Thursday, December 15, 2022

இறக்கவே பிறந்தவர்.




       இறக்கவே பிறந்தவர்.


"தாத்தா, கடவுள் நிறைவானவர்தானே."

",ஆமா."

"மாறாதவர்தானே."

", ஆமா."

"நித்தியமானவர்தானே."

", ஆமா."

"அன்புமயமானவர்தானே."

", ஆமா."

"அன்புமயமான, நித்திய, மாறாத, நிறைவான, அளவில்லாத, ஞானம் உள்ள கடவுளை,

 படைக்கப்பட்ட  எந்த பொருளாலும் பாதிக்க முடியாதுதானே."  

",அவரால் படைக்கப்பட்ட எந்த பொருளாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்கிறாய்,

ஏனெனில் அவர் மாறாதவர்.

 சரியா?"

"அப்படித்தான் நினைக்கிறேன்.

 ஆனால் மனிதர் செய்த பாவங்கள் கடவுளை வருத்தப்பட வைத்திருப்பதாக பைபிள் சொல்கிறதே.

"இவ்வுலகில் மனிதனைப் படைத்தது குறித்து வருந்தினார்."
(ஆதி.6:5)

கடவுளால் வருத்தப்பட முடியுமா?"

",நிச்சயமாக முடியாது. 

மனிதர் செய்த பாவங்களின் கனா கனத்தை நமக்கு புரிய வைப்பதற்காக ஆசிரியர் அவ்வாறு எழுதியிருக்கிறார்.

 அளவற்ற அன்பும், அளவற்ற மகிழ்ச்சியும் உள்ளவர் கடவுள்.

அதற்கு எதிர்மறையான எதுவும் அவரை நெருங்க முடியாது.

அவரால் யாரையும் வெறுக்கவும் முடியாது.

எதனாலும் வருந்தவும் முடியாது.

அவருக்கு எதிராக பாவம் செய்து, அவருக்கு எதிராக மக்களை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் சாத்தானைக் கூட அவரால் வெறுக்க முடியாது.

சாத்தானைக் கூட அவர் நேசிக்கிறார். ஆனால் அவனால் அவரது நேசத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அது அவன் நிலை."

"அதாவது அவருக்கு எதிராக பாவம் செய்து கொண்டிருக்கும் நம்மையும் அவரால் வெறுக்க முடியாது.

பாவிகளாகிய நம்மையும் நேசிக்கிறார் என்று சொல்ல வருகிறீர்கள்."

", ஆமா."

"அப்படியானால் பாவிகளுக்கு ஏன் மோட்சத்தில் இடமில்லை?"

",மோட்சத்தில் படைக்கப்பட்ட அனைவருக்கும் இடம் இருக்கிறது.

ஆனால் பாவிகள் அங்கே போவதில்லை.

கடவுளை வேண்டாம் என்று சொல்வது தானே பாவம்.

மனிதனுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை பயன்படுத்தி 

அவன் "கடவுள் வேண்டாம். அவரை நான் பார்க்க விரும்பவில்லை" என்று நினைப்பதுதான் பாவம்.

கடவுள் வேண்டும் என்பவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள். அவர்களது ஆசைப்படி நித்திய காலம் கடவுளோடு வாழ மோட்ச நிலைக்கு செல்வார்கள். 

கடவுள் வேண்டும் என்பவர்கள் மோட்சத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

கடவுள் வேண்டாம் என்பவர்கள் அவர்களது ஆசைப்படி நித்திய காலம் கடவுளை விட்டு பிரிந்திருப்பார்கள்.


கடவுள் வேண்டாம் என்பவர்கள் நரகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனாலும் கடவுள் மாறாதவர். அவரது அன்பு மாறாதது.

நல்லவர்களை நேசிப்பது போலவே, கெட்டவர்களையும் கடவுள் நேசிக்கிறார்.

மோட்சத்தில் உள்ளவர்களை நேசிப்பதுபோலவே,

நரகத்தில் உள்ளவர்களையும் நேசிக்கிறார்.

நல்லவர்கள் கடவுளுடைய அன்பை ஏற்றுக் கொள்கிறார்கள்.

கெட்டவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை."

"கெட்டவர்கள் மோட்சத்திற்குப் போக முடியாது என்றல்லவா சொல்கிறார்கள்?"

",ஒரு ஒப்புமை சொல்கிறேன். 

அரசு ஒரு பெரிய பங்களா ஒன்றைக் கட்டி,

"யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று வாழலாம். ஆனால் கையில் எதையும் எடுத்துக்கொண்டு செல்லக்கூடாது. கையில் எதுவும் இருந்தால் உள்ளே நுழைய முடியாது." 

என்று கூறுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

கையில் எதுவும் இல்லாதவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் உள்ளே நுழைந்து போகிறார்கள்.

ஒருவன் கையில் ஒரு பந்தை வைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயல்கிறான். முடியவில்லை.

உள்ளே நுழைய முடியாமைக்கு அரசு காரணமா? அல்லது அவனது கையில் உள்ள பந்து காரணமா?"

"கையில் உள்ள பந்துதான் காரணம்."

",கையில் எதுவும் இல்லாதவர்கள் மோட்சத்திற்குள் வரலாம் என்று கடவுள் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

ஒருவன் கையில் பாவத்தை வைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயல்கிறான்.

நுழைய முடியுமா?"

'' முடியாது."

",முடியாததற்கு கடவுள் காரணமா, கையில் உள்ள பாவம் காரணமா?"

"பாவம் தான் காரணம். ஆனால் பாவம் உள்ளவர்கள் உள்ளே நுழைய முடியாது என்று கடவுள்தானே சொல்லியிருக்கிறார்."

",கடவுளை வேண்டாம் என்று சொல்வது தானே பாவம்.

பாவம் உள்ளவர்கள் மோட்சத்திற்கு போக முடியாது என்று கடவுள் சொன்னால் என்ன அர்த்தம்?"

"நான் வேண்டும் என்று ஆசைப்படுகின்றவர்கள் உள்ளே வருவார்கள்.

நான் வேண்டாம் என்று நினைப்பவர்கள் உள்ளே வர மாட்டார்கள்." என்றுதான் அர்த்தம்."

",கடவுளை வேண்டாம் என்பவர்கள் அவர் இருக்கும் இடத்துக்குப் போக மாட்டார்கள் என்பதுதான் உண்மை."

"இப்பொழுது ஒரு உண்மை புரிவது போல் தெரிகிறது.

அவரை நேசிக்காதவர்களை பார்த்து, அதாவது பாவம் செய்கின்றவர்களை பார்த்து,

"மக்களே, நான் உங்களை நேசிக்கிறேன்.

நீங்களும் என்னை நேசியுங்கள்.

என்னோடு நித்திய காலம் வாழ விண்ணுலகுக்கு வாருங்கள்."

என்று தனது வாழ்க்கையின் மூலம் நம்மை  அழைப்பதற்காகவே

நம்மைப் போல மனிதனாய்ப் பிறந்தார் என்று நினைக்கிறேன்.

அவர் நம்மை போல உலகில் வாழ்ந்தது,

பாடுகள் பட்டது,

சிலுவையில் மரித்தது 

நம் மீது அவள் கொண்டுள்ள அளவற்ற அன்பை 

நமக்குச் செயல் மூலம் வெளிப்படுத்துவதற்காகத் தான் என்று நினைக்கிறேன்."

",அவரை நாம் வேண்டாம் என்று சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர வேண்டும் என்பதற்காகத்தான் 

தன் உயிரை பலியாக்கி பாவப் பரிகாரம் செய்தார்.

அவருடைய உயிரைக் கொடுத்து நீக்கும் அளவிற்கு நமது பாவம் அவ்வளவு கனமானது.

ஒரு பெரிய கருங்கல் பாறையை கையினால் பெயர்த்து எடுக்க முடியாது. வெடிகுண்டு வைத்து தான் பெயர்க்க வேண்டும்.

கடவுளே தனது உயிரைக் கொடுத்து பெயர்க்க வேண்டிய அளவுக்கு நமது பாவம் அவ்வளவு கனமானது

 என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்காகத்தான்

 கடவுள் தன் உயிரை கொடுப்பதற்காக மனிதனாய்ப் பிறந்தார்.

 தனது தேவ சுபாவத்தில் இயேசு மரணம் அடைய முடியாது.

மரணம் அடைவதற்காகவே மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டார்.

மரணம் அடைய முடியாத இறைமகன் 

மரணம் அடைவதற்காகவே மனுமகனாய்ப் பிறந்தார்.

  இது அவர் நம் மீது கொண்டுள்ள அன்பின் அளவற்ற தன்மையை காட்டுகிறது."

"அப்படியானால் நமக்காக மரணம் அடையவே இயேசு பிறந்திருக்கிறார்."

",நாமும் அவருக்காக, 

அவருக்கு சாட்சி சொல்வதற்காக,

 வேத சாட்சிகளாக மரணிக்கவே பிறந்திருக்கிறோம்.

பிறப்பு உலகத்திற்கு நுழைவு வாசல்,

மரணம் மோட்சத்திற்கு நுழைவு வாசல்.

நாம் செல்ல வேண்டிய இடம் மோட்சம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment