(லூக்கா.1:43)
எலிசபெத் அன்னை மரியாளின் சித்தி, அன்னம்மாளின் தங்கை.
அவள் கருவுற்றிந்தது கபிரியேல் தூதர் சொல்லிதான் மரியாளுக்குத் தெரியும்.
கபிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே
சக்கரியாசுக்குத் தோன்றி அருளப்பரின் பிறப்பைப் பற்றி அறிவித்து விட்டார்.
மரியாள் வாழ்ந்தது நாசரேத்.
எலிசபெத் வாழ்ந்தது ஒரு மலைநாடு.
தான் கருவுற்றிந்ததை மரியாள் எலிசபெத்துக்குச் சொல்லவில்லை.
எலிசபெத்துக்கு அது எப்படித் தெரியும்?
தூய ஆவியானவர் சொல்லித் தெரியும்.
"எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்."
(1:41)
மரியாளின் வயிற்றில் கருத்தரித்திருப்பது கடவுள் என்று தூய ஆவியானவர் சொல்லித்தான் எலிசபெத்துக்குத் தெரியும்.
மரியாள் எலிசபெத்தை வாழ்த்தியபோது அவர் வயிற்றிலிருந்த குழந்தை அருளப்பர் மகிழ்ச்சியால் துள்ளினார்.
எலிசபெத் மரியாளை,
" என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" எனக் கூறி வாழ்த்தினார்.
மரியாள் மீட்பரின் தாய்
எலிசபெத் மீட்பரின் முன்னோடியின் தாய்.
முன்னோடி பெயருக்கு ஏற்றவாறு மீட்பருக்கு முன்னாலேயே உலகிற்கு வந்து விட்டார்.
மரியாளின் வயிற்றில் இருந்தது கடவுள் என்பதைத் தன் தாய் மூலமாக அறிவித்து விட்டார்.
முன்னோடியின் முதல் வேலை அது.
மரியாளும், எலிசபெத்தும் சந்தித்தவுடன் நடந்த நிகழ்வுகளைத் தியானிப்போம்.
1. எலிசபெத்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார்.
மரியாள் ஏற்கனவே தூய ஆவியால் நிறப்பப் பட்டிருந்தாள். அவருடைய வல்லமையால் தான் அவள் இயேசுவைக் கருத்தரித்தாள்.
தூய ஆவியால் நிறப்பப் பட்ட இருவர் சந்திக்கும் போது இருவரும் அவரால் இயக்கப் படுவார்கள்.
இருவருடைய செயல்பாடுகளும் அவருக்கு ஏற்றவைகளாகவே இருக்கும்.
மரியாளும் எலிசபெத்தும் நடந்து கொண்ட விதமே இதற்குச் சான்று.
மரியாள் எலிசபெத்திடம் நடந்து கொண்டது போலவும்,
எலிசபெத் மரியாளிடம் நடந்து கொண்டது போலவும்,
நாம் நமது உறவினர்களிடம் நடக்க வேண்டும்.
2. இயேசுவும் அருளப்பரும் சந்தித்துக் கொண்டார்கள்.
மரியாளும் எலிசபெத்தும் சந்தித்துக் கொண்டது வெறும் வெளியரங்கமான சந்திப்பு அல்ல.
உணர்வுப் பூர்வமான உள்ளரங்க சந்திப்பு.
ஆகவேதான் குழந்தைகளும் சந்தித்துக் கொண்டனர்.
3. அருளப்பர் மகிழ்ச்சியால் துள்ளினார். அப்போது அவருடைய சென்மப் பாவம் மன்னிக்கப் பட்டது.
4. மரியாளும் எலிசபெத்தும் தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்கள்.
எத்தகைய மகிழ்ச்சி?
தூய ஆவி அவர்களை ஆட்கொண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி.
தூய ஆவியின் கனிகளில் ஒன்று மகிழ்ச்சி.
தூய ஆவி எங்கே இருக்கிறாரோ அங்கே அன்பும் அதன் விளைவான மகிழ்ச்சியும் இருக்கும்.
ஒருவரிடம் பொருள் இருந்தால் அதை மற்றவர்களுக்குக் கொடுத்தால்தான் போகும்.
ஆனால் ஒருவரிடம் மகிழ்ச்சி இருந்தால் நாம் அவர் அருகில் போன உடனே அது நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
தூய ஆவியின் வல்லமையால் மரியாள் இயேசுவைக் கருத்தரித்த போது அவளிடம் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் மரியாள் எலிசபெத்தைப் பார்க்க வந்தாள்.
மரியாள் எலிசபெத்தைப் பார்த்தவுடன் அவளையும் தூய ஆவியானவர் ஆட்கொள்ள,
அவளும் மகிழ்ச்சியால் நிறப்பப்பட்டாள்.
மகிழ்ச்சியை இரண்டு குழந்தைகளும் பரிமாறிக் கொண்டனர்,
இரண்டு தாய்மாரும் பரிமாறிக் கொண்டனர்.
அம்மகிழ்ச்சியின் விளைவாகத் தான் மரியாள் கடவுளைப் புகழ்ந்து பாடினாள்.
ஆண்டவரைப் போற்றிப் புகழ்கிறாள்.
அவரை நினைத்து மனதில் பேருவகை கொள்கிறாள்.
தான் ஒரு அடிமை என்பதையும்,
தாழ்நிலையைக் கடவுள் எப்படி கண்ணோக்கினார் என்பதையும் நினைத்து மகிழ்கிறாள்.
மரியாளின் புகழ்ச்சிப்பாடலை
நற்செய்தி நூலில் வாசித்துப் பார்த்து
அத்தகைய எண்ணங்கள் நமது உள்ளத்தில் எப்போதாவது தோன்றியிருக்கின்றனவா என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம்.
மாதாவின் மகிழ்ச்சிப் பாடலை நாமும் அடிக்கடிப் பாடினால் நமது உள்ளத்திலும் அத்தகைய எண்ணங்கள் உதிக்கும்.
இப்போது ஒரு கேள்வி கேட்கலாம்.
அன்னை மரியாள் கடவுளின் தாய். அற்ப பாவ மாசு கூட இல்லாதவள்.
நாமோ பாவிகள்.
அருள் நிறைந்தவளின் மனதில் உதித்த எண்ணங்கள் பாவிகளாகிய நமது உள்ளத்தில் எப்படி உதிக்கும்?
நாம் பாவிகள் என்பது இயேசுவுக்குத் தெரியும்.
ஆனால் நம்மைப் பார்த்து,
"ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு.5:48)
என்று ஏன் சொன்னார்?
நமது வாழ்வின் நோக்கம் உன்னதமாக இருக்க வேண்டும்.
அதை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
35 மதிப்பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கும் மாணவன் 100 மதிப்பெண்களை நோக்கமாக வைத்து முயன்று படிக்க வேண்டும்.
அப்போது தான் முயற்சியின் விளைவாக 80 மதிப்பெண்களாவது எடுக்க முடியும்.
"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்."
அன்னை மரியாளை இயேசு நமக்கும் தாயாகத் தந்திருக்கிறார்,
அவளைப் போல நாமும் வாழ முயற்சிக்க வேண்டும் என்பதற்காக.
முயற்சிப்போம், தூய ஆவியின் துணையோடு.
வெற்றி பெறுவோம்.
லூர்து செல்வம்.