Sunday, December 4, 2022

""நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து, உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு, வீட்டிற்குப்போ" (லூக்.5:24)

"நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து, உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு, வீட்டிற்குப்போ" 
(லூக்.5:24)

"தாத்தா, இறைமகன் தனது பாடுகள் மூலமும், சிலுவை மரணத்தின் மூலமும் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து

நம்மை மீட்கத்தானே மனு மகனாய்ப் பிறந்தார்."

", ஆமா, அதில் இப்போ உனக்கு என்ன பிரச்சனை?"

"யாருக்கும் பிரச்சனை இல்லை.

பாடுகள் பட்டு, மரித்து, உயிர்க்க அவர் எடுத்துக் கொண்டது அவரது உலக வாழ்வின் கடைசி நான்கு நாட்கள் மட்டுமே.

மூன்று ஆண்டுகள் அவர் வாழ்ந்த பொதுவாழ்வில் நற்செய்தி அறிவித்தது நமது ஆன்மீக மீட்புக்கு வழிகாட்ட.

ஆனால் நமது உடல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குவதில் அதிக ஆர்வம் காட்டி, அநேக புதுமைகள் செய்தது ஏன்?

நமக்கு வரும் சிலுவைகளைச் சுமக்க அவரே அறிவுரை கூறியிருக்கிறார்.

நோய் வடிவில் வந்த சிலுவைகளைச் சுமக்க அனுமதித்திருக்க வேண்டியதுதானே."

",நோயாளிகளின் நோய்களை குணமாக்கியவுடன் இயேசு என்ன சொல்வது வழக்கம்?"

"உனது விசுவாசம் உன்னை குணமாக்கிற்று."

'',குணமாக்கியது யார்?"

"இயேசு."

", ஏன் "உனது விசுவாசம் உன்னை குணமாக்கிற்று.'' என்றார்.

"அவர் மீது விசுவாசம் உள்ளவர்களை பார்த்து தானே அவ்வாறு கூறினார்.

அவர் மீது விசுவாசம் இல்லாதவர்கள் அவரிடம் சுகம் கேட்டு வந்திருக்க மாட்டார்கள்.

படிப்பில் ஆர்வம் காட்டி நன்கு படித்து நன்கு தேர்வு எழுதி வெற்றியை பெற்றவனைப் பார்த்து,

''உனது ஆர்வம் உனக்கு வெற்றியை தந்தது''

என்று நாம் சொல்வதில்லை?

உண்மையில் வெற்றியை கொடுத்தது நன்கு தேர்வு எழுதியதுதானே!

விசுவசித்து கேட்ட சுகம், விசுவாசத்தால் கிடைத்த சுகம்."

",ஆன்மீக வாழ்வுக்கு அடிப்படை விசுவாசம். 

விசுவாசம் தானே வருவதில்லை.

அது இறைவன் கொடுக்கும் நன்கொடை.

அந்த நன்கொடையை ஏற்றுக் கொண்டவர்கள் விசுவசிக்கிறார்கள்.

நோய் சுகம் அடைய வந்தவர்கள் அவர்களுக்கு இயேசு கொடுத்த நன்கொடையாகிய விசுவாசத்தை ஏற்றுக் கொண்டவர்கள்,

இயேசு முதலில் விசுவாசத்தை இலவசமாக கொடுக்கிறார்.

அதை ஏற்றுக் கொண்டவர்கள் அவரை நோக்கி வந்து குணம் பெறுகிறார்கள்.

ஆண்டவரும் "உனது விசுவாசம் உன்னை குணம் ஆக்கிற்று" என்கிறார்.

"நான் உனக்கு விசுவாசத்தைத் தந்தேன், மகனே.

 நீ அதை ஏற்றுக் கொண்டாய்.

நான் தந்ததை ஏற்றுக் கொண்டதற்கு சன்மானமாக சுகத்தைப் பெற்றுக் கொள்.

நான் தந்த விசுவாசப்படி நீ வாழ்ந்தால் உனக்கு நித்திய பேரின்ப வாழ்வு சன்மானமாகக் கிடைக்கும்."

இது இயேசு வெளிப்படையாக சொல்லாமல் சொன்ன வார்த்தைகள்.

நான் சொல்ல வருவது உனக்கு புரிகிறதா?"

"நன்றாகவே புரிகிறது.

வயலில் பயிர் செய்யும் விவசாயி முதலில் நிலத்தை பயன்படுத்தி விதையை விதைக்கிறான்.

பிறகு நீர் பாய்ச்சி விதையை முளைக்க வைத்து வளர்க்கிறான்.

வளர்ந்த பயிர் அதன் பலனை தரும்போது அறுவடை செய்கிறான்.

அதேபோல இயேசுவும் தான் அறிவித்த நற்செய்தியின் மூலம் மக்களின் நிலமாகிய மனதை பக்குவப்படுத்துகிறார்.

அடுத்து விசுவாசமாகிய விதையை விதைக்கிறார்.

தனது அருள் வரத்தால் அதை வளர்க்கிறார்.

விசுவாச வாழ்வாகிய பயிர் வளர்கிறது.

விசுவாச வாழ்வால் சம்பாதித்த புண்ணியங்களால் ஆகிய விளைச்சலை இறைவன் அறுவடை செய்து நித்திய பேரின்ப வாழ்வில் சேர்க்கிறார்.

இன்று விசுவசிக்கிறவன் நாளை நித்திய பேரின்பத்தை அனுபவிப்பான்.

"சரியா, தாத்தா?".

", Super சரி. திமிர்வாதம் கொண்ட ஒருவனைக் குணமாக்கிய புதுமையை

மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று மறைநூல் அறிஞரும் பரிசேயரும் உணர்வதற்காகச் செய்தார்.

முதலில் விசுவசித்த நோயாளியை நோக்கி,

"அன்பனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"

என்றார்.

பாவங்களை மன்னிக்க கடவுளுக்கு மட்டும்தான் அதிகாரம் உண்டு என்று எல்லோருக்கும் தெரியும்.

தான் கடவுள் என்பதை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க இந்த புதுமையை செய்தார். 

மனு மகனாகிய தான் பாவங்களை மன்னிக்க அதிகாரம் உள்ள சர்வ வல்லவ கடவுள் என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த புதுமையை செய்தார்.

"மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"--

 திமிர்வாதக்காரனை நோக்கி-

 "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து, உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு, வீட்டிற்குப்போ" என்றார். ( லூக்.5:24)

அவரது இவ்வுலக வாழ்வின் கடைசி நான்கு நாட்களில் பாவப் பரிகாரமாக தான் செய்யப் போவதின் பலனை அடைய

 மக்களை ஆன்மீக ரீதியாக தயாரிப்பதற்காகத்தான் அவருடைய நற்செய்தி அறிவிப்பும், புதுமைகளும்."

" விளையாட்டில் ஆர்வம் உள்ளவன் சதா விளையாடிக் கொண்டிருப்பான். 

ஆனால், இயேசு புதுமைகள் செய்யும் ஆர்வத்தில் புதுமைகள் செய்யவில்லை.

 பாவத்திலிருந்து மீட்பு பெற மக்களை ஆன்மீக ரீதியாக தயாரிப்பதற்காகத்தான் இயேசு புதுமைகள் செய்தார்.

இவ்வுலகில் அவர் பிறந்ததும், வாழ்ந்ததும் மரித்ததும் நமது மீட்புக்காக மட்டுமே."

",நாம் பிறந்ததும், வாழ்வதும், மரிக்கப் போவதும் அதற்காகத்தான்.

நமது வாழ்விலும் இயேசு அனேக புதுமைகளை செய்திருப்பார்.

தனது அன்னையின் மூலமாகவும், மற்ற புனிதர்களின் மூலமாகவும்

 இயேசு இன்னும் புதுமைகள் செய்து கொண்டிருக்கிறார்.

அவற்றின் மூலம் நாம் ஆன்மீக ரீதியாக பயன்பெற வேண்டும்.

அதற்கான அருள் வரம் வேண்டி இறைவனை மன்றாடுவோம்.

"எழுந்து, உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு, வீட்டிற்குப்போ" 
என்று சொன்ன இயேசு,

நம்மை நோக்கி,

"உனது உடலை பூமியில் விட்டுவிட்டு நீ விண்ணகத்திற்கு வா"

என்று  அழைக்கும் போது நாம் செல்ல தயாராக இருக்க வேண்டும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment