Friday, December 9, 2022

"கண்ட பின்னர், அப்பாலனைப் பற்றித் தமக்குக் கூறப்பட்டதைப் பிறருக்கு அறிவித்தனர்."(லூக்.2:17)

"கண்ட பின்னர், அப்பாலனைப் பற்றித் தமக்குக் கூறப்பட்டதைப் பிறருக்கு அறிவித்தனர்."
(லூக்.2:17)

முதல் முதல் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்தவர்கள் யார்?

ஆடு மேய்க்கும் இடையர்கள்.

"இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய 
மெசியா.

குழந்தை ஒன்றைத் துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள். 

இதுவே உங்களுக்கு அறிகுறியாகும்"

உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. 

உலகிலே நல் மனதோர்க்கு சமாதானம்  உண்டாகுக! "

என்று, விண்ணகத்திலிருந்து வான தூதர் மூலம் அவர்களுக்கு கிடைத்த நற்செய்தியை,

இயேசு பாலனை கண்டு அவரை ஆராதித்த பிறகு,

 மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்.


இயேசுவைப் பற்றிய நற்செய்தி இவர்களுக்கு விண்ணகத்திலிருந்து கிடைத்தது.

கிடைத்த நற்செய்தியின் படி செயல் புரிந்தார்கள்.

பின் அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்.

இயேசு தன்னைப் பற்றிய நற்செய்தியை பிறருக்கு அறிவிக்க 

முதலில் படிப்பறிவு அற்ற ஏழைகளாகிய இடையர்களையும்,

பின்னால் கடலில் மீன் பிடித்து வாழ்பவர்களையும் தேர்ந்தெடுத்தார்.

படித்து பட்டம் வாங்கிய அறிஞர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.

படியாத பாமர மக்களையே தேர்ந்தெடுத்தார்.

அவர்கள் தங்களுக்கு கிடைத்த நற்செய்தியை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை.

சொன்னதை சொன்னபடியே செய்தார்கள்.

இடையர்களும், மீனவர்களும் கிடைத்த நற்செய்தியை வாழ்ந்து அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்.

இது நமக்கு ஒரு பாடம்.

அறிதல், வாழ்தல், அறிவித்தல்  ஆகியவை தான் நற்செய்தி பணியின் முக்கிய அம்சங்கள்.

நாம் தினமும் நற்செய்தி நூல்களை வாசிக்கிறோம்.

திருப்பலியின் போது குருவானவர் அளிக்கும் விளக்கங்களை கேட்கிறோம்.

வாசித்ததையும், கேட்டதையும் வாழ்கிறோமா?

வினாடி விடைப் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்குவதற்காக நமக்கு நற்செய்தி அறிவிக்கப்படவில்லை.

தேர்வுகள் எழுதி பட்டங்கள் பெறுவதற்காக  நமக்கு நற்செய்தி அறிவிக்கப்படவில்லை.

வாழ்வதற்காகவும் மற்றவர்களுக்கு அறிவிப்பதற்காகவும் நற்செய்தி பற்றிய அறிவு நமக்குத் தரப்படுகிறது.

முதலில் குடும்பத்திலும், அடுத்து சமூகத்திலும் நாம் வாழும் வாழ்வு நற்செய்திகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.


நாம் நற்செய்தியை அறிந்து, வாழ்ந்து, போதிக்க வேண்டும்  என்ற உன்னதமான உண்மையை 

படித்தோர், படியாதோர் அனைவருக்கும் சொல்லுகிறார்கள்

 படியாத ஆனால் பக்தி உள்ள மேதைகளாகிய ஆடு மேய்க்கும் இடையர்கள்.

சொல்வதை ஏற்போம்.

ஏற்றதைச் செய்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment