Tuesday, August 31, 2021

"அவர் அதிகாரத் தொனியோடே பேசினதால் அவருடைய போதனையைக் குறித்து மலைத்துப்போயினர்! (லூக்.4:32)

"அவர் அதிகாரத்தொனியோடே பேசினதால் அவருடைய போதனையைக் குறித்து மலைத்துப் போயினர்.! "
(லூக்.4:32)

இயேசு அவர் சொந்த ஊராகிய நசரேத்திற்குச் சென்று போதித்தபோது, அவரது ஞானத்தைக் கண்டு அவர்கள் வியந்த போதிலும்,

அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை.(மத்.13:58)

"இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்கப்படுவதில்லை."
(லூக்.4:24)

என்று அவர் சொன்னபோது

செபக்கூடத்தில் இருந்த அனைவரும் வெகுண்டெழுந்து, 
.
மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடக் கொண்டுசென்றனர்.

ஆனால் அவர்களால் முடியவில்லை.

இயேசு கப்பர்நகூம் ஊருக்கு வந்து, அங்கே மக்களுக்கு ஓய்வு நாளில் போதித்து வந்தார்.

அவர் அதிகாரத்தொனியோடே பேசினதால் 

அங்குள்ள மக்கள்
அவருடைய போதனையைக் குறித்து மலைத்துப் போயினர்.

அவர்கள் அவரை ஏற்றுக் கொண்டதால்

அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெல்லாம் பரவியது.

இயேசுவின் நாசரேத்தூர் அனுபவத்துக்கும், கப்பர்நகூம் அனுபவத்துக்கும் உள்ள வித்தியாசத்தை தியானித்தால் ஒரு முக்கியமான ஆன்மீக உண்மை நமக்குப் புரியும்.

இயேசு நாசரேத்தூரில் சுமார் 27 ஆண்டுகள் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்.

அதிலும் ஒரு தச்சு தொழிலாளி.

ஆகவே அனைத்து மக்களுக்கும் அவருடன் பழக்கம் இருந்திருக்கும்.

நிச்சயமாக அவருடைய நல்ல குணங்கள் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

அவரோடு ஒரு தச்சு தொழிலாளி என்ற முறையில்தான் பழகியிருப்பார்களே ஒழிய 

மனித உரு எடுத்த இறைமகன் என்ற முறையில் அல்ல.

அவரது போதனையைக் கேட்டு வியந்தார்கள். 

ஆனால் மெசியாவைப் பற்றிய தீர்க்கதரிசன வசனத்தை வாசித்துவிட்டு 

" நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று "

என்று சொன்னது அவர்களுக்கு புரிந்திருக்காது.

ஆகவே அவர் மீது அவர்களுக்கு விசுவாசம் ஏற்படவில்லை.

ஆனால் கப்பர்நாகூமுக்கு அவர் புதியவர்.

ஆகவே அவர் அதிகாரத்தொனியோடே 
போதித்ததோடு புதுமைகளும் செய்ததால்  

அவரைப்பற்றிய புகழ் சுற்றுப்புறமெல்லாம் பரவியது.

இயேசுவின் நாசரேத்தூர் அனுபவத்துக்கும், 

கப்பர்நகூம் அனுபவத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இரண்டு இடங்களிலும் போதித்தவர் அதே இயேசு.

நாசரேத்தூர் மக்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை.

கப்பர்நகூம் ஊர் மக்களிடம் விசுவாசம் இருந்ததால் புதுமைகள் பல செய்தார்.

விசுவாசம் இறைவன் நமக்கு தரும் நன்கொடை தான்.

இறைவன் தரும் நன்கொடையை ஏற்றுக்கொள்வதும், அதைப்பற்றி அக்கரை காட்டாதிருப்பதும் நமது சுதந்திரத்தைச் சார்ந்தது.

நாசரேத்தூர் மக்களிடம் தான் மெசியா என்பதற்கான வேத வசனத்தை இயேசு வாசித்து காண்பித்ததே அவர்களுக்கு விசுவாசத்தை ஊட்டுவதற்காகத்தான்.

ஆனால் அவர்கள் இவர் "சூசையின் மகனன்றோ" என்பதைக் கடந்து செல்லவில்லை.

ஆனால் கப்பர்நாகூமில் புதுமைகள் செய்தார் என்பதே அவர்கள் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு சான்று.

இவ்விரு ஊர்  மக்களின் விசுவாசம் இன்மையும், விசுவாசமும் நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன?

நாம் உலக வரலாற்று நூல்களை படிக்கும்போது வரலாற்று  நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்வதற்காக மட்டுமே படிக்கிறோம்.

ஆனால் பைபிள் வாசிப்பது வெறுமனே உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமல்ல,

நாம் தெரிந்துகொண்ட இறைச் செய்தியை நமது வாழ்வாக மாற்ற,

பைபிள் செய்தி நம் வாழ்வாக மாறவில்லை என்றால் பைபிள் வாசித்துப் பயனில்லை.

அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இரட்சகர் அதே இயேசு தான்.

ஒரே கம்பெனி காபியை மூன்று பேர் குடிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

ஒருவன் காபி மிகவும் ருசியாக இருக்கிறது என்கிறான்.

ஒருவன் காபி அவ்வளவு ருசியாக இல்லை என்கிறான்.

ஒருவன் காபியில் ருசியே இல்லை என்கிறான்.

தவறு காபியில் இருக்கிறதா அல்லது குடிக்கின்றவர்களின் நாவில் இருக்கின்றதா?

மூவர் குடிப்பதும் ஒரே கம்பெனி காப்பிதான்.  

 குடிக்கிறவர்களுடைய நாவின் தன்மையை பொறுத்து ருசி மாறுகிறது.


இயேசு மாறாதவர். எல்லோருடைய வாழ்விலும் ஒரே அன்போடும் அக்கரையோடும்தான் செயல்படுகிறார். 

ஆனால் சிலர் புனிதர்களாக மாறிவிடுகிறார்கள்.

சிலர் புனிதர்களாக மாறாவிட்டாலும் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்கிறார்கள்.

சிலர் சுமாரான கிறிஸ்தவர்களாக வாழ்கிறார்கள்.

சிலர் கிறிஸ்தவர் எந்த பெயருக்கு பொருத்தம் இல்லாதவர்களாக வாழ்கின்றார்கள்.

ஆனாலும் எல்லோரும் கோவிலுக்கு ஒழுங்காக போகின்றார்கள்,

திருப்பலி காண்கின்றார்கள்,

செபம் சொல்லுகிறார்கள்.

ஒரே இயேசுவை வழிபடுகிறார்கள்.

ஒரே இயேசுவை உட்கொள்கிறார்கள்.

 ஏன் வித்தியாசமாக வாழ்கின்றார்கள்?


அவரவர்களுடைய விசுவாசத்தின் தன்மைக்கு ஏற்ப வாழ்வும் மாறுபடுகிறது, இயேசுவின் தன்மைக்கு ஏற்ப அல்ல.


இயேசு ஒரே மாதிரிதான் செயல்படுகிறார். நமது விசுவாசத்திற்கு ஏற்ப நமது வாழ்வு இருக்கிறது.

எல்லோரும் அதை இயேசுவைத்தான் உணவாக அருந்துகிறோம்.

ஆனால் வாழ்க்கை ஒரே மாதிரியாக மாறுவது இல்லை.

"இயேசுவே, அந்தோனியாரும், நானும் உம்மைத்தான் கும்பிடுகிறோம். 

அவரால் புதுமைகள் செய்ய முடிகிறது, 

என்னால் முடியவில்லையே, 

ஏன் இப்படி ஆள் பார்த்து உதவி செய்கிறீர்?"

"மகனே, நீங்கள் இருவருமே எனது பிள்ளைகள்தான். 

அவர் பெரிய விசுவாச பாத்திரத்தை கொண்டுவருகிறார், நீ சிறிய விசுவாச பாத்திரத்தை கொண்டு வருகிறாய்.

 இருவருக்குமே பாத்திரம் நிறையவே அருளை ஊற்றுகிறேன்.

நீ பெரிய விசுவாச பாத்திரத்தை கொண்டு வா.

 நிறைய அருள் கிடைக்கும்.

உனக்கு கிடைக்கும் அளவுக்கு நீதான் பொறுப்பு."

"நீர் அவருக்கு பெரிய பாத்திரமாக கொடுத்திருக்கிறீர்."

"இருவருக்குமே ஒரே மாதிரிதான் கொடுத்தேன். அவர் பெரிய பாத்திரமாக வேண்டும் என்று கெஞ்சி கேட்டார்.

 கொடுத்தேன்.  நீயும் கேள், தருகிறேன்.

 கேட்டால்தான் கிடைக்கும்.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நான் சொல்லி இருக்கிறேன்.

 அவர் அதிகமான விசுவாசத்தை கேட்டார். கொடுத்தேன்.

 நீ தின்பண்டம் கேட்கிறாய். கொடுக்கிறேன்.

 நீயும் அதிகமான விசுவாசத்தை கேள். தருகிறேன்.

மற்றவர்களைக் குறை சொல்லாதே."

"ஆகட்டும், ஆண்டவரே. இனிமேல் விசுவாசத்திற்காக மட்டுமே செபிப்பேன்.

வேறு ஒன்றும் கேட்க மாட்டேன்."

"Very good.  நல்ல பிள்ளை."

நாமும் நல்ல பிள்ளைகளாக மாறுவோம்.

விசுவாசத்தை மட்டும் ஆண்டவரிடம் கேட்போம்.
'
அவர் அதையும் தந்து, 

நாம் கேட்காத மற்ற தேவைகளையும் தருவார்.

ஒரு தந்தை தன் மகனிடம்,

"என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் கேள். வாங்கித் தருகிறேன்."
என்றார்.

"அப்பா, உங்கள் Purse ல் இருக்கும்
A.T.M Card யும், அதற்குரிய PIN நம்பரையும் மட்டும் தாருங்கள்.

வேறு எதுவுமே வேண்டாம்."

"புத்தியுள்ள பையன். இந்தா பிடி." என்று சொல்லி, கொடுத்தார்.

ஆன்மீகத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய A.T.M Card விசுவாசம்.

முழுமையான விசுவாசம் மட்டும் இருந்தால் போதும்.

கடவுளே நம்  கையில்தான்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment