Monday, December 12, 2022

"ஆனால், ஆயக்காரரும் விலைமாதரும் அவரை நம்பினர்:"(மத்.21:32)

"ஆனால், ஆயக்காரரும் விலைமாதரும் அவரை நம்பினர்:"
(மத்.21:32)

ஆன்மீக ரீதியாக மனிதர்களை இரு வகையினராக பிரிக்கலாம்.

1.தாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக் கொண்டு மனம் திரும்பும் பாவிகள்.

2.தங்களை பரிசுத்தவான்கள் என்று நினைத்துக் கொண்டு மனம்திரும்ப விரும்பாத பாவிகள்.


ஆயக்காரரும் விலைமாதரும் அவர்களைப் போன்றோரும்
முதல் வகையினர்.

தலைமைக்குருக்களும் மக்களின் மூப்பரும் அவர்களைப் போன்றோரும்    இரண்டாவது வகையினர்.

இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பரையும் பார்த்துச் சொல்கிறார், 

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆயக்காரரும் விலைமாதரும் உங்களுக்குமுன் கடவுள் அரசில் செல்வார்கள்."


தங்களை பரிசுத்தவான்கள் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிற தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பரையும் விட,

தாங்கள் பாவிகள் என்று ஏற்றுக்கொள்கின்ற
ஆயக்காரரும் விலைமாதரும்தான்
விண்ணக வாழ்வுக்கு அதிகம் ஏற்றவர்கள்.

ஏனெனில் தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பரும் தங்களை பரிசுத்தவான்கள் என்று தவறாக எண்ணிக் கொண்டிருப்பதால் 

தங்கள் பாவங்களுக்காக வருத்தப்பட மாட்டார்கள்.

ஆகவே பாவ மன்னிப்பு பெற மாட்டார்கள்.

ஆகவே விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்கள் அல்ல.

ஆனால் ஆயக்காரர்களும் விலை மாதரும் தங்கள் பாவங்களை ஏற்றுக் கொள்வதால் அவற்றுக்காக மனம் வருந்தி மன்னிப்பு பெற்று 

விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்களாக தங்களை மாற்றிக் கொள்வார்கள்.

ஆண்டவர் தலைமைக் குருக்களையும், மக்களின் மூப்பரையும், ஆயகாரர்களையும் விலை மாதர்களையும் பற்றி மட்டும் பேசவில்லை.

அவர்களுடைய குணத்தை உடைய அனைவரையுமே குறிப்பிடுகிறார்.

நாம் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்கள்.

ஆனாலும் நாம் பாவம் செய்ய முடியாதவர்கள் என்று திருச்சபை கூறவில்லை.

கத்தோலிக்க திருச்சபையை பாவிகளின் கூடாரம் என்பார்கள்.

நாம் அனைவரும் பாவிகள் தான்.

அதனால்தான் நமக்காக பாவ சங்கீர்த்தனம் என்னும் திரு அருள் சாதனத்தை இயேசு ஏற்படுத்தியிருக்கிறார்.

தாங்கள் பாவிகள் என்று ஏற்றுக்கொண்டு அந்த திருவருள் சாதனத்தைப் பயன்படுத்தி மன்னிப்பு பெறுகிறவர்கள் மீட்பு பெறுவார்கள்.

தாங்கள் கத்தோலிக்கர்கள், ஆகவே பரிசுத்தவான்கள் என்று தவறாக தங்களைப் பற்றி எண்ணிக் கொண்டு 

பாவ மன்னிப்பு பெற முயற்சி எடுக்காமல் இருந்தால் மீட்புப் பெற முடியாது.

நாங்கள் பாவிகள் என்று நாம் ஏற்றுக் கொண்டால்தான்

"நான் பாவிகளைத் தேடியே உலகிற்கு வந்தேன்"

என்ற இயேசுவின் வாக்கு நமக்கு பயன் அளிக்கும்.

பாவ சங்கீர்த்தன விஷயத்தில் பாப்பரசர் முதல் அடிமட்ட கிறிஸ்தவன் வரை எல்லோரும் ஒரு வகை தான்.

நம்மில் யாரும் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறை நூல் அறிஞரையும் மக்களின் மூப்பர்களையும் போல் ஆகிவிடக் கூடாது.

பைபிளை வாசிப்பதால் மட்டும் ஒருவன் பரிசுத்தவான் ஆக முடியாது.

நம்மை விட சாத்தானுக்கு பைபிளைப் பற்றி நன்கு தெரியும்.

எழுத வாசிக்க தெரியாத ஒரு கிறிஸ்தவனுக்கு பைபிளை பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் அவன் ஆன்மீக குருவின் ஆலோசனைகளைக் கேட்டு அதன் படி நடந்தால் பைபிளில் போதனைப்படி தான் நடக்கிறான்.

ஏனெனில் அவர் இறைவாக்கைத்தான் போதிக்கிறார்.

 தனக்கு பைபிள் வாசிக்க தெரியும் என்று ஆலோசனை குருவை அலட்சியம் பண்ணுகிறவன் பைபிளைச் சரியாக புரிந்து கொள்ள மாட்டான்.

சரியாக புரிந்து கொள்ளாமல் வாசிப்பதை விட, வாசிக்க தெரியாமல் இருப்பது எவ்வளவோ மேல்.

நண்பர் ஒருவர் காலை, மாலை செபம் சொல்வதில்லை.

அவரிடம் கேட்டேன்,

"ஏன் இறைவனை நோக்கி செபிப்பதில்லை?"

அதற்கு அவர்,

 "என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசில் சேரமாட்டான்."  

என்று இயேசு கூறுவதாக பைபிள் சொல்கிறதே."

என்று கூறினார். 

மருந்தை சாப்பிடக்கூடிய விதமாக சாப்பிட்டால் தான் நோய் குணமாகும்.

இஷ்டம் போல் சாப்பிட்டால் புதுப்புது நோய்கள் உண்டாகும்.

ஆன்மீகத்தைப் பொறுத்தமட்டில் 
கடவுளின் அருள் உதவி இல்லாமல் நம்மால் எதுவுமே செய்ய முடியாது.

ஆன்மீக வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் அருளுயிரோடு வாழ நாம் இறைவனையே நம்பியிருக்கிறோம்.

என்னால் எல்லாம் முடியும் என்பவன் தற்பெருமை உடையவன். தற்பெருமை சாத்தானின் சொத்து.

இறைவன் அருளால் எல்லா முடியும் என்பவன் தாழ்ச்சி உள்ளவன்.

தாழ்ச்சி அன்னை மரியாளின் சொத்து. 

அன்னை மரியாளின் பிள்ளைகள் அனைவருக்கும் தாழ்ச்சி இருக்கும்.

அன்னை மரியாள் இறைவன் அருளால் நிறைந்திருந்தாலும் தன்னை ஆண்டவரின் அடிமை என்றே கருதினாள்.

அன்னை மரியாள் பாவ மாசு இல்லாமல் வாழ்ந்தாள்.

நம்மால் அந்த அளவு வாழ முடியாது.

ஆனால் நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று வாழலாம்.

புனித அகுஸ்தினார் ஒரு மனம் திரும்பிய பாவி.

மிகப்பெரிய பாவியாக இருந்தாலும் மிகப் பெரிய புனிதராக மாறலாம் என்பதற்கு புனித அகுஸ்தினார் மிக சிறந்த எடுத்துக்காட்டு.

நாம் பாவிகள் என்பதற்காக கவலைப்பட வேண்டாம்,

 பாவத்திற்காக வருத்தப்பட்டால் நாம் புனிதர்களே.

நமக்காகத்தான் இயேசு விண்ணிலிருந்து பூமிக்கு இறங்கி வந்தார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment