Thursday, December 1, 2022

மாற்றம் தேவையா?"

மாற்றம் தேவையா?"

"தாத்தா, வாழ்க்கையில் மாற்றங்கள் தேவையா?".

",நீ இதுவரை கேட்ட கேள்விகளில் இதுதான் மிக கடினமான கேள்வி.

பதில் சொல்வதும் கடினம். பதிலை புரிந்து கொள்வதும் கடினம்.''

''தேவைன்னு சொல்லுங்க, அல்லது தேவை இல்லை என்று சொல்லுங்க,

 இது சொல்வது கடினமா?"


", பேரப் புள்ள, நீயே பதிலைச் சொல்லிவிட்டாய்.

இப்போ நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லு.

தூங்கலாமா?".

"தூங்க வேண்டிய நேரத்தில் தூங்கலாம்.
 தூங்கக் கூடாத நேரத்தில் தூங்கக்கூடாது."

",ஆனால் எது தூங்க வேண்டிய நேரம், எது தூங்கக் கூடாத நேரம் என்று வரையறை போடுவது மிக கடினம்.

மாற்றம் தேவையா என்பதற்கான பதிலும் இப்படித்தான் இருக்கும்."

"உங்கள் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து கேள்வியை மாற்றி கேட்கிறேன்.

நீங்கள் சாத்தூரில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்களது மனைவி கீழப்பாவூரில் வீட்டில் இருக்கிறார்கள்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்களுடைய மனைவியிடம் இருந்து எதை எதிர் பார்க்கிறீர்கள்?"

",அவள் எழுதும் கடிதத்தை."

"எதிர்பார்ப்பது மட்டுமல்ல அதை எப்பொழுதும் வாசித்துக் கொண்டேயிருக்கிறீர்கள் , சரியா?"

"கரெக்ட்."

''ஒரு நாள் உங்கள் மனைவி உங்களை பார்க்க வருகிறார்கள்.

இப்பொழுது நீங்கள் பார்க்க விரும்புவது அவர்களையா? அவர் எழுதிய கடிதத்தையா?"

",கடிதம் என்னிடம் தான் இருக்கும். ஆனால் நான் பார்த்து பேச விரும்புவது என்னை பார்க்க வந்திருக்கும் என்னுடைய மனைவியைத் தான்."

"இப்பொழுது உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

கடிதத்தை வாசிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்த நீங்கள் மனைவியைப் பார்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்கள்.

மனைவி வந்த பின்னும் நீங்கள்
அவர்களை விட 
 
அவர்கள் எழுதிய கடிதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் 

உங்கள் மனைவி என்ன நினைப்பார்கள்?"

",நீ எதையோ மனதில் வைத்துக்கொண்டு தான் இந்த கேள்வியை கேட்கிறாய்.

எதை என்று என்னால் யூகிக்க முடிகிறது.

நீ கேட்க விரும்புகிற கேள்வியை சொல்லி விடட்டுமா?"

"சொல்லுங்கள்."

",நாம் யாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? இறைவனுக்கா? இறைவாக்குக்கா?"

"கரெக்ட். இப்போது முதலில் நான், கேட்ட கேள்வி புரிகிறதா?"

'',இறைவனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தவர்கள்,

அவரைவிட அவரது வாக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தால் அவர்களைப் பற்றி இறைவன் என்ன நினைப்பார் ?"

"தாத்தா, இறைவாக்குக்கு உருவம் கிடையாது.

நமக்கு புரிய வேண்டும் என்பதற்காக அதற்கு மொழி உருவம் கொடுத்து அதை புத்தகத்தில் அச்சிட்டு அதை வாசிக்கிறோம்.

பைபிள் என்று நாம் அழைப்பது இறைவாக்கு.

அதை நாம் எழுதி வைத்திருக்கும் புத்தகம் அல்ல.

அம்மாவிடம் காபி கேட்டால் ஒரு தம்ளரை கொண்டு வருவார்கள்.

அது காபி அல்ல. காபி அதற்கு உள் இருக்கும்.

அதே போன்று தான் பைபிள் என்றபெயரில் நாம் வைத்திருக்கும் பேப்பரால் செய்யப்பட்ட புத்தகம் பைபிள் அல்ல.

அதற்குள் இருக்கும் உருவமற்ற இறைவாக்கு தான் பைபிள்.

 அப்ப ரச குணங்களுள் உண்மையாகவே பிரசன்னமாக இருப்பவர் நமது ஆண்டவராகிய இயேசு.

நமது கண்ணுக்கு அப்பம் போல் தோன்றுவது உண்மையில் அப்பம் அல்ல, ஆண்டவராகிய இயேசு.

ரசம் போல் தோன்றுவது ரசம் அல்ல இயேசுவின் இரத்தம்.

திவ்ய நற்கருணையை நாம் அருந்தும் போது, கன்னி மரியின் வயிற்றில் உதித்த அதே இயேசுவைத் தான் அருந்துகிறோம்.

பைபிள் என்ற புத்தகத்திற்குள் இறைவாக்கு இருப்பது போல,

அப்பத்திற்கு உள் ஆண்டவர் இல்லை.

குருவானவர் 

"இது என் உடல்" 

என்று சொல்லும் போது 

அப்பம் இயேசுவாக மாறிவிடுகிறது.

அப்பத்தின் ஒவ்வொரு துகளும் இயேசுவாக மாறிவிடுகிறது.

திருப்பலி நிறைவேற்ற வேண்டிய இடத்தில் 

திவ்ய நற்கருணையும் இருக்கிறது,

இறைவாக்கு அடங்கிய புத்தகமும் இருக்கிறது.

இரண்டில் எது அதிக முக்கியமானது?

திவ்ய நற்கருணைதானே?"

",அதில் என்ன சந்தேகம்?"

" முன்பெல்லாம் திவ்ய நற்கருணைப் பேழை பலியிடத்தின் நடு மையத்தில் இருக்கும்.

ஒரு புறமிருந்து மறுபுறத்திற்கு நற்கருணைப் பேழையை கடந்து செல்பவர்கள் 

நற்கருணை நாதரை முழங்கால் படியிட்டு, ஆராதித்து, எழுந்து செல்வர்.

இப்போது பலியிடத்தின் மையத்தில் ஒரு stand போடப்பட்டு அதில் பைபிள் வைக்கப் பட்டிருக்கிறது.

நற்கருணைப் பேழை ஒரு பக்கத்தில் (Side) வைக்கப்பட்டிருக்கிறது.

முதல் அமைச்சருக்கு ஒரு வரவேற்பு கொடுப்பதாக வைத்துக் கொள்வோம்.

மேடையில் போடப்பட்டுள்ள நாற்காலிகளில் மையத்தில் உள்ள நாற்காலியில் அவருடைய கடிதத்தை வைத்துவிட்டு

அவரை ஒரு பக்கத்திலுள்ள   
நாற்காலியில் உட்கார வைப்போமா?

மையப் பகுதியை பைபிளுக்குக் கொடுத்துவிட்டு,

நற்கருணை பேழையை மையப் பகுதியிலிருந்து ஒரு புறத்திற்கு மாற்றுவது தேவைதானா?

இப்பொழுது நற்கருணை நாதர் முன் வருபவர்கள் முழந்தாள் படியிடுவது இல்லை,

தலையை மட்டும் ஆட்டுகிறார்கள்.

இந்த மாற்றம் தேவை தானா?"

(தொடரும்) 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment