீட்டுப்பாடம் படிக்காதவர்கள் நாளை காலையில் எழுந்து மாடு மேய்க்கப் போகலாம்."
என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
காலையில் ஒரு மாணவன் தன்னுடைய தந்தையை நோக்கி,
"இன்று பள்ளிக்கூடம் வர வேண்டாம், மாடு மேய்க்கப் போங்கள்" என்று ஆசிரியர் சொல்லி இருக்கிறார்"
என்று சொன்னால் அவனைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?
இறை வசனங்களுக்கு தங்கள் இஷ்டப்படி பொருள் கொடுப்பவர்கள் இந்த பையனைப் போன்றவர்கள் தான்.
முதலில் பாவிகளுக்காக தனது உயிரையே பலி கொடுத்த இயேசுவைப் புரிந்து கொள்வோம் அப்புறம் பைபிள் வாசிப்போம்.
மோட்சம் வேண்டுமா,
நரகம் வேண்டுமா என்று மனிதன் தான் தேர்வு செய்ய வேண்டும்.
நாம் மோட்சத்தைத் தேர்வு செய்வோம்.
இயேசுவின் விருப்பப்படி வாழ்வோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment