"பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது"
(மத்.19:24)
"என்னங்க, இன்றைய நற்செய்தியை கொஞ்சம் வாசியுங்கள்."
" பணக்காரன் ஒருவனை நோக்கி:
''நீ நிறைவு பெற விரும்பினால்,
போய் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு.
வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும்.
பின்னர் வந்து என்னைப் பின்செல்" என்றார்.
ஆனால் அவனோ தனது சொத்துக்களை விற்க மனம் இன்றி வருத்தத்தோடு போய்விட்டான்.
அப்போது இயேசு தம் சீடரிடம்,
"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:
பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது.
மீண்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன்:
பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.
நீ சொன்ன படி வாசித்து விட்டேன்.
வேறு ஏதாவது செய்ய வேண்டுமா?"
"நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். நான் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
ஏன் இயேசு பணக்காரனிடம்
உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு தன்னைப் பின்பற்றச் சொன்னார்."
",உடமைகள்உள்ளவனிடம் தான் அவற்றை விற்க சொல்ல முடியும்.
இல்லாதவனிடம் எதை விற்க சொல்லமுடியும்?''
''அதைச் சொல்லலீங்க, உடமைகளை வைத்துக்கொண்டு அவற்றோடு இயேசுவைப் பின்பற்ற முடியாதா?''
", முடியும். இயேசு எப்படி அழைக்கிறாரோ அப்படி செல்ல வேண்டும்.
சிலரை குருக்கள் ஆகி சேவை செய்யும் படி அழைக்கிறார்.
சிலரை துறவற மடங்களில் சேர்ந்து சேவை செய்ய அழைக்கிறார்.
சிலரை திருமண வாழ்க்கையில் சேவை செய்ய அழைக்கிறார்."
"அதெல்லாம் தெரியுமுங்க. அப்போஸ்தலர்களை அழைக்கும்போது 'என்னைப் பின்செல்' என்று அழைத்தார்.
அவர்கள் தங்கள் உடமைகளையும், உறவுகளையும் விட்டுவிட்டு பின் சென்றார்கள்.
அல்லும் பகலும் அவரோடு இருக்க வேண்டியவர்கள் உடமைகளோடும், உறவுகளோடும் இருக்க முடியுமா?
அவர்களைப் போலவே தன்னைப் பின்பற்ற அந்த வாலிபனை அழைத்திருப்பார்.
ஆனால் அவனுக்கு மனமில்லை."
"சரி. ஆனால்
"பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது." என்று சொன்னாரே, அதுதான் புரியவில்லை.
ஊசியின் காதில் ஒட்டகம் நுழையவே முடியாது.
அப்படியானால் பண வசதி உள்ளவர்கள் மோட்சத்தற்குப் போகவே முடியாதா?"
", முடியும். சுமையே இல்லாமல் மைல் கணக்காய் நடக்கலாம்.
கனமான சுமையை சுமந்து கொண்டு நடக்க முடியுமா?"
"சுமையை இறக்கி வைத்து விட்டு நடக்க வேண்டியது தானே!"
", பிரச்சனை அங்கேதானே வருகிறது. ஒரு சாக்கு நிறைய 2000 ரூபாய் நோட்டு கிடைத்தது. கோடிக்கணக்கில் மதிப்பு.
அந்த சாக்கை சுமந்துகொண்டு நடக்க முடியாது.
அவ்வளவு ரூபாயை இறக்கி வைக்கவும் முடியாது.
ஆகவே அவ்வளவு பணம் உள்ளவன் நடக்க முடியாது."
"அதாவது பணத்தின் மீதுள்ள
பற்றுதான் பிரச்சனை.
கடவுள் மீது உள்ள பற்றை விட பணத்தின் மீது அதிக பற்று உள்ளவர்கள் கடவுளை பின்பற்ற முடியாது.
கடவுளைப் பின்பற்ற முடியாவிட்டால் மோட்சத்திற்குச் செல்லமுடியாது..
பிரச்சனைக்கு காரணம் பணம் அல்ல, பணத்தின் மீது உள்ள பற்று.
பண ஆசை உள்ளவனைக் கெடுக்க ஆள் யாரும் தேவை இல்லை.
அவனது பண ஆசையே அவனைக் கெடுத்துவிடும்.
பண ஆசை உள்ளவன் பணத்தை பணத்திற்காகவே தேடுவான்,
அதன் பயன்பாட்டிற்காக அல்ல.
தேவைக்கு அதிகமான பணத்தை ஈட்டுவதற்காக எவ்வளவு மோசமான வழிகளாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்த தயங்க மாட்டான்.
எவ்வளவு பெரிய பாவங்களையும் செய்ய தயங்க மாட்டான்.
லஞ்சம் வாங்குவான், லஞ்சம் கொடுப்பான்.
தனது பண ஆசையை நிறைவேற்றுவதற்காக தானும் கெடுவான்,
தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் கெடுப்பான்.
அற்ப மண்ணுக்கு ஆசைப்பட்டு விண்ணகத்தையே தியாகம் செய்து விடுவான்.
சரியா?"
.
",Super சரி. கையில் நிறைய பணம் இருந்தாலும்
அதன்மீது பற்று இல்லாதவன் அதை எப்போது வேண்டுமானாலும்,
யாருக்காக வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருப்பான்.
கையில் பணம் இருந்தாலும் அதன் மீது பற்று இல்லாதவன் பணக்காரன் அல்ல.
ஆனால் கையில் பணமே இல்லாத ஒருவன் அதன் மீது உள்ள பற்றின் காரணமாக அதைத் தேடி அலைவான்.
பணம் கிடைக்கவே விட்டாலும் அதை தேடி அலைவதை விடமாட்டான்.
அலைவதை விட்டுவிட்டு கடவுளிடம் வரவும் மாட்டான்.
பணப்பற்று மட்டும் உள்ள அவன்தான் உண்மையில் பணக்காரன்."
"அப்படியானால் யார்தான் மீட்புப்பெற முடியும்?"
என்ற சீடர்களின் கேள்விக்கு ஆண்டவர்,
அவர்களை உற்றுநோக்கி, "மனிதரால் இது முடியாது. ஆனால், கடவுளால் எல்லாம் முடியும்"
என்று சொல்கிறாரே,
கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பணக்காரன் விண்ணகம் செல்வது அரிது என்று சொன்னவரும் கடவுள் தானே."
", ஆம். கடவுளால் எல்லாம் முடியும்.
ஆனாலும்,
நம்முடைய ஒத்துழைப்பு இன்றி நம்மை படைத்து காப்பாற்றி வரும் கடவுள்
மீட்பு விஷயத்தில் நமது ஒத்துழைப்பையும் நாடுகிறார்.
நம்மிடம் நிறைய பணம் இருந்தால் நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
பணத்தின் மீது உள்ள பற்றை கடவுள் மீது மாற்றி விட்டால் போதும்.
மீதியை கடவுள் பார்த்துக் கொள்வார்.
நம்மிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் கடவுள் மீது பற்று உள்ளவர்களாக வாழ்வோம்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை.''
லூர்து செல்வம்
No comments:
Post a Comment