Thursday, August 12, 2021

"ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்."(மத்.18: 22)

".  ஏழு முறை   என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்."
(மத்.18: 22)

இராயப்பர் "ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு எதிராகக் குற்றஞ் செய்துவந்தால், நான் அவனை எத்தனை முறை மன்னிப்பது? 
ஏழு முறைவரைக்குமா?" என்று கேட்டார்.

இராயப்பருக்கு ஏழு பெரிய எண்ணாத தெரிந்திருக்கும் போலிருக்கிறது !

ஆண்டவர்,   "ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்."  என்றார்.


"எழுபது முறை ஏழு முறை" என்றால்   
 கணக்கில்லாத தடவைகள்(எப்போதும்) என்று அர்த்தம்.

எத்தனை  தடவைகள் மன்னிக்கிறோம் என்று கணக்குப் பார்க்கக் கூடாது.

கடவுளே கணக்குப் பார்ப்பதில்லை.

நம்மை படைக்கும்போது நாம் இவ்வுலகில் எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும் என்று கணக்கு வைத்திருக்கிறார்.

அத்தனை ஆண்டுகள் கட்டாயம் வாழ்வோம்.

அத்தனை ஆண்டுகள் முடிந்தவுடன் கணக்கு கொடுக்க கடவுளிடமே சென்று விடுவோம்.  

நாம் வாழும் காலத்தில் கணக்குப் பார்க்காமல் பாவம் செய்கிறோம்.

எப்பொழுதெல்லாம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறோமோ அப்பொழுதெல்லாம் கடவுள் கணக்கு பார்க்காமல் நம்மை மன்னிக்கிறார்.

எத்தனை முறை செய்திருந்தாலும்,

 எவ்வளவு பெரிய பாவமாக செய்திருந்தாலும் 

பாவத்திற்கு வருந்தி மன்னிப்பு கேட்கும்போதெல்லாம் கடவுள் மன்னித்துவிடுகிறார்.

நாமும் நமக்கு விரோதமாக யார் எத்தனை முறை குற்றம் செய்திருந்தாலும் 

அவர்களை அத்தனை முறையும் கணக்கு பார்க்காமல் மன்னிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

நமக்கு விரோதமாக குற்றம் செய்தவரை நாம் மன்னித்தால்தான் 

கடவுளுக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்க நாம் தகுதி ஆனவர்கள்.

நம் ஆண்டவர் நமக்கு செபிக்க கற்றுத்தருமபோது 

"எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்"

என்றுதான் செபிக்க சொன்னார்.

நாம் ஒவ்வொரு முறையும் கடவுளை நோக்கி செபிக்கும்போது முதலில் அவரிடம் நமது பாவங்களுக்கு  மன்னிப்பு கேட்க வேண்டும்.

மற்றவர்கள் நமக்கு எதிராக செய்த குற்றங்களை மன்னித்து விட்டுதான் நாம் இறைவனை நோக்கி செபிக்க ஆரம்பிக்க வேண்டும்.

அப்படி பார்க்கும்போது மன்னிக்க தெரியாதவனுக்கு செபம் சொல்ல தகுதி இல்லை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்தவுடன் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சண்டை ஆரம்பித்துவிட்டது.

கணவன் கடிகாரத்தைப் பார்த்தான்.

மனைவியைப் பார்த்து, 

"இருடி, பூசைக்கு போய்விட்டு வந்து மீதியை வச்சுக்கிறேன்.''

என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு போய் விட்டான்.

கோவிலில்

மக்களோடு மக்களாக செபம் சொன்னான்,

 பாட்டுப் படித்தான்,

 பிரசங்கம் கேட்டான்,

காணிக்கை போட்டான்,

எழுந்தேற்றத்தின்போது "என் ஆண்டவரே, என் தேவனே"
என்று சொன்னான்.

அங்கும், இங்கும் பார்த்து சமாதானம் சொன்னான்.

நற்கருணை வாங்கினான்,

பூசை முடிந்து சாமியாரிடம் சிலுவையும் வாங்கினான்,

வீட்டுக்கு வந்தவுடன் மனைவியுடன் விட்ட சண்டையை தொடர்ந்தான்!

விட்ட சண்டைக்கும், தொடர்ந்த
சண்டைக்கும் இடையில் நடந்ததெல்லாம் Waste!

பிறரை மன்னிக்க கற்றுக்கொள்வோம்.

உலகம் படைக்கப்பட்ட நாள் முதல், இதுவரை,

 கோடிக்கணக்கான மக்கள் கணக்கு பார்க்காமல் விதவிதமாக கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்போர்,

மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது

 மிக குறைவு.

கணக்கிலடங்காத பாவங்கள் நிறைந்த  உலகை,

பரிசுத்தராகிய கடவுள் இன்னும் அழிக்காமல் இருக்கிறார் என்றால் 

கடவுள் எவ்வளவு பொறுமை உள்ளவர்!

அவரால் படைக்கப்பட்ட நாம், நம்மை நோக்கி ஒருவர் ஒரு வேண்டாத வார்த்தை சொன்னால்

 பதிலுக்கு பத்து வார்த்தை அடுக்கி விடுகின்றோம்.

ஆனால் கடவுள்  எதுவும் நடக்காதது மாதிரி உலகத்தையும், பாவத்தில் உழல்கின்ற மக்களையும் அமைதியுடன் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

அமைதியுடன் பார்த்துக் கொண்டே இருப்பது  அவரிடம் மன்னிப்பு கேட்பதற்கு மக்களுக்கு நேரம் கொடுப்பதற்காகத்தான்.

ஆனால் மக்கள் எப்போது மன்னிப்பு கேட்கப் போகின்றார்களோ தெரியவில்லை.

நாம் இயேசுவின்  சீடர்கள்.

மன்னிப்பு விசயத்தில் அவருடைய போதனைகளை பின்பற்றுகிறோமா?

சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே அவரை தொங்க விட்டவர்களை அவர் மன்னித்தார்.

அதை நாம் பின்பற்ற பைசா செலவு இல்லை.

முதலில் நமது சமய உரிமைகளைப் பறித்து விளையாடிக் கொண்டிருக்கிற நமது அரசியல்வாதிகளை மன்னிப்போம்.

கிறிஸ்தவத்தை கேலி செய்து கொண்டிருக்கும் புரியாத மக்களை மன்னிப்போம்.

நமது சபையில் ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக் கொள்வோம்.

கடவுள் நம்மை மன்னிப்பதற்காக பாவசங்கீர்த்தனம் என்னும் அவர் தந்த தேவ திரவிய அனுமானத்தை ஒழுங்காக பயன்படுத்துவோம்.

நாம் எந்த அளவையால் அளக்கிறோமோ  அதே அளவையால்தான் நமக்கும் அளக்கப்படும்.

கொடுப்போம், பெறுவோம்.

மன்னிப்புக் கொடுப்போம்,

மன்னிப்புப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment