Monday, December 26, 2022

"பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்றான்."(மத். 2:16).

."பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்றான்."
(மத். 2:16).

"தாத்தா, உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்துதான் வந்தேன்..

ஆனால் வந்து கொண்டிருக்கும் போதே அதைப்பற்றி தியானித்துக் கொண்டே வந்தேன்.

கேள்விக்குறிய விடை கிடைத்துவிட்டது.

ஆகவே கேள்வி கேட்கும் எண்ணத்தை விட்டு விட்டேன்."

"'பரவாயில்லை, நானும் உன் கேள்வியையும் பதிலையும் தெரிந்து கொள்கின்றேனே."

"இயேசுவைப் பார்க்க வந்த கீழ்த் திசை ஞானிகள் ஆண்டவருடைய தூதரின் வார்த்தைகளைக் கேட்டு வேறு வழியில் ஊருக்கு சென்று விட்டார்கள். 

திருக் குடும்பமும்  இறைத்தூதரின் சொல்லுக்கு இணங்க எகிப்துக்குச் சென்று விட்டார்கள்.

ஏரோது மன்னன் பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம்
கொன்று விட்டான்.

நான் கேட்க நினைத்த கேள்வி,

தன்னை ஏதோதுவின்  கொலைத் திட்டத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள
 குடும்பத்துடன் எகிப்துக்கு சென்ற இயேசு,

ஏன் மாசில்லாத குழந்தைகளை காப்பாற்றாமல் விட்டுவிட்டார்?"

"'இதைப் பற்றி எப்படி தியானித்து என்ன பதிலுக்கு வந்தாய்?"

"இயேசுவுக்காக உயிரைக் கொடுப்பவர்கள் வேத சாட்சிகள்.

வேத சாட்சிகளுக்கு மோட்ச பேரின்ப வாழ்வு உறுதி.

வேத சாட்சிகளாக மரிக்கும் வாய்ப்பைப் பெற்ற மாசில்லாக் குழந்தைகள் உண்மையிலேயே பாக்கியவான்கள்.

வளர்ந்து சங்கடப்பட்டு சம்பாதிக்க வேண்டிய மோட்ச பாக்கியத்தை

 எந்தவித சங்கடமுமின்றி, 

ஒரே வெட்டில், 

தங்களுக்கு தந்ததற்காக

 அவர்கள் இப்பொழுது மோட்சத்தில் இயேசுவுக்கு இடைவிடாது நன்றி கூறிக் கொண்டேயிருப்பார்கள்.

எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது."

"'உண்மையாகவா?"

"இப்பொழுது நாம் எத்தனை சோதனைகளோடு போராடி இயேசுவுக்காக வாழ வேண்டி இருக்கிறது.

அவர்கள் ஒரு போராட்டமும் இல்லாமல் மோட்சத்திற்கு ஏற்றவர்களாக மாறிவிட்டது அவர்களுக்கு கிடைத்த பாக்கியம்.

தாத்தா, கடவுள் நம்மை ஏன் நேரடியாக மோட்ச நிலையிலேயே படைத்திருக்கக் கூடாது?"

"'இது கடவுளிடம் கேட்க வேண்டிய கேள்வி.

என்னிடம் கேட்டால் கிடைக்கும் ஒரே பதில்:

"கடவுள் சித்தம் நமது பாக்கியம்."

"இயேசுவுக்காக மரித்துதான் வேத சாட்சியாக வேண்டுமா?

வேத சாட்சியாக வாழ முடியாதா?"

"'முடியும் மட்டுமல்ல, வேண்டும்.
நம்மை பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைப் பார்க்கும் படியாக வாழ்வதே சாட்சிய வாழ்க்கை.

மற்றவர்களது நலனுக்காக வாழ்வதின் மூலமும்,

நம்மை வெறுப்பவர்களை நேசிப்பதின் மூலமும்,

நமக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வதின் மூலமும்,

நமக்கு எதிராக குற்றம் செய்பவர்களை மன்னிப்பதன் மூலமும்,

மற்றவர்கள் நலம் பெற நம்மையே தியாகம் செய்வதின் மூலமும்

நாம் வேத சாட்சிகளாக வாழ வேண்டும்."

"வாழ்கிறோமா?"

"'வாழ்கிறோமா? என்று கேட்காமல்

வாழ்கிறேனா? என்று ஒவ்வொருவரும் அவரவரைப் பார்த்து கேட்டு பதில் காண வேண்டும்."

"வாழ்ந்தாலும், தாத்தா, பார்க்கிறவர்கள் அவர்களது கண்களைக் கொண்டு தானே பார்க்கிறார்கள்.

கண்களில் கோளாறு இருந்தால் எல்லாம் கோளாறாகத்தான் தெரியும்."

"'நாம் வாழ்வது கடவுளுக்காக  மட்டும்தான்.

மற்றவர்களுக்கு முன் மாதிரிகையாக வாழ வேண்டும்.

உலகில் நல்ல பார்வை உள்ளவர்களும் இருக்கிறார்கள், கோளாறான பார்வை உள்ளவர்களும் இருக்கிறார்கள்.


இயேசுவைப் பற்றியே சிமியோன்

"இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ,

 எழுச்சியாகவோ அமைந்துள்ளான்"
 என்றார்.

இயேசு நற்செய்தியை அறிவித்த போது 

அவரை ஏற்றுக் கொண்டவர்களும் இருந்தார்கள்,

 அவரைக் கொல்ல நினைத்தவர்களும் இருந்தார்கள்.

ஆனால் இயேசு எல்லோருக்கும்தான் நற்செய்தியை அறிவித்தார்.

நாமும் சாட்சிய வாழ்வு வாழும் போது ஏற்றுக் கொள்பவர்களும் இருப்பார்கள்,

 ஏற்றுக்கொள்ளாதவர்களும் இருப்பார்கள்.

ஆனாலும் நாம் வாழ வேண்டிய படி 

நம் ஆண்டவருக்கு சாட்சிய வாழ்வு வாழ வேண்டும்.

இயேசுவுக்காக 

வாழ்வோம், 

மரிப்போம்,

நிலைவாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment