Saturday, December 3, 2022

"மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது"(மத். 3:2).


"மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது"
(மத். 3:2)
.

 ''மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" 

என்ற வார்த்தைகளோடு ஸ்நாபக அருளப்பர் தனது பணியை ஆரம்பித்தார்.

அவர் இயேசுவின் முன்னோடி.  


 இயேசுவும்   அதே வார்த்தைகளோடுதான் தனது  நற்செய்திப் பணியை ஆரம்பித்தார்.

நமது மொத்த ஆன்மீக வாழ்வு இந்த ஆரம்ப வசனத்திற்குள் அடங்கியுள்ளது.

ஆன்மீக வாழ்வின் ஆரம்பம் மனம் திரும்புதல்.

நோக்கம் விண்ணரசுக்குள் நுழைதல்.

சிந்தனை, சொல், செயல் மூன்றும் சேர்ந்தது தான் வாழ்க்கை.

சிந்தனையின் பிறப்பிடம் மனம்.

இயேசு பிறந்த அன்று வான தூதர்கள் 

"பூமியில் நல் மனதோற்கு சமாதானம்."

என்று வாழ்த்தினார்கள்.

சமாதானம்தான் உறவுக்கு அடிப்படை.

இறைவனோடும், நமது அயலானோடும் சமாதானமாய் வாழ்வது தான் விண்ணரசுக்குள்
நுழைவதற்கு ஒரே வழி.

 விண்ணரசுக்குள் நுழைய வேண்டுமானால் சமாதான வாழ்வு வேண்டும்.

சமாதான வாழ்வு வேண்டுமானால் 
சமாதானம் வேண்டும்.

சமாதானம் வேண்டுமானால் நல்ல மனம் வேண்டும்.

ஆக நல்ல மனம் இல்லாதவர்கள் விண்ணரசுக்குள் நுழைய முடியாது.

ஆகவேதான் மனம் திரும்புவதற்கு இயேசு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

இயேசு முக்கியத்துவம் கொடுப்பார் என்று தெரிந்து தான் ஸ்நாபக அருளப்பரும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.


"மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது."

"நல்ல மனம் உள்ளவர்களாக மாறுங்கள், 

ஏனெனில் நீங்கள் நுழைய வேண்டிய விண்ணரசு நெருங்கி விட்டது."

மனம் திரும்ப வேண்டும்.

எங்கிருந்து எங்கு நோக்கி திரும்ப வேண்டும்?

விண்ணரசுக்கு எதிரான அரசிலிருந்து மனம் விண்ணரசு நோக்கி திரும்ப வேண்டும்.

விண்ணரசுக்கு எதிரான அரசு எது?

இறைவன் நமது முதல் பெற்றோரை தன்னுடைய அரசில் தான் படைத்தார்.

ஆனால் இறைவனுக்கு எதிரியான சாத்தான் தந்திரமாக நமது முதல் பெற்றோரை பாவம் செய்யச் செய்து தனது அரசுக்குள் இழுத்து விட்டது.

மனுக் குலத்தை சாத்தானின் அரசிலிருந்து,

அதாவது பாவத்தின் பிடியிலிருந்து மீட்கவே இறைமகன்   மனிதனாய்ப் பிறந்தார்.

சாத்தானை, அதாவது பாவத்தை நோக்கி இருக்கிற மனதை இறைவனை நோக்கி திரும்பச் செய்ய வேண்டும். 

இதற்கு பெயர் தான் மனம் திரும்புதல்.

"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்."

பாவத்தை நோக்கி இருக்கிற மனதை இறைவனை நோக்கி திரும்பச் செய்ய வேண்டுமென்றால்

முதலில் பாவத்தை நோக்கி மனதை வைத்திருந்ததற்காக வருத்தப்பட வேண்டும்.

அதாவது செய்த பாவங்களுக்காக மனஸ்தாபப்பட வேண்டும்.

இனிமேல் பாவமே செய்வதில்லை என்று தீர்மானிக்க வேண்டும்.

பாவத்தை விட்டு இறைவனை நோக்கி திரும்பிய மனது பழையபடி பாவத்தை நோக்கி 
திரும்பக் கூடாது.

பாவ நாட்டத்தை விட்டால்தான் இறை அன்பில் வளர முடியும்.

பாவ நாட்டமும், இறையன்பும் சேர்ந்து பயணிக்க முடியாது.

மனதில் உதிக்கும் சிந்தனை பாவகரமாக இருந்தால் அது சொல்லிலும், செயலிலும் வெளிப்படும்.

மனம் பாவகரமாக சிந்தனையின் பிறப்பிடமாக இருந்தால் 

வாழ்க்கையும் பாவகரமானதாக இருக்கும்.

அத்தகைய வாழ்க்கையுடையோர் சாத்தானின் அரசுக்குள் நுழைவர்.

மனம் கடவுளைச் சார்ந்த  சிந்தனையின் பிறப்பிடமாக இருந்தால் 

வாழ்க்கையும் கடவுளைச் சார்ந்ததாகவே இருக்கும்.

கடவுளைச் சார்ந்த வாழ்க்கை உடையோர் கடவுளின் அரசுக்குள் நுழைவர்.

ஆக, கடவுளின் அரசுக்குள் நுழைய முதலில் பாவ நாட்டத்தை விட்டு  மனம் திரும்ப வேண்டும்.

சில மாணவர்கள் பாட புத்தகத்திற்கு பதிலாக ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களை நோக்கி ஆசிரியர் சொல்லுவார்,

"தேர்வு நெருங்கிவிட்டது, உங்களது பார்வையை பாடப் புத்தகத்தை நோக்கி திருப்புங்கள்."

இதையேதான் ஆண்டவர் ஆன்மீக வாழ்வில்,

" இறையரசு நெருங்கி விட்டது, உங்கள் மனதை இறைவனை நோக்கி  திருப்புங்கள்"

 என்று சொல்கிறார்.

இறைவனை நோக்கி திரும்பிய பின்பு மனது எப்போதும் இறைவனிடமே இருக்க வேண்டும்.

நமது மனதில் இறைவனைப் பற்றிய சிந்தனைகள் மட்டுமே எழ வேண்டும்.

இறைவனைப் பற்றிய சிந்தனைகள் மட்டும் இருக்கும் இடத்தில் பாவத்தை பற்றிய சிந்தனைகள் எழாது.

நமது பேச்சு இறைவனை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும்.

நமது செயல் இறைவனுக்கு ஏற்றதாக மட்டும் இருக்க வேண்டும்.

நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் இறைவனைப் பற்றி மட்டுமே இருக்க வேண்டுமென்றால் .

உலகத்தில் நமது உணவு, உடை, வேலை,  சம்பாதிப்பது போன்ற தேவைகளை எப்படி நிவர்த்தி செய்வது?

இறைவன் உலகைப் படைத்தது அவருக்காக அதை நாம் பயன்படுத்திக் கொள்ள. மிக முக்கியம் அவருக்காக.


உணவு, உடை, வேலை,  சம்பாதிப்பது போன்ற நமது தேவைகளை அவருக்காக நாம் நிவர்த்தி செய்யும்போது,

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் அவருக்காகவே வாழ்வோம்.

மண்ணகத்தில் நாம் வாழ்ந்தாலும்,

 விண்ணகத்திற்காக மட்டுமே வாழ்கிறோம்.

செய்த பாவங்களுக்காக மனம் வருந்துவோம்,

மனம் திரும்புவோம்,

விண்ணகத்தில் வாழும் இறைவனுக்காக மட்டுமே நாமும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment