Thursday, December 22, 2022

குழந்தாய், என்னை மன்னியும்

குழந்தாய், என்னை மன்னியும்.

"என்ன, அண்ணாச்சி, உங்க மாட்டுத் தொழுவை வாடகைக்கு விட்டு விட்டீர்களோ?"

",இல்லையே, யார் சொன்னா?"

"யாரும் சொல்லவில்லை. நேற்று இரவு உங்கள் தொழுவில் வெளிச்சம் தெரிந்தது.

ஆட்கள் நடமாட்டமும் இருந்தது. அதனால்தான் கேட்டேன்."

",இன்று காலையில் நானே தொழுவிற்குப் போனேன். ஆட்கள் வந்து போயிருப்பது போல் தெரிந்தது.

உள்ளே யாரும் இல்லை.

தொழுவைப் பெருக்கி யாரோ சுத்தம் செய்திருக்கிறார்கள்.

தீவனத் தொட்டியில் ஒரு சிறு துணி கிடந்தது.

யாரோ உள்ளே வாசனைத் திரவியத்தை ஊற்றியிருப்பது போல தொட்டி நறுமணம் வீசியது.

நீங்கள் ஆட்கள் யாரையும் பார்த்தீர்களா?"

"தொழுவுக்குள் போய் யாரையும் பார்க்கவில்லை. 

உள்ளே போய் வந்தவர்களை பார்த்தேன். 

ஆடு மேய்க்கும் இடையர்கள் உள்ளே போனார்கள்.

 சில ஆடுகளும் அவர்களுடன் சென்று கொண்டிருந்தன. "

",அப்போ இடையர் குடியில் போய் போய் விசாரித்தால் தெரியும்."

"போய் விசாரிக்க வேண்டிய அவசியமேயில்லை.

இதோ ஒரு பெரியவர் அங்கிருந்துதான் வந்து கொண்டிருக்கிறார். அவரையே கேளுங்கள்."

",,ஐயா, பெரியவரே கொஞ்சம் நில்லுங்கள். உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்."


"சொல்லுங்கள்."

",நேற்று இரவு உங்கள் குடியிலிருந்து யாராவது அதோ தெரிகின்றதே எனது மாட்டுத் தொழுவம், அங்கே வந்து போனார்களா? "

"யாராவது என்ன, நிறைய பேர் போனோம்.

நாங்கள் இரவில் இரவெல்லாம் எங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக்கொண்டிருந்தபோது

ஆண்டவருடைய தூதர் எங்களுக்குத் தோன்றி, 

  "இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர், மெசியா பிறந்துள்ளார். 

குழந்தையை துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அறிகுறியாகும்"
என்றார்.

நாங்கள் எல்லோரும் முன்னிட்டி உள்ள மாட்டுத் தொழுவத்திற்குச் சென்று,

 தீவனத் தொட்டியில் படுத்திருந்த மெசியாவாகிய குழந்தையை ஆராதித்தோம்.

அவர் நமது மீட்பிற்காக மனிதனாய் பிறந்த கடவுள்.

அவரை பெற்றெடுத்த அன்னையும், வளர்க்கப் போகிற தந்தையும் உடன் இருந்தார்கள்."

"ஏன் வளர்க்கப் போகிற என்கிறீர்கள்?"

"மீட்பரைப் பெற்றெடுத்த தாய் ஒரு கன்னி. இறைவாக்கு அப்படித்தானே சொல்கிறது."

"அவர் ஏன் மாட்டுத்தழுவத்தில் பிறந்தார்?"

"ஊரில் வீடுகளிலும் சத்திரத்திலும் அவர்கள் தங்க இடம் கிடைக்கவில்லை."

"நான் காலையில் தொழுவத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லையே?"

''உலகை படைத்த கடவுள் மாட்டுத் தொழுவத்தில் மனிதனாக பிறந்திருக்கிறார், 

அவரை அங்கே சென்று பார்த்த நாங்கள் 

அவரை அங்கேயே விட்டுச் செல்லும் அளவிற்கு நாங்கள் கல்நெஞ்சக் காரர்கள் அல்ல.

 அவர் பிறக்க தங்கள் வீட்டில் இடம் கொடுக்காதவர்கள் தான் கல்நெஞ்சக் காரர்கள்."

"நான் பாவி. கல்நெஞ்சக் காரன்." 

"ஏன், உங்கள் வீட்டில் தங்க இடம் கேட்டார்களா?"

"ஆமா, ஐயா. மாலையிலே வந்து தங்க இடம் கேட்டார்கள். ஏற்கனவே குடிக் கணக்கு கொடுக்க வந்த உறவினர்கள் பலர் எங்கள் வீட்டில் இருந்தார்கள்.

ஆனாலும் நிறை மாத கர்ப்பிணி தங்க இடம் கொடுத்திருக்க வேண்டும்.

கர்ப்பத்தில் இருந்தவர் கடவுள் என்ற உண்மை எங்களுக்குத் தெரியாது போய்விட்டது.

இப்போது அதை உங்கள் வாயிலிருந்து கேட்கும்போது என் உடல் நடுங்குகிறது.

அவர்களைப் பார்த்து, கடவுளாகிய குழந்தையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்."

"ஐயா, கேளுங்கள். பிறந்தது கடவுளாய் இருப்பதினால் மட்டுமல்ல,

சாதாரண ஏழை மனிதக் குழந்தையாய் இருந்தால் கூட நீங்கள் இடம் கொடுத்திருக்க வேண்டும்.

ஏனென்றால் எல்லோரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் தான்.

எல்லோரையும் மீட்கத் தான் மீட்பர் பிறந்திருக்கிறார்."

",ஐயா, தாயும் பிள்ளையும் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள். நான் அவர்களை உடனடியாகப் பார்க்க வேண்டும்."

"அவர்கள் எங்கள் குடியில் தான் இருக்கிறார்கள்.

போய்ப் பாருங்கள்.

கடவுள் குழந்தையிடம் மன்னிப்பு கேளுங்கள்.

அவர் கட்டாயம் உங்களை மன்னிப்பார்.

மன்னிப்பதற்காக தானே மனிதனாகப் பிறந்திருக்கிறார்."

",உடனே போகிறேன்."

இடையர் குடிக்குப் போகிறார்.

ஒரு மரத்தடியில் சிறுவர்கள் குழந்தை இயேசுவுடன் விளையாடி கொண்டிருக்கின்றார்கள்.

",தம்பி நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த சிறு குழந்தை யார்?"

"இவர்தான் எங்களை மீட்க மனிதனாய் பிறந்த இறைமகன்.

பிறப்பதற்கு நகரில் இடம் கிடைக்காமல் நகருக்கு வெளியே உள்ள மாட்டுத் தொழுவில் பிறந்தார்.

நாங்கள் எங்கள் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து விட்டோம்.

குழந்தை அழகாக இருக்கிறார்."

",தம்பி, குழந்தையை என்னிடம் கொஞ்ச நேரம் தருகிறாயா?"

"இதோ பாருங்கள், அவர் உங்களைப் பார்த்து கையைப் போடுகிறார்.

எடுத்துக் கொஞ்சுங்கள்."

"கடவுளே, என் அன்பு தெய்வமே, நீங்கள் எனது வீட்டிற்கு வந்து பிறக்க இடம் கேட்டபோது கல்நெஞ்சனாய் நான் கொடுக்க மறுத்து விட்டேன்.

நீங்கள் என் மீது இரக்கப்பட்டு எனது மாட்டுத் தொழுவிலேயே பிறந்திருக்கிறீர்கள்.

 தயவுசெய்து என்னை மன்னியும், தேவனே.

இன்றிலிருந்து என் வாழ்நாள் முழுவதும் என்னிடம் வந்து யார் என்ன உதவி கேட்டாலும் கட்டாயம் செய்வேன். உங்களிடம் உறுதி அளிக்கிறேன்.

நீங்கள் என்னை மன்னித்ததன் அடையாளமாக எனது கன்னத்தில் ஒரு முத்தம் கொடுங்கள்."

குழந்தை இயேசு புன் முறுவலுடன் அவர் கன்னத்தில் முத்தமிடுகிறார்.

அவரும் குழந்தையின் கன்னத்தில் முத்தமழை பொழிகிறார்.

"தம்பி குழந்தையின் பெற்றோர்கள் எங்கு இருக்கிறார்கள்?"

"வாருங்கள், அழைத்துச் செல்கிறோம்."

"அம்மா, கடவுளின் தாயே, நீங்கள் எனது வீட்டில் வந்து தங்க இடம் கேட்ட போது கொடுக்க மறுத்தமைக்காக  மனம் வருந்துகிறேன்.

 என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.

என்னை மன்னிக்கும் படி  உங்கள் தெய்வ மைந்தனிடம் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகள் வர மறுக்கின்றன.

உங்கள் கணவருடனும் குழந்தையுடனும் எனது இல்லத்திற்கு வர வேண்டும்."

"கவலைப்படாதீர்கள், ஐயா. மன்னிப்பதற்காகவே மனிதனாகப் பிறந்த தெய்வக் குழந்தை. 

அவர் உங்களை ஏற்கனவே மன்னித்திருப்பார்.

ஒரு நாள் உங்கள் இல்லத்திற்கு வருகிறோம்."
*           *         *           *            *        *
நமது உள்ளமாகிய இல்லத்தில் பரிசுத்தராகிய குழந்தை இயேசு வர வேண்டுமென்றால்,

நமது உள்ளம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

முதலில் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து குழந்தை இயேசுவின் மன்னிப்பை பெறுவோம்.

உள்ளத்தை பரிசுத்தமாக்குவோம்.

அதன்பின் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடுவோம்.

அதுவே நம்மை மீட்க  குழந்தையாய்ப் பிறந்திருக்கும் 

இறைமகன் இயேசுவுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment