Tuesday, December 31, 2024

ஆன்மீக உணவு.


ஆன்மீக உணவு

,"தாத்தா, வணக்கம்."

"'வணக்கம். புத்தாண்டு எப்படி இருக்கிறது?"

" பிறந்து ஒரு நாள் தானே ஆகிறது. போகப் போகத் தான் தெரியும்.''

"'போகப் போக என்ன தெரியும்? எவ்வளவு தேய்ந்திருக்கிறது என்று தெரியும்.

நேற்றைய கணக்குப் படி 
2025க்கு 365 நாட்கள். இன்றைய கணக்குப் படி இன்னும் 364 நாட்கள் தான் உள்ளன."

" மனிதனும் அப்படித் தானே. வயதில் வளர வளர வாழ்நாளில் தேய்ந்து கொண்டு தானே போகிறான்.

பிறந்த வருடமும் ஒரு நாள் முற்றிலும் போய் விடும். பிறந்த மனிதனும் ஒரு நாள் காணாமல் போய் விடுவான்."

"'இப்போ எனது கேள்விகளுக்குப் பதில் சொல்லு."

"பரீட்சையா?"

"'இல்லை, பாடம். எதற்காகச் சாப்பிடுகிறாய்?"

"வளர்வதற்காக"

"'இப்போ கவனி. ஆன்மாவும், உடலும் உள்ளவன் மனிதன். ஆன்மாவும் வளர வேண்டும், உடலும் வளர வேண்டும்.

நாம் சாப்பிடும்போது நமது உடல் வளர்கிறது. நன்கு வளர வேண்டுமென்றால் சத்துள்ள சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.

சத்து இல்லாத உணவைச் சாப்பிட்டால் உடல் வளராது.

ஆன்மா வளர என்ன செய்ய வேண்டும்?"

"முதலில் ஆன்மீக வளர்ச்சி என்றால் என்ன என்று சொல்லுங்கள்"

"' நாம் வாழும் பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருக்கும் கடவுள் தான் படைத்த மனித உடலை இயக்குவதற்காகத் தன் சாயலில்  படைத்த ஜீவன்தான் நமது ஆன்மா.

நமது ஆன்மா கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டது.

கடவுள் தனது பண்புகளை நமது ஆன்மாவோடு பகிர்ந்து கொண்டார்.

கடவுள் தனது பண்புகளில் அளவில்லாதவர்.

ஆகவே அவரால் வளரவோ, தளரவோ முடியாது.

நமது ஆன்மா தனது பண்புகளில் அளவுள்ளது.

நாம் (அதாவது, நமது ஆன்மா) கடவுளால் நம்மோடு பகிரப்பட்ட அன்பு, இரக்கம், நீதி போன்ற பண்புகளில் அளவுள்ளவர்கள்.

நமது பண்புகளில் நாம் வளர வேண்டும் என்பதற்காகத்தான் நம்மை அளவு உள்ளவர்களாகக் கடவுள் படைத்தார்.

நம்மிடம் உள்ள இறை அன்பிலும், பிறர் அன்பிலும், இரக்கத்திலும், நீதியிலும் நாம் வளர வேண்டும்.

முதலில் அந்த பண்புகளை இழந்து விடாதபடி கவனமாக இருக்க வேண்டும்.

நாம் சாவான பாவம் செய்ய நேரிட்டால் அந்த பண்புகளை இழக்க நேரிடும்.

அப்படி நேரிட்டால் பாவங்களுக்காக மனத்தாபப் பட்டு, பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற்று, இழந்த பண்புகளைத் திரும்பவும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

புரிகிறதா?"

"புரிகிறது. நமது உடல் வளர உணவு உண்கிறோம்.

ஆன்மீகத்தில் வளர என்ன உணவு உண்ண வேண்டும்?"

"'உடல் வளர மண்ணிலிருந்து வந்த சடப் பொருளால் ஆன உணவை உண்கிறோம்.

ஆன்மா வளர விண்ணிலிருந்து வரும், அதாவது, கடவுளிடமிருந்து வரும் ஆன்மீக உணவை  உண்ண வேண்டும்."

"ஆன்மீக உணவு என்றால்?"

"'இறைவனுடைய அருள்தான் ஆன்மீக உணவு.

இறையுறவு அருள் (Sanctifying grace) இறைவனோடு நமக்கு உள்ள உறவை வலுப்படுத்தும்.

உதவி அருள் (Actual grace) நற்செயல்கள் செய்ய உதவி செய்யும்.

நமது பாவங்களுக்கு 
மனத்தாபப்பட, 

பாவ சங்கீர்த்தனம் செய்ய நமக்கு உதவ, 

பாவச் சோதனைகளில் வெற்றி பெற, 

நமது அயலானை நேசிக்க,

நமது அயலானை மன்னிக்க,

 அவனுக்கு  வேண்டிய உதவிகள் செய்ய,

இன்னும் இது போன்ற நல்ல செயல்கள் செய்ய 
உதவி அருள் உதவும்.

இரண்டு வகை அருள்களும் தான் நமது ஆன்மீக உணவு."

"இந்த உணவுகளை எப்படிப் பெற வேண்டும்?"

"' திருமுழுக்கு மூலமும், பாவ சங்கீர்த்தனம் மூலமும் இறை உறவு அருளைப் பெறுகிறோம்.

இறைவனை  வேண்டுவதின் மூலம் உதவி அருளைப் பெறுகிறோம்.

பாவச் சோதனைகள் வரும் போது அவற்றை வெல்வதற்கான அருளை இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும்.

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்" என்று நாம் விண்ணகத் தந்தையிடம் வேண்டுவது இந்த அருளைப் பெறுவதற்காகத்தான்.

நமக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை மன்னிப்பதற்கும், 
நன்மைகள் செய்வதற்கும் உதவ வேண்டும் என்று இறைவனை வேண்ட வேண்டும்.

நாம் நல்லவர்களாக வாழ உதவ வேண்டும் என்று இறைவனை வேண்ட வேண்டும்.

இறை உதவி இல்லாமல் நம்மால் பிறருக்கு உதவி செய்ய முடியாது.

உதவி அருள் உதவியோடு நற்செபல்கள் புரிந்தால் அவையே நமக்கு இறை அருளைப் பெற்றுத் தரும்.

அந்த அருளின் உதவியோடு தொடர்ந்து நற்செயல்கள் செய்யலாம்.

நமது வாழ்வே நற்செயல்களின் தொடர்ச்சி தான்.

Our spiritual life is an unbroken chain of good acts.

இறைவனுக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் தற்செயல் தான்.

நாம் மூச்சு விடுவதைக் கூட இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தால் அதுவும் அருளை ஈட்டும் செயலாக மாறிவிடும்.

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் "இறைவா, உமக்காக" என்று ஒப்புக் கொடுத்து விட்டால் நமது வாழ்வே நற்செயலாக மாறிவிடும்.

ஒவ்வொரு நற்செயலுக்கும் நமக்கு விண்ணகத்தில் பரிசு உண்டு. அந்தப் பரிசு நிரந்தரமானது.

நற்செயல்கள் இல்லாத விசுவாசம் விசுவாசமே அல்ல.

நமது வாழ்க்கை முழுவதிலும் நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலுமான நமது அத்தனை செயல்களையும் இறைவனுக்காகச் செய்ய வேண்டும் என்பதே இறைவளின் விருப்பம்.

இதைச் செய்ய இறைவனின் அருளுதவி இருந்தால் மட்டும் முடியும்."

"தாத்தா, இன்னும் ஒரு முக்கியமான இறை உணவை மறந்து விட்டீர்களே."

" மறக்கவில்லை தம்பி. அருளின் ஊற்றாகிய இறைவனை விட மகத்தான உணவு இருக்க முடியுமா?

இறைவன் தன்னையே நமது உணவாகத் தருகிறார்.

கவனமாகக் கேள்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Monday, December 30, 2024

புத்தாண்டு வாழ்த்துக்கள்


புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  "தாத்தா, புத்தாண்டு வாழ்த்துக்கள்."

"புத்தாண்டு வாழ்த்துக்கள், பேரப்புள்ள.''

"தாத்தா, ஒரு சந்தேகம்."

"ஏண்டா, வருடப்பிறப்பு அன்றே சந்தேகமா? முதல் கோணல் முற்றும் கோணல்னு சொல்வாங்க.''

"தாத்தா, சந்தேகம் இண்ணைக்கு வரல. அதுக்கு ஒரு வயசு ஆகுது.''

"அப்போ போன வருடப் பிறப்பன்று வந்தது. உடனே காலி பண்ணு, அது தாத்தா ஆகும் வரைக் காத்திருக்காதே. என்ன சந்தேகம்?"

''முக்கியமான விழா நாட்களில் ஏன் மற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறுகிறோம்?"

'"வாழ்த்தும்போது மற்றவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற நமது ஆசையை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்."

"தாத்தா, எனக்கு அப்படித் தோன்றவில்லை. தினமும் காலையில் பார்த்தவுடன் "காலை வணக்கம்" என்று சொல்வது போல "வாழ்த்துக்கள்" என்று சொல்கிறேன்.

மற்றவர்களும் யாரைப் பற்றியும் ஆசை எதுவும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை."

"நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்று நமது ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

நாம் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
அப்படியானால் மற்றவர்களும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.

அந்த ஆசையை நாம் மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தெரிவித்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும்.

அதற்காகவே வாழ்த்துகிறோம்.(வாழும்படி சொல்கிறோம்.)"

" ஆனால், தாத்தா, மற்றவர்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது நல்லதா, அல்லது, சீக்கிரம் விண்ணகம் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது நல்லதா?"

"'இதென்னடா கேள்வி? ஒரு தாய் குழந்தையைப் பெற்றவுடன் அது எப்படி வாழ வேண்டும் என்று ஆசைப்படுவாள்?"

"நீண்ட நாள் வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவாள்.  நான் அதைக் கேட்கவில்லை. எப்படி ஆசைப்பட வேண்டும்?"

"'நீயே சொல்லு"

"அமெரிக்காவுக்குப் போக flight ஏறி விட்டோம். சீக்கிரம் போக வேண்டும் என்று ஆசைப்படுவோமா அல்லது மெதுவாக போக வேண்டும் என்று ஆசைப்படுவோமா?"

"'சீக்கிரம் போக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம்."

"பிறந்த குழந்தை விண்ணக பயணத்தை ஆரம்பித்துவிட்டது. விண்ணகத்துக்கு போவதற்காகத் தான் அது பிறந்திருக்கிறது. விண்ணகத்துக்குச் சீக்கிரம் போக வேண்டும் என்று ஆசைப்படுவது தப்பா?"

"'நீ என்ன கேட்க வருகிறாய் என்பது புரிகிறது. 

இந்த உலகத்தில் நீண்ட நாள் வாழ்ந்து கஷ்டப்பட்டு விண்ணகத்துக்கு செல்வதை விட சீக்கிரமாக சென்று விட்டால் கஷ்டங்கள் குறையுமே என்கிறாய்.

மாசில்லா குழந்தைகளின் மரணத்தை உதாரணமாகக் காண்பிப்பாய்.

ஆனால் நீ எண்ணுவது போல எண்ணக் கூடாது.

இவ்வுலக வாழ்வின் காலத்தை கடவுளின் திட்டத்துக்கு விட்டு விட வேண்டும்.

மாசில்லா குழந்தைகளின் மரணம் கடவுளின் நித்திய காலத்திட்டம்.

இயேசுவின் வளர்ப்பு தந்தை புனித சூசையப்பரின் மரணமும் அவருடைய நித்திய கால திட்டம்.

இயேசு 33 வது வயதில் மரணம் அடைய வேண்டும் என்பதும் அவருடைய நித்திய காலத் திட்டம்.

மனிதன் உலகில் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது அவனுடைய இயல்பு.

அவனது ஆசை நிறைவேற வேண்டும் என்று நாம் வாழ்த்துவதில் தவறு இல்லை.

நாம் என்ன நினைத்து வாழ்த்தினாலும் இறைவனின் திட்டமே நிறைவேறும்.

மனிதர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இறைவனது சித்தப்படி வாழ்வதுதான்.

எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியம் அல்ல, எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்."

"நாம் எப்படி வாழ்த்தினாலும் நடப்பது தான் நடக்கும்.

நாம் நமது அன்பை வெளிப்படுத்த வாழ்த்துகிறோம். 
வாழ்த்தப்படுபவர்கள் நமது வாழ்த்தை ஏற்றுக் கொண்டு,

வாழும் காலத்தில் இறைவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டும்.

நான் சொல்வது சரியா?" 

"' முற்றிலும் சரி. வாழ்த்தும் போது வெறுமனே வாழ்த்துக்கள் என்று கூறாமல் ஒவ்வொரு வாழ்த்திலும் ஒரு நற்செய்தியை அறிவிக்கலாம்.

காலையில் வணக்கம் சொல்லும்போது,

"நாள் முழுவதும் சமாதான உணர்வோடு வாழ்வீர்களாக."

"சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பாராக"
என்று வாழ்த்தலாம்.

இரவில் வணக்கம் சொல்லும்போது,

"பகலைப் போல இரவிலும் இயேசுவின் ஒளி உங்களோடு தங்குவதாக "
என்று வாழ்த்தலாம்.

பிறந்தநாளில் வாழ்த்தும் போது,

"வாழ்நாள் எல்லாம் இறை அருளோடு வாழ்க. இவ்வுலக வாழ்வில் விண்ணகப் பாதையில் வெற்றி நடை போடுவீர்களாக.    விண்ணகத் தந்தை உங்களைச் சகல வளங்களாலும் நிறப்புவாராக." என்ற பொருள் பட வாழ்த்தலாம்.

திருமண நாளில் வாழ்த்தும் போது,

"திருக்குடும்பம் போல் வாழ்க. உங்களிடமும் ஒரு இயேசு பிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பரிசுத்த தமதிரித்துவத்தின் சாயலில் வாழ்க."  என்ற பொருள் பட வாழ்த்தலாம்.

எந்த சூழ்நிலையில் வாழ்த்தினாலும் ஒரு நற்செய்தியை அறிவித்தால்

நாம் வாழ்வதோடு மற்றவர்களும் வாழ உதவுகிறோம்."

"2025 எப்படி இருக்கும்?"

"'2024 ஐ விட ஒரு நாள் குறைவாக இருக்கும்.

2024----366 நாட்கள்.
2025-----365 நாட்கள்.
இது உறுதி.

மற்றப்படி அது எப்படி இருக்கும் என்பதை மக்களின் வாழ்க்கைதான் தீமானிக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்த மட்டில் மதவாத அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.

மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாம் கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.

பெயரளவில் அல்ல, நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.

நமது வாழ்க்கையால் மற்றவர்களை இயேசுவிடம் அழைப்போம்.

விண்ணகத் தந்தையின் அரசு மண்ணகத்திலும் ஏற்பட பாடுபடுவோம்.

ஆண்டு முழுவதும் இறை அன்பிலும், சமாதானத்திலும் வாழ்வோம்."

"அதற்காக நம்மை நாமே வாழ்த்திக் கொள்வோம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்"

லூர்து செல்வம்.

Sunday, December 29, 2024

ஆதியில் வார்த்தை இருந்தார்; அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்; அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.(அருளப்பர் நற்செய்தி 1:1)

 ஆதியில் வார்த்தை இருந்தார்;
 அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்; அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.
(அருளப்பர் நற்செய்தி 1:1)

உள்ளத்தில் பிறப்பது வார்த்தை.

இறைவன் உள்ளத்தில் பிறக்கும் வார்த்தை இறைமகன்.

இறைவன் நித்தியர்.

இறைமகனும் நித்தியர்.

பிறப்பவர் மகன்.

பெறுகிறவர் தந்தை.

இருவருக்குமிடையே நித்தியமாக அன்பு புறப்படுகிறது.

அன்பும் இறைவன்.

அன்பு தூய ஆவி எனப்படுகிறார்.

அருளப்பர் தனது நற்செய்தியின் முதல் அதிகாரத்திலேயே பரிசுத்த தம திரித்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டு விடுகிறார்.

தந்தையையும் மகனையும் பற்றி முதல் வசனத்திலும்,  தூய ஆவியைப் பற்றி 32ஆம் வசனத்திலும் குறிப்பிடுகிறார்.

"தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது; "தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்."
(அரு. 1:32)


தந்தை இறைவன்.
மகன் இறைவன்.
தூய ஆவி இறைவன்.
மூவரும் ஒரே இறைவன்.

அருளப்பர் தனது நற்செய்தியை வார்த்தையில் ஆரம்பிக்கிறார்.

ஏனெனில் அவர் எழுத ஆரம்பிப்பது இறை வார்த்தையை,  

அதாவது வார்த்தையானவரின் நற்செய்தியை எழுதவிருப்பதால் முதலில் வார்த்தைக்கு உரிய வார்த்தையை நினைவுகூறுகிறார்.

எதைப்பற்றி சிந்தித்தாலும் சிந்தனையில் கேள்விகள் எழும்.

கேள்விகள் எழாவிட்டால் நாம் சிந்திக்கவில்லை என்று அர்த்தம்.

கடவுள் நித்தியர்.

இருக்கிறவர்.

இருக்கிறவரை ஏன் இருந்தார் ஏன் கடந்த கால வினைச் சொல்லால் குறிக்கிறார்?

கடவுள் காலங்களைக் கடந்தவர்.
எழுதுகிறவர் காலங்களுக்கு உட்பட்டவர்.

காலங்களுக்கு உட்பட்டவரால் காலத்தின் அடிப்படையில் தான் சிந்திக்க முடியும்.

ஆகையால் அருளப்பர் அவர் பிறக்கும் முன்பே "இருக்கிற" கடவுளை இருந்தார் என்கிறார்.

அளவுள்ள நமது மொழியில்  எழுதப்பட்டதை கடவுளின் பார்வையில் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் ஆதியும் அந்தமும் அற்றவர்.

ஆகவே ஆதியில் என்ற வார்த்தையை துவக்கமில்லாத காலத்திலிருந்து என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இருந்தார் என்ற வார்த்தையை இருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இதேபோல் மனித மொழியில் எழுதப்பட்டு, கடவுள் பார்வையில் புரிந்து கொள்ளப்பட வேண்டிய வார்த்தைகள் பைபிளில் நிறைய உள்ளன.

''மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.''
(தொடக்கநூல் 2:2)

கடவுளால் ஓய்வு எடுக்க முடியாது.
கடவுள் தொடர்ந்து செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.

அவரது படைப்புப் பணியும், பராமரிப்புப் பணியும் தொடர்ந்து ஒவ்வொரு வினாடியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கடவுளை மகிமைப் படுத்த வாரத்தின் ஏழாம் நாளில் நாம் ஓய்வு எடுக்க வேண்டும் என்பது நமக்குத் தரப்படும் செய்தி.



"ஆதியில் வார்த்தை இருந்தார்; அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்; அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்."

துவக்கம் இல்லாத காலத்திலிருந்தே வார்த்தையானவர் கடவுளோடு, கடவுளாக இருக்கிறார்.

வார்த்தையானவர் கடவுள்.
அவரைப் பெறுகிறவர் கடவுள்.
தூய ஆவியானவர் கடவுள்.

"கடவுளோடு இருந்தார்'' என்ற வார்த்தைகள் மூவரும் மூன்று வெவ்வேறு ஆட்கள் (Distinct persons) என்பதைக் குறிக்கின்றன.

"கடவுளாயும் இருந்தார்" என்ற வார்த்தைகள் மூவரும் ஒரே கடவுள் என்பதைக் குறிக்கின்றன.

உலகைப் படைத்தவர் யார்?
கடவுள்.

"அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. 
(யோவான் நற்செய்தி 1:3)

உலகத்தை உள்ளடக்கிய பிரபஞ்சம் வார்த்தையால் உண்டாயிற்று.

வார்த்தை கடவுள், ஆகவே பிரபஞ்சம் கடவுளால் உண்டாயிற்று.

எதற்காக பிரபஞ்சத்தைப் படைத்தார்?

நமக்காக.   நம்மை எதற்காகப் படைத்தார்?

அவரை அன்பு செய்ய. சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு செய்ய.

அன்பு செய்து வாழ.

வார்த்தையானவர் தனது வார்த்தையின் மூலம் நம்மில் செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.

அவரைப் போல் நாமும் அன்பு செய்து வாழ வழி காட்டிக் கொண்டிருக்கிறார்

அவர் தந்தையுள் வாழ்வது போல நாமும் அவருள் வாழ நம்மை அழைக்கிறார்.

நாம் அன்பு செய்து வாழ அவர் நம்மில் வாழ்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.

உணர்ந்தால் மட்டும் போதாது, நமது உணர்வைச் சொல்லாலும், செயலாலும் வாழ வேண்டும்.

அன்பு செய்து வாழ வேண்டும்.

அன்பு செய்வதுதான் வாழ்க்கை.

அன்பு செய்வோம், இன்றும், என்றும்.

லூர்து செல்வம்.

Saturday, December 28, 2024

"உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது."(1அரு. 2:15)



"உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது."
(1அரு. 2:15)

ஒருவரிடம் இரண்டு பொருட்களைக் காண்பித்து,

"இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்." என்று சொன்னால் அவருக்கு எது நல்லது எனப் படுகிறதோ அதைத் தேர்வு செய்வார்.

இரண்டு பொருட்களின் தன்மையை விளக்கி அதன் பின்
"தேர்வு செய்யுங்கள்."  என்று சொன்னால் நல்ல தன்மை உள்ளதைத் தேர்வு செய்வார்.

இறைவன் மனிதனைப் படைக்கும் போதே தனது பண்புகளை அவனோடு பகிர்ந்து கொண்டார்.

அவற்றுள் ஒன்று அன்பு, மிக முக்கிய பண்பு.

இறைவன் அன்பு மயமானவர்.

நம்மோடு அன்பைப் பகிர்ந்து கொண்டதால் நாம் இயல்பிலேயே அன்பு உள்ளவர்கள்.

ஒரு ஒப்புமை.

நாம் உயிர் வாழ சாப்பிடுகிறோம்.

சாப்பாட்டின் நோக்கம் சாப்பிடுவது அல்ல.

சிலர் உயிர் வாழும் நோக்கத்தோடு அல்லாமல் ருசிக்காக மட்டும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

அதனால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகள் அவர்கள் உயிர் வாழ்வதையே கேள்விக்குறி ஆக்கிவிடும்.

கடவுள் நம்மைப் படைத்து இவ்வுலகில் விட்டது இதைப் பயன்படுத்தி விண்ணக வாழ்வை அடைவதற்காகத்தான்.

இரலில் பயணிப்பது இரயில் மேல் உள்ள ஆசையினால் அல்ல.

போக வேண்டிய ஊருக்குப் போவதற்காக.

நாம் போக வேண்டிய ஊர் மோட்சம்.

நாம் அன்பு செய்ய வேண்டியது மோட்சத்திலுள்ள நமது தந்தை இறைவனை, நாம் பயணித்துக் கொண்டிருக்கும் உலகத்தை அல்ல.

உலகத்தை அன்பு செய்தால் இறைவனை உரிய முறையில் அன்பு செய்ய முடியாது.

இறைவனை அன்பு செய்யாதவர்களுக்கு அவரும் கிடைக்க மாட்டார், அவர்கள் அன்பு செய்த உலகமும் கிடைக்காது.

அதனால் தான் அருளப்பர் சொல்கிறார்,

"உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது."

கையில் நூறு ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

சாப்பிட ஹோட்டலுக்குப் போகிறோம்.

சாப்பாடு நூறு ரூபாய்.

சாப்பாடு வேண்டுமென்றால் நூறு ரூபாயை இழக்க வேண்டும்.

நூறு ரூபாய்தான் வேண்டுமென்றால் சாப்பாட்டை இழக்க வேண்டும்.

உலகப் பொருட்களைத் தியாகம் செய்தால்தான் மோட்சம் கிடைக்கும்.

கடவுள் நம்மிடம் உலகப் பொருட்களைத் தந்திருப்பது அவற்றைப் பிறரன்புப் பணிகளில் செலவழிக்க, கையில் பொத்தி வைத்துக் கொள்வதற்காக அல்ல.

இதை நினைவில் வைத்துக் கொண்டு உலகில் இறைவனுக்காக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Friday, December 27, 2024

இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். (லூக்கா நற்செய்தி 2:52)

இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். 
(லூக்கா நற்செய்தி 2:52)

தந்தை, மகன், தூய ஆவி பரிசுத்த தம திரித்துவத்தில் மூன்று ஆட்கள்,  மூவரும் ஒரே கடவுள்.

இறைமகன் மனுவுறு எடுக்கும் வரை 

அவர் ஒரே ஆள் -- இறைமகன்
ஒரே சுபாவம் --தேவ சுபாவம்.

மரியாளின் வயிற்றில் இறைமகன் மனுவுறு எடுத்த வினாடியிலிருந்து

அவர் ஒரு ஆள்-- இறைமகன்.
இரண்டு சுபாவங்கள் --தேவ சுபாவம், மனித சுபாவம்.

இயேசு யார்?

கடவுள்.  தேவ சுபாவமும், மனித சுபாவமும்‌ கொண்ட கடவுள்.

முழுமையாகக் கடவுள்.
முழுமையாக மனிதன்.

தேவ சுபாவத்தில் துவக்கமும் முடிவும் இல்லாதவர். மாறாதவர்.

மனித சுபாவத்தில் பிறப்பும் இறப்பும் உள்ளவர். மாற்றத்துக்கு உட்பட்டவர். குழந்தையாயிருந்து பையனாகவும், வாலிபனாகவும், பெரிய ஆளாகவும் வளர்ந்தார். 33 வயதில் இறந்தார்.

தேவ சுபாவத்தில் கடவுளுக்கு உரிய அத்தனை பண்புகளும் உரியவர்.

மனித சுபாவத்தில் பாவம் தவிர மற்ற அனைத்து மனிதப் பண்புகளும் உள்ளவர்.

இயேசு திருக்குடும்பத்தில் ஒரு உறுப்பினர்.

பெற்ற அன்னைக்கும், வளர்த்த தந்தைக்கும் கீழ்ப்படிந்து நடந்தார்.

தந்தையுடன் தச்சுத் தொழில் செய்தார்.

உழைத்து தான் உணவை ஈட்டினார்.

கடவுளாகியஅவர் நினைத்திருந்தால் உணவை ஒரே வார்த்தையில் படைத்துப் பெற்றோருக்குக் கொடுத்துத் தானும் சாப்பிட்டிருக்கலாம்.

ஆனால் அப்படிச் செய்யவில்லை.

பெற்றோருடன் அவரும் வியர்வை சிந்த உழைத்தார்.

மனிதன் என்ற முறையில்   ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தார்.

30 ஆண்டுகள் குடும்பத்தில் வாழ்ந்தார். தான் யாரென்று யாருக்கும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

அவருடைய பெற்றோருக்கு மட்டும் அவர் யாரென்று தெரியும்.

அவர் சர்வ வல்லவக் கடவுள் என்று தெரிந்திருந்தும் அவருடைய பெற்றோர் சுய நன்மைக்காக அவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அவர் 12 வயது சிறுவனாக இருந்த போது கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து யூதேயாவிலுள்ள 
எருசலேமிலிருந்த ஆலயத்துக்கு நடந்து தான் சென்றார்கள்.

அவர் காணாமல் போன போது "கடவுள் தானே, எப்படியும் வீட்டுக்கு வந்து விடுவார்" என்று மரியாளும், சூசையப்பரும் வீட்டுக்குப் போய் விடவில்லை.

மூன்று நாட்கள் தேடி அலைந்தார்கள்.

மூன்றாம் நாள் அவரைக் கோவிலில் கண்டார்கள். 

அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். 


அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார். 


அவர் அவர்களிடம் "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார். 

அப்போது அவருடைய விண்ணகத் தந்தையை அவர்களுக்கு ஞாபகப் படுத்தி,

"தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டதிலிருந்து

ஏற்கனவே தன் பணியைப் பற்றி பெற்றோருடன் பேசியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

ஆனாலும் அப்போது அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 

30 ஆண்டு காலம் தனது உலக வரவின் நோக்கத்தைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்க வேண்டும்.

தனது அன்னை அமல உற்பவம், தான் மூன்று ஆண்டுகள் செய்யவிருக்கும் நற்செய்திப் போதனை, தனது பாடுகள், மரணம், உயிர்ப்பு போன்றவை பற்றித் தனது பெற்றோருடன் பேசியிருக்க வேண்டும்.

தான் குடும்பத்தில் வாழும் போதே சூசையப்பரின் மரணம் பற்றி பேசியிருக்க வேண்டும்.

சூசையப்பர் இறைவன் சித்தத்துக்கு முற்றிலும் பணிந்து நடப்பவர்.

தன் மகனின் மடியில் தலை வைத்து பாக்கிமமான மரணம் அடைந்தார்.

இயேசுவும் மரியாளும் அழுதிருப்பார்களா?

எனக்கு அப்படித் தோன்றவில்லை.

மண்ணக துன்ப வாழ்வை விட்டு இறைவன் அடி சேர்ந்ததற்காக நாம் அழுவது நமது விசுவாசப் பற்றாக்குறை.

ஆன்மீக ரீதியாகப் பார்த்தால் உலகை விட்டு மோட்சத்துக்குச் செல்வது மகிழ்ச்சியான விடயம்.

விடயம் புரிந்தவர்கள் மகிழ்ச்சியை நினைத்து அழுவார்களா?

30 வது வயது வரை பெற்றோருடன் வாழ்ந்துவிட்டு 
அடுத்த மூன்று ஆண்டுகள் மட்டும் தான் இயேசு பொது வாழ்வில் ஈடுபட்டார்.

இதன் மூலம் குடும்ப வாழ்வின் மகத்துவத்தை நமக்கு இயேசு அறிவிக்கிறார்.

ஒரு பாப்பரசர், (பெயர் ஞாபகமில்லல) தனது பாப்பரசர் பட்டமளிப்பு விழாவிற்கு தன் பெற்றோரை அழைத்திருந்தார்.

விழாவின்போது தனது விரலில் அணிந்திருந்த பாப்பரசருக்குரிய மோதிரத்தை மகிழ்ச்சியோடு தன் பெற்றோருக்குக் காண்பித்தார்.

அப்போது அவரது அம்மா தனது திருமண மோதிரத்தை அவருக்குக் காண்பித்து,

"இதை நான் அணிந்திருக்கா விட்டால் அதை நீங்கள் அணிந்திருக்க முடியாது." என்றார்.

மரியாள் இல்லாவிட்டால் இயேசு இல்லை.

பெற்றோர் இல்லாவிட்டால் குருக்கள் இல்லை.

குருக்கள் இல்லாவிட்டால் இல்லாவிட்டால் ஆயர்கள் இல்லை.


ஆயர்கள் இல்லாவிட்டால் பாப்பரசர் இல்லை.

குடும்பங்கள் இல்லாவிட்டால் திருச்சபையே இல்லை.

இதிலிருந்து குடும்ப வாழ்வின் முக்கியத்துவத்தை உணரலாம்.

ஆன்மீக வாழ்வில் ஒவ்வொரு குடும்பமும் திருக்குடும்பம் போல செயல்பட வேண்டும்.


பெற்றோர் அன்னை மரியாளையும், சூசையப்பரையும் போல விசுவாசத்திலும், பரிசுத்தத் தனத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.

பிள்ளைகள் இயேசுவைப் போல்

ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ வேண்டும். 

குடும்ப வாழ்வு குருத்துவ வாழ்வுக்கு நிகரானது.

இதை உணர்ந்து பெற்றோரும், பிள்ளைகளும் செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, December 26, 2024

ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். (மத்தேயு நற்செய்தி 2:19)

ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். 
(மத்தேயு நற்செய்தி 2:19) 

கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றில் முதல் வேத சாட்சிகள் இயேசு பிறந்த காலக்கட்டத்தில் ஏரோது மன்னனால் கோல்லப்பட்ட மாசில்லாக் குழந்தைகள் தான்.

குழந்தை இயேசுவைக் கொல்ல வேண்டும் என்ற சதித்திட்டத்தை ஏரோதுவின் உள்ளத்தில் தோற்றுவித்தவன் சாத்தானாகத்தான் இருக்க வேண்டும்.

ஏனெனில் துவக்கத்திலிருந்தே மனுக்குலத்தின் எதிரியாகச் செயல்பட்டுக் கொண்டு வந்தவன் அவன்தான்.

தான் இழந்த மோட்சத்தை மனுக்குலம் அடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தோடு தான் நமது முதல் பெற்றோர் பாவத்தில் விழக் காரணமாக இருந்தான்.

ஒரு வகையில் இறைமகன் மனு மகனாகப் பிறக்கக் காரணமாக இருந்தவன் அவன்தான்.

எந்த எதிர் மறையையும் நேர்மறையாக மாற்றக்கூடிய வல்லமை கடவுளுக்கு உண்டு.

அந்த வகையில் எதிர்மறையான பாவம்தான் விண்ணக அரசரை மண்ணகத்துக்கு அழைத்து வந்தது. 

மண்ணகம் வந்த இறையரசைக் கொன்றுவிட அவன் தீட்டிய திட்டம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இவ்வுலகத் துன்பங்களை அனுபவிக்காமல் விண்ணகம் செல்லக் காரணமாக அமைந்தது.

ஆன்மீக ரீதியாகப் பார்த்தால் இவ்வுலகில் வாழ்ந்து, எண்ணிறந்த சோதனைகளை வென்று, 
கட்டங்கள் பலவற்றை அனுபவித்து 
இறுதியில் விண்ணகம் செல்வதை விட
 risk எதுவும்  இல்லாமல் குழந்தைப் பருவத்திலேயே விண்ணகம் செல்பவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்.

நாம் ஏன் Express Train ல் பயணிக்க விரும்புகிறோம்?

செல்ல வேண்டிய இடத்துக்கு சீக்கிரம் போய் விடலாம் என்பதற்காகத்தினே!

சாத்தானே மாசில்லாக் குழந்தைகளை விண்ணகத்துக்கு 
Express Train ல் ஏற்றி அனுப்பி விட்டான்.

தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க இறைவனால் முடியும்.

கடவுள் நினைத்திருந்தால் ஏரோதுவைத் தூண்ட விடாமல் சாத்தானைத் தடுத்திருக்கலாம்.

But for the permissive will of God Herod could not have behaved the way he did.

இறைமகன் மனுவுறு எடுத்தது நாம் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்ய.

அவரது பரிகாரப் பணி அவர் உற்பவித்த நேரத்திலிருந்தே ஆரம்பித்து விட்டது.

கருவறையிலிருந்து கல்லறை வரைக்கும் அவர் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார். அந்த பாவப் பரிகாரப் பணியில் அன்னை மரியாளும் சேர்ந்து கொண்டாள்.

உற்பவித்தவுடன் எலிசபெத் வாழ்ந்த மலை நாட்டுக்கு நடைப் பயணம், 

நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்கு நடைப் பயணம்,

பெத்லகேமிலிருந்து எகிப்துக்கு நடைப் பயணம்,

அங்கு நாடோடி வாழ்க்கை,

எகிப்திலிருந்து யூதேயாவுக்கு நடைப் பயணம்,

அங்கிருந்து கலிலேயாவுக்கு நடைப் பயணம்,

கலிலேயாவிலும், யூதேயாவிலும் மூன்று ஆண்டுகள் நடந்து சென்றே நற்செய்தி அறிவித்தல்,

இறுதியாக பாடுகள், சிலுவை மரணம்.

ஆக உலகில் இயேசுவின்  வாழ்வே பரிகார வாழ்வுதான்.

இயேசுவுக்கு எதிராகச் சாத்தான் செய்த வேலைகளை எல்லாம் இயேசு தன் பரிகாரப்பணிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இயேசுவின் மரணத்துக்குக் காரணமான பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், யூத மதக் குருக்களும், ரோமை அரசு அதிகாரிகளும் சாத்தானோடு சேர்ந்து நமது மீட்புக்கு உதவியிருக்கிறார்கள்.

இதிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று நமது ஆன்மீக வாழ்வுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் சாத்தானின் ஏஜெண்ட்டுகள்தான்.

அவர்களுடைய எதிர் வேலைகளை நமது ஆன்மீக வாழ்வுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

அவர்கள் தரும் துன்பங்களைச் சிலுவைகளாக. ஏற்றுக் கொண்டு, அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நாமே கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கலாமே!

அவையெல்லாம் நமது மீட்படைய உதவிகரமாக இருப்பதோடு, நமது விண்ணகப் பேரின்பத்தின் அளவையும் கூட்டும்.

நமது எதிரிகள் தரும் துன்பங்கள் முடிந்துவிடும்.

நாம் அனுபவிக்கப் போகும் பேரின்பம் நிரந்தரமானது.

இயேசு வாழ்ந்தது போல பாவப்பரிகார வாழ்வு வாழ்வோம்.

பரிசுத்தராகளாக விண்ணக வாழ்வுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, December 25, 2024

தமிழ் கூறும் செய்தி.

தமிழ் கூறும் செய்தி.

நமது தாய் மொழி தமிழ்.

இயல், இசை, நாடகம் அடங்கிய முத்தமிழ்.

நமது தந்தையாகிய கடவுள் நம்மை மட்டுமல்ல, நமது தாய் மொழியையும் தனது சாயலில் படைத்திருக்கிறார்.

முத்தமிழ் கடவுள் படைத்த மொழி.

முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் என்பார்கள்.

முதல் மனிதன் தனது மனைவியை முதலில் அழைத்தது தமிழால் தான் என்பார்கள்.

அவன் மனைவியை,

"ஏ, வா." என்று அழைத்தான்.
அது அவள் பெயராயிற்று.

அவள் அவனை,

"அத்தான்" என்று அழைத்தான்.

ஏ, வா ஏவாள் ஆயிற்று,
அத்தான் ஆதாம் ஆயிற்று.

இது ஒரு கற்பனை தான், ஆனால் தமிழன் மட்டுமே செய்ய முடிந்த கற்பனை.

மற்ற எந்த மொழியிலும் இந்த கற்பனையைச் செய்ய முடியாது.


மூவொரு தேவன் நமது தாய் மொழியை முத்தமிழாகப் படைத்திருக்கிறார்.

இறைவன் அன்பு மயமானவர், சமாதானத்தின் தேவன் என்பதற்கு முத்தமிழ் ஒரு அடையாளம்.

எப்படி?

முத்தமிழ்= முத்தம் + இழ்

இழ் = வாழ்க்கை.

முத்தமிழ் = முத்தமே வாழ்க்கை.

முத்தம் அன்பின் அடையாளம்.
தாய் குழந்தையைப் பெற்றவுடன் அதன் மீது தனக்குள்ள அன்பைக் காண்பிக்க அவள் செய்யும் முதல் செயல் அதற்கு முத்தமிடுவதுதான்.

அப்படியானால் முத்தமிழ் என்றால் அன்பே வாழ்க்கை என்பது பொருள்.

அது அன்பையே வாழ்வாகக் கொண்ட இறைவனுக்கு அடையாளம்.

முத்தமிழ் பேசும் நாம் அன்பையே வாழ்வாகக் கொண்டவர் இறைவன் என்பதை ஏற்றுக் கொள்கிறோம் என்பதற்கு நாம் பேசும் மொழியே சான்று.

இறைவன் விருப்பப்படி அன்பு செய்வதில்தான் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.

முத்தமிழுக்கு உரியவர்களாக தமிழர்கள் இருக்க வேண்டும்,

அதாவது அன்பு செய்வதையே வாழ்வாகக் கொண்டவர்களாகத் தமிழர்கள் இருக்க வேண்டும்
என்று நாம் பேசும் மொழியே
நாம் பேசும் போதெல்லாம் ஞாபகப் படுத்திக் கொண்டேயிருக்கிறது.

அன்பு செய்பவர்கள் ஒருவருள் ஒருவராக வாழ்வார்கள்.

அதாவது ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழ்வார்கள்.

முத்தமிழ் பேசும் நாம் முத்தமிழாக வாழ்வோம்.

அதாவது அன்புடன் சமாதானமாக வாழ்வோம்.

அன்பே கடவுள் என்று முத்தமிழ் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

முத்தமிழர்கள் நாம் அன்பே உறுவான இறைவனின் பிள்ளைகள்.

நமது தந்தையின் விருப்பப்படி வாழ்வோம். 

அன்பும், சமாதானமும் நமது பண்புகளாக இருக்க வேண்டும்.

இது முத்தமிழ் மூலம் இறைவன் நமக்கு சொல்லும் நற்செய்தி. 

முத்தமிழால் இறைவனைப் போற்றுவோம்.

லூர்து செல்வம்.

"உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக.''


"உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக.''

நமது ஆண்டவராகிய இயேசு நமக்குக் கற்பித்த செபத்தில் நாம் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பும் முதல் மன்றாட்டு.


விண்ணுலகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே!  

"உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக."

கர்த்தர் கற்பித்த செபத்தில் மொத்தம் ஏழு மன்றாட்டுக்கள் அடங்கியுள்ளன.

மன்றாட்டுக்களை ஆரம்பிக்கும் முன் இயேசு தனது தந்தையை நமது தந்தையாக அழைக்கச் சொல்கிறார்.

தந்தை இறைவன் நித்திய காலமாகப் பெறுவது ஒரே மகனைத்தான்.

அந்த ஒரே மகனை அருளப்பர் வார்த்தை என்று அழைக்கிறார்.

உரிமையின் அடிப்படையில் வார்த்தைக்கு மட்டும் தான் இறைவன் தந்தை.

மனுவுறு‌ எடுத்த வார்த்தையானவர் அவரது தந்தையை  "எங்கள் தந்தையே" என்று அழைக்கும் உரிமையை நமக்குத் தந்திருக்கிறார்.

அதன் மூலமாக அவரது இல்லமாகிய விண்ணகத்திற்கு நம்மையும் உரிமையாளர்கள் ஆக்கியிருக்கிறார்.

இறைவன் நமக்குத் தந்தை.
விண்ணகம் நமது வீடு.

இறைவன் நமது தந்தை என்று அறிந்தபின் பிள்ளைகள் என்ற உரிமையோடு நமக்கு வேண்டியதை அவரிடம் கேட்கலாம்.

இனி முதல் மன்றாட்டுக்கு வருவோம்.

"உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக.''

1. உமது பெயர் 
2. தூயது எனப் போற்றப் பெறுக.

நமது விண்ணகத் தந்தையின் பெயர் என்ன?

எதற்காக நமது பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுகிறோம்?

அழைப்பதற்காக.

ஒருவர் தனியே ஆளே இல்லாத காட்டில் வசிக்க நேர்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

அவருக்குத் பெயர் தேவையில்லை, ஏனெனில் அவரை அழைக்க காட்டில் யாருமில்லை.

துவக்கமும் முடிவும் இல்லாதவர் கடவுள்.

அவர் நம்மைப் படைக்கும் முன் அவரைத் தவிர யாரும் எங்கும் இல்லை.

அவர் மட்டும் இருக்கிறார்.

அவரை அழைக்க யாருமில்லை.

நாம் படைக்கப்பட்ட பின் நாம் அவரை அழைப்பதற்கு அவருக்கு பெயர் பெயர் தேவை.

மோசே கடவுளிடம்,

"உமது பெயர் என்ன?" என்று கேட்டபோது 

"இருக்கின்றவர் நானே" என்று பதில் சொன்னார்.

இது பள்ளிக்கூடத்தில் ஒரு பையனைப் பார்த்து, "நீ யார்?"
என்று கேட்டால், "நான் ஒரு மாணவன்" என்று சொல்வது போல.

நாம் செயலை வைத்து அவரை அழைக்கிறோம்.

தமிழர்களாகிய நாம் நம்மைப் படைத்தவர் அனைத்தையும் "கடந்து", அனைத்தின் "உள்ளும்" இருப்பதால் அவரை,

"கட+உள்=  கடவுள்" என்று அழைக்கிறோம்.

ஒவ்வொரு மொழி மக்களும் அவர்கள் மொழியில் அவருக்குப் பெயர் வைத்திருப்பார்கள்.

நம்மைப் பொறுத்த மட்டில் நம்மைப் படைப்பால் பெற்றவர் நமது தந்தை.

ஒரு சிறு பிள்ளையிடம், " உன் அப்பாவின் பெயர் என்ன?" என்று கேட்டால் "அப்பா" என்று தான் சொல்லும்.

"தூயது" என்றால் பரிசுத்தமானது.

"பெயர் தூயது" என்றால் பெயருக்கு உரியவர் தூயவர், அதாவது பரிசுத்தமானவர், அதாவது ஒரு சிறு தவறு கூட இல்லாதவர்.

"போற்றப் பெறுக" என்றால் புகழப் படுக.

நமது தந்தை அவரது எல்லாப் பண்புகளிலும் அளவில்லாதவர்.

அவர் அளவில்லாத அன்பு உள்ளவர்.

அளவில்லாத வல்லமை உள்ளவர்.

அளவில்லாத விதமாய் பரிசுத்தமானவர்.

அளவில்லாத புகழ் உடையவர்.

அளவில்லாத ஒன்றை நம்மால் கூட்ட முடியாது.

நம்மால் அவரது புகழைக் கூட்ட முடியாது.

நாம் அவரைப் போற்றாவிட்டால் அவரது புகழ் மங்கி விடுமா?

நம்மால் அவரது புகழைக் கூட்டவும் முடியாது, குறைக்கவும் முடியாது.

நம்மால் செய்ய முடியாத ஒன்றை ஏன் செய்க என்கிறோம்?

இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவில் ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் நம்மைப் படைத்தது நமது நன்மைக்காக, அவரது நன்மைக்காக அல்ல.

அவர் இயல்பாக இருக்கிறார்,
நாம் அவரால் இருக்கிறோம்.

நாம் அவரை விட்டுப் பிரிந்தால் நமக்கு தான் நட்டம், அவருக்கல்ல.

அவரை நேசிக்கும் போது பயன் பெறுவது நாம் தான்.

அவரை நேசிக்காவிட்டால் இழப்பு நமக்கு தான்.

அவரது புகழை அதிகரிக்க முடியா விட்டால் ஏன் " உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக.'' என்கிறோம்?

அதுவும் நமது நன்மைக்குதான்.

நமக்கு என்ன நன்மை?

நாம் எதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோம்?

"இறைவனை அறிந்து, அவரை நேசித்து, அவரோடு வாழ விண்ணகம் செல்ல."

விண்ணகம் செல்வதற்கே மண்ணகத்தில் படைக்கப் பட்டிருக்கிறோம்.

நாம் விண்ணகம் செல்ல வேண்டும் என்றால் கடவுளை அறிந்து அவரை நேசித்து அவருக்கு சேவை செய்து வாழ வேண்டும்.

இவ்வாறு வாழ வரம் கேட்பதுதான் முதல் மன்றாட்டு.

அதெப்படி?

அதற்கான வார்த்தைகள் எதுவும் மன்றாட்டில் இல்லையே!

வார்த்தைகள் இல்லை, ஆனால் கருத்து இருக்கிறது.

ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்.

அவர்களைப் பொதுத்தேர்வுக்குத் தயாரிக்கிறார்.

மாணவர்கள் தங்களது வெற்றிச் சதவீதத்தால் ஆசிரியரின் உழைப்பைப் போற்றுகிறார்கள்.

மகன் சான்றோனாக வாழ்ந்தால் பெற்றோரை எல்லோரும் போற்றுவார்கள்.

இயேசுவை அறியாத மக்களிடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால் அதுதான் இயேசுவை மக்களிடம் கொண்டு செல்லும்.

தந்தையின் பெயர் மற்றவர்களால் போற்றப்பட வேண்டுமென்றால் பிள்ளைகள் நல்லவர்களாக வாழ வேண்டும்.

''தந்தையே, உமது மக்களாகிய நாங்கள் நல்லவர்களாக வாழ்ந்தால் அது உமது பெயரைப் போற்றுவதற்குச் சமம்.

உமது பெயர் தூயது எனப் போற்றப் படுக.

அதாவது நாங்கள் உமது மக்களுக்குரிய தரத்தோடு வாழ எங்களுக்கு வரம் தாரும்.

உமது உதவியின்றி நாங்கள் நல்லவர்களாக வாழ முடியாது.

நல்லவர்களாக வாழ எங்களுக்கு உதவும்."

நாம் நமது நல்ல வாழ்க்கையின் மூலம்தான் நமது தந்தையின் பெயரைப் போற்ற வேண்டும்.

"உமது பெயர் பெயர் தூயது எனப் போற்றப் படுக.

உமது பெயர்  தூயது என மக்களால் போற்றப் படும் வகையில் நல்லவர்களாக வாழ எங்களுக்கு வரம் தாரும்.''

இதுதான் நமது முதல் மன்றாட்டு.

நாம் கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் போதெல்லாம் நாம் தந்தையின் விருப்பப்படி நல்லவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்.

அந்த எண்ணம் செயலாக மாற வேண்டும்.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் தந்தையின் பெயர் போற்றப்படும் படி வாழ வேண்டும்.

நாம் தூயவர்களாக வாழ்ந்தால் நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் நம்மை வழி நடத்தும் கடவுள் தூயவர் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் வாழும் இறைவனையும் பார்க்க வேண்டும்.

தந்தையின் சித்தப்படி வாழ்வதன் மூலம் அவர் பெயரைப் போற்றுவோம்.

லூர்து செல்வம்.

Tuesday, December 24, 2024

"என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்."(மத்தேயு நற்செய்தி 10:18)


"என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்."
(மத்தேயு நற்செய்தி 10:18)

நேற்று இயேசு பிறந்தார்.

நாம் பிறப்பதில்லை, பெறப்படுகிறோம்.

ஒன்றுமில்லாமல் இருந்த நம்மை இறைவன் திட்டப்படி நம்மை உற்பவிப்பவள் நம் அன்னை, நம்மைப் பெறுவதும் நம் அன்னைதான்.

நாம் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் நம் அன்னை நம்மைப் பெற்றார்கள்.

ஆனால் மரணம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மரியாளின் வயிற்றில் உற்பவித்துப் பிறந்தவர் இயேசு.

மனுக்குலத்தைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக தன்னைச் சிலுவையில் பலியாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பிறந்தவர் அவர்.

நேற்று இயேசு பிறந்த விழாவைக் கொண்டாடிய நாம் இன்னும் 114 நாட்களில்,

18 ஏப்ரல் 2025 ல், புனித வெள்ளிக் கிழமையன்று இயேசுவின் சிலுவை மரணத்தை நினைவு கூறுவோம்.

இயேசுவின் சீடர்கள் அவரைப் போலவே சிலுவையைச் சுமக்க வேண்டும் என்பது அவரது திட்டம்.

ஆகவேதான் தன் சீடர்களைப் பார்த்து,

"என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்."

என்று கூறுகிறார்.

இவ்வார்த்தைகளைக் கூறும்போது அவர் பிலாத்துவின் முன்னும், ஏரோது முன்னும் இழுத்துச் செல்லப்படவிருக்கும் காட்சி அவர் மனதில் ஓடியிருக்கும்.

குருவுக்கு நேர்ந்தது சீடர்களுக்கும் நேரும்.

நாமும் அவருடைய சீடர்கள்தான்.


"என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்."
(மத்தேயு நற்செய்தி 10:22)

முக்காலமும் அறிந்தவர் இயேசு.

இன்று நாம் என்ன சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று இயேசுவுக்கு அன்றே தெரியும்.

அன்று இயேசுவின் காலத்தில் அவருக்கு எதிராகச் செயல்பட்டவர்களில் அவரது இனத்தவர்களும் இருந்தார்கள், அரசும் இருந்தது.

இந்தியாவின் அரசியல் சூழ்நிலை நமக்குத் தெரியும்.

மணிப்பூரில் அரசின் கையில் கிறித்தவம் என்ன பாடு படுகிறது என்பதும் நமக்குத் தெரியும்.

நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே நம்மை வெறுக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

திருச்சபையின் 21 நூற்றாண்டு கால வரலாற்றில் இயேசு சொன்ன அத்தனையும் அவரது சீடர்களுக்கு நேர்ந்திருக்கின்றன.

நமக்கும் நேரும்.

ஆனாலும் வேத சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து.

நமக்கு நித்திய கால பேரின்ப வாழ்வு காத்துக் கொண்டிருக்கிறது.

அன்று கலிலேயாவிலும், யூதேயாவிலும் நடந்த இயேசு இப்போது நம்மோடு நடந்து கொண்டிருக்கிறார்.

நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை.

ஏனெனில் நம்மை வழி நடத்துபவர் சர்வ வல்லவர்.

விசுவாசத்திற்காக நாம் அனுபவிக்கும் துன்பங்கள் நமது நித்திய  பேரின்ப வாழ்வுக்கான விதைகள்.

துன்பங்களுக்கு மத்தியிலும் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, December 23, 2024

இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.

இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். 

குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 2:11,12)

திருக்குடும்பம் வாழ்வதற்கேற்ற சொந்த வீடு நசரேத்தில் இருந்தது. 

ஆனால் இயேசு அங்கு பிறக்கவில்லை.

தாவீதின் ஊராகிய பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறக்க வேண்டும் என்பது தான் இறைமகனின் நித்திய காலத் திட்டம்.

திட்டப்படி மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

இந்த மகிழ்ச்சிகரமான செய்தி முதன் முதலில் யாருக்கு அறிவிக்கப் பட்டது?

தங்கள் ஆடுகளைச் சாமக் காவல் காத்துக் கொண்டிருந்த ஏழை இடையர்களுக்கு.

அறிவிக்கப்பட்ட செய்தி என்ன?

 "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். 

இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்."

பிறந்திருப்பது மெசியா என்பதற்கான அடையாளம் என்ன?

"குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" 

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."

என்ற இயேசுவின் போதனையை அவரே சாதனையாக்குவதற்காக ஒரு ஏழைக் குடும்பத்தில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்து,  தீவனத் தொட்டியில் படுத்திருந்தார்.

எதற்காக இந்தச் சாதனயைப் புரிந்தார்?

நாம் அவரைப் பின் பற்றுவதற்காக.

தீவனத் தொட்டியில் எப்படிப் படுத்திருந்தார்?

"துணிகளில் சுற்றப்பட்டு."

நிச்சயமாக அன்னை மரியாள் முதல் கிறிஸ்துமசைக் கொண்டாட ஆயிரக் கணக்கில் செலவழித்து புதுத்துணி வாங்கவில்லை.

அவளிடம் இருந்த துணிகளில் அவரைச்‌ சுற்றி தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்தாள்.

சுருக்கமாகச் சொல்வதானால் ஏழ்மை தான் அவர் மெசியா என்பதற்கான அடையாளம்.

முதல் கிறிஸ்துமசைக் கொண்டாடியவர்கள் வசதி படைத்தவர்கள் அல்ல, ஏழைகள்.

குழந்தையைப் பெற்ற தாயும் ஏழை. வளர்ப்புத் தந்தையும் ஏழை. கொண்டாட வந்த இடையர்களும் ஏழைகள்.

இன்றும் நம்மோடு இருப்பது அன்று மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, தீவனத்தொட்டியில் படுத்திருந்த அதே இயேசுதான்.

அன்று அன்னை மரியாளும், சூசையப்பரும், ஏழை இடையர்களும் கொண்டாடிய அதே கிறிஸ்துமசைத்தான் இன்று நாமும் கொண்டாடுகிறோம்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான அடையாளம் என்ன?

ஏழ்மை.

கிறிஸ்துவும் மாறவில்லை, அவருடைய போதனையும் மாறவில்லை.

நண்பர்களைப் பார்க்கப் போகும்போது அவர்களுக்குப் பிடித்தமான எதையாவது வாங்கிக் கொண்டு போவது வழக்கம்.

இனிப்பே பிடிக்காத ஒருவருக்கு மிட்டாய் மட்டும் வாங்கிக் கொண்டு போனால் என்ன அர்த்தம்?

கிறிஸ்துமஸ் விழா ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்த நமது ஆன்மீக மீட்பருக்கான விழா.

அதில் ஏழ்மை இருந்தால்தான் அது அவருக்குப் பிடிக்கும்.

கிறிஸ்துமஸ் விழாவுக்காக நாம் செய்யும் ஆயத்தச் செலவுகளையும், விழாச் செலவுகளையும் கணக்குப் பார்த்தால் 

கிறிஸ்துமஸ் விழாவுக்கான அடையாளமே இல்லை.

நிச்சயமாக நமது விழா ஆடம்பரம் இயேசுவுக்குப் பிடிக்காது.

கிறிஸ்துமஸ் விழாவின் நோக்கம் என்ன?

"உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! 

 உலகில் நல்ல மனதோர்க்குச் சமாதானமும் உண்டாகுக!" 

கடவுளுடைய மகிமைக்காகவும், மனிதர்கள் நல்ல மனதும், சமாதானமும் உள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகவும் கொண்டுடப் படுவதுதான் கிறிஸ்துமஸ் விழா.

ஆகவே சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் சமாதான வாழ்வு‌ வாழ்பவர்கள் மட்டுமே கிறிஸ்துமஸ் விழா கொண்டாடலாம்.

யாருடனாவது நமக்கு சமாதானக் குறைவு ஏற்பட்டிருந்தால் திருவருகைக் காலத்திலேயே அதைச் சரி செய்துவிட வேண்டும்.

திருவருகைக் காலம் தரப்பட்டிருப்பது ஜவுளி எடுப்பதற்கோ, வீட்டை அலங்கரிப்பதற்கோ, ஸ்டார் தொங்க விடுவதற்கோ, குடில் சோடிப்பதற்கோ அல்ல,

இயேசுவின் வருகைக்காக நம்மை ஆன்மீக ரீதியாகத் தயாரிப்பதற்கு,

நமது ஆன்மாவை பரிசுத்தப் படுத்துவதற்கு.

அந்த நோக்கோடு நடத்தப்படும் தியான முயற்சிகளில் கலந்து கொள்வதோடு,

யாரோடாவது மனத்தாங்கலோடு இருந்தால் அவர்களோடு சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.

சமாதானம் உள்ள உள்ளத்தில் தான் இயேசு மகிழ்ச்சியாகப் பிறப்பார்.

நமக்காகத்தான் வான தூதர்கள் சமாதான கீதத்தைப் பாடினார்கள்.

குழந்தை இயேசுவைப் பார்க்க இடையர்களோடு அவர்கள் வீட்டுப் பெண்களும் வந்திருப்பார்கள்.

அவர்கள் குழந்தையை அப்படியே மாட்டுத் தொழுவத்தில் விட்டு விட்டுப் போயிருப்பார்களா?

நிச்சயமாக மாட்டார்கள். தங்கள் இடையர் குடிக்குத் திருக்குடும்பத்தை அழைத்துச் சென்று ஒரு வீட்டில் தங்க வைத்திருப்பார்கள்.

வீட்டில் தங்கியிருக்கும் போது தான் கீழ்த்திசை ஞானிகள் வந்திருக்க வேண்டும்.

அவர்கள் குழந்தையை மாட்டுத் தொழுவத்தில் சந்திக்கவில்லை.

விண்மின் அவர்களை வீட்டிற்கு தான் அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.

 "வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்;

 தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்."
(மத்தேயு நற்செய்தி 2:12)

"வீட்டிற்குள் போய்" என்றுதான் பைபிள் சொல்கிறது.

கிறிஸ்துமஸ் இரவில் நாம் கோவிலுக்குச் சென்று திருப்பலியில் பங்கேற்று,

குழந்தை இயேசுவை நமது இல்லத்துக்கு அழைத்து வர வேண்டும்.

நம்மோடு அழைத்து வருவதில் தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே அடங்கியிருக்கிறது.

நமது இல்லத்தில் நம்மோடு வாழ்வதைத்தான் இயேசு விரும்புகிறார்.

திருக்குடும்பத்தில் நாமும் சேர்ந்து வாழ்வோம்.

Wish you all a Happy Christmas!

லூர்து செல்வம்.

Sunday, December 22, 2024

" இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்."(லூக்கா நற்செய்தி 1:68)

"இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்."
(லூக்கா நற்செய்தி 1:68)

பத்து மாதங்களாகப் பேச முடியாமலிருந்த செக்கரியா தன் மகனின் பெயரை எழுதியவுடன் பேசும் திறனைத் திரும்பப் பெற்றார்.

அவர் விசுவசிக்கத் தயங்கியதால் அவரது நாவைக் கட்டிய கடவுள் அவிழ்த்து விட்டார்.

உடனே தூய ஆவி அவரை நிறப்புகிறார்.

இதிலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்கிறோம். நாம் தவறு செய்யும்போது கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, திருத்துகிறார்.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரேல் மக்கள் தவறு செய்யும்போது அவர்களைத் திருத்துவதற்காக அந்நியர் அவர்கள் மீது படையெடுக்க அனுமதித்தார்.

அதன் விளைவு தான் பாபிலோனிய அடிமைத்தனம்.

நாமும் தவறுகள் செய்யும்போது நம்மைத் திருத்துவதற்காக கட்டங்களை கடவுள் அனுமதித்தால் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு திருந்த வேண்டும்.

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு செக்கரியா சொன்ன வார்த்தைகள்,

"இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்."

அவரது வார்த்தைகள் அவருக்கும் பொருந்தும், மக்களுக்கும் பொருந்தும்.

அவருக்கு எப்படி?

''என்னைத் தேடி வந்து பேச முடியாமையிலிருந்த என்னை விடுவித்த கடவுளைப் போற்றுவோம்."

இது அவர் விசுவாசத்தில் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதைக் காண்பிக்கிறது.

அடுத்து,   மக்களைப் பாவக்கட்டிலிருந்து அவிழ்த்து விடுவதற்காக மெசியாவின் முன்னோடியை அனுப்பியதற்காக கடவுளைப் போற்றுகிறார்.

நாமும் இறைவனைப் போற்ற வேண்டும். செக்கரியாவுக்குப் பிறந்திருப்பது நம்மைப் பாவத்திலிருந்து நம்மைத் தேடி விண்ணிலிருந்து மண்ணுக்கு வரவிருக்கும் இயேசுவின் முன்னோடி.

அருளப்பர் பிறந்த ஆறாவது மாதத்தில் இயேசு பிறந்தார்.

செக்கரியா சொன்ன அதே வார்த்தைகளை நாம் இயேசுவைப் போற்றப் பயன்படுத்துவோம்.

விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்தார் இறைமகன், நமக்காக.

பாவத்தின் விளைவாக அவரை விட்டு பிரிந்து வந்து விட்ட நம்மைத் தேடி விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்திருக்கிறார்.

தேடி வந்திருப்பவரை வரவேற்கிறோமா, அல்லது கண்டும் காணாதது போலிருக்கிறோமா?

தேடி வந்த இடத்தில் நமக்காகப் பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்திருக்கிறார்.

நாம் அவருக்காக என்ன செய்திருக்கிறோம்?

நம்மை அவரது பாடுகளால் நமது பாவங்களிலிருந்து விடுவித்திருக்கிறார்.

எதற்காக?

நாம் புண்ணிய வாழ்வில் வளர்ந்து அவரோடு விண்ணகம் செல்வதற்காக.

புண்ணிய வாழ்வில் வளர்கிறோமா?

விண்ணக வாழ்வுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறோமா அல்லது இவ்வுலகே சதம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

சிந்தித்துப் பார்ப்போம், செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

Saturday, December 21, 2024

அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். (லூக்கா நற்செய்தி 1:64)

அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். 
(லூக்கா நற்செய்தி 1:64)


எலிசபெத்தின் கணவராகிய செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்த குரு.

எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார்.     ஆகவே முதிர்ந்த வயதிலும் அவர்களுக்கு குழந்தை இல்லை.

 கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கிய அவர்களுக்கு குழந்தை ‌பாக்கியம் கொடுக்க இறைவன் ‌சித்தமானார்.


குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, செக்கரியா ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று

தூபம் காட்டி செபித்துக் கொண்டிருந்தபோது

கடவுளால் அனுப்பப்பட்ட கபிரியேல் அவருக்குத் தோன்றினார்.


அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார். 


வானதூதர் அவரை நோக்கி, "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு அருளப்பர் எனப் பெயரிடுவீர் என்றார்.

ஆனால் செக்கரியாவால் அதை நம்ப முடியவில்லை.

அவர் வானதூதரிடம், "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்றார். 


அதற்கு வானதூதர் அவரிடம், "நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். 


இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது" என்றார். 

அதுமுதல் அவரால் பேச இயலவில்லை.

எலிசபெத் வானதூதர் கூறியபடி கருத்தரித்தார்.

உரிய காலம் வந்தபோது எலிசபெத் குழந்தை பெற்றார்.

குழந்தைக்கு பெயரிடும் நாள் 
வந்தபோது உறவினர்கள் குழந்தைக்கு அதன் தந்தையின் பெயரையை சூட்ட விரும்பினார்கள்.

எலிசபெத் அருளப்பர் என்று பெயரிட விரும்பினார்.

பேச முடியாத‌ செக்கரியா ஒரு கரும்பலகையில் அருளப்பர் என்று எழுதிக் காட்டினார்.

அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

செக்கரியா நல்லவரதான்.   ஆனால் அவருடைய விசுவாசம் கடவுள் எதிர்பார்த்த அளவு இல்லை.

அன்னை மரியாள், சூசையப்பர் ஆகியோருடைய விசுவாசத்தின் அளவுக்கு அவரது விசுவாசம் இல்லை.

அவருக்குப் பாடம் கற்பிப்பதற்காக குழந்தைக்குப் பெயர் சூட்டும் நாள் வரை அவரது நாவைக் கடவுள் கட்டிப் போட்டார்.

செக்கரியா திருமுழுக்கு அருளப்பரின் தந்தை, ஆலயத்தில் பணிபுரிந்த குரு.

அவரே கபிரியேல் தூதர் அருளப்பரின் பிறப்பு பற்றி அறிவித்தபோது விசுவசிக்கத் தயக்கம் காட்டியதால் 

அவரது நாவைக் கடவுள் பத்து மாதங்கள் கட்டிப் போட்டார்.

‌ஆண்டவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் விசுவாசத்தோடு நமது விசுவாசத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மிடம் விசுவாசமே இல்லை.

இறைவனிடம் கேட்டால் கொடுப்பார் என்ற விசுவாசத்தோடு தான் கேட்கிறோம்.

ஆனால் நமது விசுவாசத்தின் அளவு? 

 அதற்கு ஆண்டவர் கூறியது; "கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, "நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்" எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்."
(லூக்கா நற்செய்தி 17:6)

உண்மையில் நம்மிடம் கடுகளவு விசுவாசம் கூட இல்லை.

நாம் கேட்பது உடனடியாகக் கிடைக்காவிட்டால் நமது விசுவாசத்தை நாம் அதிகரிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.

"ஆண்டவரே, என் விசுவாசத்தை அதிகப்படுத்தும்" என்பதுதான் நமது முதல் விண்ணப்பமாக இருக்க வேண்டும்.

அது நிறைவேறி விட்டால் வேறு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மாட்டோம்.

"படைத்தவருக்குப் பாதுகாக்கத் தெரியும்" என்ற விசுவாசத்தில் அவரது அன்பில் வளர்வதற்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்போம்.

அன்பில் வளர்வோம்.

நமது வாழ்வின் நோக்கமே அது ஒன்றுதான்.

"ஆண்டவரே, என் விசுவாசத்தை அதிகப்படுத்தும்."

லூர்து செல்வம்.

Friday, December 20, 2024

நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். (அரு.10:11)

 நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். 
(அரு.10:11)

மனிதர்களை அவர்களின் குணத்தின் அடிப்படையில் உருவகப்படுத்துவது வழக்கம்.

வீரத்தில் சிறந்தவனைச் சிங்கம்‌ என்றும்,

சாதுவான பெண்ணைப் பசு என்றும்‌ அழைப்பது வழக்கம்.

இயேசு கடவுள்.

அவர் தன்னை ஒரு ஆயனாக உருவகப்படுத்துகிறார்.

"நல்ல ஆயன் நானே." என்கிறார் 

பழைய ஏற்பாட்டில் கூட கடவுளை ஆயராக உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

பைபிளில் ஏறத்தாழ 200 இடங்களில் கடவுளை ஆயன் என்று வர்ணித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

நல்ல ஆயன் தனது ஆடுகளை நன்கு கவனித்து, அவற்றுக்கு உணவூட்டுவது போல கடவுளும் தன் மக்களாகிய நம்மைக் கவனித்து வருவதால் அவருக்கு இந்த உருவகம்.

''ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார். " 
(எசாயா 40:11)

''ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! 
(மீக்கா 7:14)

" நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். 


கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். 

 கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. 

நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். 

அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். 

 இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். 

 தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். 
(அரு.10:11-17)

"என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால், ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசுவை இறந்தோரிடமிருந்து எழுப்பியவர் அமைதியை அருளும் கடவுளே."
(எபிரேயர் 13:20)

"நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப்போல இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்."
(1 பேதுரு 2:25)

"தலைமை ஆயர் வெளிப்படும்போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்."
(1 பேதுரு 5:4)


"ஆண்டவரே என் ஆயர்;  எனக்கேதும் குறையில்லை." 
(திருப்பாடல்கள் 23)



திருப்பாடல்களைப் பாடிய தாவீது அரசர் பையனாக இருந்தபோது ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது அவர் பெற்ற அனுபவம் தான் கோலியாத்தைக் கொல்ல உதவியது.

ஆடுகளைச் சாப்பிட வந்த சிங்கத்தை வீழ்த்திய கல்தான் கோலியாத்தை வீழ்த்தியது.

அவர் ஆயனாக இருந்த போது பெற்ற அனுபவம் தான் தன்னை ஆடாகவும் இறைவனை ஆயனாகவும் உருவகப் படுத்தத் தூண்டியது.


"ஆண்டவரே என் ஆயர்;  எனக்கேதும் குறையில்லை. 

 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;

 அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்."

ஆயர்கள் ஆடுகளை இரவில் பசும்புல் வெளிகளில் தான்  இளைப்பாறச் செய்வார்கள்.

இளைப்பாறும் போதே புல்லையும் மேய்ந்து கொள்ளும்.

ஓடிக்கொண்டிருக்கும் ஆற்று நீரைக் குடிப்பதை விட அமைதியான ஊற்று நீரைப் பருகுவது ஆடுகளுக்கு எளிது.

நம்மாலும் மன அமைதியில் தான் ஆண்டவரைத் தியானிப்பது எளிது.

ஆடுகளின் மேய்ச்சல் அனுபவம் ஆன்மீகத்துக்கும் பொருந்தும்.

இயேசு குழந்தையாகப் பிறந்த செய்தி முதலில் சாமக்காவல் காத்துக் கொண்டிருந்த இடையர்களுக்கு (ஆயர்களுக்கு) தான் அறிவிக்கப்பட்டது.

 மரியாளுக்கும், சூசையப்பருக்கும் அடுத்தபடி குழந்தை இயேசுவை முதலில் பார்க்க பாக்கியம் பெற்றவர்கள் அவர்கள் தான்.

ஆயர்களின் பணி எவ்வளவு மகத்தானது என்று இயேசுவுக்குத் தெரியும்.

ஆகவே தான் அவர் தன்னை நல்ல ஆயனாகவும் நம்மை ஆடுகளாகவும் உருவகப் படுத்துகிறார்.

ஆடுகளுக்காக வாழ்பவன் ஆயன். நல்ல ஆயன் ஆடுகளைப் பாதுகாப்பதற்காகத் தன் உயிரையே தியாகம் செய்யத் தயாராக இருப்பான்.


"நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்."  இவை இயேசுவின் வார்த்தைகள்.

ஆடுகளாகிய நம்மை மீட்பதற்காக சிலுவையில் தன்னையே பலியாக்கியவர் இயேசு.

காணாமல் போன பாவிகளாகிய நம்மைத் தேடி விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தவர் இயேசு.

நம்மை மையமாக வைத்தே அவர் சிந்திப்பதால் தன்னை ஆட்டுக்குட்டியாகவும் உருவகப்டடுத்துகிறார்.

மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக பலியிடப்படும் ஆட்டுக் குட்டி.


 "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்."
(அரு. 1:29)
இவை திருமுழுக்கு அருளப்பரின் வார்த்தைகள்.


நமது ஆன்மீக மீட்பைப் பொறுத்த மட்டில் ஆயனும் அவரே, ஆட்டுக் குட்டியும் அவரே.

நமக்கு எல்லாம் அவரே.

நம்மைப் படைத்த கடவுள் அவரே.
நமக்காக நாமாக ஆனவர் அவரே. (மனிதனாகப்‌ பிறந்தவர்)

ஆயனும் அவரே, 
ஆட்டுக்குட்டியும் அவரே.

உணவு தருபவர் அவரே,
உணவும் அவரே.

நாம் நிலை வாழ்வு பெற தனது வாழ்வையே பலி கொடுத்தவர் அவர்.

நல்ல ஆயனுக்கேற்ற
நல்ல ஆடுகளாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, December 19, 2024

மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். (லூக்கா நற்செய்தி 1:41)

மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். 
(லூக்கா நற்செய்தி 1:41)

எலிசபெத் கருத்தரித்திருந்தது கபிரியேல் தூதர் சொல்லித்தான் மரியாளுக்குத் தெரியும்.

மரியாள் கருத்தரித்திருந்தது வேறு யாருக்கும் தெரியாது.

மரியாளின் அம்மாவும், எலிசபெத்தும் சகோதரிகள்.

எலிசபெத்‌ கருத்தரித்திருப்பதை இறைத்தூதர் வழியாகக் கேள்விப் பட்ட மரியாள் தன் சித்தியைப் பார்ப்பதற்காக அவள் ஊருக்குச் செல்கிறாள்.

சென்று செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்துகிறார். 

மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.

 எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். 

தூய ஆவியின் உள்தூண்டுதலால் மரியாள் இறைமகனை மனுமகனாகக் கருத்தரித்திருப்பதை உணர்கிறாள்.


உணர்ச்சி வசப்பட்டு அவர் உரத்த குரலில், 

"பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! "

என்று வாழ்த்துகிறார்.

நால்வருள் யார் யார் முதலில் சந்தித்துக் கொள்கிறார்கள்?

மரியாள் எலிசபெத்தை வாழ்த்திய போது அவளுக்கு மரியாள் உண்டாகியிருப்பது தெரியாது.

முதலில் சந்தித்துக் கொண்டவர்கள் இயேசுவும் அருளப்பரும் தான்.

இயேசு அருளப்பரைச் சந்தித்தவுடன் அவர் இருந்த எலிசபெத்தை தூய ஆவியானவர் நிறப்ப,

இரண்டு நிகழ்வுகள் நடக்கின்றன.

1.தூய ஆவியானவர் அருளப்பருக்கு சென்மப் பாவத்திலிருந்து விடுதலை கொடுக்கிறார்.

அந்த மகிழ்ச்சியில் அவர் துள்ளுகிறார்.

2. தூய ஆவியானவர் இறைமகன் மனுவுரு எடுத்த செய்தியை எலிசபெத்துக்குத் தெரிவிக்கிறார்.

அந்த மகிழ்ச்சியில் அவர்,

"பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே." என்று வாழ்த்தியதோடு,

"என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"‌ என்கிறார்.


இயேசுவின் முன்னோடியின் தாயாக இருக்க இறைவன் எலிசபெத்தைத் தேர்வு செய்திருக்கிறார்.

அதுவே பெருமைக்குரிய விடயம்.

ஆனால் அவர் தாழ்ச்சியுடன்,

"என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"

என்கிறார்.

இவ்வளவுக்கும் எலிசபெத் வயதானவர். மரியாள் 14 வயது பெண்.

ஆனாலும் தாழ்ச்சியில் மரியாள் எலிசபெத்துக்கும் முந்தி விட்டாள்.

தான் கடவுளின் தாய் என்று தெரிந்திருந்தும் ஒரு சாதாரணப் பெண்ணுக்கு மூன்று மாதங்கள் பணிவிடை செய்தாள்.

இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள்.

இருவரிடமிருந்தும் நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?

1.தாழ்ச்சி.

இறைமகனையே தன் மகனாக வயிற்றில் சுமந்து கொண்டிருந்த மரியாள் தன்னை ஆண்டவரின் அடிமை என்று ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அடிமை போல் உதவிகரமாக இருக்க மலை நாட்டுக்கு ஏறி வந்திருக்கிறாள்.

வயது முதிர்ந்த எலிசபெத் 14 வயது பெண்ணை மரியாதை குறையாமல் வரவேற்கிறார்.

புண்ணியங்களின் அரசியாகிய தாழ்ச்சியை இருவரிடமிருந்தும் கற்றுக் கொள்வோம்.

2. அன்னை மரியாளிடமிருந்த பிறரன்புப் பணி ஆர்வம். 

 எலிசபெத் வாழ்ந்த மலை நாடு நாசரேத்திலிருந்து ஏறத்தாழ 80 மைல் தொலைவில் உள்ளது.

இப்போதுள்ள போக்குவரத்து வசதிகள் அப்போது இல்லை.

குழந்தை உண்டானவர்கள் அதிக தூரம் பயணிக்கக் கூடாது என்று சொல்வார்கள்.

மரியாள் வயிற்றில் குழந்தையோடு 80 மைல்கள் தனியாக நடந்து சென்று எலிசபெத்துக்குச் சேவை செய்தாள் என்றால் 

அவளிடம் எவ்வளவு பிறரன்புப் பணி ஆர்வம் இருந்திருக்க வேண்டும்!

அதில் பாதி ஆர்வமாவது நம்மிடம் இருக்க வேண்டாமா?

3. இவ்வளவு ஆர்வத்தை அவளுக்குக் கொடுத்தது யார்?

அவள் வயிற்றில் இருந்த குழந்தை இயேசு.

அதே இயேசுவை நாமும் நமது உள்ளத்தில் ஏற்று, நிரந்தரமாகக் குடியமர்த்தினால் நமக்கும் அந்த ஆர்வம் தானாக வந்து விடும்.

அடிக்கடி திருப்பலியில் பங்கேற்று நற்கருணை ஆண்டவரை வரவேற்பவர்களுக்கு உறுதியாக பிறர் அன்புப் பணியில் ஆர்வம் இருக்கும்.

ஏனெனில் அன்புப் பணி இயேசுவுக்கு உயிர்.

தன் உயிரைப் சிலுவையில் பலியாக்கி நமக்குப் பணியாற்றியவர்.

இயேசுவின் வாழ்வை நமதாக்கிக் கொண்டாலே நாம் பிறரன்புப் பணியாளர்களாக மாறிவிடுவோம்.

திருமுழுக்குப் பெற்றவுடனே நாம் தூய ஆவியின் ஆலயமாக மாறி விடுகிறோம்.

தூய ஆவி தனியாக குடியிருக்க மாட்டார்.  தந்தையும் மகனும் சேர்த்துதான் இருப்பார்கள்.‌ ஏனெனில் அவர்கள் மூவரும் ஒரே கடவுள்.

திருமுழுக்கு பெற்றபோது நாம் அடைந்த பரிசுத்தத்தனத்தை நாம் இழக்காமல் இருந்தாலே நமக்குக் கடவுளோடு உறவு இருக்கும்.

கடவுளோடு உறவு இருந்தாலே நம்மிடம் பிறரன்புப் பணி ஆர்வம் இருக்கும்.

அதற்குப் பாவத்தை விலக்கி, புண்ணிய வாழ்வில் வளர வேண்டும்.

அன்னை மரியாளையும், எலிசபெத்தையும் போல இறையன்பிலும், பிறரன்பிலும் வளர்வோம்


பிறருக்குப் பணி புரிவதன் மூலம் இறைவனுக்குப் பணி புரிவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, December 18, 2024

ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். (லூக்கா நற்செய்தி 1:37)

ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். 
(லூக்கா நற்செய்தி 1:37)

விஞ்ஞானப்படி ஆணின் உதவியின்றி பெண்ணால் கருத்தரிக்க முடியாது.

இந்த நியதியை ஏற்படுத்தியவர் கடவுள் தான்.

அவர் ஏற்படுத்திய எதையும் மாற்றும் உரிமை அவருக்கு உண்டு.

அவரால் மாறத்தான் முடியாது,
மாற்ற முடியும்.

இறந்தவனை உயிரோடு எழுப்ப விஞ்ஞானியால் முடியாது, ஆனால் கடவுளால் முடியும்.

தான் கடவுள் என்பதை நிரூபிக்க இயேசு இறந்தவருக்கு உயிர் கொடுக்கும் புதுமையைச் செய்தார்.

இலாசருக்குச் சுகமில்லை என்பது தெரிந்தும் அவனைக் குணமாக்க உடனே போகாமல் பிந்தி சென்றார்.

அவனைச் சாக விட்டு விட்டு மெதுவாகச் சென்று அவனை உயிரோடு எழுப்பினார்.


"அப்போது இயேசு அவர்களிடம், "இலாசர் இறந்து விட்டான்" என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு, 


"நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்" என்றார். 


மரியாவிடம் வந்திருந்த யூதர் இயேசு செய்வதைக் கண்டு அவரை நம்பினர்."
(யோவான் நற்செய்தி 11:14,15,45)

இயேசு மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுக்கவிருந்த நற்செய்தியை வானதூதர் மரியாளிடம் அறிவித்தபோது


அவள் வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார். 
(லூக்கா நற்செய்தி 1:34)

தூதர் மறுமொழியாக, "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். 
(லூக்கா நற்செய்தி 1:37)

இது விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த நற்செய்தி.

மரியாள் அதை நம்பி,

"இதோ ஆண்டவரின் அடிமை.
உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்."

என்று தன்னையே இறைப்பணிக்கு அர்ப்பணித்தாள்.

 "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை"

"கடவுளால் எல்லாம் இயலும்."

இறைத்தூதரின் இந்த செய்தியை நாம் ஒரு வல்லமை உள்ள செபமாகப் பயன்படுத்தலாம்.

நம்மால் முடியாதவற்றைச் செய்ய உதவுவதற்காகத்தான் நாம் இறைவனிடம் விண்ணப்பிக்கிக்றோம்.

நமது செபத்தோடு இறைத்தூதரின் வார்த்தைகளையும் சேர்த்துச் சொன்னால் நமது நம்பிக்கையும் அதிகமாவதை உணரலாம்.

நமது விண்ணப்பத்தைக் கூறிவிட்டு,

"இறைவா, உம்மால் எல்லாம் இயலும். ஒன்றும் இல்லாமையிலிருந்து என்னைப் படைத்தவர் நீர். உம்மால் இயலாதது எதுவுமில்லை.
உமது வல்லமையைப் பயன்படுத்தி எனக்கு இந்த உதவியைச் செய்தருளும்." என்ற வார்த்தைகளோடு நமது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தால் இயேசு அவரது வழக்கமான வார்த்தைகளோடு நாம் கேட்டதைத் தருவார்.

"உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."

என்று சொன்ன அதே ஆண்டவர்,

"உனது நம்பிக்கை நீ கேட்டதைத் தந்து விட்டது."

என்று சொல்வார்.

குளம் நிறைய‌ தண்ணீர். மடையைத் திறந்தால்தான் வயலுக்குத் தண்ணீர் வரும்.

கிணற்றில் தண்ணீர். வாளியைப் போட்டு இறைத்தால்தான் குடம் நிறையும்.

இறைவனால் எல்லாம் இயலும். நம்பிக்கையோடு கேட்டால்தான் கிடைக்கும்.

நாம் இருப்பது கடவுளின் கையில்.
அவரால் எல்லாம் இயலும்.
கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் வேண்டாம்.

கீழே பார்க்காமல் அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்.

அவருடன் விண்ணக வாழ்வில் இருப்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, December 17, 2024

ஐயோ! திருடன்!



ஐயோ! திருடன்!

யார் திருட்டுக்குப் பயப்படுவார்கள்?

யாரிடம் திருடப்படக்கூடிய பொருள் இருக்கிறதோ அவர்கள்தான் திருட்டுக்குப் பயப்படுவார்கள்.


கட்டிய வேட்டியோடு மட்டும் பயணிப்பவன் பயப்படாமல் பயணிக்கலாம்.

எங்கு வேண்டுமானாலும் நிம்மதியாக தூங்கி எழலாம்.

கையில் பெருந்தொகை  உள்ள பையுடனும், கழுத்தில் தங்க நகைகளுடனும் பயணிப்பவன்  இரயிலில்
முன்பதிவு செய்யப்பட்ட முதல் வகுப்புப் பெட்டியில் கூட நிம்மதியாகத் தூங்க முடியாது.

சட்டைப் பையில் பணம் இருக்கும் பையில் கையை வைத்துக் கொண்டே தூங்க முயல்வார்கள்.
எப்படித் தூக்கம் வரும்?

அது மட்டுமல்ல. அது பணம் இருக்கும் இடத்தைத் திருடனுக்குக் காட்டுவது போலவும் இருக்கும்.

 மன அமைதியைத் திருட்டுக் கொடுத்து விட்டு வாழ்க்கைப் பயணத்தைப் பயணிப்போர் அநேகர்.

அதற்குச் சிலர் காட்டும் காரணங்கள்.

வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்றே தெரியவில்லை.

கடன் வாங்கக் காரணங்கள்:

ஆடம்பர வசதிகளோடு வீடு கட்ட.
பிள்ளைகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த.
கிறிஸ்துமசுக்கு புதுத்துணி வாங்க. 
வருமானத்தை மீறிய செலவுகளை எப்படிச் சமாளிக்க முடியும்?

உலகைச் சார்ந்த ஆசைகள் அதிகம் வரும்போது மன அமைதியின்மையும் கூடவே வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக செலவழிக்க ஆசை வந்தால் கடனும் சேர்ந்து வரும்,

கடன் உள்ளே வர, அமைதி வெளியேறி விடும்.

சமாதானத்தின் தேவன் மனுவுரு எடுத்த அன்று 

"பூவுலகில் நல்மனதோர்க்கு சமாதானம்" என்று விண்ணக தூதர்கள் பாடினார்கள்.

சமாதானம் இருக்கும் மனதில் உறுதியாக மன அமைதி இருக்கும்.

எங்கே அன்பு இருக்கிறதோ அங்கு சமாதானம் இருக்கும்.

எங்கே அன்பு இல்லையோ அங்கு அன்புக்கு எதிரான சக்திகள் குடியிருக்கும்.

அன்புக்கு எதிரான சக்திகள் குடியிருக்கும் இடத்தில் சமாதானம் இருக்காது.

சமாதானம் இருக்காத இடத்தில் மன அமைதி இருக்க முடியாது.

அதாவது அன்புக்கு எதிரான சக்திகள் குடியிருக்கும் இடத்தில் அமைதி இருக்க முடியாது.

அப்படியானால்,

மனதில் அமைதி இல்லையா?

அங்கு அன்புக்கு எதிரான சக்திகள் குடியிருக்கின்றன என்று அர்த்தம்.

அன்புக்கு எதிரான சக்திகள் எவை?

வெறுப்பு, கோபம், காய்மாகாரம், பொறாமை, வன்மம், பழிக்குப் பழி வாங்கும் எண்ணம், நல்லதை விட்டு விட்டு குறையை மட்டும் பார்க்கும் குணம்  et.c, et.c, et.c, et.c, சொல்லிக்கொண்டே போகலாம், பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இந்தக் குணங்களும், அன்பும் சேர்ந்து குடியிருக்க முடியாது.

ஒருவனை அன்பு செய்து, இன்னொருவனை வெறுக்க முடியாதோ?

இது சாப்பாட்டையும், சாணத்தையும் ஒரே தட்டில் வைக்க முடியாதோ என்று கேட்பது மாதிரி இருக்கு.

நாற்றம் பிடித்தவன்தான் அப்படி வைத்திருப்பான்.

உண்மையான அன்பு உள்ளவனிடம் அதன் எதிர்க்குணம் ஒன்றும் இருக்காது.

அவன் நல்லவர்,  கெட்டவர் என்று பார்க்காமல் எல்லோரையும் அன்பு செய்வான்.

அவனை வெறுப்பவனையும் அன்பு செய்வான்.

அவனுடைய அன்பு கடவுளின் அன்பைப் போன்றது.

அவர் அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்பு செய்கிறார்.

சாத்தானையும், அவனுடைய தோழர்களையும், கடவுள் வேண்டாம் எனக் கூறி அவனோடு வாழும் மனிதர்களையும் கூட அன்பு செய்கிறார்.

ஆனால் அவர்களால் அவரது அன்பை உணர முடியாது.

நாம் திருடப்படமுடியாத மன அமைதியை அனுபவிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

1. நம்மை முழுவதையும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு, அவரைப் போல நாமும் அனைவரையும் அன்பு செய்ய வேண்டும்.

2.நாம் கடவுளுக்குள் வாழ வேண்டும்.

3. ஒவ்வொரு வினாடியும் அவர்தான் வழிநடத்துகிறார் என்பதை உறுதியாக விசுவிசிக்க வேண்டும். அப்படி விசுவசித்தால் நமக்கு என்ன நேர்ந்தாலும், மரணமே நேர்ந்தாலும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.

4. கடவுள் எங்கும் இருக்கிறார். நமக்கு உள்ளும் இருக்கிறார், புறமும் இருக்கிறார். ஆகவே எப்போதும் அவருடைய பிரசன்னத்தில் வாழ வேண்டும்.
தாயின் மடியில் இருக்கும் பிள்ளை எதற்கும் அஞ்சுமா? நமக்குத் தந்தையும் கடவுள்தான், தாயும் கடவுள்தான். அவரது மடியில் வாழ்வோம்.

5.புனித பிரான்சிஸ் அசிசியைப் போல் இயற்கையையும் நமது உடன் பிறப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காற்றும், மழையும் , வெயிலும் இன்னும் மற்ற இயற்கைச் சக்திகளும் நம்முடைய சகோதரர்களே.

இந்த நம்பிக்கை இருந்தால் வெயிலுக்கும் பயப்பட மாட்டோம், புயலுக்கும் பயப்பட மாட்டோம், மழை வெள்ளத்துக்கும் பயப்பட மாட்டோம்.

மழை வெள்ளத்தில் மாட்டிக் கொண்டாலும் பயப்பட மாட்டோம்.

அதிக பட்சம் அது நம்மைக் கடவுளிடம் சேர்க்கும்.

பாவம் இல்லாமலிருந்தால் வெள்ளத்தால் ஏற்படும் மரணத்திற்கு ஏன் அஞ்ச வேண்டும்?

எப்போதும் கடவுளின் பிள்ளைகளாக வாழ்வோம்.

எந்த திருடனாலும் நமது மன அமைதியைத் திருட முடியாது.

லூர்து செல்வம்.

Monday, December 16, 2024

யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். (மத்தேயு நற்செய்தி 1:24)

 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 
(மத்தேயு நற்செய்தி 1:24)

மரியாள் மூன்று வயதிலிருந்தே ஆலயத்தில் வளர்ந்த பெண்.

சிறுவயதிலேயே,
 "நான் வாழ்நாள் முழுவதும் கன்னியாக இருப்பேன்" 
என்று கடவுளுக்கு வாக்குக் கொடுத்து விட்டாள்.

இது ஆலயத்தில் அவளை வளர்த்த குருவுக்குத் தெரியும்.

ஆகவே அவளுக்குத் திருமண வயது வந்த போது அவளுடைய கன்னிமைக்கு பாதுகாப்பாய் இருக்கக்கூடிய ஒருவரை அவளுடைய கணவராகத் தேர்வு செய்யத் தீர்மானித்தார்.

தூய ஆவியின் உதவியோடு சூசையப்பர் தேர்வு செய்யப் பட்டார்.

அவளுடைய கன்னிமைக்கு பாதுகாப்பாய்   இருப்பது என்ற நிபந்தனையின் அடிப்படையில் தான் திருமண ஒப்பந்தம் நடந்தது.

அவர் வேலை விடயமாக வெளியூர் சென்றிருந்த போது கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தோன்றி அவள் கடவுளின் தாயாகப் போகும் விடயத்தைப் சொன்னார்.

அவளது கன்னிமைக்குப் பழுது ஏற்படாது என்றும்,

தூய ஆவியின் வல்லமையால் அது நிகழும் என்றும் அறிவித்தார்.

மரியாள் அதற்குச் சம்மதித்தாள்.

சம்மதித்த வினாடியே தூய ஆவியின் வல்லமையால் இயேசு அவள் வயிற்றில் உற்பவித்தார்.

இந்த விடயம் சூசையப்பருக்குத் தெரியாது.

மரியாள் கருவுற்றிருந்தது தெரிந்தபோது மரியாளுக்கு இகழ்ச்சி ஏற்படுவதை விரும்பாத சூசையப்பர் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக விலக்கி வைப்பது பற்றி எண்ணிக் கொண்டிருந்த போது தூங்கி விட்டார்.

கனவில் கபிரியேல் தூதர் அவருக்குத் தோன்றி,

"யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 

அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"; என்றார். 
(மத்தேயு நற்செய்தி 1:21,22)

சூசையப்பரும் எந்தக் கேள்வியும் கேட்காமல் மரியாளை ஏற்றுக் கொண்டார்.

முதலில்  வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்று கேட்ட மரியாள்,
(லூக்கா நற்செய்தி 1:34)

"ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" 
என்ற கபிரியேல் தூதரின் வார்த்தைகளை மறு கேள்வி கேட்காமல் விசுவசித்தாள்.

ஏனெனில் அவை கடவுளிடமிருந்து வந்த வார்த்தைகள்.

அதேபோல் சூசையப்பர் கனவில் தோன்றி பேசிய கபிரியேல் தூதரின் வார்த்தைகளை மறு கேள்வி கேட்காமல் விசுவசித்தார்.

மரியாளுக்கு தூதர் நேரில் தோன்றினார்.

சூசையப்பருக்குக் கனவில்தான் தோன்றினார். ஆனாலும் அவர்  தூதருடைய வார்த்தைகளை விசுவசித்தார்.

இன்னொரு உண்மையையும் குறிப்பிட வேண்டும்.

சக்கரியாவுக்கும் தூதர் தோன்றினார்.

ஆனால் அவரைப் பொறுத்த மட்டில் அவர் விசுவசிக்கு முன் தூதர்,

 "நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். 
(லூக்கா நற்செய்தி 1:19)
என்று சொல்ல வேண்டியிருந்தது.

ஆனால் மரியாளும், சூசையப்பரும் அவர் சொல்லாமலே அவரை இறைத் தூதராக ஏற்றுக் கொண்டார்கள்.

இதற்கு ஏற்கனவே கடவுளோடு அவர்களுக்கு இருந்த நெருக்கம் தான் காரணம்.

இந்நிகழ்விலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?

மரியாள் விசுவசித்ததினால்தான் இயேசு அவள் வயிற்றில் உற்பவித்தார்.

அதே இயேசு நாம் விசுவசித்தால்தான் நமது உள்ளத்தில் குடியிருப்பார்.

விசுவாசம் ஒரு சத்தியத்தை உண்மை என்று ஏற்றுக் கொள்வதில் மட்டும் அடங்கியிருக்கவில்லை, அன்னை மரியாள் தான் விசுவசித்ததை வாழ்ந்தாள்.

நாம் "விசுவசிக்கிறேன்" என்று சொன்னால் மட்டும் போதாது, விசுவசித்ததை வாழ வேண்டும்.

எடுத்துக்காட்டாக:

"பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சரவேசுரனை விசுவசிக்கிறேன்."

"என்னைப் பெற்று, பாலூட்டி, சீராட்டி வளர்ப்பவள் தாய்" என்று ஏற்றுக் கொள்ளும் பிள்ளை அம்மா பக்கத்தில் இருக்கும் போது எதற்கும் பயப்படுமா?

"என்னைப் படைத்துப் பராமரிக்கும் தந்தை சர்வ வல்லவர், அவரால் முடியாதது எதுவும் இல்லை." என்பதை ஏற்றுக் கொண்டு விட்டு நான் எதற்கும் பயப்படலாமா?

மரணப் படுக்கையில் இருந்தாலும் பயப்படலாமா?

சர்வ வல்லவர் கையில் இருக்கிறேன், 

இருந்தாலும் அவர் கையில், இறந்தாலும் அவர் கையில்.

 உண்மையான விசுவாசி எதற்கும் பயப்பட மாட்டான்.

வாழ்வையும் ஏற்றுக் கொள்வான், சாவையும் ஏற்றுக் கொள்வான்,
முழுமையான மகிழ்ச்சியுடன்.

மரியாள் வியாகுலங்களுக்கு மத்தியிலும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

தன் மகன் பாடுகள்பட்டு சிலுவையில் தொங்கியபோதும் நமது மீட்பை நினைத்து ஆன்மீக ரீதியாக மகிழ்ச்சியாக இருந்தாள்.

சிலுவையில் அறையப்பட்டு தொங்கியவர் எல்லாம் வல்ல கடவுள் என்று அவளுக்குத் தெரியும்.

மரித்த மூன்றாம் நாள் உயிர்ப்பார் என்பதும் அவளுக்குத் தெரியும்.

"விண்ணகத் தந்தையே என் தந்தை" என்று ஏற்றுக் கொண்ட அசிசி நகர் பிரான்சிஸ் இயேசுவைப் போல் ஏழ்மையில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

இயேசு தன் ஐந்து காயங்களையும் அவருக்கு பரிசாக அளித்தார்.

 ஆண்டவர் நமக்குப் பணித்தவாறே அவரை விசுவசிப்போம், நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும்.

லூர்து செல்வம்.

Sunday, December 15, 2024

"யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு." (மத்தேயு நற்செய்தி 1:16)

"யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு." 
(மத்தேயு நற்செய்தி 1:16)

இயேசுவின் தலைமுறைப் பட்டியலில் கீழிருந்து மேல் நோக்கிப் பயணித்தால் அது ஆதாமில் போய் முடியும்.

லூக்கா நற்செய்திப்படி சூசையப்பரில் தொடங்கி ஆதாமைப் படைத்த கடவுளோடு முடிகிறது.

"ஏனோசு சேத்தின் மகன்; சேத்து ஆதாமின் மகன்; ஆதாம் கடவுளின் மகன்."
(லூக்கா நற்செய்தி 3:38)

மத்தேயு தலைமுறைப் பட்டியலை ஆபிரகாமிலிருந்து ஆரம்பிக்கிறார்.

இயேசுவை அபிரகாமின் மகன் என்கிறார்.

இருவரிடமும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.

தலைமுறைப் பட்டியல் சூசையப்பரோடு நின்று விடுகிறது.

ஏனேனில் இயேசு சூசையப்பரின் மகன் அல்ல.

ஆகவே பழைய ஏற்பாடு சூசையப்பரோடு முடிகிறது.

புதிய ஏற்பாடு சூசையப்பரின் மனைவியாகிய மரியாளிடமிருந்து ஆரம்பிக்கிறது.

பழைய ஏற்பாட்டை ஆரம்பிப்பவர் ஆதாமைப் படைத்த கடவுள்.

லூக்கா "ஆதாம் கடவுளின் மகன்." என்று சொல்கிறார்.

புதிய ஏற்பாட்டை ஆரம்பிப்பவர்  கடவுளின் தாய் மரியாள். 

இப்போது எதற்காக இந்த விளக்கம்?

ஒரு முக்கியமான இறை உண்மையைப் புரிய வைக்க.

நம் பிரிவினை சகோதரர்களுக்கு எவ்வளவு சொல்லியும் அன்னை மரியாளின் முக்கியத்துவத்தை உணர மறுக்கிறார்கள்.

மனுக்குலம் பாவத்தில் விழுந்தது ஆதாம் செய்த பாவத்தினால்.

மனுக்குலம் பாவத்திலிருந்து
எழுந்தது (மீட்பு பெற்றது) மரியாளின்  மகன் இயேசுவால். 

மீட்பின் வரலாறு மரியாளிடமிருந்து தான் ஆரம்பிக்கிறது.


"ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். 

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 1:26,28)

பழைய ஏற்பாட்டை முடித்து வைத்தவர் சூசையப்பர்.

புதிய ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவர் மரியாள்.

மரியாளுக்கு இந்த பெருமையைக் கொடுத்தவர் கடவுள்தான்.

கடவுளே தன் தாயாகப் பெருமைப் படுத்திய மரியாளுக்கு,
 நமது பிரிவினை சகோதரர்கள் ஒரு சாதாரணப் பெண்ணுக்குரிய மரியாதையைத் தான் கொடுத்திருக்கிறார்கள்.

மரியாள் மீட்பரின் தாய்.

பைபிள் வரலாற்றில் ஒரு வானதூதரால்

"அருள் நிறைந்தவரே வாழ்க" என்று வாழ்த்தப்பட்ட ஒரே பெண்மணி மரியாள் தான்.

அநேகருக்கு வான தூதர்கள் காட்சி அளித்திருக்கிறார்கள், ஆனால் மரியாளைத் தவிர வேறு யாரையும் அவர்கள் வாழ்த்தவே இல்லை. 

வான தூதர் மரியாளை வாழ்த்துவதற்கு உரிய வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தவர் அவரை அனுப்பிய கடவுள்தான்.

ஆகவே மரியாள் அருளால் நிறைந்தவள் என்ற உண்மையை நமக்கு முதன்முதலில் அறிவித்தவர் கடவுள்தான்.

நமது தாயை நாம் தேர்ந்தெடுக்க முடியாது, ஏனெனில் தாயின் வயிற்றில் உற்பவிப்பதற்கு முன் நாம் இல்லை. 

ஆனால் நித்திய காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் பூமியில் மனித உரு எடுக்க அவரே தன் தாயைத் தேர்ந்து கொண்டார்.

அவள் கடவுளின் தாயாக இருந்தாலும் கடவுளுக்குக் கொடுக்கக் கூடிய ஆராதனையை அவளுக்குக் கொடுக்க முடியாது.

நாம் இயேசுவை ஆராதிக்கிறோம்.

மரியாளை வணங்குகிறோம்.

எல்லா புனிதர்களையும் வணங்குகிறோம்.

மரியாள் மற்றவர்களை விட மேலான புனிதையாக இருப்பதால் அவளை மேலான விதமாய் வணங்குகிறோம்.

ஆராதிப்பதில்லை.

இயேசுவுக்கு மட்டுமே ஆராதனை.

கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடுக்கிறோம்.

புனிதர்களுக்கு உரியதைப் புனிதர்களுக்குக் கொடுக்கிறோம்.

பிரிவினை சபையினர் மரியாள் பக்தியை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் மற்றவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

கடவுளின் தாயால் தன் மகனிடம் வேண்ட முடியாதாம்.

இது வேடிக்கையாக இல்லை!!!

ஒரு சிறு அனுபவம்.

ஒரு முறை சில பிரிவினைச் சகோதரர்கள் ஆலயம் கட்ட நன்கொடை வாங்க வந்திருந்தார்கள்.

நான் அவர்களிடம்,

"என்னோடு சேர்ந்து ஒரு செபம் சொல்லுங்கள். செபம் முடிந்தவுடன் நன்கொடை தருகிறேன்" என்றேன்.

சரி என்றார்கள்.

நான் "அருள் நிறைந்த மரியே வாழ்க"  என்று ஆரம்பித்தேன்.

உடனே "நன்கொடை வேண்டாம்" என்று சொல்லிக்கொண்டே எழுந்து போய் விட்டார்கள்.

என்ன பிடிவாதம்!!

"அருள் நிறைந்த மரியே, எங்களுக்காகவும், நம்மை விட்டுப் பிரிந்து சென்றவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்."

பிரிந்து சென்றவர்கள் தாய்த் திருச்சபைக்குத் திரும்ப வந்து சேர வேண்டும்.

இயேசுவை ஏற்றுக் கொள்ளும் அனைவரும் அவரது தாயையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிரிந்து சென்றவர்கள் தாயிடம் திரும்பி வரும்படி அவர்களுக்காக வேண்டிக்கொள்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, December 14, 2024

இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?" என்று கேட்டார்கள். (மத்தேயு நற்செய்தி 21:23)

இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?" என்று கேட்டார்கள். 
(மத்தேயு நற்செய்தி 21:23)

இயேசு எருசலேம் ஆலயத்தில் வியாபாரப் பொருட்களை எல்லாம் கவிழ்த்துப் போட்டு விட்டு, வியாபாரிகளை சாட்டையால் அடித்து விரட்டுகிறார்.

நோயாளிகளைக் குணமாக்குகிறார்.

மக்களுக்கு நற்செய்தியை முழு அதிகாரத்தோடு போதிக்கிறார்.

இது தலைமைக் குருக்களுக்கும், மக்களின் மூப்பர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

அவர்கள் அவரைப் பார்த்து,

"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?"

என்று கேட்கிறார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, 

"அருளப்பருக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?" என்று  கேட்கிறார்.  . 

 அவர்கள், "எங்களுக்குத் தெரியாது" என்று பதிலுரைக்கிறார்கள். 

அவரும் அவர்களிடம் "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்கிறார். 
(மத்தேயு நற்செய்தி 21:27)

அவர்கள் ஏன் தெரியாது என்றார்கள், இயேசு ஏன் நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்றார்?

அவர்களுக்கு அருளப்பர் மேல் நம்பிக்கை இல்லை.

 "விண்ணகத்திலிருந்து வந்தது" என்று சொன்னால், 

"பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை" எனக் கேட்பார். 

 "மனிதரிடமிருந்து" என்று சொன்னால், அது அருளப்பரை நம்பிய மக்களுக்கு எதிரானதாக இருக்கும். 

ஆகவே தெரியாது என்றார்கள்.

ஆகவே இயேசுவும் "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்"
என்றார்.

இரண்டு நண்பர்கள் ஒருவரோடொருவர் பேசும் போது மனம் திறந்து பேச வேண்டும்.

இயேசு நற்செய்தியை அறிவிக்கும்போது மனம் திறந்து அறிவித்தார்.

சாதாரண மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கதைகள் மூலமாக உண்மையைச் சொன்னார்.

சாதாரண மக்கள் அவரோடு மனம் திறந்துதான் பேசினார்கள்.

ஆனால் பரிசேயர்களும், மதகுருக்களும் உள்ளொன்று வைத்துக் கொண்டு புறமொன்று பேசினார்கள்.

 அவரைச் சோதிப்பதற்கென்றே கேள்விகள் கேட்டார்கள்.

அவரிடம் குறை கண்டு பிடிப்பதற்காகவே அவர் பின் சென்று அவர் பேசியதைக் கேட்டார்கள்.

அவர்களுக்குப் பாடம் கற்பிப்பதற்காகத்தான் இயேசு அவர்கள் பாணியிலே பதில் சொன்னார்.

"நீங்கள் சொல்லாவிட்டால் நானும் சொல்ல மாட்டேன்."

ஆனால் கடைசி வரை அவர்கள் திருந்தவில்லை.

மனம் திரும்புவதற்குப் பதில் அவரைக் கொல்ல வழி தேடினர்.

அவர் மீது இல்லாத பழியைப் போட்டு அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.

நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம்.

நமக்கும் நமது அயலானுக்கும்,
நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு,

பரிசுத்த தம திரித்துவத்தின் மூன்று ஆட்களுக்குள் இருக்கும் உறவின் சாயலில் இருக்க வேண்டும்.

தம திரித்துவத்தின் மூன்று ஆட்களும் ஒருவரையொருவர் அளவில்லாத விதமாய் நேசித்தார்கள்.

நமது இறை உறவும், பிறர் உறவும் அன்பினால் பிணைக்கப்பட வேண்டும்.

நாம் கடவுளோடு மனம் திறந்து பேச வேண்டும்.

பேச வேண்டும் என்று சொல்லும் போது வார்த்தைகளைக் குறிப்பிடவில்லை.

இறைவனின் உட் தூண்டுதல்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இறைவனுக்கு எதிரான எண்ணங்களுக்கு நமது மனதில் இடம் கொடாமலிருந்தாலே நமது மனதில் உதிக்கும் அனைத்து எண்ணங்களும் இறைவனுக்கு ஏற்றவையாகவே இருக்கும்.

நாம் செபிக்கும்போது நமது எண்ணங்களுக்கும் கடவுளின் தூண்டுதல்களேக்கும் இடையில் சம்பந்தம் இல்லாத எண்ணங்கள் புகக்கூடாது.

பரிசேயர்கள் இயேசுவோடு பேசும்போது இயேசுவில் குறை காண வேண்டும் என்ற எண்ணம் புகுந்ததால் தான் அவர்களால் இயேசுவோடு உரையாட முடியவில்லை.

"திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்."
(லூக்கா நற்செய்தி 10:25)

திருச்சட்ட அறிஞர் உண்மையை அறிய வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. அவரைச் சோதிக்கும் நோக்குடன் கேட்டான்.

நாம் இயேசுவிடம் ஏதாவது கேட்கும் போது உண்மையான விசுவாசத்தோடு கேட்க வேண்டும்.

விசுவாசத்துக்கு எதிரான எண்ணத்தோடு கேட்டால் நமது விண்ணப்பம் கேட்கப்பட மாட்டாது.

இதை நமக்குப் புரிய வைப்பதற்காகத்தான் நோயாளிகளை அவர் குணமாக்கினாலும் ,

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார்.

முழுமையான விசுவாசத்தோடு இறைவனிடம் செபிப்போம்.

உள்ளத்தில் இறைவன் பேசுவதைக் கூர்ந்து கவனிப்போம்.

திறந்த மனதுடன் இறைவனோடு பேசுவோம்.

இறை அருளைப் பெற எப்போதும் ஆன்மாவைத் திறந்தே வைத்திருப்போம்.

லூர்து செல்வம்.

Friday, December 13, 2024

அதற்கு அவர் மறுமொழியாக, "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்" என்றார். (லூக்கா நற்செய்தி 3:11)

 அதற்கு அவர் மறுமொழியாக, "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 3:11)

திருமுழுக்கு அருளப்பரிடம் "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்ட மக்களுக்கு அவர் அளித்த பதில்,

"இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்."

வசனத்தில் பகிர்ந்து கொடுக்க வேண்டிய உடையும், உணவும் தான் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் அருளப்பபர் வலியுறுத்துவது பகிரும் மனப்பான்மையை.

ஆகவே மக்கள் இந்த இரண்டை மட்டுமல்ல, எதையெல்லாம் பகிர்ந்து கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இதற்கு முன் மாதிரிகை நம்மைப் படைத்த கடவுள்.

நித்திய காலமாய் இருப்பவர் கடவுள்.

இல்லாதிருந்த நமக்கு இருப்பைப் பகிர்ந்து 
(Existence) கொடுத்தார்.

"இருக்கிறவர் நாமே" என்று தன்னையே அடையாளப்படுத்திய அவரால்தான் நாம் இருக்கிறோம்.

நம்மைப் படைக்கும் போதே தனது சாயலை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

தனது எல்லா பண்புகளையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அவற்றுள் பகிர்ந்து கொள்ளும் பண்பும் அடங்கும்.

பகிர்ந்து கொள்ள முடிவதால்தான் நம்மால் வாழ முடிகிறது.

கடவுளைப் பின்பற்றி நமது அன்னைத் தனது சதையையும், இரத்தத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கா விட்டால் நம்மால் பிறந்திருக்கவே முடியாது.

நாம் பிறக்கும் போது நம்மோடு நமக்கு வேண்டிய உணவையும், உடையையும், இருப்பிடத்தையும் நம்மோடு கொண்டுவரவில்லை.

நாம் பிறந்தவுடன்,

"உயிருள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்"  என்று சொல்லி அனைவரும் நம்மைக் கவனிக்காது விட்டிருந்தால் ஒரு நாள் கூட நம்மால் உயிர் வாழ்ந்திருக்க முடியாது.

இயற்கை நம்முடன் தனது பிராணவாயுவை பகிர்ந்திராவிட்டால் சில வினாடிகளில் மரித்துப் போயிருப்போம்.

நாம் உயிர் வாழத் தேவையான காற்று, தண்ணீர், வெப்பம் ஆகியவற்றை நம்மோடு பகிர்ந்து கொள்ளவே கடவுள் மனிதனைப் படைக்கும் முன் இயற்கையைப் படைத்தார்.

நம்மை ஏன் சமூகப் பிராணிகளாகப் படைத்து ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்று கட்டளையும் கொடுத்தார்?

ஒருவரையொருவர் நேசித்தால் தான் நம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்வோம்.

அவர் நமக்குத் தருவதைப் போல நாமும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

பகிரும் மனப்பக்குவம் இருந்தால் தான் மற்றவர்களுக்குக் கொடுப்போம்.

நமக்குத் தந்த இறைவனுக்கு அவர் தந்ததிலிருந்து கொடுக்க வேண்டும்.

கண்ணால் காண முடியாத அவருக்கு எப்படிக் கொடுக்க முடியும்?

அவருடைய பெயரால் மற்றவர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதை அவருக்கே கொடுக்கிறோம்.

இறையன்பு உள்ளவனிடம்தான் பிறரன்பு இருக்கும்.

கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்களும் பிறரை நேசிக்கிறார்களே. அது எப்படி?

கடவுளை அன்பு செய்யாதவர்களின் அன்பு அன்பு அல்ல.

இறையன்பு இல்லாதவன் கடவுளை வேண்டாம் என்று சொல்லி விடுகிறான்.

கடவுள் பகிர்ந்து கொண்ட அன்பை கடவுளுக்காகப் பயன்படுத்தாவிட்டால் அது தன் பெயரையே இழந்து விடுகிறது,

தனக்குத் தந்தை இல்லை என்று சொல்பவனை‌ மகன் என்று கூறுவோமா?

சாப்பாடு பரிமாறப்படுகிறது.

ஒருவன் அதைச் சாப்பிடாமல் குப்பைத் தொட்டியில் போட்டால் அதற்குப் பெயர் குப்பை! Waste!

அன்பே உருவான கடவுள் அவரை நேசிப்பதற்காகத் தனது அன்பை மனிதனோடு பகிர்ந்து கொண்டார்.

அதை அவரை நேசிக்கப் பயன்படுத்தாவிட்டால் அதை எப்படி அன்பு என்று அழைக்க முடியும்.

ஒருவர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்து விட்டு கடையில் வியாபாரம் பார்த்தால் அவரை ஆசிரியர் என்று அழைக்க முடியுமா?

எது எதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறதோ அது அதைச் செய்தால் தான் அது அது.

அன்பு கடவுளை அன்பு செய்தால் மட்டுமே அது அன்பு.

இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அன்பை அவரையும், அவரால் படைக்கப்பட்ட நமது பிறனையும் நேசிக்கப் பயன்படுத்த வேண்டும்.

நம்மிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ளும்போதுதான் பிறரன்பு உயிர் வாழ்கிறது.

செயல் படாத பிறரன்பு?

உயிர் இல்லாத அன்பு.

கடவுள் நம்மோடு எதையெல்லாம் பகிர்ந்து கொண்டாரோ அதையெல்லாம் நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அன்பு, இரக்கம், நீதி, நாம் பயன் படுத்தும் பொருட்கள் ஆகிய அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஒருசந்தி நாட்களில் ஒரு முறை மட்டும் சாப்பிடுகிறோம்.

மதிய உணவை மட்டும் நாம் சாப்பிட்டால் மற்ற இரு வேளை உணவுகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இறைவன் தந்தார், கொடுப்பதற்கே.

கொடுப்பதில் தான் நிறைவு இருக்கிறது.

விண்ணகத் தந்தையைப் போல் நிறைவு உள்ளவர்களாக வாழ வேண்டுமா,

அவர் கொடுப்பதைப் போல் நாமும் கொடுப்போம்.

லூர்து செல்வம்.