தாயைப் போல் பிள்ளை.
"தாயைத் தண்ணீர்க் கிணற்றில் பார்த்தால் மகளை வீட்டில் போய்ப் பார்க்க வேண்டாம்."
என்பது தமிழ் பழமொழி.
தாயின் அத்தனை குணங்களும் அப்படியே மகளுக்கும் இருக்கும் என்பது நமது எதிர்பார்ப்பு.
எதிர் மாறாகக் குணங்கள் இருந்தால்,
"நீ அவளுடைய மகள் தானா, அல்லது மருத்துவமனையில் குழந்தை மாறிவிட்டதா?" என்று கூட சிலர் கேட்பார்கள்.
நாம் அன்னை மரியாளை,
"எங்கள் அன்னை"
என்று பெருமையாக சொல்கிறோம்.
நமது அன்னையின் அத்தனை குணங்களும் நம்மிடமும் இருந்தால் தான் நாம் உண்மை பேசுபவர்கள்,
இல்லாவிட்டால் நாம் பொய்யர்கள்.
நாம் உண்மை பேசுபவர்களா, அல்லது, பொய்யர்களா என்பதை நமது அன்னையைப் பற்றி தியானித்துக் கண்டறிவோம்.
அன்னை சென்ம பாவம் மாசு இன்றி உற்பவித்தவர்கள்.
வாழ்நாள் முழுவதும் ஒரு பாவமும் செய்யாதவர்கள்.
அருள் நிறைந்தவர்கள்.
இது இறைவன் மனுக் குலத்தில் யாருக்கும் கொடுக்காமல் அவர்களுக்கு மட்டும் கொடுத்த விசேசமான வரம்.
இது விசயத்தில் நம்மை நமது அன்னையோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது.
ஏனெனில் அவர்கள் கடவுளைப் பெற்றவர்கள்.
நாம் நிறைவானவர்கள் அல்ல.
We are not perfect.
நிறைவை நோக்கி பயணிப்பவர்கள்.
கடவுள் ஒருவரே நிறைவானவர்.
ஏனெனில் அவர் ஒருவரே அளவில்லாதவர்.
படைக்கப்பட்ட அனைவரும் அளவுள்ளவர்களே.
அளவுள்ள எதுவும் அளவற்றதுக்கு ஈடாக முடியாது.
நாம் ஒருபோதும் கடவுளுக்கு ஈடாக முடியாது.
ஆனாலும் இயேசு நம்மை நோக்கி,
"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
என்று சொல்கிறார்.
நம்மால் எப்படி வானகத் தந்தை நிறைவு உள்ளவராய் இருப்பது போல இருக்க முடியும்?
இதை நாம் தனியாக உட்கார்ந்து நமது சக்தியை மட்டும் பயன்படுத்தி எவ்வளவு நேரம் ஆராய்ச்சி செய்தாலும் அதற்குரிய விடை நமக்கு கிடைக்காது.
கடல் நீரை முழுவதும் கைத் தம்ளருக்குள் கொண்டுவர நம்மால் முடியுமா?
நம்மால் முடியாததை ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு இயேசு சொன்னதை அப்படியே செய்தால் போதும்.
இயேசு சொல்கிறார்..
''அயலானுக்கு அன்பு: பகைவனுக்கு வெறுப்பு" என்று சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.
நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்.
அப்பொழுது வானகத்திலுள்ள உங்கள் தந்தையின் மக்களாயிருப்பீர்கள்.
அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரோனை உதிக்கச் செய்கிறார்.
நீதியுள்ளோர் மேலும் நீதியற்றோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்.
உங்களுக்கு அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்தால், உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்?
ஆயக்காரரும் இவ்வாறே செய்வதில்லையா?
உங்கள் சகோதரருக்கு மட்டும் வணக்கம் செய்வீர்களாகில், நீங்கள் என்ன பெரிய காரியம் செய்கிறீர்கள்?
புறவினத்தாரும் இவ்வாறே செய்வதில்லையா?
ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
( மத். 5:43 -48)
வானகத் தந்தை எல்லோரையும் அன்பு செய்கிறார்.
நல்லவர்களை அன்பு செய்வது போலவே கெட்டவர்களையும் அன்பு செய்கிறார்.
தன்னை நம்புகிறவர்களை அன்பு செய்வது போலவே நம்பாதவர்களையும் அன்பு செய்கிறார்.
தன்னை அன்பு செய்கிறவர்களை அன்பு செய்வது போலவே, தன்னை வெறுப்பவர்களையும் அன்பு செய்கிறார்.
வானகத் தந்தையை போலவே நாமும் எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும்.
நம்மை பகைக்கின்றவர்களையும் நாம் அன்பு செய்ய வேண்டும்.
நமக்கு துன்பம் கொடுக்கின்றவர்களையும் அன்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்தால் நாம் வானக தந்தையின் விருப்பத்திற்கு இணங்க நாம் செயல்படுகிறோம்.
தந்தையின் விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்றுக் கொள்கிறோம்.
இறைவனின் அன்பை முழுமையாக ஏற்று,
அதாவது அளவுள்ள நாம் நம்மால் எவ்வளவு முடியுமோ,
(To the maximum level)
அவ்வளவு ஏற்று, செயல்பட்டால்
நிறைவு என்ற விசயத்தில் நாம் தந்தையை போலாகிறோம்.
கடல் நிறைய தண்ணீர் இருக்கிறது.
ஒரு சிறிய தம்ளர் நிறையவும் தண்ணீர் இருக்கிறது.
நிறைவு என்ற விசயத்தில் கடலும், தம்ளரும் ஒன்று போல் ஆகின்றன.
இப்போது நமது அன்னையை பார்ப்போம்.
வானகத் தந்தை நிறைவானவர்.
நமது அன்னை அருள் நிறைந்தவள்.
நாம் நமது அன்னையின் குணங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டால்,
தாயைப் போல பிள்ளையாக மாறிவிடுவோம்.
"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
என்ற நமது ஆண்டவரின் அறிவுரையை பின்பற்றுவர்களாக மாறிவிடுவோம்.
அன்னையின் எந்த குணங்களை நமது குணங்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்?
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment