Thursday, December 29, 2022

புத்தாண்டுத் தீர்மானம்.

புத்தாண்டுத் தீர்மானம்.

"தாத்தா,ஒவ்வொரு முறையும் புத்தாண்டு பிறந்தவுடனே புத்தாண்டுத் தீர்மானம் ஒன்று எடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" 

"'புத்தாண்டுத் தீர்மானம் என்று ஒன்று தேவை இல்லை என்கிறேன்."

"ஆண்டு பிறந்ததும் அந்த ஆண்டு முழுவதும் எப்படி வாழ வேண்டும் என்பது பற்றி தீர்மானம் எடுப்பதில் என்ன தவறு?"

"'பேரப்புள்ள, நாம் தினமும் வாழ்கிறோம்.

பகலிலும் வாழ்கிறோம் இரவிலும் வாழ்கிறோம்.

ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு வினாடியும் வாழ்கிறோம்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளை எப்படி வாழ்வது என்று தீர்மானிக்க வேண்டும்.

தீர்மானிக்க வேண்டியது ஆண்டுக்கு ஒரு முறை அல்ல, தினமும்.

நாம் தீர்மானிக்க உதவியாய் இருக்க வேண்டியது இறைவாக்கு.

ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் தாய்த் திருச்சபையால் குறித்து தரப்பட்ட இறைவாக்கு வாசகங்களை வாசித்து,

 தியானித்து,

 அவற்றின் அடிப்படையில் அன்றைய நாளில் நாம் எப்படி வாழ்வது என்று தீர்மானிக்க வேண்டும்.

 அதன்படி அன்று மட்டுமல்ல தொடர்ந்து வரும் எல்லா நாட்களிலும் வாழ வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலையில் இவ்வாறு வாசித்து தீர்மானித்து வாழ்ந்தால் காலப் போக்கில் பைபிள் முழுவதையுமே வாழ ஆரம்பித்து விடுவோம்.

வாழ்வில் தினமும் வாசி, தினமும் யோசி,
தினமும் தீர்மானம் எடு,
தினமும் வாழ்.

தினமும் கிறிஸ்துவின் போதனைப்படி வாழ்பவனுக்கு எதற்கு ஆண்டுத் தீர்மானம்?"

"தாத்தா, சொல்வது எளிது. வாழ்வது கடினம்.

தினமும் தீர்மானம் எடுத்து வாழ்ந்தாலும் தவறுகள் செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவே."

"'தவறுகளைத் திருத்துவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றனவே."

"அப்போ புத்தாண்டு தீர்மானம் தேவை இல்லையா?"

"'தினமும் சமைத்து 
தினமும் சாப்பிடுகின்றாயா, 

ஆண்டுக்கு ஒரு முறை சமைத்து ஆண்டு முழுவதும் சாப்பிடுகின்றாயா?"

"புத்தாண்டு தீர்மானம் எடுப்பது தப்பா?"

"'தப்பு என்று நான் சொல்லவில்லை.

புத்தாண்டில் ஒரு தீர்மானம் எடுத்துவிட்டு அது ஆண்டு முழுமைக்கும் போதும் என்று நினைப்பதுதான் தப்பு."

"தாத்தா, ஒவ்வொரு வினாடியும் வாழ்கின்றோமே, 

ஒவ்வொரு வினாடியும் தீர்மானம் எடுக்க வேண்டுமா?"

"'ஒவ்வொரு வினாடியும் நாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்கள் நமது நினைவில் இருக்க வேண்டும்.

நினைவில் இருப்பவை நமது சொல்லிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும்.

அதுதான் வாழ்க்கை."

"தீர்மானிப்பது வாழ்க்கை அல்ல, அதன்படி வாழ்வதுதான் வாழ்க்கை என்கிறீர்கள்."

"'தினசரி பூசைக்குப் போவதும், செபக் கூட்டங்களில் கலந்து கொள்வதும், 
தியானங்களுக்குப் போவதும்
ஒருவனை கிறிஸ்தவன் ஆக்குகிறது என்று நினைக்கிறார்கள்.

அவற்றை எல்லாம் வாழ்வதுதான் ஒருவனை கிறிஸ்தவன் ஆக்குகிறது.

அவை நமது வாழ்க்கையில் பிரதிபலிக்காவிட்டால் அவற்றால் பயனில்லை.

தினசரி பூசைக்கு போய்விட்டு வந்து வீட்டில் சமாதானமாக வாழாவிட்டால் பூசைக்குப் போய் வந்ததால் என்ன பயன்?

செபக் கூட்டங்களுக்குப் போய்,
பாவ சங்கீர்த்தரம் செய்யாமலும், பாவ மன்னிப்பு பெறாமலும் வந்தால் செபக் கூட்டங்களால் என்ன பயன்?

புதிய ஆண்டில் மட்டுமல்ல,

நமது வாழ்நாள் முழுவதும் இறை வார்த்தையின் படி வாழ்வோம்.

இதை புத்தாண்டில் மட்டுமல்ல, நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment