Wednesday, December 14, 2022

"தயவு செய்து, நீரே உம்மைக் காப்பாற்றிக் கொள்ளும்."

"தயவு செய்து, நீரே உம்மைக் காப்பாற்றிக் கொள்ளும்."


இயேசு எதற்காக  மனிதனாய்ப் பிறந்தார்?

மாடுகளின் தீவனத் தொட்டியில் படுத்து உறங்க?

இடையர்களால் ஆராதிக்கப்பட?

கீழ்த்திசை ஞானிகளிடமிருந்து பரிசுகள் பெற?

எகிப்தில் மூன்று ஆண்டுகள் வாழ?

நாசரேத்தூரில் தச்சு வேலை செய்து பிழைக்க?

மூன்று ஆண்டுகள் நற்செய்தி அறிவிக்க?

நோயாளிகளுக்கு குணமளிக்க?

இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க?

பேய்கள் பிடித்தோரிடமிருந்து பேய்களை ஓட்ட?

ஐந்து அப்பங்களைக் கொண்டு 5000 பேருக்கு உணவளிக்க?

இவற்றையெல்லாம் இயேசு செய்தார்.

ஆனால் இவற்றிற்காக  அவர் மனிதனாய் பிறந்தாரா?

இவை அவர் மனுவுரு எடுத்ததன் நோக்கமா?

இல்லவே இல்லை.

இவற்றுக்காக அவர் மனிதனாகப் பிறக்கவில்லை.

இவையெல்லாம் அவரது வாழ்வின் நிகழ்வுகள், நோக்கங்கள் அல்ல.

இவற்றையெல்லாம் அவர் படைத்த மனிதர்கள் மூலமே செய்திருக்கலாம்.

ஆனால் மனிதர்கள் யாரும் செய்ய முடியாத ஒன்றை,

மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பின் காரணமாகச் செய்ய

மனிதனாய்ப் பிறந்தார்.

தங்கள் அன்பை வெளிப்படுத்த யாரும் யாருக்கும் உணவளிக்கலாம்.

ஆனால் யாரும் தன்னையே யாருக்கும் உணவாக அளிக்க முடியாது.

தன்னால் படைக்கப்பட்டவர்களது ஆன்மீக நலனுக்காக தன்னையே உணவாக அளிக்க இறைவன் விரும்பினார்.

தனது வல்லமையினாலும், ஞானத்தினாலும், பராமரிப்பினாலும் மனிதரோடு இருந்த இறை மகன்,

மனிதர்கள் தன்னை நேருக்கு நேர் பார்த்து உறவாட, உரையாட விரும்பினார்.

அந்த விருப்பத்தை நிறைவேற்ற மனிதனாக பிறந்தார்.

மனிதர்களோடு மனிதனாக பழக விரும்பினார்.

தனது உண்மையான ஆன்மாவோடும், உடலோடும் திவ்ய நற்கணையில் இருந்து,

முழுமையாக நமக்கு,
நமது ஆன்மீக நல்லணுக்காக

 தன்னையே உணவாகத் தருகிறார்.

நாம் அவரை நமது கண்களால் பார்க்கிறோம்,

 நாக்கினால் ருசித்து விழுங்குகிறோம்.

அவரது அருள் வரங்களால் ஆன்மீகத்தில் வளர்கிறோம்.'


அளவு கடந்த கடவுளுக்கு விரோதமாக அளவுள்ள மனிதர்களாகிய நாம் செய்த பாவங்களுக்கு முழுமையாக பரிகாரம் செய்ய முடியாது.

அளவு கடந்த கடவுளுக்கு, 

அளவு கடந்தவரால் மட்டுமே முழுமையான பரிகாரம் செய்ய முடியும்.

ஆனால் கடவுளைத் தவிர அளவு கடந்தவர் வேறு யாருமே இல்லை,

ஆகவே அவரே அவருக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்யத் தீர்மானித்தார்.

மனிதன் செய்த பாவத்திற்கு மனிதன்தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஆகவே மெய்யாகவே கடவுளாக இருக்கும் இறைமகன்,

மெய்யாகவே மனிதனாகப் பிறந்து நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்தார்.

பரிகாரம் செய்தவர் மனிதனாகப் பிறந்த கடவுள்.

குற்றவாளி மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக

 நீதிபதியே குற்றவாளி அனுபவிக்க வேண்டிய தண்டனையை ஏற்றுக் கொள்வது போல 

நம் மீது கொண்ட அன்பின் காரணமாக 

நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை கடவுளே ஏற்றுக் கொண்டார். 

அவர் நமக்காக பாவப்பரிகாரம் செய்ததினால் தான், 

 நாம் நமது பாவங்களுக்காகச் செய்யும் பரிகாரம் அவர் முன்னால் செல்லுபடியாகிறது.

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே பலியாக்கி,

 நாம் செய்த பாவங்களை மன்னிக்கவே மனிதனாகப் பிறந்தார்.

இயேசுவை உண்மையான ஆன்மீக உணவாகவும்,

பலிப் பொருளாகவும்,

மீட்பராகவும்,

பாவ மன்னிப்பு அளிப்பவராகவும் 

ஏற்றுக்கொள்பவனே உண்மையான கிறிஸ்தவன்.

இயேசு குணமளிக்கிறார்,

பாவங்களை மன்னித்து ஆன்மாவிற்கு குணமளிக்கிறார்.

அதை மறந்து, உடலைச் சார்ந்த நோய்களுக்கு குணம் பெற மட்டும்
இயேசுவை அணுகுபவன்,

அவரை மருத்துவராக மட்டுமே ஏற்றுக் கொள்கிறான்,

மீட்பராக அல்ல.

இப்போதெல்லாம் நம்மவர்களே குணமளிக்கும் செபக் கூட்டங்கள் நிறைய நடத்துகிறார்கள்   .

அவற்றுக்கு செல்லும் பெரும்பாலானோர் தங்களது உடலைச் சார்ந்த நோய்களிடமிருந்து குணம் பெறவே செல்கின்றார்கள்.

நோய்கள் சுகமானதாக சாட்சியம் அளிக்கின்றார்கள்.

ஆண்டவரே இவ்வுலகில் நிறைய நோயாளிகளை குணமாக்கினார்.

விசுவாசத்தோடு அவரை அணுகியவர்கள் குணம் பெற்றார்கள்.

குணம் அளிக்கும் கூட்டங்களில் கலந்து கொள்வோர் விசுவாசத்தோடு கலந்து, குணம் பெறுவது  நல்லது தான்.

ஆனாலும் அவர்களில் எத்தனை பேர் தங்களின் ஆன்மாவிற்கு சுகம் அளிக்கும் பாவ சங்கீர்த்தனம் செய்கிறார்கள் என்று அவரவர்தான் யோசித்து பார்க்க வேண்டும்.

பாவ சங்கீர்த்தனம் செய்யாமல் உடல் சார்ந்த நோய்கள் மட்டும் குணம் பெற செல்பவர்கள் கிறிஸ்துவை ஆன்மீக மீட்பராக ஏற்றுக்கொள்ளவில்லை.

இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்ளாதவர்கள்  

கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கு ஏற்றவர்கள் அல்ல.


திவ்ய நற்கருணையில் இயேசு மெய்யாகவே இருக்கிறார் என்று விசுவசிக்கிறோமா அல்லது  விசுவசிப்பதாகச் சொல்கிறோமா?

உண்மையிலேயே விசுவசித்தால் 
இயேசுவை  மற்றவர்கள் காலால் மிதிக்க அனுமதிப்போமா?

நற்கருணையை கையில் வாங்கும் போது அதில் உள்ள துகள்கள் நமது கையில் விழும் என்று நமக்கு தெரியாதா?

ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார் என்பதும் நமக்குத் தெரியாதா?

கையை உதறிவிட்டு போகும்போது துகள்கள் தரையில் விழும் என்றும் நமக்குத் தெரியாதா?

தரையில் விழும் துகள்கள் மற்றவர்கள் காலில் மிதிபடும் என்றும் நமக்குத் தெரியாதா?

கால்களில் மிதிபடுபவர் நம்மைப் படைத்த கடவுளாகிய இயேசு என்றும் நமக்குத் தெரியாதா?

இந்த உண்மை  நற்கருணை கொடுப்பவருக்கும் தெரியும்,

வாங்குபவருக்கும் தெரியும்.

இதை நம்மைப் படைத்தவரை தவிர வேறு யாரிடம் போய் முறையிடுவோம்?

"இயேசுவே,  நீர் பாடுகள் படும்போது உம்மைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்ளாத யூத மதத்தவர்களால் அடிபட்டு, மிதி பட்டு, அவமானப் படுத்தப் பட்டீர்.

அதை எங்களது பாவங்களுக்கு பரிகாரமாக ஏற்றுக் கொண்டீர்.

இப்போது உம்மைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்பவர்களால் மிதி பட வேண்டுமா?

ஆண்டவரே நீர் மிதிபடாமல் நீரே உம்மைக் காப்பாற்றிக் கொள்ளும்படி பணிவுடன் வேண்டுகிறேன்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment