தாயைப் போல் பிள்ளை.
(தொடர்ச்சி)
அர்ப்பண வாழ்வு: மரியாள் மூன்று வயதிலிலிருந்தே கோவிலில்தான் வளர்ந்தாள்.
மிகச் சிறிய வயதிலேயே மரியாள் தன்னை இறைப் பணிக்கு அர்ப்பணித்து விட்டாள்.
அவளது வாழ்நாளில் ஒரு வினாடி கூட தனக்காக வாழவில்லை.
வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே வாழ்வது என்று இறைவனுக்கு அவள் வார்த்தைப் பாடு கொடுத்து விட்டபடியால்,
அவளது கன்னிமைக்குப் பாதுகாவலாகத்தான்
வயதான விதவையாகிய (Widower) சூசையப்பரைத் தனது கணவராக ஏற்றுக் கொண்டாள்.
கபிரியேல் தூதர் மூலம் தான் மனுவுறு எடுக்கவிருக்கும் இறை மகனுக்கு தாயாக இருக்க இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற செய்தியை அறிந்தவுடன்,
"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின் படியே எனக்காகட்டும்"
என்ற வார்த்தைகள் மூலம் தனது அர்ப்பண வாழ்வைப் புதுப்பித்துக் கொண்டாள்.
ஒரு வினாடி கூட அவள் சுய விருப்பத்திற்காக வாழவில்லை.
அவளிடமிருந்து பிறந்திருப்பது இறை மகன் என்பது தெரிந்திருந்தும்,
ஏரோது மன்னன் குழந்தையைக் கொல்ல விருப்பதாக அறிந்த போதும்,
அவன் மீது நடவடிக்கை எடுக்க தன் மகனிடம் வேண்டவில்லை.
மாறாக வான தூதரின் அறிவுரையின் படி குழந்தையை எடுத்துக் கொண்டு சூசையப்பரோடு எகிப்துக்குச் சென்றாள்.
அங்கு மூவரும் அகதிகள் போல் வாழ்ந்தார்கள்.
கடவுளின் சித்தத்திற்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்து விட்டபடியால்,
கஷ்டங்கள் பல பட்டாலும்,
இறைவன் சித்தப்படி தான் வாழ்ந்தாள்.
சூசையப்பர் மரணிக்க நேர்ந்த போதும் அவரை காப்பாற்றும் படி இறை மகனிடம் அவர் வேண்டிக் கொள்ளவில்லை.
ஏனெனில் அது அவருடைய சித்தம்.
கடவுளுடைய சித்தம் என்பதால் தன்னுடைய அன்பு கணவனின் மரணத்தையே ஏற்றுக் கொண்டவள் நம் தாய்.
இயேசு சர்வ வல்லமை வாய்ந்த கடவுள் என்பது மரியாளுக்கு தெரியும்.
தான் சொன்னதைச் செய்வார் என்பதும் அவளுக்கு தெரியும்,
ஆனாலும் தனக்காக அவள் தன் மகனிடம் எந்த உதவியும் கேட்கவில்லை.
கானாவூர் கல்யாணத்தில் திருமண வீட்டாருக்காகத் தான் தன் மகனின் உதவியைக் கேட்டாள்
தன்னை முழுவதும் இறைப் பணிக்கு அர்ப்பணித்து விட்டதால் இறைவன் என்ன செய்தாலும் அதை மிகப் பணிவோடு ஏற்றுக்கொண்டாள்.
நமது பாவங்களுக்கு பரிகாரமாக
பத்து மாதம் வயிற்றில் சுமந்து, முப்பது ஆண்டுகள் வளர்த்த தன் அன்பு மகனையே விண்ணக தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுத்தவள் நம் தாய்.
சிலுவையியில் நின்று கொண்டிருந்தபோது தனது திருமகனின் விருப்பத்திற்கு ஏற்ப
நம்மை தனது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டவள் நமது தாய்.
அன்றிலிருந்து ஆன்மீக ரீதியாக நாம் அவளது பாதுகாப்பில் தான் வாழ்கிறோம்.
அன்னை மரியாளின் பிள்ளைகளாகிய நாம் எந்த அளவிற்கு அவளது அர்ப்பண வாழ்வைப் பின்பற்றி
நாமும் நம்மையே முற்றிலும் இறைவனுக்கு அர்ப்பணித்திருக்கிறோம்
என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நமது வாழ்வை முற்றிலும் இறை பணிக்கு அர்ப்பணித்திருந்தால் தான் நாம் அவளது பிள்ளைகள் என்று கூறுவதில் அர்த்தம் இருக்கிறது.
"அன்புள்ள இயேசுவே உம்மைப் பெற்ற தாயும்,
எங்களுக்கு நீர் தந்த தாயுமான அன்னை மரியாளை போல
நான் எனது வாழ்வு முழுவதையும் உமக்கு அர்ப்பணம் செய்கிறேன்.
எனது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் உமக்காகவே வாழ்வேன்.
என் மேல் உமக்குள்ள முழு உரிமையையும் ஏற்றுக் கொள்கிறேன்.
நீர் என் வாழ்வை எப்படி வழி நடத்தினாலும் அப்படியே நடப்பேன்.
என் வாழ்வு முழுவதும் உமக்குச் சொந்தமாகையால் நீர் எனக்கு என்ன செய்தாலும் அதை மகிழ்ச்சியோடும், நன்றியோடும் ஏற்றுக் கொள்கிறேன்.
இன்பமோ துன்பமோ,
இலாபமோ நட்டமோ,
வாழ்வோ சாவோ
என் வாழ்வில் எது நடந்தாலும் அதை உமது மகிமைக்காக முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறேன்."
என்ற மனநிலையோடு நம்மை முற்றிலும் இறைவனுக்குப் அர்ப்பணித்திருக்கிறோமா?
வெறும் வாயினால் அல்ல, வாழ்க்கையினால்.
சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் அர்ப்பணித்திருந்தால்
நமது ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் (Peace) நிறைந்திருக்கும்.
அர்ப்பண வாழ்வில் ஆசைகள் எப்படி நிறைவேறும்?
தங்களை இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்வோர் இறைவன் சித்தம் நிறைவேற வேண்டும் என்று தான் ஆசைப்படுவர்.
தங்கள் வாழ்வில் எது நடந்தாலும் அது இறைவன் சித்தப்படியே நடக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வோர்,
எது நடந்தாலும் தங்களது ஆசை நிறைவேறிவிட்டது என்று ஏற்றுக் கொள்வார்கள்.
ஆசைப்பட்டது நிறைவேறும் போது மனதில் மகிழ்ச்சி குடியேறும்.
வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
உலகமே அழிந்தாலும் அவர்கள் தங்கள் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் இழக்க மாட்டார்கள்.
ஏனெனில் அதுவும் இறைவன் சித்தம் என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால், நாம் நமது அன்னையை வியாகுல அன்னை (Our Lady of sorrows) என்று அழைக்கிறோம். ஏன்?
(தொடரும்)
லூர்து செல்வம்
No comments:
Post a Comment