"அவர்தம் இரக்கம் அவரை அஞ்சுவோர்க்குத் தலைமுறை தலைமுறையாய் உள்ளதாமே."
(லூக்.1:50)
" தாத்தா, யாராவது தாங்கள் நேசிப்பவர்களைப் பார்த்துப் பயப்படுவார்களா?"
", பயப்படுவார்களே!"
"அது எப்படி. நேசிப்பவர்களைப் பார்த்து ஏன் பயப்படுவார்கள்?"
",நீ உன் அப்பாவை பார்த்து பயப்படுவாயா?"
"நான் ஏதாவது தப்பு செய்தால் பயப்படுவேன்."
",தப்பு செய்தால் பயப்படுவாயா? தப்பு செய்ய பயப்படுவாயா?"
"இரண்டும் ஒன்றுதானே, தாத்தா.
தப்பு செய்தால் அடி விழுமே என்று பயப்படுவேன்.
அடி விழுந்து விடக்கூடாது என்று தப்பு செய்ய பயன்படுவேன்."
",அப்போ அப்பாவை நினைத்தால் அடி ஒன்றுதான் ஞாபகத்துக்கு வருகிறதா?
நீ அவருடைய அன்புள்ள மகன் என்பது ஞாபகத்துக்கு வரவில்லையா?"
"இப்போ புரியுது.
அடி விழுந்து விடுமே என்றும் பயப்படலாம்.
தந்தையின் அன்புக்கு விரோதமாக எதுவும் செய்து விடக் கூடாது என்றும் பயப்படலாம்.
வேலைக்காரன் அடிக்குப் பயப்படுவான்.
மகன் அன்பின் காரணமாக பயப்படுவான்."
",இப்போ உன் கேள்விக்கு நீயே பதில் சொல்.
யாராவது தாங்கள் நேசிப்பவர்களைப் பார்த்துப் பயப்படுவார்களா?"
"பயப்படுவார்கள்.
ஆனாலும் இன்னும் புரியாத ஒன்று இருக்கிறது.
அன்னை மரியாள்,
"அவர்தம் இரக்கம் அவரை அஞ்சுவோர்க்குத் தலைமுறை தலைமுறையாய் உள்ளதாமே."
என்று சொல்கிறாள்.
பயப்படுவோர் மீது கடவுளுடைய இரக்கம் எப்போதும் இருக்கும் என்று சொல்கின்றாளே,
பயப்பட்டால் தான் ஆண்டவர் எப்போதும் நம் மீது இரங்குவாரா?
பயப்படாதவர் மீது இரக்கம் காட்ட மாட்டாரா?"
",கடவுள் அனைவர் மீதும் இரக்கமாக இருக்கிறார்.
ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் பாடம் நடத்துகிறார். எல்லோரும் வெற்றி பெருகிறார்களா?"
"ஆசிரியர் நடத்துகிற பாடத்தை கஷ்டப்பட்டு படிக்கிறவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்.
படிக்காதவர்கள் வெற்றி பெற முடியாது."
",வெற்றியின் காரணம் ஆசிரியரா? மாணவர்களா?"
"இருவரும் தான்"
",தோல்வியின் காரணம்?"
''மாணவர்கள் மட்டுமே."
",ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் பாடம் நடத்துவது போல,
இறைவன் அனைவருக்கும் இரக்கம் காட்டுகிறார்.
ஆனால் அவருக்கு அஞ்சி நடப்பவர்கள் அவரது இரக்கத்தால் பயன் பெறுகிறார்கள்.
அஞ்சாதவர்கள் பயன்படுத்துவதில்லை.
சம்மனசின் மீது இரக்கமாக இருக்கும் கடவுள்,
சாத்தான் மீதும் இரக்கமாக இருக்கிறார்.
கடவுளின் இரக்கத்தை சம்மனசு ஏற்றுக்கொள்கிறார்,
சாத்தான் ஏற்றுக் கொள்வதில்லை.
அதேபோல கடவுள் நல்லவர் மீதும் இரக்கமாக இருக்கிறார்,
கெட்டவர்கள் மீதும் இரக்கமாக இருக்கிறார்.
நல்லவர்கள் அவரது இரக்கத்தை பயன்படுத்தி, பயன் பெறுகிறார்கள்.
கெட்டவர்கள் அதை பயன்படுத்துவதில்லை, பயன் பெறுவதும் இல்லை.
பயன் பெறாததற்கு காரணம் அவர்கள் தான்.
கடவுளுடைய இரக்கம் அவருக்கு அஞ்சுவோர் மீது உள்ளது என்றால்,
கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்கள் அவருடைய இரக்கத்தால் பயன் பெறுகிறார்கள் என்று பொருள்.
நீ புரிந்து கொண்டதற்கு அடையாளமாக ஒரு உதாரணம் கொடேன்."
"இரண்டு பேர் ஒரு பாவச் சோதனையில் மாட்டிக் கொண்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
சோதனை எல்லாருக்கும் வரும்.
இயேசுவைக் கூட சாத்தான் சோதித்தது.
சோதனைகளில் மாட்டிக்கொண்டவர்களில் ஒருவர் கடவுள் மீது உண்மையான அன்பு உள்ள நல்லவர்.
அவர் சோதனைக்கு இடம் கொடுத்தால் கடவுளுக்கு எதிராக செயல்பட நேரிடும் என்று அஞ்சி,
சோதனையில் வெற்றி பெற்றார்.
அவர் வெற்றி பெற்றது ஒரு புண்ணியம்.
ஆனால் அடுத்தவர் கடவுள் மீது அன்பு இல்லாத கெட்டவர்.
இரக்கம் உள்ள கடவுளுக்கு அஞ்சாதவர்.
சோதனைக்கு இடம் கொடுத்து அதில் தோல்வியும் கண்டார்.
சோதனையில் அவர் கண்ட தோல்வி பாவம்.
பானையில் நிறைய தண்ணீர் இருக்கிறது.
யார் வேண்டுமானாலும் குடிக்கலாம்.
குடித்தவர்களுக்கு தாகம் தீரும்,
குடியாதவர்களுக்கு தாகம் தீராது.
கடவுளுடைய இரக்கம் கடலானால்
கடலுக்குள் இறங்குபவர்கள் அதில் நீந்தலாம்.
கரையை விட்டு இறங்காதவர்களுக்கு
கடலினால் என்ன பயன்?"
",கடவுளுக்கு அஞ்சாமல் பாவ வாழ்க்கை வாழ்பவர்கள் கடவுளின் இரக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் வாழ்வதால் பயன்பெறுவதில்லை.
ஆனால் கடவுள் தன் இரக்கத்தால் கொடுக்கும் நற்செய்தியின் மூலம் அவரை அறிந்து,
மனம் திரும்பி,
கடவுள் அருளால் அவருக்கு அஞ்ச ஆரம்பித்தால்,
அவருடைய இரக்கம் அவர்களது உள்ளத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
அவர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்கு வருத்தப்பட்டு
கடவுளிடம் மன்னிப்பு கேட்பார்கள்.
கடவுள் தனது இரக்கம் மிகுதியால் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வார்.
மனம் திரும்பிய பின் அவர்கள் பயத்துடனும், பக்தியுடனும் கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
பயம் என்றால் அச்சம்.
பக்தி என்றால் அன்பு
ஆன்மீக வாழ்வில் நாம் நடக்க அச்சம், அன்பு என்ற இரண்டு கால்களும் வேண்டும்.
இறையன்பின் குழந்தை தான் இரக்கம்.
கடவுளைப் பற்றிய ஞானம் உள்ளவர்களே அவருடைய இரக்கத்தைப் பற்றி அறிவார்கள்.
ஞானத்திற்கு ஆரம்பமே தெய்வ பயம் தான்.
தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம். (பழமொழி.9:10) என்பது இறைவாக்கு,
கடவுளுக்கு அஞ்சி நடப்போம், அவரது இரக்கத்தால் பயன் பெறுவோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment