Wednesday, December 7, 2022

தாயைப் போல் பிள்ளை.(தொடர்ச்சி)

தாயைப் போல் பிள்ளை.
(தொடர்ச்சி)

தங்கள் வாழ்க்கை முழுவதையும் இறைப் பணிக்காக அர்ப்பணித்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஆனால் தனது வாழ்க்கை முழுவதையும் இறை பணிக்காக அர்ப்பணித்த நமது அன்னையை வியாகுல மாதா (Our Lady of sorrows) என்று அழைக்கிறோமே, அது ஏன்?

அதே அன்னையை நோக்கிதான் 

"எங்கள் மகிழ்ச்சியின் காரணமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்"

என்று மாதா பிரார்த்தனையின் போது செபிக்கிறோம்.

வியாகுலங்கள் நிறைந்த அன்னையை

எங்கள் மகிழ்ச்சியின் காரணம் என்று நாம் சொல்லும் போதே,

நாம் ஒரு முக்கியமான உண்மையை ஏற்றுக் கொள்கிறோம்.

புனித வெள்ளி இல்லாமல் உயிர்ப்பு ஞாயிறு இல்லை.

வெள்ளிக்கிழமை சிலுவையில் உயிர் நீத்த இயேசுதான் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தார்.

பாடுகளுக்குப் பிறகே மகிமை.

இயேசுவுக்குப் பொருந்தும் இந்த உண்மை அவரைப் பெற்ற அன்னை மரியாளுக்கும் பொருந்தும்.

வியாகுலங்களுக்குப் பிறகே மகிழ்ச்சி.

இயேசுவுக்கும், அவரைப் பெற்ற அன்னைக்கும் பொருந்துவது

அவர்களைப் பின்பற்றும் நமக்கும் பொருந்தும்.

நிரந்தரமற்ற இவ்வுலகில் இயேசுவுக்காக நாம் நமது சிலுவையைச் சுமந்தால் தான் 

நமக்கு நித்திய பேரின்ப வாழ்வு கிட்டும்.

நமது உலக வாழ்வின் முடிவாகிய மரணம் தான்

 நித்திய பேரின்ப வாழ்வின் ஆரம்பம்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது:

வியாகுலங்கள் = மகிழ்ச்சி.
பாடுகள் = மகிமை.
முடிவு = ஆரம்பம்.

இயேசு பாடுகளையும் மரணத்தையும் ஏற்றுக் கொண்டது போல,

அன்னை மரியாளும் வாழ்வில் வியாகுலங்களை ஏற்றுக்கொண்டாள்.

இயேசு பாடுகளின் மூலம் மகிமை அடைந்தது போல அன்னை மரியாளும் தனது வியாகுலங்களின் மூலம் நமது மகிழ்ச்சியின் காரணமானாள்.

அவள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நமது மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்க முடியும்.

நாமும் இவ்வுலகில் நமக்கு வரும் துன்பங்களை சிலுவையாக ஏற்று சுமந்தால் தான்,

 மறுவுலகில் நித்திய பேரின்ப வாழ்வு நமதாகும்.

அர்ப்பண வாழ்வு வாழ்பவர்களுக்கு, இவ்வுலகம் சிலுவைகள் நிறைந்ததாகத் தான் இருக்கும்.

ஆனால் அவற்றின் மூலம் தான் நித்திய பேரின்ப வாழ்வு நமக்கு உரியதாகும்.

அன்னை மரியாள் அர்ப்பணம் வாழ்வை அடிமையாக ஆரம்பித்ததால்தான்

இன்று மண்ணக விண்ணக அரசியாக திகழ்கின்றாள்.



நமது ஆண்டவர் நிறைவைப் பற்றி பேசும்போது

"உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்."
என்று சொன்னார்.

இயேசுவின் நற்செய்தியை வாழ்வாக வாழ்ந்தவள் நம் அன்னை.

அன்னையின் மகன்தான் அனைத்து உலகையும், அதில் வாழ்வோர் அனைவரையும் படைத்தவர்.

இறைமகன் அவள் வயிற்றில் மனுவுறு  எடுப்பதற்கு முன்பேயே 

அவரை அன்பு செய்தார்.

அவள் வயிற்றில் அவர் மனுவுறு எடுத்தபின் அந்த அன்பு தொடர்ந்தது.

இயேசு தன் அன்னையை படைக்கும் போது பாவ மாசு மரு இல்லாதவளாகப் படைத்தார்.

அருளால் நிறைந்த அவள் மனம் அன்பால் நிறைந்திருந்ததால்

அவளிடம் அன்புக்கு எதிரான எந்த குணமும் துளி அளவு கூட இல்லை.

ஆகவே அவளிடம் வெறுப்புணர்ச்சி சிறிது கூட இல்லை.

ஆகவே அவள் இறைவனது கட்டளைக்கு இணங்க  அனைவரையும் நேசித்தாள்.

இப்பொழுது ஒரு கேள்வி எழும்.

".உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்."

என்ற இயேசுவின் கட்டளையை எவ்வாறு நிறைவேற்றினாள்?

அவள் மனதில் யார் மீதும் பகை உணர்வு இருந்ததில்லை.

உலக  நியதியின் படி மகனைப் பகைக்கிறவர்கள் தாய்க்கும் பகைவர்கள்தான்.

நம் அன்னை முழுக்க முழுக்க ஆன்மீக நியதிப்படி வாழ்ந்தவள்.

ஆகவே உலக நியதிக்கு அப்பாற்பட்டவள்.

ஆகவே அவள் யாரையும்,

தன் மகனை பகைத்தவர்களையும் கூட, 

பகைவர்களாகக் கருதவில்லை.

எந்த வித்தியாசத்தையும் பாராமல் அனைவரையும் நேசித்த நம் அன்னை

இயேசுவை பகைத்தவர்களையும், அவரது மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களையும்,

தன் மகனை அன்பு செய்தது போலவே,

அன்பு செய்தாள்.

அது எப்படி நமக்கு தெரியும்?

தரை சுத்தமாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டாலே

தரையில் அழுக்கு இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அன்னை மரியாள் அருளால் நிறைந்தவள் என்பதை ஏற்றுக் கொண்டாலே,

அவள் மனதில் அன்பைத் தவிர வேறு எந்த உணர்வுக்கும் இடம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

 தாயைப் போல பிள்ளை என்பது உண்மையானால், பிள்ளையைப் போல தாய் என்பதும் உண்மை.

பிள்ளையைப் போல தாய்.

இயேசுவைப் போல அவரது அன்னை.

இயேசு அனைவரையும் நேசிக்கிறார்.

தன்னைப் பகைப்பவர்களையும் நேசிக்கிறார்.

மரியாள் தன் மகன் யாரையெல்லாம் நேசிக்கிறாரோ அவர்களையெல்லாம் நேசிக்கிறாள்.

தன் மகனைப் பகைப்பவர்களையும் நேசிக்கிறார்.

இறையருளுக்கு எதிராக எதையும் அவள் செய்யவில்லை.

 இறைவனது சித்தத்திற்கு எதிராக எதையும் அவள் செய்யவில்லை.

பகைவர்களையும் நாம் நேசிக்க வேண்டும் என்பது இறைவனது சித்தம்.

இறைவனது சித்தப்படிதான் அன்னை மரியாள் வாழ்ந்தாள்.

நாமும் அப்படியே வாழ்வோம்.

நம்மைப் பகைப்பவர்கள் யார், நேசிப்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்க்காமல்

 அனைவரையும் நாம் நேசித்து விட்டால் நாம் முழுமையாக

 இறைவன் சித்தப்படி வாழ்கிறோம்.

பகைவர்களையும் நேசிக்கிறோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment