Saturday, December 24, 2022

கிறிஸ்மஸ் சிந்தனைகள்.

கிறிஸ்மஸ் சிந்தனைகள்.

அனைவருக்கும் கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.



  தான் மனித உரு எடுப்பதற்காக பாவ மாசு மருவற்ற அன்னையைத் தேர்ந்து கொண்ட இறைமகன் இயேசு,

வித்தியாசமான வம்ச தலை முறையைத் தேர்ந்து கொண்டார்.
   
மத்தேயு "தாவீதின் மகனும், ஆபிரகாமின் மகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணையாவது: " என்று நற்செய்தியை ஆரம்பிக்கின்றார்.

தலைமுறை அட்டவணையை ஆபிரகாமில் ஆரம்பித்து சூசையப்பரோடு முடிக்கிறார்.

சூசையப்பருக்கும், இயேசுவுக்கும் எந்தவித இரத்த சம்பந்தமும கிடையாது.

ஆக, பழைய ஏற்பாடு சூசையப்பரோடு முடிவடைகிறது.

புதிய ஏற்பாடு இயேசுவை கருத்தரித்த அன்னை மரியாளுடன் ஆரம்பிக்கிறது.

சூசையப்பருக்கும், அன்னை மரியாளுக்கும் திருமண ஒப்பந்த உறவு மட்டும் உள்ளது.

சூசையப்பரைப் போலவே அன்னை மரியாளும் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவள் தான்.

ஆகவே மரியாள் பெற்றெடுத்த இயேசுவும் தாவீது வம்சத்தினர் தான்.

இயேசுவின் அருளால் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த அனைவரும் அன்னை மரியாளின் பிள்ளைகள். .

நமது தலைமுறை உறவு அன்னை மரியாளில் ஆரம்பித்து உலகம் முடியும் வரை தொடர்ந்து விரிந்து கொண்டே செல்லும். 

இந்த தலை முறை உறவு இரத்த சம்பந்தப்பட்டது அல்ல.

இறைவனின் அருள் சம்பந்தப்பட்டது.

ஆபிரகாமையிலிருந்து சூசையப்பர் வரை குறிப்பிடப்பட்டிருக்கிற 
பழைய ஏற்பாட்டு தலை முறை அட்டவணையை வாசிக்கும் போது

 இயேசு பாவிகளை தேடியே உலகிற்கு வந்தார் என்ற உணர்வு நம்மை அறியாமலேயே ஏற்படுகிறது.

'தாவீதின் மகனும்' என்று அட்டவணை ஆரம்பமாகிறது.

தாவீதை பற்றிய சில உண்மைகளைத் தெரிந்து கொண்டால்

ஏன் இயேசு தாவீதின் வம்சத்தில் பிறக்க ஏன் திட்டமிட்டார் என்பது புரியும்.

"யீசாயின் மகன் தாவீது என் மனத்துக்கு உகந்தவனாய் இருக்கக் கண்டேன். நான் விரும்பியதெல்லாம் அவன் செய்வான் "   .(அப்.13:22)

என்று கடவுள் கூறுவதாக புனித சின்னப்பர் கூறுகிறார்.

ஆனால்,
ஊரியாசின் மனைவியைக் கெடுத்து, அவனைக் கொலை செய்வித்த தாவீதின் பாவச்செயல் ஆண்டவருக்கு மனவருத்தம் அளித்ததாக இறைவாக்கு    
(2 சாமு.11:27) கூறுகிறது. 

இயேசுவின் தலைமுறை அட்டவணையில் மத்தேயு, "தாவீதுக்கு சாலமோன் பிறந்தார்" என்று குறிப்பிடாமல்,

"தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் சாலமோன் பிறந்தார்"

என்று குறிப்பிடுகிறார்.

தாவீது செய்த பாவத்தையும்,
உரியாவின் மனைவி செய்த பாவத்தையும் மத்தேயு மறைக்கவில்லை.

இதே தாவீதைத்தான் சின்னப்பர்,

''யீசாயின் மகன் தாவீது என் மனத்துக்கு உகந்தவனாய் இருக்கக் கண்டேன்."என்று ஆண்டவர் கூறுவதாகக் கூறுகிறார்.

தான் செய்த பாவத்திற்காக தாவீது மனம் வருந்தி அழுது கடவுளிடம் மன்னிப்பு கேட்ட போது கடவுள் அவரது பாவத்தை மன்னித்தார்.

தன் பாவத்தால் ஆண்டவருக்கு மனவருத்தம் அளித்த தாவீது பாவ மன்னிப்பு பெற்றவுடன்

அவருடைய மனத்துக்கு உகந்தவராய் மாறினார்.

 பாவிகளைத் தேடி அவர்களை மன்னிப்பதற்காகவே இயேசு உலகிற்கு வந்தார் என்பதை நமக்கு புரிய வைக்கவே,

அவர் மனம் திரும்பிய ஒரு பாவியின் வம்சத்தில் பிறக்க திட்டமிட்டார்.

பாவிகளாகிய நமது பிரதிநிதியாக தாவீது நிற்கிறார். 

அவர் மனம் திரும்பியது போல நாமும் மனம் திரும்ப வேண்டும்.

மனம் திரும்பிய தாவீதின் வம்சத்தில் இயேசு பிறந்தது போல,

மனம் திரும்பி பாவமன்னிப்பு பெற்ற நமது உள்ளத்திலும் இயேசு பிறக்க வேண்டும்.

இதை வலியுறுத்தவே நற்செய்தியாளர் 

"தாவீதின் மகனும்"

என்று தலைமுறை அட்டவணையைத் துவக்குகிறார்.

நமது உள்ளத்தில் இயேசு பிறந்தால் நமக்கும் அவர் மகன் ஆகி விடுகிறார்.

பாவம் இல்லாத தூய உள்ளதோடு நாம் இயேசு பிறந்தநாளை கொண்டாடினால்,

"எனது உள்ளத்தில் பிறந்த இயேசுவின் விழா".

என்று மன மகிழ்ச்சியோடு சொல்லலாம்.

இப்போது குழந்தை இயேசு பேசுகிறார். செவிமடுப்போம்.

"என்னால் படைக்கப்பட்ட அன்பு மக்களே,

உங்களது முதல் பெற்றோரை பாவ மாசு இல்லாத பரிசுத்தர்களாகவே படைத்தேன்.

ஆனால் அவர்கள் என் சொல்லை மறந்து சாத்தானின் சொல்லைக் கேட்டு பாவ குழியில் விழுந்தார்கள்.

 அதோடு மனுக்குலமே விழுந்து விட்டது.

மனிதர்களை பாவத்திலிருந்து மீட்டு பரிசுத்தர்களாக மாற்ற 

நான் விண்ணகத்திலிருந்து இறங்கி உங்களை தேடி வந்திருக்கிறேன்.

பாவ மாசு மருவில்லாத அன்னை மரியாளின் வயிற்றில் இருந்து குழந்தையாய் பிறந்த நான்

 பாவிகளாகிய உங்களின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து,

 மாட்டுத் தொழுவத்தில் தீவனத் தொட்டியில் படுத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னிடம் வந்து, உங்களது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று,

பரிசுத்தர்களாக உங்கள் இல்லங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்பது என் ஆசை.

அடுத்தவன் மனைவியைக் கெடுத்து, அவனைக் கொலை செய்வித்த மிகப்பெரிய பாவியாகிய 'தாவீதையே மன்னித்த கடவுள் நான்.

நீங்கள் எவ்வளவு பெரிய பாவங்களை,
 எத்தனை முறை செய்திருந்தாலும்,

பயப்படாமல் என்னிடம் வாருங்கள்.

நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது பாவத்திற்கான மனஸ்தாபத்தை முன்னிட்டு

 உங்கள் கண்களிலிருந்து வரும் கண்ணீரை மட்டும்தான்.

என் முன்னிலையில் நீங்கள் விடும் கண்ணீர் உங்களது அத்தனை பாவங்களையும் சுத்தமாகக் கழுவி விடும்.

நீங்கள் நான் பிறந்த நாளை விழாவாக கொண்டாடுவது

 உங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்று பரிசுத்தர்களாக மாறுவதற்காக மட்டுமே.

அதற்காகத்தான் பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தை ஏற்படுத்தியிருக்கிறேன்.

பிறந்தநாள் பரிசாக நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது உங்களது மனஸ்தாபத்தை மட்டுமே.

மாசு மருவற்ற அன்னை மரியாளின் வயிற்றிலிருந்து பிறந்தது போலவே,

பரிசுத்தமான உங்களது உள்ளத்திலும் பிறக்க ஆசைப்படுகிறேன்.

எனது ஆசையை நிறைவேற்றுங்கள்."

குழந்தை இயேசுவின் ஆசையை நிறைவேற்றுவோம்.

அனைவருக்கும் எனது கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment