Sunday, December 18, 2022

கடவுளுக்கு மகிமை,நல்ல மனத்தோற்கு சமாதானம்.

கடவுளுக்கு மகிமை,
நல்ல மனத்தோற்கு சமாதானம்.


இயேசு உலகில் பிறந்த அன்று விண்ணுலகிலிருந்து வானதூதர்கள் கொண்டு வந்த கிறிஸ்துமஸ் செய்தி:

"உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. 

உலகிலே நல்ல  மனத்தோற்கு சமாதானம் உண்டாகுக."

செய்தியைத் தியானிப்பதற்கு முன்னால் ஒரு முக்கியமான மறை உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.

பரிபூரணமான மகிமைக்கு உரிய கடவுள்தான் மனிதனாகப் பிறந்திருக்கிறார்.

கிறிஸ்மஸ் செய்தி வந்திருப்பது அவரது மகிமைக்காகத்தான்.

விண்ணகத்தில் வாழும் 

கடவுளுக்கு மகிமை உண்டாகுக என்று அவருடைய தூதர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள்.

நித்திய காலத்திலிருந்தே அளவற்ற மகிமையோடு வாழ்பவர் கடவுள்.

அளவற்ற மகிமையை நம்மால் அதிகரிக்க முடியாது.

எதற்காக வானவர்களின் வாழ்த்து?

நமக்காக.

நமக்காகவா?


அதைத் தியானிப்போம்.

நித்திய காலத்திலிருந்தே நிறைவான மகிமைக்கு உரியவர் கடவுள்.

நிறைவான மகிமை என்றால் அதற்கு அதிகமான மகிமை அவருக்கு உண்டாக முடியாது.

முழுமையாக தண்ணீரால் நிறைந்த தம்ளரில் அதற்கு மேல் தண்ணீர் ஊற்ற முடியாதது போல,

ஏற்கனவே அளவு கடந்த மகிமையுள்ள கடவுளுக்கு இன்னும் அதிக மகிமையை கொடுக்க முடியாது.

அது மட்டுமல்ல, கடவுளிடமிருந்து நாம்தான் பெற முடியுமே தவிர நம்மால் அவருக்கு எதுவும் கொடுக்க முடியாது.

அப்படியானால் வான தூதர்கள் ஏன் கடவுளுக்கு மகிமை உண்டாகுக என்று வாழ்த்தினார்கள்?

ஒரு ஒப்புமை.

கற்பாறையில் ஒரு படிக்கட்டு.

அதன் வழியாக நாம் ஏறி உச்சியில் உள்ள கோவிலுக்குப் போகிறோம்.

இதனால் பயனடைவது நாமா? பாறையா?

நாம்தான். பாறை எப்போதும் பாறையாகவேதான் இருக்கும்.

அதேபோல்தான், கடவுளை நமது வார்த்தைகளாலும், செயல்களாலும் புகழும்போது,

ஏற்கனவே நித்திய காலம் முதல் மகிமையால் நிறைவாக உள்ள கடவுளுக்கு நமது புகழுரையால் அதிகப்படியான பயன் ஏதும் இல்லை. அவரில் எந்த மாற்றமும் ஏற்படாது. அவர் மாறாதவர்.

 ஆனால் கடவுள் அருளால் நாம் பயன் பெறுவோம். 

கடவுளை வாழ்த்தும்போது பயன் பெறுவது நாம் தான்.

அதே சமயத்தில் பாறை மீது  தலையைக் கொண்டு முட்டினால் உடையப் போவதும் பாறை அல்ல, நமது தலைதான்.

கடவுளுக்கு எதிராக நாம் பாவம் செய்யும்போது கடவுளுக்கு எந்த பாதிப்பும் இல்லை, பாதிப்பு நமக்குத்தான்.

கடவுள் அன்பு மயமானவர்.

நாம் அவரை அன்பு செய்யும்போது நாம் தான் பயன் பெறுகிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை அன்பு செய் என்று இயேசு சொல்லும்போது,

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை அன்பு செய்து அதற்குரிய பலனைப் பெற்றுக்கொள் என்றுதான் அர்த்தம்.

நாம் கடவுளை நோக்கி,

" உமக்கு மகிமை உண்டாகுக"

 என்று சொல்லும் ஒவ்வொரு முறையும் விண்ணகத்தில் நமக்குரிய சம்பாவனை அதிகரித்துக் கொண்டே செல்லும்.


வானதூதர்கள்   "உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக."

என்று சொல்லும்போது,

 "கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடந்து பயன்பெறுவோர்களுடைய எண்ணிக்கை அதிகம் ஆகுக" என்பதுதான் பொருள்.

கடவுள் நம்மை படைத்தது 
நாம் பயன் பெறுவதற்காக.

கடவுள் மனிதனாய் பிறந்தது நாம் பயன் பெறுவதற்காக.

கடவுள் பாடுகள் பட்டு மரணம் அடைந்தது நாம் பயன் பெறுவதற்காக.

கடவுள் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தியது நாம் பயன் பெறுவதற்காக.

கடவுள் நமக்கு துன்பங்களை வர விடுவது நாம் பயன் பெறுவதற்காக.

கடவுள் நமக்காக எது செய்தாலும் அது நமது நன்மைக்காகத்தான்.

மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது நாம் பயன் பெறுவதற்காகத்தான் 

என்பதை நமக்கு உணர்த்தவே வான தூதர்கள்,


"உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக."

என்று பாடினார்கள்.


உலகில் நல்ல மனது உள்ளவர்கள் யார்? சமாதானம் என்றால் என்ன?

கடவுளின் கட்டளைகளை மதித்து 
பாவம் செய்யாமல் வாழ்பவர்களே நல்ல மனது உள்ளவர்கள்.

அழுக்கு இல்லாத பாத்திரத்தைச் சுத்தமான பாத்திரம் என்று சொல்வது போல 

பாவம் இல்லாத மனதை நல்ல மனது என்கிறோம்.

சமாதானம் என்றால் சுமூகமான உறவு.

யாரோடு நாம் சுமூகமான உறவோடு வாழ்கிறோமோ அவரோடு நாம் சமாதானமாக வாழ்கிறோம்.


நாம்  மனதில் பாவம் இல்லாதவர்களாக வாழ்ந்தால்

 நாம் இறைவனோடு சுமூகமான உறவில் அதாவது சமாதானமாக இருக்கிறோம். 

இயேசு மாட்டுத் தொழுவத்தில் மனிதனாகப் பிறந்தது 

கடவுளுக்கு எதிராக நாம் செய்த பாவங்களை மன்னித்து,

நம்மை இறைவனோடு சமாதானமாக வாழச் செய்வதற்காகத்தான்.

நல் மனதோற்கு சமாதானம் என்று வாழ்த்தும்போது,

"பாவ மன்னிப்பு பெறுபவர்களுடைய  எண்ணிக்கை கூடட்டும்"

என்றுதான் வாழ்த்துகிறார்கள்.

நாம் பாவ மன்னிப்பு பெற்று கடவுளோடு சமாதானமான உறவோடு வாழ்வதற்காகத்தான் கடவுளே மனிதனாய்ப் பிறந்திருக்கிறார்.

கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடுவது வெறும்  கொண்டாட்டத்திற்கு அல்ல.

பாவ மன்னிப்பு பெற்று இறைவனோடு சமாதானமாக வாழ்வதற்கு.

பாவ சங்கீர்த்தனம் செய்வோம்.

பாவ மன்னிப்பு பெறுவோம்.

இறைவனோடு சுமூகமான உறவோடு வாழ்வோம்.

இறைவனது அதிமிக மகிமைக்காக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment