",மேமே......."
"என்னடா?"
",கிறிஸ்மஸ் வரப்போகுது, தெரியாதா?"
"தெரியுமே. நாம் அதற்காக தானே தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
நம்மை வாங்குவதற்கு எத்தனை பேர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் பாத்தியா?
நாம் இல்லாவிட்டால் கிறிஸ்துமஸ் சாப்பாடு இல்லையே."
",நாம் யார் தெரியுமா?"
"அதுவும் தெரியுமே. இயேசு பிறந்த போது நம்மை வளர்ப்பவர்களுக்குத் தான் முதல் முதல் விண்ணிலிருந்து இயேசு பிறந்த செய்தி கொடுக்கப்பட்டது.
இயேசு பாலனை முதல் முதல் பார்க்கச் சென்றவர்களும் நம்மை வளர்க்கின்ற இடையர்கள் தான்.
நமது முன்னோர்களாகிய ஆடுகள் தான் அவர்களோடு மனிதனாய் பிறந்த கடவுளை பார்க்கச் சென்றன.
இயேசுவைப் பெற்ற தாய்க்குக் கூட நமது முன்னோர்கள் பால் கொடுத்து உதவியிருக்கிறார்கள்."
",அது மட்டுமல்ல. இயேசு கூட தன்னை ஒரு நல்ல ஆயனுக்கும் தன்னை பின்பற்றுகிறவர்களை ஆடுகளுக்கும் ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.
அருளப்பர், இயேசுவை முதல் முதலில் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் போது,
"இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்."
என்று அவரை நம்மோடு ஒப்பிட்டு தான் பேசியிருக்கிறார்.
இன்று கூட கிறிஸ்தவர்கள் அவர்களுடைய வழிபாட்டின் போது,
"இதோ இறைவனுடைய ஆட்டுக்குட்டி, உலகத்தின் பாவங்களை போக்க வந்தவர்."
என்று இயேசுவை நம்மோடு ஒப்பிடுகிறார்கள்."
",இவ்வளவு பெருமை வாய்ந்த
நம்மில் எத்தனை லட்சம் பேர் உலகம் பூராவும் கொல்லப்பட போகிறோம் தெரியுமா?
அதுவும் இயேசு பிறந்த திருநாளை ஆடம்பரமாக கொண்டாடுவதற்காக!
இந்த மனிதர்களை நினைத்தால் எனக்கு சிரிப்பும் வருகிறது, அழுகையும் வருகிறது.
இறைவனின் ஆட்டுக்குட்டி பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஆட்டுக்குட்டிகளையே கொல்லப் போகிறார்கள் என்பதை நினைத்தால் சிரிப்பு வருகிறது.
மனிதர்களுடைய பரிதாபகரமான நிலையை நினைத்தால் அழுகையும் வருகிறது."
"என்ன பரிதாபகரமான நிலை?"
",இயேசு உலகில் எதற்காக மனிதனாகப் பிறந்தார்?"
"உலகின் பாவங்களைப் போக்க பாடுகள் பட்டு தன்னையே பலியாக்குவதற்காக உலகில் மனிதனாய் பிறந்தார்."
",தங்களுக்காக பலியாகிய இயேசுவுக்காக தங்களையே
பலியாக ஒப்புக் கொடுப்பதற்கு பதிலாக,
ஒரு பாவமும் அறியாத நம்மை பலியாக்கி பிரியாணி போட்டு சாப்பிடுகிறார்களே
இதைவிட வேறு எந்த பரிதாபம் இருக்க முடியும்?"
"ஒரு காலத்தில் நம்மை கடவுளுக்கு பலியாகக் கொடுத்தார்கள்.
அதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
ஆனால் மனிதனாகப் பிறந்த கடவுள் இயேசு தன்னையே தன் தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுத்தார்.
இந்த மனிதர்கள் அதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். சந்தோசம்.
இவர்களும் கிறிஸ்துமஸ் அன்று கோவிலுக்குப் போய் மகன் இயேசுவை தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுத்து விட்டு,
அவரையே தங்கள் ஆன்மீக உணவாக உண்டு விட்டு,
வீட்டுக்கு வந்து நம்மை தங்களுக்குப் பலியாக்குகிறார்கள்.
இயேசு உண்ணவும், குடிக்கவுமா உலகுக்கு வந்தார்?
மக்களுக்காகப் பாடுகள் படவும் மரிக்கவும் தானே உலகுக்கு வந்தார்!
அவருக்கு நன்றியாக,
அவர் கூறியது போல
உணவில்லாத ஏழைகளுக்கு உணவு கொடுத்து உதவுவதற்குப் பதிலாக,
மட்டன் பிரியாணி போட்டு தங்கள் வயிற்றையே நிரப்பி கொள்கிறார்கள்.
அதற்கு நாம் உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கிறது."
",கிறிஸ்மஸ் விழாவின் போது
கிறிஸ்து மக்களுக்காகப் பிறந்தது போல மக்கள் மற்றவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும்.
உணவு இல்லாதவர்களுக்கு உணவு கொடுக்கலாம்.
உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுக்கலாம்.
இருப்பிடம் இல்லாதவர்களுக்கு தங்க இடம் கொடுக்கலாம்.
சுகம் இல்லாதவர்களுக்கு மருந்து வாங்கிக் கொடுக்கலாம்.
இவற்றைச் செய்தால் பிறந்த இயேசு மகிழ்ச்சி அடைவார்.
அதை விட்டுவிட்டு தங்கள் வயிற்றை நிரப்புவதிலே குறியாக உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை."
"ஏ, இங்கே பார், நம்மை விலை பேசி முடித்து விட்டார்கள்.
25 ஆம் தேதி கிறிஸ்மஸ் அன்று கசாப்பு கடையில் இருப்போம்.
எதிரிகளை நேசியுங்கள் என்று கிறிஸ்து மக்களுக்கு போதித்திருக்கிறார்.
கசாப்புக்கடையிலிருந்து
நம்மை வாங்கி பிரியாணி போடுபவர்கள் தான் நமது எதிரிகள்.
அவர்களது வயிற்றை நிரப்புவோம்.
என்றாவது ஒருநாள் அவர்கள் மனம் திருந்துவார்கள்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment