Tuesday, August 24, 2021

"நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்றார். பிலிப்புவோ, "வந்து பார்" என்றார்.(அரு. 1:46)

"நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்றார். பிலிப்புவோ, "வந்து பார்" என்றார்.
(அரு. 1:46)


பெலவேந்திரரும், இராயப்பரும் அவர்களாகவே இயேசுவைத் தேடி வந்தார்கள்.

அடுத்து அவர்களுடைய ஊரினராகிய பிலிப்புவை இயேசுவே அழைத்தார்.

 பிலிப்பு நத்தனயேலைக் கண்டு, "இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலிலே மோயீசனும் யாரைக்குறித்து எழுதினார்களோ அவரைக் கண்டோம். 

அவர் நாசரேத்தூர் சூசையின் மrகன் இயேசு" என்றார்.

அதாவது, யூத மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'மெசியாவைக் கண்டோம் ' என்றார்.

மெசியா நாசரேத்தூரைச் சேர்ந்தவர் என்ற செய்தி நத்தனயேலின் மனதில் எழுப்பி விட்ட கேள்வி நம் எல்லோருக்கும் ஒரு முக்கியமான இறையியல் செய்தியைத் தருகிறது.

அந்த நோக்கத்திற்காகக் கூட அக்கேள்வியை பரிசுத்த ஆவி 

 அவர் மனதில் தோற்றுவித்திருக்கலாம்.

 ஊர்ப் பெயரை கேட்டதுமே அவர் 

"நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்றார்.

ஏன் அவர் அப்படிக் கேட்டார்?

உதாரணத்திற்கு நம்மையே எடுத்துக் கொள்வோம்.

"நீங்கள் பிறந்த ஊர் எது?" என்று யாராவது கேட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

சென்னை போன்ற நகரங்களின் பெயரைச் சொன்னால் பெருமையாய் இருக்குமா?

 அல்லது


நூறு பேர் குடிசைகளில் வாழக்கூடிய ஒரு பட்டிக்காட்டின் பெயரைச் சொன்னால் பெருமையாய் இருக்குமா?

மெசியா 'பெத்லகேமில் பிறப்பார் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில்

நாசரேத்தூர் என்ற சிறிய கிராமத்தின் பெயரைச் சொன்னது  அவருக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

400 பேர்    வாழக்கூடிய  ஒரு சிறு     கிராமத்தில்    யூத   மக்கள்  ஆவலுடன் எதிர்பார்த்த மெசியா பிறந்தார் என்பதை அவரால் நம்ப முடியவில்லை.

ஆகவேதான்

"நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்றார்.

இதில் என்ன இறையியல் செய்தி இருக்கிறது?

இயேசு சர்வ வல்லப கடவுள்.

மனித சுபாவத்தில் தாவீதின் அரச குடும்பத்தை சேர்ந்தவர்.

25,000 மக்கள் தொகை கொண்ட பெத்லகேமில் பிறந்தாலும்,

(அங்கேயும் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்தான்.)

வாழ்வதற்கு 400 மக்கள் தொகை கொண்ட நாசரேத் என்னும் சிறிய கிராமத்தைத் தேர்ந்து கொண்டார்.

ஏழைகளோடு ஏழையாக வாழ தேர்ந்து கொண்டது இயேசுவின் தாழ்ச்சியை குறிப்பது மட்டுமல்லாமல் 

நமக்கும்  அந்த புண்ணியத்தின் பெருமையை கற்றுத் தருகிறது.

"ஏழைகள் பேறு பெற்றோர்'' என்று கூறியது மட்டுமல்ல, வாழ்ந்தும் காண்பித்தார்.

தச்சுத் தொழில் செய்த உழைப்பாளியாக வாழ்ந்து காண்பித்தார்.

இது இயேசு வாழ்ந்து கற்பித்த ஒரு இறையியல் பாடம்.

அடுத்து, 

பிலிப்பு மெசியா நாசரேத்தூரினர் என்று சொன்ன உடனேயே

நத்தனயேல் மனதில் தோன்றிய சந்தேகம்:

"நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?"

நத்தனயேல் தனது சந்தேகத்தை கபடின்றி உடனே கேட்டுவிட்டார்.

அப்படி கேட்காமல் அவராகவே,

"மெசியா பெத்லகேமில் தான் பிறக்கவேண்டும். இயேசு நாசரேத் ஊரினராக இருப்பதால் அவர் மெசியாவாக இருக்க முடியாது" என்ற முடிவுக்கு வரவில்லை.

தனது சந்தேகத்தை உடனே அவர் வெளிப்படுத்தினாலும்

 பிலிப்பு அதை சரியான முறையில் கையாண்டார்.

அவர் பதிலேதும் சொல்லாமல்,

"வந்து பார்" என்று மட்டும் சொன்னார்.

அதாவது என்னுடன் வந்து இயேசுவைப் பார்த்தால் உங்களது சந்தேகம் தீர்ந்து விடும் என்ற பொருளில்  "வந்து பார்" என்று மட்டும் சொன்னார்.

நத்தனயேல் இயேசுவிடம் வந்தார்.

அவர் வருவதைக் கண்டு இயேசு அவரைப்பற்றி, "இதோ! உண்மையான இஸ்ராயேலன். இவன் கபடற்றவன்" என்றார்.

நத்தனயேல் கபடில்லாமல் கேட்ட கேள்விக்கு இயேசு சான்றிதழ் கொடுத்துவிட்டார்.

நத்தனயேல் அவரிடம், "எவ்வாறு என்னை அறிந்தீர் ?" என்று கேட்க,

 இயேசு அவரைப் பார்த்து, "பிலிப்பு உன்னை அழைப்பதற்குமுன் நீ அத்திமரத்தின்கீழ் இருக்கையில் நான் உன்னைக் கண்டேன்" என்றார்.

 நத்தனயேல் அவரிடம், "ராபி, நீர் கடவுளின் மகன், நீரே இஸ்ராயேலின் அரசர்" என்று சொன்னார்.

நத்தனயேல் பிலிப்பு தன்னிடம் சொன்னதை பற்றியோ, தனது சந்தேகத்தை பற்றியோ இயேசுவிடம் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் இயேசுவுக்கு நாம் சொல்லாமலேயே நம்மைப்பற்றி முழு விவரமும் தெரியும்.

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட உடனேயே அவர் இறைமகன் என்பதை நத்தனயேல் புரிந்துகொண்டார்.

அவரது சந்தேகத்திற்கு இயேசு நேரடியாக வாயினால் விளக்கம் கொடுக்காமலேயே அவரது மனதில் தன்னைப் புரிய வைத்து விட்டார்.

அதனால்தான் விசுவாசம் இறைவன் நமக்குத் தரும் நன்கொடை என்கிறோம்.

இந்த நத்தனயேல்தான் இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஒருவரான பர்த்தலேமியு. 
( Bartholomew)

 நத்தனயேலிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:

ஆன்மீக காரியங்களில்,
 நமது பலகீனம் காரணமாக, சந்தேகங்கள் வருவது இயல்பு.

நத்தனயேலின் சந்தேகத்தை பிலிப்பு தீர்த்து வைக்கவில்லை.

"வந்து பாரும்" என்று இயேசுவிடம் அழைத்து வந்தார்.

அவர்கள் திறந்த மனதோடு இயேசுவிடம் வந்தார்.

அவரது மனதை இயேசு விசுவாசத்தால்  நிரப்பினார் 

அவரது சந்தேகம் தீர்ந்தது.

இயேசுவை இறை மகனாக ஏற்றுக் கொண்டார்.

நமக்காக இயேசு திவ்ய நற்கருணை பேழையில் இரவும், பகலுமாக காத்துக் கொண்டிருக்கிறார்.

அவரிடம் சென்று,

திறந்த மனதோடும், விசுவாசத்தோடும் அவரை உற்று நோக்கினாலே  போதும்.

மனதை அழுத்திய சந்தேகங்கள் காணாமல் போகும்.

இயேசுவின் பிரதிநிதியாகிய நமது பங்குக் குருவும் நமது ஆன்மீக பிரச்சனைகளில் வழிகாட்டுவதற்காக நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

பைபிள் வாசகங்களில் சந்தேகமா?  
 பங்குக் குருவிடம் செல்வோம்.

மனதோடு பேச நற்கருணை ஆண்டவரும்,

வாய் விட்டுப் பேச ஆண்டவரின் பிரதிநிதியும் 

நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்று பார்ப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment