பற்றற்றான் பற்றினைப் பற்றுவோம்.
மாதாவுக்கும் சூசையப்பருக்கும் சொந்தமான வீடு கலிலேயாவில் உள்ள நாசரேத்தில் இருக்கிறது.
இயேசு சொந்த வீட்டிலேயே பிறந்திருக்கலாம்.
ஆனால் அவர் தாயின் வயிற்றில் இருந்து கொண்டே
தான் பிறக்க வேண்டிய காலம் நெருங்கியவுடன்
அவர்களை 90 மைல்களுக்கு அப்பால், யூதேயாவில் உள்ள பெத்லகேம் நகருக்கு அழைத்துச் செல்கிறார்.
நிறை மாத கர்ப்பிணி கழுதை மேல் அமர்ந்து கொண்டு அவ்வளவு தூரம் பயணிப்பது அவ்வளவு எளிதல்ல.
சூசையப்பர் முழு தூரமும் நடந்தே செல்கிறார்.
இது இறைமகனின் நித்திய கால திட்டம்.
பெத்லகேமில் சூசையப்பரின் உறவினர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.
அவர்கள் மாதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் தங்கள் வீட்டில் தங்க இடம் கொடுக்கவில்லை.
குடிக் கணக்கு கொடுக்க நிறைய பேர் ஏற்கனவே வந்திருக்கலாம்.
ஆகவே இடம் இல்லாதிருந்திருக்கலாம்.
ஆனால் நிறைமாக கர்ப்பிணி தங்க இடம் கொடுக்க யாருக்கும் மனிதாபிமான உணர்வு இல்லாமல் போய்விட்டது.
சத்திரத்திலும் இடம் இல்லை.
யாருக்கோ சொந்தமான மாட்டுத் தொழுவத்தில்
யாரிடமும் சொல்லாமல் இரவில் தங்கச் சென்றபோது
இறைமகன் மனுமகனாய் உலகில் பிறந்தார்.
இயேசுவை பின்பற்றுகிறோம், இயேசுவைப் போல் வாழ்கிறோம்
என்று சொல்லிக் கொள்ளும் நாம்,
எந்த அளவுக்கு இயேசுவின் ஏழ்மையைப்
பின்பற்றுகிறோம்?
கேட்டால், இயேசுவின் வார்த்தைகளையே பதிலாகச் சொல்லி விடுவோம்.
"Blessed are the poor in spirit."
"எளிய மனத்தோர் பேறு பெற்றோர்."
"நாங்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது எங்களுக்கு பற்று இல்லை" என்று சொல்லி விடுவோம்.
ஆனால் எந்த அளவுக்கு பற்று இல்லை என்பது நமக்கு மட்டுமே தெரியும்.
ஒரு நாள் மின்சாரம் இல்லாவிட்டால் நம்மிடம் எவ்வளவு பற்றின்மை இருக்கிறது என்பது புரியும்.
சூசையப்பர் மாதாவை அழைத்துக் கொண்டு 90 மைல் நடந்து சென்றாரே,
உள்ளூரில் உள்ள கோவிலுக்கு தவ முயற்சியாக ஒரு நாள் நடந்து செல்ல நம்மால் முடிகிறதா?
கோவிலில் ஒரு நாள் நம்மால் நாற்காலி இல்லாமல் அமர முடிகிறதா? (எனது அனுபவத்தைக் கூறுகிறேன்.)
Phone இல்லாமல் எங்காவது போக முடிகிறதா?
வீட்டில் T.V. இல்லாமல் நேரம் போகிறதா?
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் நினைத்துப் பார்த்தால் ஒரு குண்டூசி மீது கூட நமக்கு பற்று இருப்பது தெரியும்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை
பற்றுக பற்று விடற்கு."
பற்று இல்லாத இயேசுவின் பாதங்களை இறுக்கப் பற்றிக் கொண்டால்தான் உலகப் பொருள்கள் மீது உள்ள பற்றினை நம்மால் விட முடியும்.
இயேசுவின் பாதங்களை இறுக்கப் பற்றி கொண்டால்,
அவர் மீது தவிர வேறு எந்த பொருள் மீதும் நமக்கு பற்று வராது.
நாம் பயன்படுத்தும் பொருள்கள் தொலைந்து போனாலும் நாம் கவலைப்பட மாட்டோம்.
நமது பொருட்களை இயேசுவுக்காக மட்டுமே பயன்படுத்துவோம்.
அப்படி பயன்படுத்தப்படும் பொருட்கள் நமது கையை விட்டு போய்விட்டால்,
"இயேசுவே, உமக்கு உரியதை நீரே எடுத்துக் கொண்டதற்கு நன்றி" என்று தான் கூறுவோம்.
போன பொருளைப் பற்றி கவலைப் பட மாட்டோம்.
நம்மிடம் உள்ள அனைத்தும் போனாலும்
"கொடுத்தவர் அவருக்கு உரியதை எடுத்துக் கொண்டார், நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று எண்ணுவோம்.
எனது மாணவப் பருவத்தில்
பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில்
பரதேசி பீற்றர் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட பேராசிரியர் ஒருவர் இருந்தார்.
இவர் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையின் உறுப்பினர்.
ஒவ்வொரு மாத சம்பளத்தையும் முழுமையாக ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு பரதேசி போல் வாழ்ந்தவர்.
ஒரு முறை எங்களுக்கு சொற்பொழிவு ஆற்றுவதற்காக கோயம்புத்தூருக்கு வந்திருந்தார்.
அவர் அணிந்திருந்த மூக்கு கண்ணாடியில் காதில் மாட்டக் கூடிய ஒரு பக்கத்து சட்டம் இல்லை.
அதற்கு பதிலாக ஒரு நூலைக்
கட்டியிருந்தார்.
அவர் சொற்பொழிவு ஆற்றிய பின் அவரோடு பேசிக்கொண்டிருந்தோம்.
நான் அவரிடம்,
"Brother, கண்ணாடியின் ஒரு பக்கத்து சட்டத்தை காணவில்லையே, கண்ணாடிக்கு புதிய frame போட்டால் என்ன?" என்று கேட்டேன்.
"தம்பி, பார்க்க உதவுவது frame ஆ, கண்ணாடியா?"
"கண்ணாடி."
"கண்ணாடியில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தான் மாற்ற வேண்டும்.
கண்ணாடியை மூக்கில் நிறுத்துவதற்காக தான் frame வேணும்.
நான் கட்டியிருக்கும் நூலிலேயே கண்ணாடி நிற்கிறதே.
அது போதுமே."
அவருக்கு கண்ணாடி மேலேயோ,
frame மேலேயோ பற்று இல்லை.
அந்தக் கண்ணாடி தொலைந்து விட்டால் கூட அதற்காக வருத்தப்பட மாட்டார்.
பயன்படுத்த வேறொன்று வாங்கிக் கொள்வார்.
பயன்பாட்டுக்காகவே பொருள், பற்று வைப்பதற்காக இல்லை.
மாட்டுத்தொழுவம் இயேசு பிறப்பதற்கு உதவியது.
நசரேத்தில் உள்ள சொந்த வீட்டின் மீதோ, வேறு எந்த பொருள் மீதோ இயேசுவுக்கு பற்று இல்லை.
அவருக்கு வேண்டியது மனுக் குலத்தின் மீட்பு மட்டுமே.
நமக்கு வேண்டியதும் அதுவே தான்.
பற்றற்றான் பற்றினைப் பற்றி உலகப் பற்றைக் கைவிடுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment