Sunday, December 25, 2022

"இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."(மத்.10:22)

"இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."
(மத்.10:22)

 இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஆங்கிலக் கால்வாய் (English Channel) உள்ளது.

அதன் வழியாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள தூரம் 21 மைல்கள்.

வசதியுள்ள பெரியவர் ஒருவர் 
பிரான்சிலிருந்து கால்வாய் வழியே நீந்தி இங்கிலாந்து செல்பவர்களுக்கு பெரும் தொகை ஒன்றை பரிசாக அளிக்க உறுதி அளித்தார்.

பரிசுத் தொகைக்கு ஆசைப்பட்ட ஒருவர் முழு தூரத்தையும் நீந்தியே கடப்பதாக ஏற்றுக்கொண்டார்.

பிரான்சிலிருந்து நீந்த ஆரம்பித்தார்.

கடலுக்குள் மைல் கல் எதுவும் நாட்டப்படவில்லை.

11 மைல் தூரத்தைக் கடக்க ஆரம்பிக்கும் போது  அவரது நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்பட்டது.

நம்பிக்கை இல்லாததால் அவர் இங்கிலாந்து நோக்கி நீந்துவதை நிறுத்தி, பிரான்சுக்கு திரும்பவும் நீந்தி வந்துவிட்டார்.

21 மைல் தூரம் நீந்த வேண்டியவர்
 22 மைல்ல்களுக்கு அதிகமாக நீந்தியும் பரிசு தொகையை பெற முடியவில்லை.

செய்ய ஆரம்பிக்கின்ற வேலையை இறுதி வரை நம்பிக்கையோடு செய்தால் தான் வெற்றி கிடைக்கும்.

நம்பிக்கையை இழக்கும் விநாடியில் வெற்றி கையை விட்டு பறந்து போய்விடும்.

ஆன்மீக வாழ்வில் வெற்றிக்கு உறுதி அளிப்பது இறுதி நேரம் தான்.

எழுபது ஆண்டுகள் நம்பிக்கையோடு வாழ்ந்து விட்டு எழுபதாவது ஆண்டின் இறுதி வினாடியில் ஒருவன்  நம்பிக்கையை இழந்தால் வெற்றி கைக்குக் கிட்டாது.

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல,

இறுதிவரை நம்பிக்கையோடு வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். 

வாழ்க்கை என்பது ஒரு ரோஜா மலர்ப் படுக்கை அல்ல.

முட்கள் நடுவில் உள்ள ரோஜா.

  Life is not a bed of roses.
 It is a rose with thorns.

மலரைக் கையில் பறிக்க விரும்பினால் அடியில் உள்ள முள்  குத்துவதைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.

தாய் அவளது வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பார்த்து அதற்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால்  பேறுகால வேதனையை தாங்கித்தான் ஆக வேண்டும்.

ஆன்மீக வாழ்வில் கிறிஸ்துவோடு பயணிக்கிறோம்.

நமது இதயத்தில் அவரைக் கடவுளாக ஏற்றுக் கொண்டு அவரோடு பயணிக்கிறோம்.

கிறிஸ்து எந்த நோக்கத்தோடு உலகிற்கு வந்தாரோ அதே நோக்கம் தான் நமது ஆன்மீக வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும்.

வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் இருவர் ஒன்றாக பயணிக்க இயலாது.

கிறிஸ்துவும் நாமும் பயணிக்கும் ஒரே இடம் நமது மீட்புதான்.


ஆன்மீக வாழ்வில் நமது நோக்கமும் மீட்பு அடைவது தான்.

நம்மோடு பயணிக்கும் கிறிஸ்துவின் நோக்கமும்  நம்மை மீட்பது தான்.

நமது இதயத்தில் அவரைக் கடவுளாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

அவர் சித்தப்படி வாழ்வதுதான் ஆன்மீக வாழ்வு என்று நமக்கு தெரியும்.

நமது மீட்புக்கு அவர் என்ன வழிமுறைகளை கையாளுகிறாரோ 

அவற்றைத் தான் நாமும் கையாக வேண்டும். அப்போதுதான் நமக்கு மீட்பு கிடைக்கும்.

நமது மீட்புக்காக அவர் நம்மோடு சிலுவையை சுமந்து கொண்டு வருகிறார்,

"எனது சீடனாக வாழ விரும்புகிற எவனும் தனது சிலுவையைச் சுமந்து கொண்டு என் பின்னால் வரவேண்டும்" என்று அவரே கூறியிருக்கிறார்.

ஆகவே நாமும் அவர் நமக்கு தரும்  சிலுவையைச் சுமந்து கொண்டு தான் அவருடன் பயணிக்க வேண்டும்.

நமது சிலுவையை நமது வாழ்நாள் முழுவதும் கடைசி வினாடி வரை சுமக்க வேண்டும்.

விண்ணக மகிமையை நாம் அடைய கிறிஸ்து நமக்கு வந்திருக்கும் சாதனம் சிலுவை.

அவரே சிலுவையை சுமந்து சென்று அதிலே அறையப்பட்டு மரித்ததால்தான்,

மரித்த மூன்றாவது நாள் மகிமையோடு உயிர்த்தெழுந்தார்.

சிலுவை இன்றி மகிமை இல்லை.

அவரோடு சிலுவையை சுமந்து கொண்டு செல்லும் நாம்,

நம்மை சுற்றி வாழும் உலகை சார்ந்தவர்கள் அனுபவிக்கும் சிற்றின்ப வாழ்வை கண்டு,

அதில் நாமும் ருசி பார்க்கலாமே என்று ஆசித்து,

நமது சிலுவையை இறக்கி வைக்க எண்ணினால் நாம் கிறிஸ்துவோடு சிலுவையில் மரிக்க விரும்பவில்லை என்று அர்த்தம்.

நாம் சிலுவையை இறக்கி வைத்துவிட்டால் அதன்பின் இயேசு தனியே தான் பயணிப்பார்.

சிலுவை இன்றி நம்மால் மீட்பு பெற முடியாது.

ஆகவேதான் ஆண்டவர் சொல்கிறார்,

"இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."

பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறந்திருப்பது 

நமக்காக சிலுவையை சுமப்பதற்காகத்தான்.

அவரது பிறந்தநாள் விழாவை நாம் கொண்டாடுவதே ,

''குழந்தை இயேசுவே, உம்மை போலவே நாங்களும் இறுதிவரை நீர் எங்களுக்கு தரும் சிலுவயை உம்மோடு சுமந்து வருவோம்.

உமது சிலுவை எங்கள் பாக்கியம்."

என்று குழந்தை இயேசுவிடம் சொல்வதற்காக தான்.

அவரிடம் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம்.

இனி இறுதி வரை நிலைத்திருந்து அவரோடு நமது சிலுவையை மகிழ்ச்சியுடன் சுமப்போம்.

இறுதியில் விண்ணக வாசல் திறக்கும்.

இயேசுவோடு உள்ளே நுழைவோம்.

ஞாபகத்தில் கொள்ள வேண்டியது,

இயேசு பிறந்திருப்பது கேக் சாப்பிடவோ, பிரியாணி சாப்பிடவோ அல்ல,

நமக்காக சிலுவையைச் சுமந்து,
அதில் அறையப்பட்டு, மரிக்க.

இதை நமது இறுதி வரை நினைவில் வைத்திருப்போம்.

இறுதிவரை நிலைத்துநிற்போம். மீட்புப்  பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment