Wednesday, December 7, 2022

டிசம்பர் 25. நிகழ்வும், விழாவும்

டிசம்பர் 25.  நிகழ்வும், விழாவும்.

டிசம்பர் 25ல் நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் விழாவை பற்றி தியானிக்கு முன்

அதற்குக் காரணமான,
 2023 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வை முதலில் தியானிப்போம். 

பெத்லகேம் நகரில் பெரியவர் ஒருவர் ஒரு நிறை மாத கர்ப்பிணியைக் கழுதையில் ஏற்றிக்கொண்டு,

சத்திரம் சத்திரமாகச் சென்று தங்குவதற்கு இடம் கேட்கிறார்.

ஒரு சத்திரத்திலும் இடம் கிடைக்கவில்லை.

வேறு வழியின்றி  ஊருக்கு வெளியே இருந்த ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு வருகிறார்கள்.

அது மாடுகள் தங்கும் இடம்.

மனிதர்கள் தங்குவதற்கு வசதி எதுவும் இல்லாத இடம்.

பெரியவர் தொழுவத்திற்கு வெளியே கர்ப்பிணி பெண்ணை இறக்கி நிற்க வைத்துவிட்டு,

உள்ளே செல்கிறார்.

ஒரே சாணி நாற்றம்.

ஒரு ஓரத்தில் கிடந்த விளக்குமாறு ஒன்றை  எடுத்து சாணி சிதறி கிடந்த இடத்தை சுத்தம் செய்கிறார்.

நாற்றம் போகவில்லை. உடனடியாக போக வைக்கவும் முடியாது.

வேறு வழி இல்லாமல் கர்ப்பிணி பெண்ணை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

பையில் இருந்த துணி ஒன்று எடுத்து விரித்து அவளை உட்கார வைத்துவிட்டு,

கழுதையையும் உள்ளே அழைத்து வந்து ஓரிடத்தில் கட்டுகிறார்.

யாராவது ஒரு மருத்துவச்சியை அழைத்து வரலாம் என்று எண்ணி அவர் வெளியே வந்த போது,

குழந்தையின் அழுகுரல் கேட்டு திரும்பவும் உள்ளே சென்றார்.

கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பேறுகாலம் ஆகிவிட்டது. 

அவள் பேரழகுள்ள ஒரு ஆண்மகனை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

பெரியவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

குழந்தையை பார்த்தவுடன் சாணி நாற்றம் எல்லாம் மறந்து போய்விட்டது.

மாடுகளின் தீவனத் தொட்டிக்கு சென்று,

மாடுகள் சாப்பிடும் உணவாகிய வைக்கோலை கொஞ்சம் அள்ளி உள்ளே போட்டு,

அதன் மேல் ஒரு துணியை விரித்து,

குழந்தை படுக்க ஒரு மெத்தை தயாரித்தார்.

தாய் தீவனத் தொட்டியில் குழந்தையைப் படுக்க வைத்தாள்.

குழந்தை தாயின் முகத்தையும், பெரியவரின் முகத்தையும் புன்முறுவலோடு பார்த்து

 அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

யார் இந்த மூவர்?

தீவனத் தொட்டியில் படுத்து புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்த குழந்தை,

கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும், அவற்றை வலம் வரும் கோள்களையும்,

உலகில் வாழும் மனிதர்களையும் படைத்து, பராமரித்து வரும்

சர்வ வல்லவ கடவுள்.

பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய இறைமகன்.

பெண் இறை மகனுக்கு மனுவுறு கொடுத்து,

பத்து மாதம் வயிற்றில் சுமந்து,

பிரசவ வலி இல்லாமல்,

கன்னிமைக்கு எந்த பழுதும் இல்லாமல்

அவரைப் பெற்றெடுத்த,

இறை அருள் நிறைந்த அன்னை மரியாள்.

பெரியவர் குழந்தை இயேசுவை வளர்க்கவிருந்த நீதிமானாகிய சூசையப்பர், திருக் குடும்பத்தின் தலைவர்.

 உலகில் மனிதனாய்ப் பிறந்த இறைமகனை,

விண்ணுலக செய்தியை கேட்டு,

 பார்க்க வந்தவர்கள் ஆடு மேய்க்கும் ஏழை இடையர்கள்.

உலகைப் படைத்து ஆண்டு நடத்தி வரும் இறைமகன் மனுமகனாக ஒரு ஏழை தாயின் வயிற்றில்,

மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார்.

அவரை வளர்க்கவிருந்தவர் ஒரு ஏழைத் தச்சன்.

அவரை முதல் முதலில் பார்க்க வந்தது ஏழை இடையர்கள்.

அவர்களை பார்க்கும்படி அனுப்பி வைத்தது விண்ணகத்திலிருந்து வந்த மீட்பரின் பிறப்பை பற்றிய  மகிழ்ச்சிகரமான செய்தி.

இதுவரை கூறியது இந்நாள் கிறிஸ்மஸ் விழாவின் முன்னாள் நிகழ்வு.

நிகழ்வின் நோக்கம் 
மனக்குலத்தின் மீட்பு, விழா கொண்டாடுவது அல்ல.

மீட்பு என்றால் பாவத்திலிருந்து விடுதலை பெற்று இறையரசுக்குள் நுழைவது.

மீட்பர் சொல்கிறார்,

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே.

உலகப் பொருள்கள் மீது பற்று இல்லாமல்  வாழும் ஏழைகள் தான் விண்ணரசுக்குள் நுழைய முடியும்.

இந்த நற்செய்தியை செயல் மூலம் நமக்கு அறிவிக்கவே உலகத்தின் உரிமையாளரான கடவுள் 

 ஏழை தாயின் வயிற்றில் ஏழையாகப் பிறந்தார்,

தன்னை வளர்ப்பவராக ஒரு ஏழையையே தேர்ந்தெடுத்தார். 

கிறிஸ்மஸ் நிகழ்வை விழாவாக கொண்டாடுபவர்கள் தங்கள் கொண்டாட்டத்தை கிறிஸ்மஸ் நிகழ்வோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

ஒப்பிட்டு பார்த்தால்

தாங்கள் கொண்டாடுவது கிறிஸ்மசா அல்லது அதன் பெயரில் ஏதோ ஒரு விழாவா என்பது புரியும்.

கிறிஸ்து பிறந்தது மாட்டு தொழுவத்தில்.

விழா கொண்டாடப்படுவது கோடிக்கணக்காகச் செலவழித்து கட்டப்பட்டு,

ஆயிரக்கணக்கில் அலங்கரிக்கப்பட்ட ஆலயத்தில்.

விழாவை ஆலயத்தில் கொண்டாடுவது தவறு என்று நான் குறிப்பிடவில்லை.

Church என்ற வார்த்தையின் முதல் பொருள் திருச்சபை,

அடுத்த பொருள் திருச்சபையினர் வழிபாடு செய்வதற்காகக்  கூடும் ஆலயம்.

எதற்காக எது?

திருச்சபைக்காக ஆலயமா?
ஆலயத்திற்காக திருச்சபையா?

தலை சாய்க்க கூட இடமில்லை என்ற நிலையில் நற்செய்தியை அறிவித்த இயேசு விரும்புவது,

ஆலயங்களை விட,

 ஏழைகளின் உள்ளங்களைத் தான்.

மக்கள் உள்ளங்களை வேறு எங்கோ பறிகொடுத்துவிட்டு வழிபட ஆலயத்திற்கு வந்தால் ஆலயத்தில் வாழும் இயேசு மகிழ்ச்சி அடைய மாட்டார்.

ஆலயம் சிறியதாக இருந்தாலும், தான் வாழ விரும்பும் மக்களின் உள்ளம் பெரியதாக இருக்க வேண்டும் என்பதைதான் இயேசு விரும்புவார்.

விழாவை ஆலயதில் தான் கொண்டாட வேண்டும், ஆனால் உள்ளங்களில் இயேசுவோடு.

நமது உள்ளத்தில் இயேசு என்ற பெயர் மட்டும் இருக்கிறதா,

 அல்லது 

இயேசு வாழ்கிறாரா 

என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாம் இயேசுவின் சொற்படி வாழ்ந்தால் இயேசு நம்மில் வாழ்கிறார் என்று அர்த்தம்.

ஏழையாக பிறந்த இயேசு எப்படிப்பட்ட ஆடை அணிந்திருந்தார்?

அன்னை மரியிடம் இருந்த கந்தல் துணிகளால் தான் தன் மகனை பொதிந்து மாடுகளின் தீவனத் தொட்டியில் அன்னை கிடத்தினார்.

கந்தல் துளிகளில் படுத்திருக்கும் குழந்தையை பார்க்க 

லட்சக்கணக்காய் செலவழித்து வாங்கிய உடையுடன் 

டிப் டாப்பாகச் சென்றால்

விழா நாயகரை விட நாம் வசதியானவர்கள் என்று அவரிடம்
பீத்திக் கொள்வதற்காகச் செல்வது போல் இருக்காது?

ஆடம்பர உடைக்காக 
செலவழிக்கும் பணத்தை ஆடை இல்லாத ஏழைகளுக்கு ஆடை வாங்கிக் கொடுத்தால் 

அதுவே குழந்தை இயேசுவுக்கு நாம் கொடுக்கும் காணிக்கை.

இறுதி நாளில் 

" ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள்.

வாருங்கள், என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக"
என்று இயேசு நம்மிடம் சொல்லுவார்.

மாட்டுத்தழுவத்தில் திருக் குடும்பத்தினர் உண்ண என்ன உணவு இருந்திருக்கும்?

நிச்சயமாக பிரியாணி இருந்திருக்காது.

கிறிஸ்மஸ் விருந்துக்காக நாம் செலவழிக்கும் பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உணவளித்தால்,

இறுதி நாளில்

"பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள்.

வாருங்கள், என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக"
என்று இயேசு நம்மிடம் சொல்லுவார்."

விழா என்ற பெயரில் ஆடம்பர செலவுகள் செய்தால் ஏழையாக பிறந்த இயேசுவுக்கு அது பிடிக்காது.

அவருக்கு பிடிக்காததை எல்லாம் செய்து விழா கொண்டாடினால் நமக்கு ஆன்மீக ரீதியாக ஒரு பயனும் இல்லை.

கோவிலில் கொண்டாடப்படும் எந்த விழாவாக இருந்தாலும்,

நல்ல பாவ சங்கீர்த்தனம்,
திருப்பலி,
திவ்ய நற்கருணை

ஆகியவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்தான் இயேசுவுக்கு பிடித்தமானவர்கள். 

கிறிஸ்மஸ் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.

அதை கொண்டாட நம்மை நாமே ஆன்மீக ரீதியாக தயாரிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment