",தாத்தா,...."
"வாப்பா. யாரப்பா நீ? இந்த நள்ளிரவில் இங்கே?"
",ரொம்ப, நன்றி, தாத்தா."
"நன்றி எனக்கா? நான் உனக்கு ஒரு உதவியும் செய்யவில்லையே. எதற்காக நன்றி?"
'',என்னை யார் என்று அன்புடன் விசாரித்த முதல் ஆள் நீங்கள்தான். அதற்காகத்தான் நன்றி.
யார், தாத்தா, நீங்க எல்லாம்? குழந்தையை மாடுகளின் தீவன தொட்டியில்
கிடத்தியிருக்கிறீர்கள்.
இப்பொழுதுதான் பிறந்த குழந்தை மாதிரி தெரிகிறது."
"மாதிரி இல்லை. குழந்தை பிறந்து ஒரு சில நிமிடங்கள் தான் ஆகின்றன."
",அம்மா, உங்களை நான் அம்மா என்று அழைக்கலாமா?"
"அதுதான் அழைத்து விட்டாயே. அதை இனிமேல்தான் என் மகனுக்கே நான் சொல்லிக் கொடுக்க வேண்டும்."
",பிறப்பதற்கு முன்பே நீங்கள் யார் என்று அவருக்கு தெரியும். உங்கள் வயித்தில் பத்து மாதங்கள் இருந்திருக்கிறாரே.
பார்ப்பதற்கு தெய்வீக குழந்தை போல் தெரிகிறது. நான் அவரை கையில் எடுத்து ஒரு முத்தம் கொடுக்கலாமா?"
"தாராளமாக. தெய்வீக குழந்தை போல் அல்ல.
தெய்வீகக் குழந்தையேதான்.
உனது ஆசை தீர எத்தனை முத்தங்கள் வேண்டுமானாலும் கொடு."
",எத்தனை முத்தங்கள் கொடுத்தாலும் எனது ஆசை தீராது அம்மா.
எனக்கு பத்து வயது ஆகிறது. இதுவரை எனக்கு யாரும் முத்தம் கொடுத்ததாக ஞாபகம் இல்லை."
"உனது அம்மா?"
",என்னை பெற்றவளை நான் பார்த்ததில்லை. நான் ஒரு அனாதை.
தெய்வீக குழந்தையை முத்தம் கொடுக்க பாக்கியம் பெற்ற அனாதை."
"அனாதை என்று சொல்லாதே. நீ கையில் வைத்திருப்பது உன்னை படைத்த கடவுள்."
",என்னம்மா சொல்லுகிறீர்கள்? இது கடவுளா? நீங்கள் பெற்ற குழந்தை தானே?"
"கடவுளைக் குழந்தையாக பெற பாக்கியம் பெற்றவள் நான்.
நீ தெய்வீக குழந்தை என்று சொன்னாய்.
குழந்தையாய்ப் பிறந்த தெய்வம்."
"மேரி, அவன் சின்னப் பையன்.
நீ சொல்வதெல்லாம் அவனுக்குப் புரியுமா?"
",கவலைப் படாதீங்க, தாத்தா. அம்மா சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.
ஏற்றுக்கொள் என்று இறைவனே என் உள்ளத்தில் பேசுவது போல் இருக்கிறது.
அம்மா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்."
"மகனே, விசுவாசம் மனிதன் சொல்லி வருவதல்ல.
அது இறைவனுடைய நன்கொடை.
அந்த நன்கொடையை உனக்குத் தந்த கடவுளுக்கு நன்றி சொல்."
",, தாத்தா உங்களுக்கு யார் ?"
" எனக்குக் கணவர். ஆனால் குழந்தைக்கு அப்பா அல்ல.
எனது கன்னிமைக்கு பாதுகாவலாகவும், குழந்தையை வளர்ப்பதற்காகவும் கடவுளால் நியமிக்கப்பட்டவர்."
", அம்மா, "இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்: அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்: "
(இசை. 7:14)
என்ற இறைவாக்கில் கூறப்பட்டிருக்கும் கன்னிப்பெண் நீங்கள் தானோ?"
"பார்ப்பதற்கு படிக்காதவன் போல் தெரிகிறது.
எப்படி வேதாகம வசனம் உனக்குத் தெரிந்தது?"
",வேதாகம வசனம் தெரிய படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, அம்மா.
படித்தவர்கள் சொன்னதை நம்பத் தெரிய வேண்டும்.
இது தொழுகை கூடங்களில் நான் கேள்விப்பட்ட வசனம்.
செயல்பாட்டுக்கு வந்த அந்த வசனத்தை இப்பொழுது அனுபவிக்கிறேன்.
அம்மா, உங்களுக்கும் குழந்தைக்கும் நன்றி சொல்ல வேண்டும், அடியேனின் இல்லத்திற்கு வந்திருப்பதற்காக."
" இந்த மாட்டுத் தொழுவம் உனது இல்லமா?"
",அம்மா நான் ஏற்கனவே சொன்னது போல
எனது அப்பாவையோ அம்மாவையோ நான் பார்த்ததில்லை.
சொந்தமாக வீடு வாசல் ஒன்றுமில்லை.
பகலில் எங்கேயாவது யாருக்காவது எனக்குத் தெரிந்த வேலையை செய்து கொடுத்துவிட்டு, சாப்பாட்டை சம்பளமாக பெறுவேன்.
இரவில் படுத்துக்கொள்ள இங்கே வருவேன்.
மாட்டு தொழுவம் யாருக்கு சொந்தமானதோ எனக்கு தெரியாது.
ஒன்றுமே சொந்தமில்லாதவனுக்கு எல்லாமே சொந்தம்.
நான் படுக்க வரும் இந்த மாளிகைக்கு இன்று என்னை படைத்தவர் வந்திருக்கிறார் என்றால் நான் பாக்கியவான்."
"இது உனக்கு மாளிகையா?"
",நீங்கள் குழந்தையோடு தங்குமிடம் மாட்டுத் தொழுவாக இருந்தாலும் அது மாளிகை தான்.
அம்மா, நீங்கள் எப்போதுமா இந்த தொழுவத்தில் தங்கப் போகிறீர்கள்?"
"மகனே, தான் பிறப்பதற்கு இந்த இடத்தை தேர்ந்தெடுத்த கடவுள் வளர்வதற்கு எந்த இடத்தை தேர்ந்தெடுப்பாரோ அங்கு போவோம்."
",உங்களுக்கு சொந்தமாக வீடு இல்லையா?"
''இருக்கிறது. கலிலேயாவில் உள்ள நாசரேத்தில் எங்களுக்கு சொந்தமான ஒரு வீடு இருக்கிறது.
ஆனால் அங்கு பிறக்க வேண்டும் என்று கடவுள் திட்டமிடவில்லையே.
நமது ஒவ்வொரு வினாடி வாழ்க்கையையும் திட்டமிடுபவர் அவர்தான்.
வாழ்க்கையை அவர் கையில் ஒப்படைத்து விட்டு அவர் காட்டுகிற வழியில் வாழ்வதுதான் நமது கடமை."
",நமது ஒவ்வொரு வினாடி வாழ்க்கையையும் திட்டமிடுபவர் அவர்தான் என்கிறீர்களே.
அப்படியானால் என் வாழ்க்கையையும் திட்டமிடுபவர் அவர் தானே"
"ஆமா, அதில் என்ன சந்தேகம்?"
",பெற்றோர், உறவினர், வீடு வாசல் இல்லாத அனாதையாக நான் வாழ வேண்டும் என்று கடவுள் திட்டமிட்டு விட்டாரே என்று மனதில் தோன்றியது.
ஆனால், அவரே பிறக்க சாணி நாற்றம் மிக்க ஒரு மாட்டுத் தொழுவத்தை தேர்ந்தெடுத்திருக்கிறாரே என்பதை எண்ணிப் பார்க்கும்போது,
என்னை அவர் அளவிற்கு மேன்மைப்படுத்தியிருக்கிறார் என்பது புரிகிறது.
அவர் தன்னை நேசிப்பது போல் என்னையும் நேசிக்கிறார் என்பதும் புரிகிறது.
இந்த மாட்டுத் தொழுவம் என்னைக் கடவுளின் நண்பன் ஆக்கிவிட்டது."
"கன்னி நான் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்திருப்பது எதற்காக என்பதை நீ அறிந்தால்,
உனது இன்றைய நிலையை அறிந்து மகிழ்ச்சி அடைவது மட்டுமல்ல,
இதைவிட கஷ்டமான ஒரு நிலையை அடைய ஆசைப்படுவாய்."
",என்னம்மா சொல்லுகிறீர்கள்?"
"நம் பாவங்களுக்காகவே அவர் காயப்பட்டார், நம் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்: நம்மை நலமாக்கும் தண்டனை அவர் மேல் விழுந்தது." (இசை. 53:5)
என்ற வசனத்தை எங்காவது எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறாயா?"
",எப்போதோ, எங்கேயோ கேள்விப்பட்ட ஞாபகம் இருக்கிறது.
ஆனால் அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கு போதுமான வயதும் மனப்பக்குவமும் எனக்கு இல்லையே.
பத்து வயதுதான் அம்மா ஆகிறது.
செபக் கூடங்களுக்குச் செல்லும்போது அங்கு வாசிக்கப்படும் வசனங்கள் காதில் விழும். ஆனால் முழுமையாக பொருள் தெரியாது."
"கவனமாகக் கேள். கன்னியின் வயிற்றில் கடவுள் மனிதனாக பிறந்திருப்பது
மனிதர்களின் பாவங்களுக்காக அவர் காயப்படவும்,
நொறுக்கப்படவும்,
மரண தண்டனை கொடுக்கப் படவும்தான்."
",அப்போ மனிதர்களின் பாவங்களுக்காக பலியிடவே ஒரு மகனை பெற்றிருக்கிறீர்கள்.
மரண தண்டனை கொடுக்கப் படவே மகனைப் பெற்றிருக்கிறேன் என்று ரொம்ப சாதாரணமாக சொல்லிவிட்டீர்கள்.
நீங்கள் வீரமுள்ள தாய்.
உங்கள் வாழ்வும் வியாகுலங்கள் நிறைந்ததாக தான் இருக்கும்."
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment